மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? `பித்ரு தோஷம் என்பது முன்னோர்களின் சாபத் தால் - கோபத்தால் விளைவது' என்கிறார் எங்கள் ஜோதிடர். பித்ருக்கள் நம் முன்னோர்கள் ஆவர். அப்படியிருக்க, அவர்களே தங்களின் வம்சத்தை சபிப்பார்கள் என்பதை ஏற்க மறுக்கிறது மனம்.இதுகுறித்து நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

- சி.ராமு, சென்னை-45


தன் மகனைத் தேரின் சக்கரத்தில் பலி கொடுத்தான் மன்னன் ஒருவன் என்பது வரலாறு. தந்தையே தன் மகனை அழிப்பானா? தவறு செய்யும் வம்சாவளியை, முன்னோர் தண்டிப்பது தவறாகுமா? தவறிழைத்தவன் மகன் என்பதற்காக அவனைத் தண்டிக்காமல் விடுவது அறமா? 

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?

‘என் உயிர் பிரிந்த நாளில் என் நினைவோடு அன்னதானம் செய். நீயும் உனது குடும்பத்தாரும் செழிப்படைவீர்கள். அதை கடமையாகக் கருதி செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தி மறைந்தார் தந்தை. அவர், தனக்காக அன்னதானம் செய்யச் சொல்லவில்லை. தனது வம்சாவளி செழிப்புற வேண்டும் என்பதற்காக அப்படி பரிந்துரைத்தார். ஆனால், மகனோ அனைத்தையும் மறந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறான். இப்படித்தான், நம் நன்மைக்காக முன்னோர் சொல்லிச் சென்ற விஷயங்களைக் கடைப்பிடிக்காமல் வாழ்கிறோம்!

தசரதன் இறந்த பிறகும் அவரது வாக்குறுதியைக் காப்பாற்ற கானகத்தில் வாழ்ந்தார் ஸ்ரீராமன்.  தந்தையின் வாக்குறுதியைத் தனயன் காப்பாற்ற வேண்டும். இதை அறிவுறுத்தவே அவன் சிந்தையில் புகுந்து, இடையூறு விளைவித்து அவனுக்கு அறிவுறுத்த முற்படுகிறார்கள் முன்னோர்கள்.

தந்தையின் ஜீவாணுக்களில் உருவானவன் தனயன். அது வழி அவனது தொடர்பு, தந்தைக்கு இருக்கும். அவர், சூட்சும வடிவில் தனயனின் நினைவில் இருப்பார். ஆனால், தந்தையின் நினைவு நாளில் அவரை நினைத்துச் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள் இன்றைய தனயன்கள்!

பிறகு, குடும்பத்திலோ வாழ்விலோ செயல் பாடுகள் தடைப்படும்போது, சில இடையூறுகள் விளையும்போது, முன்னோருக்கான பணிவிடை யைச் செய்யாமல் விட்டதுதான் இதற்கெல்லாம் காரணமோ என்று மனது பரிதவிக்கும். அவனது மனமே குற்றத்தைச் சுட்டிக்காட்டும். மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்தும்.

மாற்றுவழி தெரியாமல் கலங்குபவர்கள், ஜோதிடரை அணுகுவார்கள். தசாபுத்தியை ஆராய்ந்து, பித்ரு சாபத்தைத் தெரிவிப்பார் அவர். அப்போதுதான் அவனுக்குத் தனது தவறு தெரியவரும். முன்னோருக்கான பணிவிடைகளை முறையே நடைமுறைப்படுத்தியபிறகு, மனதில் நெருடல் இருக்காது. அவனது செயல்பாட்டில் வில்லங்கம் விலகும்.    

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?

மகன் மீதுள்ள அன்பினால் அவனை நெறிப்படுத்தாமல் விட்டுவிட்டால், அந்தப் பரம்பரையே துயரத்தைச் சந்திக்க நேரும். அவனது ஜீவாணுக்களில் உருப்பெறும் வாரிசுகளிடம், முன்னோரை வழிபட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாமல் போகக்கூடும். தனது பரம்பரையை ஒட்டுமொத்தமாக அழிவில் இருந்து காக்க, மகனைத் தண்டிப்பதற்குத் தயங்கமாட்டார்கள் முன்னோர்கள். ஆகையால் பித்ருக்களின் சாபம் என்று எண்ணாமல், அதை அவர்களது அருளாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மகன் அறத்திலிருந்து நழுவி அழிவைச் சந்திக்கச் சித்தமாகிறானே என்ற கவலையில் மனம் நொந்து வெளிப்படும் அவர்களது அலறலே, சாபம் என்ற பெயரில் சொல்லப்படுகிறது.

தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? ‘தந்தைக்கு இழைத்த துரோகம், தனயனிடமும் அவனுடைய புதல்வனிடத்திலும், வம்சத்திலும் வெளிப்படும்’ (ததன்வயேபிச) என்கிறது.

? கோயிலுக்குச் சென்றிருந்தேன். அங்கே, என் வாழ்விலும் பணியிலும் குருவான ஒருவரைத் திடுமெனச் சந்திக்க நேர்ந்தது. வணக்கம் வைத்தேன்.

அவரோ `கோயிலில் வைத்து எவரையும் வணங் கக் கூடாது' என்று கடிந்துகொண்டார். கோயிலில் வைத்து குருநாதரை வணங்கினாலும் தவறுதானா?

- சி.பரமேஸ்வரன், விஜயநாராயணம்


கோயிலுக்குள் எவரது காலிலும் விழக்கூடாது. கோயிலுக்குள் இருக்கும்வரை, சிறியவர்- பெரியவர் என வித்தியாசங்கள் இல்லை; இறைவனே மிகப்பெரியவன். வெளியே வந்ததும் பெரியவர் களின் காலில் விழுந்து வணங்கலாம்!

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?ஆகமங்களும் புராணங்களும் சொல்லும் தெய்வத் திருவடிவங்களைப் பின்னுக்குத் தள்ளி, ‘நரஸ் துதி’யில் கவனம் செலுத்துதல் கூடாது.

? வாரம்தோறும் ஆன்மிகச் சுற்றுலாவாகத் தோழி யருடன் வெளியூர் ஆலயங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கெல்லாம் சிறப்பு வழிபாடுகளின்போது, பிரார்த்தனை சங்கல்பமும் செய்துகொள்கிறோம். கணவன் இல்லாமல் பெண்கள் தனியாக சங்கல்பம் செய்தால் பலன் உண்டா?

- கே.சங்கரி கிருஷ்ணன், கோவை-2


இல்லற வாழ்வில், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தே இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்படியிருக்க, இருவரும் சேர்ந்து சங்கல்பம் செய்வதே சிறப்பு.

எதிர்பாராத சூழலில் கணவன் வர இயலாது போனாலோ, தெய்வாதீனமாக அவர் வருவது தடைப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு வழிபாட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தாலோ... கணவனுக்கும் சேர்த்து மனைவியானவள் சங்கல்பம் செய்துகொள்ளலாம். உறவைத் துண்டித்துக்கொண்டு தனியே வாழும் நிலையில், சங்கல்பம் செய்யலாம்.

முடிந்தவரையிலும் இருவரும் சேர்ந்தே செயல்பட முயற்சி செய்யுங்கள். அதனால், இறையருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழலாம்.

? எங்கள் திருமண நாளன்று நானும் கணவரும் அவரின் தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தோம்.  தங்கையின் கணவர் என் கணவருக்கு வயதில் மூத்தவர். அந்த அடிப்படையில் இருவரையும் நமஸ்கரித்து வாழ்த்து பெற்று வந்தோம்.

இந்த நிலையில், தங்கை வயதில் சிறியவள் என்பதால், அவர்களை வணங்கக்கூடாது என்கிறார்கள் சில பெரியவர்கள். இதுகுறித்து தங்களது வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன்.

- எஸ். கீர்த்தனா, விழுப்புரம்


தகுதி, உறவு, வயது- இந்த மூன்றைக் கொண்டும் நமஸ்கரிக்க வேண்டும். முதல் இரண்டும் இல்லாமல், வயதில் பெரியவராக இருந்தாலும், நமஸ்கரிக்கலாம். சந்திப்பின்போது, பரஸ்பரம் நமஸ்காரத்தைப் பரிமாறிக்கொள்வது உண்டு. 

கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா?

`தெய்வத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது உலகம். அந்தத் தெய்வம், மந்திரத்தில் கட்டுண்டு செயல்படுகிறது. மந்திரமானது, மறை ஓதுவோரின் கட்டுப்பாட்டில் செழிப்புற்று இருக்கிறது. ஆகவே, மறை ஓதுவோர் வணக்கத்துக்கு உரியவர்கள்' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். `உயர்வை அளிப்பது அறம்; அதைத் தாங்கி நிற்பது வேதம்; வேதத்தைக் காப்பாற்றுபவன் அந்தணன். ஆகவே, எனது நமஸ்காரம் அந்தணனுக்கே!' என்கிறார் போஜராஜன். இவை அனைத்தும் தகுதியை வைத்து வந்தவை.

ஸ்ரீராமன் தசரதனை வணங்கினார். கண்ணன் வாசுதேவனை வணங்கினார். பரமேஸ்வர தம்பதி, தங்களின் திருமண வைபவத் தின்போது, பிரம்மனை வணங்கினர். வாமனரை முதிர்ந்த ரிஷிகளும், வயதில் மூத்தவரான மகாபலியும் வணங்கினர்.

நான்கு ஆண் மகன்களுக்குத் தாயானவள் இறந்துவிட, சில காலம் கழித்து... பையன்கள் ஓரளவு வளர்ந்த நிலையில், அவர்களின் தந்தை வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். நான்கு மகன்களுக்கும் சித்தி எனும் உறவுப் பெண் கிடைக்கிறாள். மூத்த மகன் சித்தியைவிட வயதில் மூத்தவனாக இருந்தாலும், சித்தியை நமஸ்காரம் செய்துதானே ஆகவேண்டும்?! இங்கெல்லாம் உறவு முறையைக் கொண்டே நமஸ்காரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே, வயதை மறந்துவிட்டு, உறவுக்கு முன்னுரிமை அளித்து நமஸ்காரத்தை நடைமுறைப்படுத்துவதே உத்தமம். தகுதி மற்றும் உறவைப் புறக்கணித்து முதுமைக்கு முதலிடம் அளித்துச் செய்யப்படும் நமஸ்காரங்கள், சத்தற்றவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

? மறைந்த பெற்றோரைத் துதித்து வணங்குவதற்கான துதிகள் ஏதேனும் ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ளனவா?

- தி.ஹரிஹரன், நெல்லை-3


`எனது இந்த உடல், தங்கள் இருவரின் அன்பளிப்பு. இதைக் கொண்டு உலகியல் சுகங்களைச் சுவைத்து மகிழலாம்; பேரின்பத்துடன் இணையும் உயர்வையும் பெறலாம். எனது மகிழ்ச்சிக்காக, இந்த உடலை இனாமாகக் கொடுத்த தங்களுக்கு நன்றி சொல்ல எனக்குத் தகுதியில்லை; தலைவணங்குகிறேன், அருள்புரியுங்கள்' என்று வேண்டிக்கொள்ளலாம்.

அவர்கள், தங்களின் ஜீவாணுக்களைத் தந்து உதவியுள்ளனர். அதற்கு ஈடாகத் தருவதற்கு எந்தப் பொருளும் இல்லை. அதனால்தான், `மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ' என்று நம்மை வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறது வேதம்!

- பதில்கள் தொடரும்...