சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

'யானைகளை விரட்டிய வெடி சத்தம்!'

சபரிநாதனே... சரணம்!

'யானைகளை விரட்டிய வெடி சத்தம்!'
'யானைகளை விரட்டிய வெடி சத்தம்!'

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் டெய்லர் ராதாகிருஷ்ணன் குருசாமி என்றால், ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமே தெரியும். ''69-ஆம் வருஷம், முதன்முதலா மாலை போட்டுக்கிட்டு, சபரிமலைக்குப் போனேன். 'உடம்புல தெம்பையும் மனசுல அப்பழுக்கில்லாத சிந்தனையையும் கொடுப்பா’னு வேண்டிக்கிட்டேன். அன்னிலேருந்து என்னை மட்டுமில்லாம, எங்க குடும்பத்துக்கே ஆபத்பாந்தவன் ஸ்ரீஹரிஹர சுதன்தான்! சபரிமலை போவது, இது எனக்கு 42-வது வருஷம்!'' - நெகிழ்ச்சி பொங்கச் சொல் கிறார் ராதாகிருஷ்ணன் குருசாமி.

''எங்க ஊர்க்கார சாமியோட அம்மா, சித்த சுவாதீனம் இல்லாம இருந்தாங்க. 'நீ சபரிமலைக்கு வா. நல்லதே நடக்கும்’னு சொல்லிக் கூட்டிட்டுப் போனேன் அப்புறம், ஒரே வருஷத்துக்குள்ளே, அந்த அம்மா குணமாயிட்டாங்க! இப்ப அந்த சாமி 25 வருஷமா, மலைக்கு வந்துக்கிட்டிருக்கார்'' என்று வார்த்தைக்கு வார்த்தை, ஸ்ரீஐயப்பனைப் போற்று கிறார் குருசாமி.

''சில வருஷங்களுக்கு முன்னால, சபரிமலையில கடும் வறட்சி. குடிக்கிறதுக்குக் கூட தண்ணி கிடைக் கலை. பிறகு எங்கே குளிக்கறது? அன்னிக்கி மகர ஜோதி தரிசனம் வேற! எங்களைப் போல ஆயிரக்கணக்கான சாமிங்க, இதைச் சொல்லி வருத்தப்பட்டுக்கிட்டிருந்தாங்க. அப்ப திடீர்னு பெஞ்சுது பாருங்க ஒரு மழை! மொத்த பேரும் நனைஞ்சோம். பிறகு, மகரஜோதி தரிசனத்துக்குப் பத்து நிமிஷம் முன்னாடி, மழை நின்னுடுச்சு. ஐயப்பனோட மகிமையை நினைச்சு, சிலிர்த்துப் போனோம்!'' என்று சொல்லும் ராதாகிருஷ்ணன் குருசாமி, இன்னொரு தகவலையும் சொன்னார்.

##~##
''இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னாடி, இப்ப மாதிரி பாதைகளும் இல்லை. இரவு தங்கறதுக்கான வசதிகளும் அன்னிக்குக் கிடையாது. அப்படித்தான் ஒரு முறை, மலைல காட்டுப்பாதைல, நல்ல இடமா பார்த்து நாங்க தூங்கிட்டிருந்தோம். திடீர்னு கிட்டே யாரோ நிக்கற மாதிரி ஒரு உணர்வு. கண் திறந்து பார்த்தா, நாலஞ்சு யானைங்க நிக்குது. விழுந்தடிச்சு, எழுந்திருச்சு, தலைதெறிக்க எல்லாரும் ஓடினோம். உள்ளுக்குள்ளே 'உன் சந்நிதிக்கு, உன்னைப் பார்க்க வந்திருக்கோம். நீதாம்பா காப்பாத்தணும்’னு ஸ்ரீஐயப்பனை வேண்டிக்கிறதைத் தவிர வேற கதி?

அந்த நேரம் பார்த்து, எங்கேருந்தோ டமால்னு வெடிச் சத்தம் கேட்டுச்சு. உடனே யானைங்க, வெடிச் சத்தத்துக்குப் பயந்து ஓடிருச்சுங்க. 'அப்பா, ஐயப்பா... காப்பாத்திட்டடா சாமீ’னு ஆசுவாசப்படுத்திக்கிட்டோம்.

அப்பதான், 'வெடியை யாரு, எங்கே வைச்சது’ன்னு எங்களுக்குள்ளே கேள்வி வந்துச்சு. விசாரிச்சப்ப, சபரிமலை தேவஸ்தானத் துல இருந்து வெடி வைச்சாங்க’னு தகவல் சொன்னாங்க! கிட்டத்தட்ட எனக்குத் தெரிஞ்சு, அந்த ராத்திரியில, வெடியெல்லாம் வைக்க மாட்டாங்க! இது சாஸ்தாவின் பெருங் கருணைதான்!'' என்று ஆனந்தக் கண்ணீருடன் சொல்கிறார் ராதாகிருஷ்ணன் குருசாமி.

  - விக்னேஷ்
படங்கள்: வீ.சிவக்குமார்