Published:Updated:

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!
பிரீமியம் ஸ்டோரி
கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: க.சதீஷ்குமார்

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: க.சதீஷ்குமார்

Published:Updated:
கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!
பிரீமியம் ஸ்டோரி
கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

‘சிவனே என்று சும்மா இரு’ என்பார்கள். ஆனால், `சிவனே' என்று சும்மா இருக்க நினைத்தவரை, அந்தச் சிவன் சும்மா இருக்கவிடாமல், தன்னுடைய திருப்பணிகளில் ஓயாமல் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்படிச் செய்துவிட்டார். வேலய்யன் என்ற சிறுவனுக்கு, சிறுவயது முதலே இறைவனிடம் மிகுந்த பக்தி. அந்த பக்தி எந்த அளவுக்கு என்றால், தான் ஏதேனும் விளையாடப் போனால்கூட, விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விளையாட்டுப் பொருளை இறைவன் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு செல்வது வழக்கம்.   

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

வேலய்யன் வளர்ந்து இளைஞரானார். அவருடைய மனதில் இருந்த இறைபக்தியும் கூடவே வளர்ந்தது. தினமும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது, மார்கழி மாதம் வந்துவிட்டால், விடியற்காலையில் எழுந்து கோயிலுக்குச் சென்று திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடுவது என்று எப்போதும் இறைச் சிந்தனையிலேயே இருந்து வந்தார். பிள்ளையின் போக்கு பெற்றவர்களுக்குச் சற்றே கவலையளித்தாலும், அவர்களால் பிள்ளையை அவருடைய போக்கிலிருந்து மாற்ற முடியவில்லை. ஒருநாள் ஊர் ஊராகச் சென்று சிவாலயங்களைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, தான் பிறந்த திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிராமத்திலிருந்து புறப்பட்டுவிட்டார்.

அப்படி தேசாந்திரியாகப் புறப்பட்டவர் எண்ணற்ற திருத்தலங்களைத் தரிசித்தபடி யாத்திரையைத் தொடர்ந்தார். அப்படிச் செல்லும் வழியில் எத்தனையோ சிவாலயங்கள் சிதிலம் அடைந்திருப்பதையும், பல சிவலிங்க மூர்த்தங்கள் வெட்டவெளியில் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பதையும் கண்டு, மனம் வருந்திக் கண்ணீர் பெருக்கினார். தேசாந்திரியாகப் புறப்பட்டுவிட்ட அவரால் வேறு என்ன செய்துவிட முடியும்?

ஒவ்வொரு சிவாலயமாகத் தரிசித்தபடி வந்தவர், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திரு இன்னம்பர் என்னும் பாடல் பெற்ற கோயிலை அடைந்தார். அந்தக் கோயிலில் இருந்த குருக்கள், வேலய்யனை அங்கேயே தனக்கு உதவியாக இருக்கச் சொன்னார். இறைப்பணியில் தான் ஈடுபட வேண்டும் என்பது இன்னம்பர் நாதனின் திருவுள்ளம் என்று நினைத்தவராக அவரும் அங்கே சில நாள்கள் தங்கியிருந்தார்.

இன்னம்பரில் தங்கி இருந்தபோதுதான், அவருக்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த அம்பலவாணன் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து கண்ணன், தமிழரசு ஆகியோரின் அறிமுகமும் கிடைத்தது. அவர்களின் மூலமாகப் பல அடியார்களின் தொடர்பும் ஏற்பட்டது. அவர்களின் உதவியுடன், ‘ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பிக்கவும் வெட்ட வெளியில் கவனிப்பாரற்று இருக்கும் சிவலிங்க மூர்த்தங்களை வழிபட உரிய ஏற்பாடுகளைச் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

இதற்கிடையில் வேலய்யன் திருவண்ணாமலை கோயிலில் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் துறவறமும் மேற்கொண்டு `திருவடிக் குடில் சுவாமிகள்’ என்ற பெயரும் பெற்றார். அப்போதுதான் வேலய்யன் மனதில், சைக்கிளிலேயே கேதார்நாத் வரை சென்று தரிசித்து வர வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் 23-வது குருமகா சந்நிதானம் அவர்களின் ஆசிகளுடன் சைக்கிளில் புறப்பட்டுவிட்டார்.

அப்படிச் சென்ற வழியில் மட்டுமல்ல, அவருடைய ஆன்மிக வாழ்க்கையில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான சில சம்பவங்கள்... 

முதன்முதலில் தேசாந்திரியாக வீட்டை விட்டுப் புறப்பட்ட வேலய்யன், பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்தபடி வந்தவர், தாமிரபரணிக் கரையில் எழிலுற அமைந்திருந்த குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். முருகனைக் கண்குளிர, மனம்குளிர தரிசித்துவிட்டு, ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டார். 

பசி வயிற்றைக் கிள்ளியது. சுற்றுமுற்றும் பார்த்தவர் கண்களில் சற்றுத் தொலைவில் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் அன்னதானம் செய்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், அவர் அங்கே சென்று பசியாற வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக. ‘நாமாகச் சென்று வாங்கிச் சாப்பிடக் கூடாது. முருகக் கடவுளின் அருளால் தாம் இருக்கும் இடத்துக்கே உணவு வந்தால், தாம் விரும்பியபடி யாத்திரையைத் தொடரலாம். அப்படி இல்லையென்றால் ஊருக்கே திரும்பி்விடலாம்’ என்று மனதுக்குள் சங்கல்பம் செய்துகொண்டார்.

அப்போது அந்த வழியாக இரண்டு பக்தர்கள் தங்கள் கைகளில் பிரசாதத் தட்டுடன் அந்த இளைஞர் இருந்த பக்கமாக வந்தனர். அவர்களில் ஒருவர், ‘‘ஒரு தட்டில் இருக்கும் பிரசாதம் நமக்குப் போதுமே. மற்றொரு தட்டில் இருக்கும் பிரசாதத்தை அங்கே உட்கார்ந்திருக்கும் இளைஞரிடம் கொடுத்துவிடலாமே’’ என்று சொல்லியபடி வந்து, அந்த இளைஞரிடம் பிரசாதத் தட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

குறுக்குத்துறை குமரக்கடவுள் நம்முடைய விருப்பம் சரியானதுதான் என்று திருவுள்ளக் குறிப்பால் உணர்த்திவிட்டதாகத் தெளிந்து, அந்த இளைஞர் தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்துவிட்டார். அதன்பிறகே அவர் இன்னம்பர் வந்ததும், இறைப்பணியில் ஈடுபடு வதற்கான வாய்ப்புகள் அமைந்ததும் ஏற்பட்டது.

இரண்டாவது சம்பவம்...

திருவடிக்குடில் சுவாமிகள் வடதேச யாத்திரை செல்லும் வழியில்,  சில நாள்கள் திருக்கோகர்ணத்தில் தங்கியிருந்தார். தினமும் சிவதரிசனம் செய்துவிட்டு, கடற்கரையில் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். மதியம் ஒருவேளை மட்டும் ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து உண்பார். ஒருநாள் மதியம் பிச்சையை முடித்துக்கொண்டு கடற்கரைப் பக்கமாகச் சென்றார். அங்கே ஆதிசங்கரர் சிலைக்குப் பின்புறமாக முதியவர் ஒருவர் பசி மயக்கத்தில் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டார். இவரோ கையில் எதுவும் பணம் வைத்துக் கொள்வதில்லை. அந்த முதியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம் என்று பலமுறை யோசித்தவர், மறுபடியும் பிச்சைக்குச் செல்வது என்று முடிவு செய்தார். சந்நியாசி ஒருமுறைதான் பிச்சைக்குச் செல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். முதியவரின் பசியைப் போக்குவதற்காக, சாஸ்திர நியதியை மீறி மறுபடியும் பிச்சைக்கு வந்த திருவடிக்குடில் சுவாமிகளைப் பார்த்த ஒரு வேதியர்,

‘‘ஒரு சந்நியாசியான நீங்கள் இரண்டாவது முறையாகப் பிச்சைக்கு வருவது சரிதானா? அது பாவம் இல்லையா?’’ என்று கேட்டார். 

கந்தன் தந்த உணவு... பரமன் கொடுத்த பணம்!

திருவடிக்குடில் சுவாமிகள், ‘‘நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். நான் செய்வது பாவம்தான். ஆனால், நான் இப்படிச் செய்வது ஒரு முதியவரின் பசியைப் போக்குவதற்குத்தான். எனக்குப் பாவம் ஏற்பட்டாலும், அந்த முதியவரின் பசியைப் போக்க உணவளித்த புண்ணியம், எனக்கு இரண்டாவது முறையாகப் பிச்சையிட்ட குடும்பத்தினருக்குச் சேருமே’’ என்றார். அந்தப் பதிலில் மகிழ்ச்சி அடைந்த வேதியர், திருவடிக்குடில் சுவாமிகளை வாழ்த்தினார். தனக்குச் சந்நியாச தர்மத்தை மீறிய பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து முதியவரின் பசியைப் போக்கியவருக்கு, வேறு இடத்தில் வேறு உருவத்தில் இறைவன் அருள்புரிந்தார்.

அந்தச் சம்பவம் நடந்தது காசியில்...

கோகர்ணத்தில் இருந்து புறப்பட்ட திருவடிக்குடில் சுவாமிகள், காசி போன்ற பல தலங்களைத் தரிசித்தபடி, ரிஷிகேஷ் தலத்தை அடைந்தார். ரிஷிகேஷில் இருந்து கேதார்நாத் நோக்கி சைக்கிளில் கிளம்பிவிட்டார். பெமுண்டா என்ற இடத்தை அடைந்தவர், மேற்கொண்டு சைக்கிளில் செல்லமுடியாது என்பதால், தன்னுடைய சைக்கிளை அங்கிருந்த ஒரு கடையில் விட்டுவிட்டு, கேதார்நாத் புறப்பட்டுவிட்டார். கேதார்நாதரைத் தரிசித்து வழிபட்டுவிட்டு, பெமுண்டாவை அடைந்தார். அங்கே அவருடைய சைக்கிள் இரண்டாக வளைந்திருந்தது. பாறை ஒன்று சரிந்ததால், சைக்கிளுக்கு அந்த நிலை ஏற்பட்டிருந்தது. சைக்கிளை அந்தக் கடைக்காரரிடமே கொடுத்துவிட்டார். கடைக்காரர் வற்புறுத்திக் கொடுத்த பணம் ரூ.250/-ஐ அங்கிருந்த மல்லிகார்ஜுனர் கோயில் உண்டியலில் காணிக்கையாகப் போட்டுவிட்டார். மற்றொரு சாதுவின் உதவியுடன் காசியை அடைந்தார். சைக்கிள் இல்லாததால் காசியில் இருந்து ரயிலில்தான் திரும்ப வேண்டும். ஆனால், கையில் பணம் இல்லை. யாசகம் கேட்கவும் விருப்பம் இல்லை. காசி விஸ்வநாதன் விட்ட வழி என்று முடிவு செய்துகொண்டு, பக்தர்கள் கூட்டத் தோடு கலந்து நடந்துகொண்டிருந்தபோது, யாரோ முன்பின் தெரியாத ஒருவர் வந்து, அவருடையை கையைப் பிடித்து இழுத்து, கையில் பணத்தைத் திணித்துவிட்டு அவர் போக்கில் சென்றுவிட்டார். திருவடிக்குடில் சுவாமிகளின் கையில் வைத்த பணம் 250 ரூபாய். பெமுண்டாவில் அவர் உண்டியலில் போட்டதும் 250 ரூபாய்தானே!

இப்படிப் பல அனுபவங்களுடன் கேதார் யாத்திரையை முடித்துக்கொண்டு, கும்பகோணம் திரும்பியவர் தாம் முன்பே முடிவு செய்திருந்தபடி இறைப்பணிகளில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

‘ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட’த்தின் நோக்கம் மற்றும் பணிகள் பற்றி  திருவடிக்குடில் சுவாமிகளிடம் கேட்டோம்.

‘‘பழந்திருக்கோயில்களைப் புனரமைத்து, பாதுகாப்பது; கோயில் திருக்குளங்களையும் புனித நீர்நிலைகளையும் பராமரித்துப் பாதுகாப்பது; பசுக்களைப் போற்றி வழிபடுவது ஆகிய மூன்றும்தான் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் முக்கியமான பணிகள். இது தவிர நம்முடைய ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு போன்றவற்றின் சிறப்புகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

காவிரி அம்மனுக்கு ஆலயம்

 கு
ம்பகோணம் மேலக்காவிரி என்ற இடத்தில் காவிரியின் படித்துறைக்குமேல் காசி விஸ்வநாதர் கோயிலும், அருகில் அனுஷ்டான மண்டபமும் சிதிலம் அடைந்திருந்தது. படித்துறையில் ஒரு சிறிய விநாயகர் கோயில் இருந்தது. கோயில்தான் இருந்ததே தவிர, அங்கிருந்த விநாயகர் சிலையை யாரோ எடுத்துச்சென்றுவிட்டார்கள். சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்த அந்த இடத்தைச் சுத்தப்படுத்தியதுடன்,  ‘ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட’ அமைப்பின் சார்பில், காசி விஸ்வநாதர் கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகமும் செய்து வைத்தார். காவிரிக் கரையின் மேலாக இருந்த விநாயகர் கோயிலைப் புதுப்பித்து, அந்தக் கோயிலில் காவிரி அம்மனைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துவைத்துள்ளார்.