Published:Updated:

தெற்காசிய நாட்டின் தமிழகத் தொடர்பை நினைவூட்டும் அரிய அடையாளம் அங்கோர்வாட்!- ஒரு தரிசனம்!

தெற்காசிய நாட்டின் தமிழகத் தொடர்பை நினைவூட்டும் அரிய அடையாளம் அங்கோர்வாட்!- ஒரு தரிசனம்!
தெற்காசிய நாட்டின் தமிழகத் தொடர்பை நினைவூட்டும் அரிய அடையாளம் அங்கோர்வாட்!- ஒரு தரிசனம்!

`கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது ஔவை சொன்ன முதுமொழி. `ஒரு நகரம் முழுதும் கோயிலாக இருக்கிறது... அங்கு குடியிருப்பதற்கு யாருமே இல்லை’ - இது காலம் எழுதிய இருள்மொழி.

அங்கோர்வாட்...

சுமார் 1000 ஆண்டு தொன்மை வாய்ந்த சரித்திர அடையாளங்கள் கொட்டிக்கிடக்கும் மனித உழைப்பின் ஆச்சர்யமாக இருக்கின்றன அங்கோர்வாட் உள்ள கோயில்கள். சுமார் 17 பிரமாண்ட கோயில்களின் காம்ப்ளெக்ஸ்தான் அங்கோர். பலகோயில்கள் இடிந்து தரைமட்டமான மிச்சம் இவை. அங்குள்ள சுமார் மூன்றரை கிலோ மீட்டர் நீள அகலமுள்ள காம்பவுண்டு பரப்பில் உள்ள ஒரு கோயில் அங்கோர்வாட். இதைப்போல ஒவ்வொரு கோயிலும் கிலோ மீட்டர் கணக்கில் நீண்டுகிடக்கிறது.

புத்தர், சமணர், விஷ்ணு, சிவன், பிள்ளையார் என இறைச் சிற்பங்கள் கொட்டிக்கின்றன. கோயில் கோபுரங்கள், சுவர்கள், தூண்கள் நடக்கும் இடங்கள், பாதை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் சிற்பங்கள்... சிற்பங்கள்... சிற்பங்கள். போர்க்காட்சிகள், மன்னர் ஊர்வலங்கள், அப்சரஸ் நடனங்கள் எனத் திரும்பும் இடம் எல்லாம் திகைக்க வைக்கின்றன. கோயில்களில் மாடங்கள், மாடிகள் என வியப்பூட்டுகின்றன. கோபுரத்தின் உச்சி வரைக்கும் செல்வதற்கான படிக்கட்டுகள்... அதில் ஏறி நின்று பார்த்தால் பார்வைக்கு எட்டும் தூரம் வரை பசுமை. குடியிருப்புப் பகுதிகளே இல்லை. அதாவது காடு!

அங்கோர் கோயில் மாடியில் குளம் அமைக்கப்பட்டுள்ளது. படித்துறை உள்ளது. இப்படியெல்லாம் கவனித்து, அழகியல் உணர்வோடு அத்தனை ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பையும் கோயில்களால் அலங்கரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கோயிலுக்கும் இடையில் சில கிலோ மீட்டர் இடைவெளி. அத்தனை கோயில்களும் ஓர் அடர்ந்த வனத்தின் நடுவே இருக்கின்றன.

பல்லவ மன்னர்கள், பிற்காலச் சோழர்கள் செதுக்கிய கோயில் நகரம் அது. கி.பி.1500-ம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மன்னர்களின் போக்குவரத்து முற்றிலுமாக நின்றுபோனது. சுமார் 300, 400 ஆண்டு காலத்துக்குள் அரசர்கள் இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதன்பின், அத்தனை கோயில்களும் வனம் மூடிய புதராக மாறிப்போயின. பின்னர் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின், கடந்த நூற்றாண்டில் மீண்டும் பொலிவுபெற்று வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஒரு நாளுக்கான டிக்கெட்டிலிருந்து ஒரு வாரத்துக்கான டிக்கெட் வரை விற்கிறார்கள். ஒரு வாரம் உட்கார்ந்து பார்த்தாலும் அத்தனைக கோயில்களிலும் நாம் கவனிக்கத் தவறிய விஷயங்கள் இருக்கும்.

இன்றைக்கு இருக்கும் அதி நவீனக் கட்டடத் தொழில்நுட்பத்தினாலும் சாத்தியப்படாத சாதனையாக இது இருக்கிறது. தமிழகத்திலிருந்து எவ்வளவு பேர் இந்தச் சிற்ப வேலைகளுக்காகச் சென்றார்கள்; மலைகள் அற்ற அந்த நாட்டுக்குப் பாறைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள்; எதற்காக அவசர அவசரமாக அத்தனை கோயில்களைக் கட்டினார்கள்; அத்தனை பெரிய அரசாங்கத்துக்கு என்ன நேர்ந்தது; ஏன் அங்கு யாருமே வசிக்கவில்லை; அங்கு வசித்தவர்கள் எங்கே போனார்கள்; ஏன் அந்த இடம் புதர் மண்டிய காடாக மாறிப்போனது எல்லாம் புதிர். அந்தப் புதர்களின் இடுக்குகளில் அந்தப் புதிர் ஒளிந்திருக்கிறது. அங்கு பார்வையாளர்களாக உலகமெங்கும் இருந்து வந்த மக்கள் அந்தப் புதிரை அவிழ்க்க முடியாமல் ஆச்சர்யங்களைப் பகிர்ந்தபடி நகர்ந்து செல்கிறார்கள். பார்வையாளர் நேரம் மாலை 6 மணிக்கு முடிந்து போகிறது. அந்தகார இருட்டு கவிகிறது. பூச்சிகள், பறவைகள் தங்கள் இருப்பிடங்களில் தஞ்சமடைகின்றன. இரவு விலங்குகள் அந்தக் கோயில் வளாகத்தில் தங்கள் உலாவலைத் தொடங்குகின்றன. அந்த வனமும் விலங்குகளும் பாழடைந்த கோயில்களுக்கு நடுவே தொலைந்து போன வரலாற்றைத் தேட ஆரம்பிக்கின்றன. நான் விடைபெற்றேன்.

கோயில் பற்றிய மேலும் படங்களை காண... இங்கே க்ளிக் செய்யவும்!