சிறப்பு கட்டுரை
ஆஞ்சநேயா... அனுமந்தேயா..!
தொடர்கள்
Published:Updated:

அஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்!

அஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்!

அஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்!
அஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் வழியில், சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ளது அழியாநிலை எனும் கிராமம். இந்த ஊரில், மிகப்பிரமாண்ட திருமேனியுடன் அழகு ததும்பக் காட்சி தருகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். மிகப் பிரமாண்டமாக எழுந்தருள்வதால், இவருக்கு ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர், பக்தர்கள்!

ஒரே கல்லால் ஆன, சுமார் 12 அடி உயரம் கொண்ட, இந்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு மேற்கூரை இல்லை. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், எதிரிகள் தொல்லை ஒழியும். சனி பகவானின் பார்வையில் இருந்து தப்பலாம் என்று இந்தப் பகுதி மக்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் என பல ஊர்களில் இருந்தும், சனிக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீஅனுமனைத் தரிசித்துச் செல்கின்றனர். தன்னை நாடி வருவோருக்கு, மனோதைரியத்தையும், நிம்மதியையும், சகல செல்வங்களையும் தந்தருள்கிறார் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர். புராதனக் கோயில் இல்லை எனினும், இந்த அனுமன் சக்தி வாய்ந்தவர் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.

அஞ்சனை மைந்தனுக்கு... மஞ்சள் அரைத்து அலங்காரம்!

இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு... சுமார் 33 அடி உயரத்தில், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். எனவே இந்தத் தலத்துக்கு வந்தால், ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயரையும் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரையும் கண்ணாரத் தரிசித்து, பலன் பெறலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்!

##~##
சனிக்கிழமைகள், அமாவாசை மற்றும் ஸ்ரீஅனுமன் ஜயந்தி ஆகிய விசேஷ நாட்களில், வெண்ணெய்க் காப்பு அலங்காரம், சந்தனக் காப்பு அலங்காரம், செந்தூர அலங்காரம், பழ அலங்காரம், மலர் அலங்காரம் ஆகிய சிறப்பு அலங்காரங்களில் அழகுறக் காட்சி தருகிறார் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர். இங்கு வந்து நெய் விளக்கேற்றி, வடைமாலை சார்த்தி வழிபட, வியாபாரம் சிறக்கும்; தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும். நினைத்த காரியங்கள் அனைத்திலும் பக்கத்துணையாக இருந்து அருள்வார் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்.  

ஸ்ரீராமநவமி நாளில், ஸ்ரீஅனுமனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் நடைபெறும். பக்தர்கள் மஞ்சள் அரைப்பதற்காக, இங்கு ஏராளமான அம்மிக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஅனுமனுக்கு மஞ்சள் அரைத்து அலங்கரித்தால், குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேற்றுமை இல்லாமல், தம்பதி ஒற்றுமையுடன் வாழ்வார்கள். அன்றைய நாளில், ஸ்ரீஅனுமனுக்கு ஸ்ரீராமஜெயம் எழுதி, மாலையாக்கி வேண்டுகின்றனர், பக்தர்கள். அதேபோல், சனிப்பெயர்ச்சியின்போது ஸ்ரீஅனுமன் சந்நிதியில் சிறப்பு ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமங்களும் பூஜைகளும் நடைபெறுமாம். இதில் கலந்து கொண்டு ஸ்ரீஅனுமனைப் பிரார்த்தித்தால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். அனுமன் ஜயந்தி நன்னாளில், ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம் ஆகியன நடைபெறும்.  

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதி, ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்து, அந்த வெண்ணெய்ப் பிரசாதத்தைச் சாப்பிட்டு வந்தால், விரைவில் புத்திர யோகம் கிடைக்கப் பெறுவார்கள். இந்தத் தலத்தில், சனிக்கிழமை தோறும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது.

- பெ.தேவராஜ்
படங்கள்: பா.காளிமுத்து