Published:Updated:

ஐந்து வேளைத் தொழுகையைவிட உயர்ந்தா இரவுத்தொழுகை?

ஐந்து வேளைத் தொழுகையைப் போன்று அது ஒரு கடமையான தொழுகை அல்ல என்றாலும், குர்ஆனும் நபிமொழிகளும் அதிகமாகப் புகழ்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள தொழுகை இரவுத்தொழுகை.

ஐந்து வேளைத் தொழுகையைவிட உயர்ந்தா இரவுத்தொழுகை?
ஐந்து வேளைத் தொழுகையைவிட உயர்ந்தா இரவுத்தொழுகை?

திகாலை, மதியம், மாலை, அந்தி சாய்ந்த பின், செவ்வானம் மறைந்து இருட்டிய பின் எனத் தினசரி ஐந்து நேரத் தொழுகைகளைக் கடமையாக்கி இருப்பது இஸ்லாம்.

தொழுகை ஒரு மகத்தான தியானம்; இறைநெருக்கத்துக்கான ஓர் உயர்ந்த பயணம்; படைக்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் லட்சியம்; பாவங்களை விட்டுப் பாதுகாக்கும் கேடயம்; உளத்தூய்மையும் உடல் தூய்மையும் ஒன்றிணைந்து நலம் தரும் வணக்கம். இந்த ஐந்து வேளைத் தொழுகைக்குப் பிறகும் ஓர் உயர்ந்த தொழுகை இஸ்லாமில் உண்டு. அதுதான் இரவுத்தொழுகை.

ஐந்து வேளைத் தொழுகையைப் போன்று அது ஒரு கடமையான தொழுகை அல்ல என்றாலும், குர்ஆனும் நபிமொழிகளும் அதிகமாகப் புகழ்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள தொழுகை இரவுத்தொழுகை என்றால் அது மிகையாகாது. எனவேதான், ஐந்துவேளை தொழுகைக்கு அடுத்துச் சிறந்தது இரவுத்தொழுகைதான் என்று நபிகள் கூறியுள்ளார். 

இந்தத் தொழுகையின் வரலாறு ஐந்துவேளைத் தொழுகைக்கும் முந்தையது. தாம் நபியான 40-வது வயதின்போதே இறைவன் இதற்கு வழிகாட்டினான். அதாவது, இஸ்லாமிய வழிபாடுகள் எதுவும் அறிமுகம் செய்யப்படாத காலத்திலேயே, அதாவது ஆரம்பக் காலத்திலேயே முதலில் நபிகளுக்குக் கட்டளையிடப்பட்ட வணக்கம் இரவுத்தொழுகைதான்.

`நபியே, இரவில் நீர் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! முழு இரவிலுமல்ல; அதிலொரு சொற்பப் பகுதி. அதாவது, அதில் பாதி நேரம். அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்; அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். அதில் இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக!' (திருக்குர்ஆன் 73:1-4)

தொழுகையும் குர்ஆனும் பிரிக்க முடியாதவை. நபிகள் இரவில் தொழுதார்; அத்துடன் தமக்கு இறைவனிடமிருந்து இறங்கிய வார்த்தைகளை நிறுத்தி நிதானமாகத் தொழுகையிலேயே ஓதவும் செய்தார். இரவின் ஒரு பகுதி நேரத்தில் தம்மால் முடிந்த அளவு அவர் தொழுதது, அவரது லட்சியப் பணிகளுக்கு ஆயத்தம் செய்தது. இதற்குப் பின்பு சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகுதான் ஐந்துவேளைத் தொழுகை கடமையானது.

இந்தப் பத்து வருட இடைவெளியில் எதிரிகளின் அனைத்துக் கொடுமைகளையும் அவர் சமாளித்தார். எல்லா பாடுகளையும் தாங்கினார். 

சிந்தியுங்கள். தொழுகைக் கடமையாகாத இக்காலக் கட்டத்தில் அவரைப் பலப்படுத்தி வழிநடத்தியது எது? எந்தச் சாதனம் மூலம் அவர் தம் இறைவனிடம் உரையாடி ஆறுதல் பெற்றார்? எது அவரை ஒவ்வொரு நாளும் உற்சாகப்படுத்திக் களப்பணி செய்ய வைத்தது? எவனுக்கும் அஞ்சாத நெஞ்சத்தை அளித்து அவருக்கு ஊக்கமூட்டியது எது?

இரவில் தொழுவது. இதுதான் ரகசியம். அர்த்தராத்திரியில் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த வணக்கம் இது. நபிகள் இதை தம் ஆயுளின் இறுதிவரை விடவில்லை. எந்தளவுக்கு என்றால், எப்போதேனும் அசந்து உறங்கியதாலோ, நோயினாலோ இத்தொழுகை தவறிப்போய் அதிகாலைதான் கண்விழிக்க முடிந்தது என்றாலும், அதற்கு ஈடுசெய்யப் பகலில் கூடுதலாகத் தொழுதுவிடுவார். (ஆதார நூல்: முஸ்லிம் 1357)

`ரக்அத்' என்பது தொழுகையின் நிற்றல், குனிதல், நெற்றியைப் பூமியில் வைத்துத் தலைவணங்குதல் ஆகிய நிலைகளின் ஓர் அளவீடு. ஆக, இரவில் தொழுவது நமது ஆன்மிக வாழ்வின் ஆகப்பெரிய அடையாளம். அத்துடன், நம்மை வழிநடத்தும் தனித்துவமிக்க தவமாகும்.

நபிகள் நீண்ட நேரம் நின்று தொழுது அதன் விளைவாகக் கால்கள் வீங்கிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. அதைக் கண்ட அவரது மனைவி ஆயிஷா நாச்சியார் ``இறைத்தூதரே, அல்லாஹ்தான் உங்கள் முன்பின் பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்டானே, ஏன் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு,  ``ஆயிஷா, நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டுமல்லவா?'' என்றார். (ஆதார நூல்: புகாரீ 4836)

அன்னையின் கேள்வியிலிருந்து இரவுத்தொழுகை நமது பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத் தரும் மகத்துவம் கொண்டது என்பது புரிகிறது. நபிகளின் பதிலிலிருந்து இறைவனுக்கு நன்றி செலுத்த இந்தத் தொழுகைக்கு ஈடு வேறில்லை என்று உணர முடியும்.

``ஏழைகளுக்கு உணவளியுங்கள். மக்கள் தூங்கும்போது தொழுங்கள். இதனால் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவீர்கள்'' என்கிறது ஒரு நபிமொழி. (ஆதாரநூல்: திர்மிதீ 2409)

இஸ்லாமைப் பரப்புவதும், அன்னதானம் செய்வதும் பகலில் மட்டுமே முடியும். இரவில் மக்கள் தூங்கிக்கொண்டிருப்பார்கள் அல்லவா? சொர்க்கம் போவதற்குப் பகலில் மட்டும் நல்லறம் செய்தால் போதாது; இரவிலும் செய்ய வேண்டும். அதற்கு இரவுத்தொழுகையே வழி. 

உண்மையில் இரவில் தொழும் அளவு ஆன்மிக உள்ளம் கொண்டவர்களால்தான் பகலில் நல்லறங்கள் செய்ய முடியும். ஏனெனில், இவர்களின் உள்ளங்கள் கனிந்திருக்கும். பிறருக்காகப் இரங்கும்; பிரார்த்திக்கும்.

இவர்களின் பிரார்த்தனைகள் உடனே ஏற்கப்படும். இவர்கள் கேட்டால் இறைவன் கண்டிப்பாகக் கொடுப்பான். இவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை தள்ளப்படாது. நம் உள்ளத்தைக் குதூகலப்படுத்தும் அழகான நபிமொழி ஒன்றைக் கேளுங்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்துக்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ``என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுவான். (ஆதாரநூல்: புகாரீ 1145)

சூரியன் மறைந்தவுடன் இரவு தொடங்கிவிடும். அதிலிருந்து அதிகாலை விடியல் ஏற்படும்வரை இரவுதான். இந்த இடைப்பட்ட நேரத்தை மூன்று பங்குகளாகப் பிரித்தால், அதாவது மாலை 6.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை உள்ள பத்து மணி நேரத்தை மூன்றால் வகுத்தால், ஒவ்வொரு பங்கும் ஏறக்குறைய மூன்று மணி நேரமாக இருக்கும். இதில் மூன்றாவது நேரம் சுமார் 1.30 மணிக்குத் தொடங்குமல்லவா? இந்த நேரம்தான் மகிமையான நேரம். பொதுவாக இஸ்லாமிய வழக்கில் இதை ‘தஹஜ்ஜுத்’ நேரம் என்பார்கள்.

இரவுத்தொழுகையை இதற்கு முந்தைய நேரத்திலும் தொழலாம். ஐந்துவேளைத் தொழுகையில் இறுதித் தொழுகையான இஷா என்கிற தொழுகையை முடித்தவுடன் தொழுதாலும் அது இரவுத்தொழுகைதான். 

ரமலான் மாதத்தில் மசூதிகளில் இந்த முதல் நேரத்தில் கூட்டாகத் தொழுவதுண்டு. ஆனால், இரவின் கடைசி நேரத்தில் தொழுவது இன்னும் சிறந்தது என்றார்கள் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் (ரழி). இதற்குக் காரணம் மேலே உள்ள நபிமொழியின் செய்திதான்.

ஏக இறைவன் அல்லாவைத் தொழுவதற்காக இரவில் தூக்கத்தை விட்டு எழுந்து கையேந்தும் அடியாருக்காக அவனே பூமியின் வானுக்கு இறங்குவதாக நபிகள் கூறுகிறார், இது சத்தியம். சர்வ வல்லமை கொண்ட இறைவனுக்கு நிச்சயம் சாத்தியம். இறங்குதல் என்பது இறைவனின் செயல். 

ஆக்கவும் அழிக்கவும் ஆற்றல் கொண்டவன் நமது அறிவுக்கே எட்டாத விதத்தில் தன் ஆற்றலால் பூமியின் வானிற்கு இறங்கவும் ஆற்றல் கொண்டவனே. அவன் இதை எப்படிச் சாத்தியப்படுத்துகிறான் என்பதை அவனே அறிவான். நபிகள் மகா சத்தியவான். இறைவன் குறித்து மகத்தான சத்தியத்தை அறிவித்துள்ளார்.

ஏன் அவன் இறங்குகிறான்? நமக்காக, நமது பிரார்த்தனைகளை ஏற்பதற்காக, நாம் கேட்டதைக் கொடுப்பதற்காக, நம்மை மன்னிப்பதற்காக. இவை அனைத்தையும் அவன் இறங்காமலும் செய்ய முடியும். ஆனால், அவன் நமது இறைவன், நம் மீது கருணை கொண்டவன் என்பதைக் காட்டுகிறான். நமக்காகக் காத்திருக்கிறான். நாம் செய்ய வேண்டியது: விழித்தாக வேண்டும். தொழுது வழிபட்டு அவனிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்.