Published:Updated:

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

? இறை வழிபாட்டில் தாமரை மலரே அதிக முக்கியத்துவம் பெறுகிறது.  இறைவனின் பாதங்களை `பாதக் கமலம்' என்றே இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன. ஏன் அப்படி?

- வசந்தா நாராயணன், சென்னை-4


நூறு இதழ்கள் கொண்ட தாமரை, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று புஷ்பங்களில் தாமரைக்குத் தனிச் சிறப்புண்டு (ஸஹஸ்ர பத்ரம் கமலம் சதபத்ரம் குசேசயம்). செந்தாமரையின் அழகு எல்லோரையும் கவர்ந்துவிடும். காலையில் கதிரவனின் ஸ்பரிசத்தில் மலர்ந்த தாமரையில் லட்சுமி வாசம் செய்கிறாள். சிவப்பு, மென்மை, அழகு மூன்றும் ஒருங்கே அமைந்த தாமரைப் பூவை இறைவனின் பாதங்களுக்கு ஒப்பிடுவது தனிச் சிறப்பு. 

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

தொன்றுதொட்டு கவிகள் எதை உவமையாகச் சொல்லி உலகில் பரவச் செய்தார்களோ, அதைப் பின்பற்ற வேண்டும். எல்லோரும் எளிதில் உவமையின் பெருமையைப் புரிந்துகொள்வதால், அதைப் பின்பற்றுவது சிறப்பு என்பார்கள். அதற்கு ‘கவிசமயப்ரஸித்தி’ என்று பெயர்.

ஆம்பல் புஷ்பத்தோடு ஒப்பிட்டுக் கூறக்கூடாது என்றும் சொல்வார்கள். கவிகள் குழாம் அதைப் பின்பற்றாததால் அதைத் தப்பான உவமை என்று ஒதுக்கிவிடுவார்கள். ரசிகர்கள், பாதங்களைத் தாமரையோடு ஒப்பிடுவதை ஏற்பார்கள். தாமரை மலரை ஒப்பிடும்போது மென்மை, சிவப்பு, அழகு -இவை மூன்றும் ஒருங்கே பாதத்தில் இருக்கிறது என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிடும். பாதத்தின் பெருமை அவர்களை ஈர்க்கும். ரசிகர்களின் மனோ நிலையை அறிந்து கவிகள் செயல்படுவார்கள்.

? ஆலயங்களில் நிர்மால்ய தரிசனம் காண பக்தர்களும் அடியார்களும் வெகுவாக ஆர்வம் காட்டுவதுண்டு. நிர்மால்ய தரிசனத்துக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?

- கே.தில்லைநாயகம், திருநெல்வேலி-2


 அதிகாலையில் கர்ப்பக்கிரகம் திறந்தவுடன் முதல் நாள் நிகழ்ந்த பூஜை அலங்காரங்களைக் கலைப்பதற்கு முன்பு கடவுளைக் காண்பது நிர்மால்ய தரிசனம்! முந்தைய இரவு பூஜைக்குப் பயன்படுத்தப்பட்ட புஷ்பங்கள், மாலைகள் மறுநாள் காலையில் ‘நிர்மால்ய’ நிலையை அடைகின்றன. அவற்றை அகற்றுவதற்கு முன்பு ஒரு தடவை அந்த அலங்காரத்தோடு தெய்வ தரிசனம் செய்வது சிறப்பல்லவா!

அன்னாபிஷேகம் முடிந்த பிறகு, அதைக் கலைப்பதற்குமுன் ஒரு தடவை அந்த அழகைப் பார்த்துவிடுவோம். திரும்பப் பார்க்க இயலாது என்று பக்தர்கள் காத்திருப்பது உண்டு. பிரதோஷ காலத்தில் வலம் வந்த பிறகு, அணிகலனோடு திகழும் ஆண்டவனை ஆலயத்திலிருந்து செல்லுமுன் மீண்டும் ஒரு முறை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பக்தனுக்கு ஏற்படும். அந்த தரிசனம் சிறப்பல்லவா!

கடவுள் தரிசனத்தில் சிறப்பு- சிறப்பில்லாதது என்ற பாகுபாடு இல்லை. நம் மனம்தான் இப்படிப் பாகுபடுத்திப் பார்க்கிறது. சந்தன அபிஷேகம் செய்ததும் ஒரு தடவை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபடுவது உண்டு. சந்தனத்தோடு அழகு ததும்பும் அவன் வடிவத்தை மற்றொரு முறை பார்ப்பதற்கு அந்த ஆரத்தி நமக்கு உதவுகிறது. அந்தச் சந்தனம் உடன் கலைக்கப்படும். ஆதலால், அந்த அபிஷேகக் காட்சி சிறப்பல்லவா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?லிங்க வடிவில் தோன்றிய ஈசனுக்கு விபூதி அபிஷேகம் நிகழும். விபூதியில் மூழ்கிய அவனைத் தரிசிப்பது சிறப்பல்லவா! கடவுள் வழிபாட்டில் ஒவ்வொன்றும் சிறப்புதான். பக்தர்களைத் தூண்ட ‘சிறப்பு’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்து வோம். மக்களை, கடவுளோடு நெருங்கவைத்து, அவர்கள் மனதைச் செம்மைப்படுத்த உதவும் ஒவ்வொரு பூஜையும் சிறப்பானதே. அப்போதுதான் அதைக் காண பக்தர்கள் விரும்புவார்கள். எந்த வகையில் பார்த்தாலும் நிர்மால்ய தரிசனம் சிறப்பு வாய்ந்தது. தினமும் அதிகாலையில் எழுந்து தரிசனம் செய்யுங்கள்.

? ‘சகல விஷயங்களுக்கும் நமது ஞானநூல்களில் தீர்வு உண்டு என்கிறீர்கள். ஆனாலும், மரணத்தின் ரகசியத்தைச் சொல்லமுடியவில்லையே. அதை விஞ்ஞானம்தானே ஆராய்ந்துகொண்டிருக்கிறது’ என்கிறான் என் நண்பன். அவன் கூறுவது உண்மையா, உண்மையெனில், அது நமக்கான தோல்விதானே?

- மூ.சேதுராமன், களக்காடு


மரணத்தின் ரகசியத்தை நம் முன்னோர்கள் அறிந்துவிட்டார்கள். பிறப்புதான் மரணத்தின் ரகசியம். பிறக்காத யாரும் இறக்க முடியாது!

அந்தப் பிறப்பின் ரகசியம்தான் அறிய முடியா தது. சோணிதமும் சுக்கிலமும் சேர்வதுவரை தெரிகிறது. அதன்பின் அதில் ஒரு சைதன்யம் வந்து உட்கார்வது எப்படி என்று சொல்ல முடியுமா?

இருக்கிற சைதன்யம் வெளியே போவதை உங்களால் அறிய முடியும். பஞ்ச பூதங்களால் ஆன உடம்பில் காற்று வடிவில் ஒரு சைதன்யம் அங்குமிங்கும் போய்க் கொண்டு இருக்கிறது. அது வெளியே போய் விடுவதற்கான வாசல்கள் திறந்தே இருக்கின்றன. எனினும், அது எப்படி போகாமல் இருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. ‘மரணம் என்பது இயற்கை. ஆனால், இத்தனை வாசல்கள் திறந்திருந்தும் உயிர் வெளியே போகாமல் இருப்பதுதான் ஆச்சர்யம்’ என்றான் காளிதாசன்.

பிறப்பு ரகசியம் என்பது பகவானின் லீலை. நமக்கு எட்டாத விஷயம். நமக்கு எட்டக் கூடாது என்றே சில விஷயங்கள் உண்டு. அதை எட்ட முடியாமல் போவது எப்படித் தோல்வியாகும்? நமக்கு எட்டுகிற காரியத்தை நம்மால் செய்ய முடியாமல் போனால்தான் தோல்வி!

? உடல், மனம், புத்தி... இந்த மூன்றில் முன்வினைப் பயனை மறுபிறவியில் அனுபவிப்பது எது?

- எம்.கீர்த்தனா சுரேஷ், துறையூர்

முற்பிறவியில் சேமித்த செயல்பாடு, மறு பிறவிக்கு விதையாகிறது. மனதோடு ஒட்டிக் கொண்டிருக்கும் கர்மவினை ஒருவனை துயரத்திலோ, மகிழ்ச்சியிலோ ஆழ்த்துகிறது. நமது செயல்கள், பலனை அளித்து நிறைவுபெறும்; பலனளிக்காமல் அழியாது என்பது கோட்பாடு. வாசனையோடு அல்லது கர்மவினையோடு இணைந்த மனம், நமது முயற்சியால் கரைக்கப்பட்டு மறைந்தால் மறுபிறவி இருக்காது!

‘மனம்’ என்று நாம் சொல்வது வாசனை கலந்த எண்ணக் குவியல். அது அழியும்போது மனம் இல்லாமல் போய்விடும். வாசனை அழிந்தால் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. நாம், நமது முன்வினைகளின் பலனை முற்றிலும் அழிக்க வேண்டும். முந்தைய கர்மவினை - பிந்தைய கர்மவினை - வருங்காலத்தில் கர்ம வினையாக உருவாகும் நடைமுறைச் செயல்பாடுகள் அத்தனையும் அழிக்கப்பட வேண்டும். இதைச் சஞ்சிதம், ப்ராரப்தம், ஆகாமிம் என்ற சொற்களால் சுட்டிக்காட்டுகின்றன நமது நெறி நூல்கள்.

கடமையும், நன்னடத்தையும், தவமும் சேமித்து வைத்தவற்றைக் கரைத்துவிடும். தற்போது செயல்பாட்டில் இருக்கும் கர்மவினை, அனுபவிப்பதால் முடிந்துவிடும். வருங்காலத்துக்கு கர்மவினை மீதமில்லாமல் இருக்க வேண்டும்.   

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

அதற்கு, ஆசையுடன் பலனை எதிர்பார்த்துச் செயலில் இறங்கக் கூடாது. பற்றற்று, கடமையுணர் வோடு செயல்பட வேண்டும். எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்படும்போது கர்மவினை நம்மோடு இணையாது. பற்றுதலே, கர்மவினை தொடரக் காரணம்.

மூன்று வழிகளில் கர்மவினையைக் கரைத்து விட்டால், அவன் பிறக்கக் காரணம் இருக்காது. உடல், மனம், ஆன்மா அத்தனையும் பிரிந்து போனாலும் கர்மவினை மிச்சம் இருந்தால் அடுத்த பிறவியில் அவனைப் பற்றிக்கொள்ளும்.

ஒருவன், வெந்நீர் நன்றாகச் சுடவேண்டும் என்று விறகுக் கட்டைகளை அடுப்பில் திணிக்கிறான். பாத்திரத்தில் உள்ள தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கிறது. போதுமென்று தோன்றியவுடன் விறகுக் கட்டைகளைத் தண்ணீரால் அணைத்து விடுகிறான். இப்போது நெருப்பு அணைந்தாலும் அதன் வெப்பம்- அதாவது அதன் இயல்பு பாத்திரத்திலும், தண்ணீரிலும் பரவி, அழியாமல் வெப்பத்துடன் தென்படுகிறது. நெருப்பு அணைந்தால் சூடு தணிய வேண்டும். இங்கு நெருப்பு அணைந்த பிறகும் தண்ணீரில் சூடு தென்படுகிறது. உடல் அழிந்தாலும் உயிருள்ளபோது செய்த செயல்பாடுகள், தண்ணீருக்கு மாறிய சூடு போல் அடுத்த பிறவியிலும் தொடரும்.  

கேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா?

மாட்டுச் சந்தையில் எத்தனையோ மாடுகளுக்கு மத்தியில் தனது தாயை அடையாளம் கண்டு விடும் இளங்கன்று. அதேபோல் முற்பிறவியில் செயல்பட்டவனை அடையாளம் கண்டு, பற்றிக் கொள்ளும் கர்மவினை. அதுவரை அது அழியாமல் இருக்கும். இந்த உலகைத் துறந்தவனுக்குத் துணை, அவன் செய்த செயல்பாடுகளே என்று சாஸ்திரம் கூறும் (தர்ம: ஸகா பரமஹோ பரலோக யானே). ‘வீடுவரை உறவு... கடைசி வரை யாரோ?’ என்கிற கேள்விக்கு பதில் அவன் செய்த கர்மவினை.

செயல்- அறிவுப் புலன்கள்- மனம்- புத்தி- சித்தம்- அகங்காரம் ஆகிய அத்தனையையும் ஏற்படுத்தி, அவனை மறுபிறவி ஏற்க வைக்கும் கர்மவினை. கர்மவினையை அழிக்க, எத்தனையோ வழிமுறைகளைப் பரிந்துரைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களது நூல்களைப் பார்த்தால் நமக்கு மலைப்பாக இருக்கும். வேதம், வேதாந்தம், மீமாம்சை, தர்க்கம், ஸாங்கியம், யோகம், வைசேஷிகம் - இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இத்தனை பொக்கிஷங்கள் இருந்தும், பயன்படுத்த மனம் இல்லாமல், கர்ம வாசனையைச் சேமித்து, திரும்பத் திரும்பப் பிறந்து இறந்து வாழும் நமது அறியாமையை என்னவென்று அழைப்பது!

கர்மவினையை அழித்தால் பிறவி இருக்காது. அழிக்காமல் இருந்தால் சங்கிலித் தொடர்போல் அவன் அனுபவித்துக்கொண்டே இருப்பான்... முடிவு இருக்காது!

? நவகிரக வழிபாடு போன்று பஞ்சபூதங்களை வழிபடுவதற்கும் வழிபாட்டு நியதிகள் உண்டா?

- சி.சங்கரசுப்பு, திண்டிவனம்


நவகிரகங்களையும் பஞ்ச பூதங்களையும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்காதீர்கள். பஞ்ச பூதங்கள் என்பவை சகலமுமானவை. நீங்கள் எந்த ஜீவராசியை எல்லாம் பார்க்கிறீர்களோ, அவை அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டு. எனவே, பஞ்ச பூதங்களைத் தனியே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

பஞ்ச பூதங்களிலிருந்து வந்தவைதான் கிரகங்கள். அவற்றை ஆராதித்தாலே பஞ்ச பூதத்தை ஆராதித்தது போலத்தான். ‘மண்ணே, உன்னை நான் வணங்குகிறேன்’ என்று சொல்லத் தேவையில்லை. அதற்குப் பதிலாகத்தான் தாய் நாட்டை வணங்குகிறோம். தண்ணீரே, உன்னை வணங்குகிறேன் என்று சொல்லவேண்டாம். அதற்குத்தான் வருண தேவதை வணக்கம் இருக் கிறது. நெருப்பை வணங்குவதுதான் அக்னி ஸ்தோத்திரம். தனித்தனியே பஞ்ச பூதத்தை ஆராதிக்க வேண்டியதில்லை. பஞ்ச பூதங்களின் தன்மையை வாங்கிக்கொண்டு சைதன்யத்தோடு இருப்பவற்றை வணங்கினால் போதும்.

- பதில்கள் தொடரும்....