Published:Updated:

‘கண்ணன் காட்டிய வழியில்’

‘கண்ணன் காட்டிய வழியில்’
பிரீமியம் ஸ்டோரி
‘கண்ணன் காட்டிய வழியில்’

பிரேமா நாராயணன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

‘கண்ணன் காட்டிய வழியில்’

பிரேமா நாராயணன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
‘கண்ணன் காட்டிய வழியில்’
பிரீமியம் ஸ்டோரி
‘கண்ணன் காட்டிய வழியில்’

திருச்சி மாநகரில் ஆன்மிக அன்பர்கள் அனைவருக்கும் சுதா பட்டாபிராமனைத் தெரியும். 

‘நாராயணீயம் பாராயணமா... சுதா பட்டாபிதான் பெஸ்ட் சாய்ஸ்!’,

‘பாகவதமா... கூப்பிடு சுதா பட்டாபியை..!’,

‘தேவி மகாத்மியமா... சுதா மாமி நல்லா சொல்லித் தருவாங்களே!’,

‘பகவத்கீதையா... சுதாவை விட்டா யார் இருக்காங்க?!’

- இப்படி, இறைநாமங்களையும் புராணங்களையும் ஸ்லோகங்களையும் சொல்வதற்கும், பாராயணம் செய்வதற்கும், வகுப்புகள் எடுப்பதற்கும் அத்தாரிட்டியாக விளங்கும் சுதா பட்டாபிராமன், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே!’ என்கிறார் எளிமையாக.   

‘கண்ணன் காட்டிய வழியில்’

‘‘இதில் என்னோட பெருமை எதுவுமே இல்லை... எல்லாம் எனக்குக் கத்துக்கொடுத்த ஆசான்களையும் குருவையுமே சாரும். இந்தக் கலியுகத்துல பகவானை அடையுற துக்கு பக்தி ஒண்ணுதான் வழினு பகவான்
கிருஷ்ணர் பல புராணங்கள் மூலமாகச் சொல்லியிருக்கார். 

ஆனா, இப்போ இருக்கிற இளைய தலைமுறை, அவற்றையெல்லாம் படிக்கிறதுக்கோ கேக்கிறதுக்கோ கத்துக்கிறதுக்கோ முடியாம, இயந்திரத் தனமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

அதை மனசுல வெச்சுக் கிட்டு, இதுவரையில் நான் படிச்சும் கேட்டும் தெரிஞ்சுக்கிட்ட ஸ்தோத்திரங்களை பலருக்கு சொல்லிக்கொடுத்து, அதன் வாயிலாக அது இளைய தலைமுறையைப் போய்ச் சேரணும்ங்கிற நோக்கத்தோடுதான் இறைப்பணியில் இறங்கினேன். இதுதான் என்னோட வகுப்புகளுக்கு அடிப்படையான காரணம்’’ எனக் கூறும் சுதா தொடர்ந்து பேசினார்.

‘‘ஒவ்வொரு குடும்பத்திலும், பிள்ளைகளுக்கு அவங்க தாய், தந்தைதான் ஆதர்ச நாயகன், நாயகி, குரு, ஆலோசகர் எல்லாமே! பெற்றோர் வாழும் விதம்தான், பிள்ளைகள் மனதில் பதிஞ்சுபோய், அவங் களுடைய வாழ்க்கை முறையாகவும் ஆகுது.

அதனால பெற்றோர்களுக்குச் சொல்லிக் கொடுத்தா, அது தானாகவே பிள்ளைகளுக்கும் போய்ச்சேரும். நான் இங்கே திருச்சியில், பல பகுதிகளுக்குப் போய், ஆர்வம் இருக்கிற அன்பர்களுக்கு நாராயணீயம், தேவி மகாத்மியம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் பகவத் கீதை மாதிரியான புராணங்களையும் இன்னும் பல ஸ்தோத்திரங்களையும் கத்துக்கொடுத்துட்டு இருக்கேன்.  

திருச்சியில் சுமார் 200 குடும்பங்கள் என் மூலமாக இந்த ஸத்ஸங்கத்தில் ஈடுபட்டிருக்காங்க. இதன் மூலமா பல குடும்பங்களுக்கும் இளைய தலைமுறைக்கும் இந்த அரிய பொக்கிஷங்கள் எல்லாம் போய் சேர்றதுக்கு நான் ஒரு கருவியாகச் செயல்படுகிறேன், அவ்வளவுதான்’’ என்கிறார் புன்னகையோடு.

வகிட்டில் துலங்கும் குங்குமமும் மூக்கில் ஒளிரும் ஒற்றை மூக்குத்தியும் உதட்டில் குறுநகையுமாக தெய்விகக்களையுடன் இருக்கும் சுதாவிடம், அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தைப் பற்றியும் கேட்டோம். ஆர்வத்துடன் பேசினார்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘கண்ணன் காட்டிய வழியில்’

‘‘திருச்சியில்தான் பிறந்து வளர்ந்தேன். பெரிய கூட்டுக்குடும்பம். பக்தியான குடும்பம் என்பதால் வீட்டில் பூஜைகளுக்கும் இறைவழிபாடுகளுக்கும் பஞ்சமே இருக்காது. சின்ன வயசில், எங்க தாத்தா சாயந்தரம் ஆறு மணிக்கு குழந்தைகள் எங்களை எல்லாம் ஒண்ணா உக்கார வெச்சு, ஸ்லோகங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்.

நவராத்திரி 9 நாள்களும் வீட்டுக்கு சாஸ்திரிகள் வந்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தினமும் தேவி மகாத்மியம் பாராயணமும் செய்வார். விஜயதசமி அன்னிக்கு ஸுவாஸினி, கன்யா பூஜைகளும் சண்டி ஹோமமும் விமர்சையாக நடக்கும்.

பாட்டி முதல் எல்லோருமே ஸ்லோகங்களைச் சொல்லிட்டேதான் சமையல் முதலான வேலை களைப் பார்ப்பாங்க. அதனால பாராயணம் என்பது என்னோட நித்ய கடமைகளில் ஒண்ணாகி, மனசில் பதிஞ்சுடுச்சு. என்னோட 15 வயசில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சஷ்டி கவசம், ஸௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, காமாக்‌ஷி சுப்ரபாதம்... இப்படி நிறைய பாடல்களையும் ஸ்லோகங் களையும் கத்துக்கிட்டேன். 

‘கண்ணன் காட்டிய வழியில்’19 வயசில் கல்யாணம். கணவர் பட்டாபி ராமன் வங்கிப் பணியில் இருந்தார். என் புகுந்த வீட்டிலும் எல்லோருக்கும் ஆன்மிக ஈடுபாடு இருந்தது. என் மாமியார் ஸ்ரீவித்யா உபாசகர். அவர், நவராத்திரி காலத்தில் ஒரு நாளைக்கு 12 முறை லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, விஜயதசமிக்குள் ஒரு லட்சம்   பூர்த்தி செய்வார். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்’’ - கோவையாகப் பேசிக்கொண்டு வந்தார் சுதா.

‘‘என் கணவருக்கு, அவரோட வங்கியின் ஹாங்காங் கிளைக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது. ஹங்காங்கில் வசித்தது என் வாழ்க்கையின் பெரிய திருப்புமுனை. அங்கே வசிக்கும் இந்தியக் குடும்பங்கள் ரொம்பக் குறைவுன்னாலும் அவங்களுடைய ஆன்மிக ஈடுபாடு ரொம்ப சிறப்பானது. நாங்களும் அந்தப் பணிகளில் இணைந்தோம். அங்கேதான் என் குரு சகுந்தலா விஸ்வநாதன் எனக்குக் கிடைச்சாங்க.

சின்ன வயசிலிருந்தே என்னோடு ஊறிப்போயிருந்த ஆன்மிக ஈடுபாட்டுக்கு அவங்க மூலமாகத்தான் ஊக்குவிப்பும் விழிப்பு உணர்வும் கிடைச்சது. அவங்கதான் எனக்கு பகவத் கீதை உபதேசம் பண்ணினாங்க. விடுமுறை நாள்களில் அங்கேயிருந்த தென்னிந்தியக் குடும்பங்கள் சேர்ந்து கூட்டு வழிபாடுகளை நடத்துவோம்.

அதுக்கப்புறம் சிங்கப்பூர் போனோம். அங்கே வசிக்கும் தென்னிந்தியக் குடும்பங் கள் சேர்ந்து ‘தக்ஷிண பாரத பிராமண சபா’ன்னு  ஓர் அமைப்பை நடத்துறாங்க. அதில் இருந்த பண்டிதர் மூலமாக ‘தேவி மகாத்மியம்’ கத்துக் கிட்டேன்.  

‘கண்ணன் காட்டிய வழியில்’

சிங்கப்பூருக்கு ஆன்மிக சொற்பொழிவுக்காக வந்திருந்த பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்தா சுவாமிகள், எங்களோட ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் பார்த்து மகிழ்ந்து போய், தேவி மகாத்மியம் படிப்பதற்கான ‘நவாக்ஷரீ மூலமந்திரத்தை’ உபதேசம் செய்துவெச்சார்.

இன்னிக்கும் பலருக்குத் தேவி மகாத்மியம் கத்துக்கொடுத்துட்டு வர்றேன்னா, அது அவருடைய ஆசீர்வாதம்தான்’’ என்பவரின் குடும்பம், பிள்ளைகளின் கல்விக்காக மீண்டும் திருச்சிக்குத் திரும்பியிருக்கிறது.

‘‘எனக்கு இன்னொரு குரு ஆனந்தி ரங்க ராஜன் அறிமுகமானார். அவர் எங்களுக்கு வீட்டுக்கே வந்து, ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ கத்துக் கொடுத்தார். திருச்சியில் இப்படித்தான் எனது ஆன்மிகச் சேவை தொடங்கி, ஒரு குழுவாக இன்றளவும் நடந்துக்கிட்டிருக்கு.

அவ்வப்போது வர்ற சந்தேகங்களை, பூஜ்யஸ்ரீ சுவாமிகளிடம் கேட்டுத் தெளிஞ்சுக் கிறேன். அவர் திருச்சியில் எங்க வீட்டுக்கு ஒருமுறை விஜயம் செய்தபோது, எங்க ஸத்ஸங்க குழுவின் நடவடிக்கைகளைப் பாராட்டி, ‘தர்மஸம்வர்த்தினி சபா’னு பெயர் சூட்டினார்.

இன்னிக்கும் நான் கத்துகிறதையும் புது விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறதையும் நிறுத்தலை. திருச்சி மற்றும் வெளியூர்களில், அன்பர்கள் விரும்பினால் சகஸ்ரநாமம், தேவி மகாத்மியம், நாராயணீயம் எல்லாம் பாராயணம் செய்றோம்.

தவிர, டாக்டர் ஜெயம் கண்ணன் திருச்சி யில் நிறுவியுள்ள ஸ்ரீசாய்பாபா ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாபாவுக்கு ஆரத்தி பூஜையும், ஏகாதசி தோறும் பகவத் கீதை பராயணமும் செய்றேன்’’ என்று கூறிக் கொண்டே வந்த சுதா, நிறைவாகத் தன் கணவரை மிகுந்த நன்றியுடன் குறிப்பிட்டார்.

‘‘இந்த இறைப்பணிகள் எல்லாமே ஒருங் கிணைந்து நல்லா நடக்கறதுக்குக் காரணம் என் கணவரின் ஊக்குவிப்பும் குடும்பத்தின் ஆதரவும்தான்.

எங்க ஸத்ஸங்கத்துக்காகவும் வகுப்புகளுக் காகவும் வீட்டிலேயே மாடியில் 2000 சதுர அடியில் பெரிய ஹால் கட்டி, ஏ.சி போட்டு, சகல வசதிகளும் செய்து தந்திருக்கார்.

‘இப்பிறவியில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முதலில் அவர்களுடைய கடமைகளைச் செய்துவிட்டு, பின்னர் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்திக்கணும்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில் சொல்லியிருக்கார். என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறப்போ நான் கீதையின் வழியில் வாழ்ந்திருக்கேன்னு  ஒரு நிறைவு வருகிறது.

இப்போதும் எப்போதும் என்னோட விருப்பம் ஒண்ணே ஒண்ணுதான்... ‘லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து’ ‘’ - ஆத்மார்த்த மாகக் கூறியபடி, கண்கள் மூடி, கரங்கள் கூப்பி வணங்குகிறார் சுதா பட்டாபி.

‘கண்ணன் காட்டிய வழியில்’

`இரண்டு கோடி கொடுத்தார்’

வா
ரியார் சுவாமிகள் ஒருமுறை திருப்புகழ் சபைக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை சபையோருக்குப் படித்துக்காட்டிக் கொண்டிருந்தார்.

‘‘முருகேசன் ஐம்பது ரூபாய், நாராயணசாமி இருபத்தைந்து ரூபாய், பார்வதி பத்து...’’ இப்படி அவர் வாசித்துக்கொண்டிருக்கும்போதே, பக்தர் ஒருவர் வந்து வாரியாரின் தோள்களில் இரண்டு புத்தம் புது வேட்டிகளைச் சூட்டினார். அவரை நிமிர்ந்து பார்த்த வாரியார் கூட்டத்தினரைப் பார்த்துச் சொன்னார்: ‘‘இவர்தாங்க அதிகமான நன்கொடை அளித்தவர். இரண்டு கோடி கொடுத்திருக்கிறார்’’ என்று.

கோடி வேட்டிகளைச் சூட்டியவருக்கு மகிழ்ச்சிப் பெருக்கு. கூட்டத்தினருக்கு நல்ல நகைச்சுவையும்கூட. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism