Published:Updated:

1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை, விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு... பாதுகாக்கப்படுமா?

கொற்றவை

கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள் , ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 7 ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விஷ்ணு சிற்பமும் கொற்றவை சிற்பத்தின் காலத்தை ஒட்டியதாகவே உள்ளது.

1,300 ஆண்டுகள் பழைமையான கொற்றவை, விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு... பாதுகாக்கப்படுமா?

கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள் , ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 7 ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விஷ்ணு சிற்பமும் கொற்றவை சிற்பத்தின் காலத்தை ஒட்டியதாகவே உள்ளது.

Published:Updated:
கொற்றவை

திண்டிவனம் வட்டம் விழுக்கம் கிராமத்தில் பல்லவர் காலக் கொற்றவை மற்றும் விஷ்ணு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள் , ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 7 ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விஷ்ணு சிற்பமும் கொற்றவை சிற்பத்தின் காலத்தை ஒட்டியதாகவே உள்ளது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் வெடாலைச் சேர்ந்த விஜயன் , குணசேகரன் ஆகியோர் வல்லம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது, விழுக்கம் கிராமத்தில் வயல்வெளியில் சிற்பம் ஒன்று இருப்பதாக விஜயகுமார் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவ்வூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொற்றவை
கொற்றவை

அப்போது, விழுக்கம் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிற்பம் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் எட்டுக் கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அழகான கரண்ட மகுடம் தலையை அலங்கரிக்க , நீள்வட்டமான முகத்தில் புன்சிரிப்புடன் தடித்த உதடுகளும் இரு செவிகளும் கழுத்து வரை நீள, குண்டலங்கள் ஏதும் இல்லாமல் அழகுறக் காட்சியளிக்கிறார் கொற்றவை. கழுத்தில் சரப்பளியுடன் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சி தருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது எட்டுக் கரங்களில் மேல் வலது கரம் பிரயோகச் சக்கரம் ஏந்தியும் ஏனைய வலது கரங்கள் முறையே போர்வாள், மான்கொம்பு ஏந்திய நிலையில் கீழ் வலக்கரம் வளைந்த கைப்பிடியுடன் கூடிய மணியைப் பிடித்திருக்க, மேல் இடது கரத்தில் சங்கும், ஏனைய கைகள் முறையே வில், கேடயம் ஏந்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து கைகளிலும் அடுக்கடுக்காய் வளையல்கள் காட்டப்பட்டுள்ளது அழகு.

வழக்கமாக கொற்றவையின் இடையருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்கள் இச்சிற்பத்தில் காட்டப்படவில்லை எனினும் இடதுபுறம் கலைமான் காட்டப்பட்டுள்ளது. எருமை தலையின் மீது கம்பீரமாக நிமிர்ந்து நின்றவாறு காட்சி தருகிறது கொற்றவை சிற்பம்.

விஷ்ணு சிலை
விஷ்ணு சிலை

இச்சிற்பம் கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து தென் புறமாக 200 மீட்டர் தொலைவில் வயல்வெளிகளின் நடுவில் புதர் ஒன்று காணப்பட்டது. அவ்வூர் மக்களை விசாரித்த பொழுது இதேபோல கல்லினால் செய்யப்பட்ட காளி சிலை ஒன்று சாய்ந்து கிடப்பதாகத் தந்த தகவலின் பேரில் புதருக்குள் தேடிய பொழுது சுமார் 8 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுத்தம் செய்து பார்த்த பொழுது அச்சிற்பம் சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் என்று அறியப்பட்டது. இச்சிற்பமும் கொற்றவை சிற்பத்தின் காலத்தை ஒட்டியே இருந்தது.

கொற்றவை சிலையை செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஊர்மக்கள் வழிபடுவதோடு, காணும் பொங்கல் ,சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் ஊர்ப்பொதுப் பொங்கல் வைத்தும் கோழி பலி கொடுத்தும் சிறப்புடன் வழிபடுகின்றனர். அதே காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிலை கேட்பாரற்றுக் கிடப்பது வேதனையான விஷயம். சுமார் 1,300 வருடங்களுக்கு மேல் பழைமையான இச்சிற்பங்களை முறையாகப் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism