Published:Updated:

ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்!
ஆடிப்பெருக்கில் காவிரியில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும்!

இப்படிச் செய்வதன் மூலம் திருமணமான பெண்கள் தீர்க்கசுமங்கலியாகவும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியமும் கைகூடும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டி மாதம் 18-ம் தேதி கொண்டாடப்படும் ஆடிப்பெருக்குத் திருவிழாவுக்கு தனிச் சிறப்பு உண்டு. மற்ற விழாக்கள் மாதம், தேதி மாறி வந்தாலும், ஆடிப் பெருக்குத் திருவிழா மட்டும் வருடம்தோறும் ஆடி மாதம் 18-ம் தேதி மட்டுமே கொண்டாடப்படும். 

'வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி' (பட்டினப்பாலை:1-6)

வெண்மீன் என்று சொல்லப்படும் சுக்கிரன் திசை மாறி தென் திசைக்குச் சென்றால் வானம் பொய்த்துவிடுமாம். ஆனாலும், காவிரி மட்டும் நீர்வளத்தோடு தான் தவழ்ந்து செல்லும் நிலப்பரப்பு முழுவதையும் செழிப்புறச் செய்யுமாம். 

சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலும் காவிரியின் பெருமைகள் பலவாறாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

தாயினும் மேலானது தண்ணீர் என்பதை வலியுறுத்துவதுபோல் அமைந்ததுதான், 'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்னும் சொல்வழக்கு. பெண்களைப் போற்றும் தேசமாகிய நம் பாரத தேசத்தில் நதிகளையும் பெண்களாகப் பாவித்து கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி, காவிரி என்றெல்லாம் பெண்களின் பெயர்களையே சூட்டினர். தரணி செழிக்க மகரிஷி அகத்தியரால் விடுவிக்கப்பட்ட இரண்டு நதிகள் காவிரியும் தாமிரபரணியும். 

ஆன்மிகச் சிறப்புகளுடன் இலக்கியச் சிறப்புகளும் பெற்ற காவிரிக் கரையில் கொண்டாடப்படும் உற்சாகத் திருவிழா ஆடிப்பெருக்குத் திருவிழா. ஆடிப்பெருக்குத் திருநாளில் காவிரியில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதிகம். 

ராவணன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்த பாவம் தீர என்ன வழியென்று சிந்தித்த ஸ்ரீ ராமபிரான், உரிய வழியைக் கூறும்படி குலகுரு வசிஷ்டரிடம் கேட்டார். அதற்கு வசிஷ்டர், ''அறுபத்தாறு புனிதத் தீர்த்தங்களைத் தன்னகத்தே கொண்ட காவிரியில் நீராடினால் அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்'' என்று கூறினார். அதன்படி ஸ்ரீ ராமபிரான் காவிரியில் நீராடிய நன்னாள்தான் ஆடிப்பெருக்கு நன்னாள் என்கிறது புராணம். 

காவிரிக்கரையில் பூமிக்கடியில் பதினெட்டு சித்தர்களும் யோகியர்களும் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்வதாகவும், ஆடிப்பெருக்கு நாளன்று காவிரிக்கு தங்கள் தவப்பயனை வழங்குவதாகவும் சாஸ்திரம். அந்தத் தவப்பயனைப் பெற்ற காவிரி, அன்று தன்னில் நீராடி தன்னை வழிபடும் மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் வாழ்க்கையில் இன்பம் சேர்ப்பதாக ஐதிகம். எனவே, அன்றைய தினத்தில் காவிரியில் நீராடி,

'கவேர கன்யே காவேரி, சமுத்ர மகிஷிப் பிரியே 

தேகிமே பக்தி முக்தி தவம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி'

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட வேண்டும்.

ஆடிப் பதினெட்டு எனப்படும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரிக் கரையில் புதுமணத் தம்பதியரும் பெண்களும் கூடி காவிரியில் நீராடி, காவிரிக்கு பூஜை செய்கின்றனர். 

கிராமப்புறங்களில் 10 நாள்களுக்கு முன்னதாகப் புதிய மண்பாண்டத் தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகைகளை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்று முறைப்படி பூஜை செய்வார்கள்!

காவிரிப் பெண் மசக்கையுடன் இருப்பதாக ஓர் ஐதிகம். எனவே, காவிரி அன்னைக்கு காதோலை கருகமணி, கார் அரிசியுடன் வெல்லம் கலந்த கலவை, பழம், தேங்காய், வெற்றிலை- பாக்கு, மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றுடன் சித்ரான்னங்களையும் படைத்து பூஜை செய்வார்கள். அன்றைய பூஜையில் வைத்த மஞ்சள் தடவிய சரடை, பெண்கள் கழுத்தில் அணிந்துகொள்வார்கள். ஆண்கள், இதை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வர். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆடிப் பதினெட்டு அன்று, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், பல்லக்கில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு வழிபாடுகள் நடைபெறும். அன்று மாலை நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து புடவை, தாலி, காதோலை கருகமணி, மலர் மாலை, தேங்காய், வெற்றிலை- பாக்கு, பழங்கள் ஆகிய மங்கலப் பொருள்களுடன் சீர் வரிசைகளை யானை மேல் ஏற்றி, மேள தாளங்கள் முழங்க அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளை அங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் முன் சமர்பித்து பூஜை செய்கின்றனர். பின்னர், அந்தப் பொருள்களைக் காவிரி நதிக்கு சமர்பிப்பார்கள். பெருமாளுக்கு தைலக் காப்பு சாற்றி 30 நாள்களுக்கு மேல் இந்த வைபவம் நடைபெறும். எனவே, பெருமாளுக்கு தைலக் காப்பு சாற்றும் நாளிலிருந்து கணக்கிட்டே ஆடிப் பதினெட்டு அல்லது ஆடி இருபத்தியெட்டு அன்று இந்த வைபவம் கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு தைலக் காப்பு சாற்றி 30 நாள்களுக்கு மேல் ஆகிவிட்டபடியால், நாளைய தினம் நடைபெறவிருக்கும் ஆடிப்பெருக்கு விழாவில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி மேற்சொன்ன வைபவம் நடைபெறும்.

மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டிலேயே நதி பூஜை செய்யலாம். அன்று காலையில் வீட்டு பூஜையறையைத் தூய்மை செய்து, ஒரு கலசச் சொம்பில் மஞ்சள் சேர்த்த தண்ணீரை நிரப்பி, அந்தக் கலசத்துக்கு வஸ்திரமும் மலரும் சாற்றி, சித்ரான்னங்கள், பழம், தேங்காய், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து, கீழ்க்காணும் ஸ்லோகத்தை தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். 

'கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதீ 

நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சன்னிதிம் குரு'

பிறகு கலச நீரை கிணற்றிலோ அல்லது செடி, கொடிகளிலோ விட்டுவிட வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் திருமணமான பெண்கள் தீர்க்கசுமங்கலியாகவும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியமும் கைகூடும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு