சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

கோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்!

கோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்!

கோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்!
கோதானம் செய்தால் சுபிட்சம் நிச்சயம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகாடு ஹனுமந்தராய ஸ்வாமி ஆலயம். ஒருகாலத்தில் வனப்பகுதியாக இருந்த இந்த இடத்தில் கோயில் அமைந்ததால், ஸ்ரீஅனுமனுடன் 'காடு’ என்கிற பெயரும் சேர்ந்து கொண்டதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்ரீவியாசராயர், தீர்த்த யாத்திரையாகப் பல ஊர்களுக்குச் சென்று, அங்கே ஒவ்வொரு தலங்களிலும் ஸ்ரீஆஞ்சநேயரின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தாராம்! அந்த வகையில், சுமார் 732 ஆஞ்சநேய திருவிக்கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் அதில், 83-வது மூர்த்தமாக, தாராபுரம் தலத்தில், ஸ்ரீகாடு அனுமந்தராய ஸ்வாமி விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார் என்றும் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

மூலவர் ஸ்ரீஅனுமன், சுமார் ஏழு அடி உயரத்தில் இடுப்பில் மணி கட்டிக் கொண்டு, அபய ஹஸ்தத்துடன் அழகுறக் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசீதாராமர் மற்றும் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  

##~##
ஸ்ரீலட்சுமி நரசிம்மர், மிகுந்த வரப் பிரசாதி. கடந்த நூற்றாண்டில், பவானி கூடுதுறை ஆற்றில், அன்பர் ஒருவருக்குத் தரிசனம் தந்த திருவிக்கிரகத் திருமேனி இது. இவரை வணங்கினால், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை! ஸ்ரீநரசிம்ம ஜயந்தி நாளில், சிறப்பு பூஜைகளும் உத்ஸவங்களும் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை, அமாவாசை மற்றும் மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திரம் ஆகிய நாட்களில், ஸ்ரீஅனுமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்தத் தலத்தில் வேண்டிக் கொண்டு கோதானம் செய்தால், வீட்டில் சுபிட்சம் நிலவும்; லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் உள்ள கால்நடைகள் ஆரோக்கியமாகத் திகழும் என்கின்றனர் பக்தர்கள்!

இதற்காகவே, இங்கு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமைகளில் ஸ்ரீராகவேந்திரர், வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், சனிக்கிழமைகளில் ஸ்ரீஆஞ்சநேயர் என எல்லா நாளிலும் ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

பிள்ளை இல்லையே என வருந்துவோர், இந்தக் கோயிலின் அரச மரத்தில் தொட்டில் கட்டி, ஸ்ரீஅனுமனைப் பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!

கட்டுரை- படங்கள்: தெ.அருண்குமார்