சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

1,008 ஜாங்கிரி மாலை... 10,008 வடை மாலை!

1,008 ஜாங்கிரி மாலை... 10,008 வடை மாலை!

1,008 ஜாங்கிரி மாலை... 10,008 வடை மாலை!
##~##
தி
ருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தலைமை தபால் நிலையம். இதன் அருகில் அழகுறக் கோயில் கொண்டிருக் கிறார், ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர்.

திருச்சியின் முக்கியமான பகுதியில் குடிகொண்டிருக்கும் இந்த ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு, வேலைக்குச் செல்பவர்களும் கடையைத் திறப்பவர்களும் பள்ளி-கல்லூரிக்குச் செல்பவர்களும் ஏராளம்.

புதுக்கோட்டை மன்னர் பரம்பரையினரால் நிர்வகிக்கப் பட்டு வந்த ஆலயம் இது. சஞ்சீவி மலையை ஏந்தி, வாலில் மணியுடன் கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதி எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், திருச்சி வாழ் பக்தர்கள்!  

மாதந்தோறும் மூலநட்சத்திர நாள், புதன் மற்றும் சனிக் கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீஆஞ்சநேயரைத் தரிசித்தால், தீராத நோயும் தீரும். திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!

இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு... இங்கு, ஸ்ரீஅனுமனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் இல்லாத நாளே இல்லை. பிரார்த்தனை நிறைவேறிய அன்பர்கள், இங்கு வந்து ஸ்ரீஅனுமனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வடை மாலை சார்த்தி வணங்கிச் செல்கின்றனர்.

1,008 ஜாங்கிரி மாலை... 10,008 வடை மாலை!

புரட்டாசி மாதம் முழுவதும், ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து, 27 வரிசைகள் கொண்ட வெற்றிலை மாலையை ஸ்வாமிக்கு அணிவித்து (11 சனிக் கிழமைகள்) தரிசித்துப் பிரார்த்தித்தால், விரை வில் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்!

ஸ்ரீஅனுமனுக்கு துளசி மாலை சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். வடை மாலை சார்த்தி வழிபடுவதும் விசேஷம். ஸ்ரீராம நவமியின்போது இங்கே நடைபெறும் சீதா கல்யாணம் வைபவத்தைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும்!

சனிக்கிழமைகளில், வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்து ஸ்ரீஅனுமனை மனதார வேண்டினால், நினைத்த காரியங்களை  ஈடேற்றித் தருவார் என்பது ஐதீகம்!

ஸ்ரீஅனுமன் ஜயந்தி, நான்கு நாள் விழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள், சகல தோஷங்களையும் நீக்கியருளும் ஸ்ரீமகா சுதர்சன ஹோமம் நடைபெறும். 2-ஆம் நாள், ஸ்ரீஆஞ்சநேயருக்கு 1008 ஜாங்கிரி மாலை அணிவித்து, சிறப்பு அலங்கார தரிசனம் நடைபெறும். இதனைத் தரிசித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்வார் ஸ்ரீராம பக்தன். 3-ஆம் நாள், அனுமன் ஜயந்தி அன்று ஸ்ரீஅனுமனுக்கு 10,008 வடை மாலை சார்த்தி, சிறப்பு அன்னதானம், கூட்டுப் பிரார்த்தனை, திருவிளக்கு பூஜை என விமரிசையாக நடந்தேறும்!

ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயரை வணங்குங்கள்; சகல நன்மைகளையும் பெறுவீர்கள்!  

  - ஆ.அலெக்ஸ் பாண்டியன்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்