Published:Updated:

சபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா?

சபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் மூல விக்கிரகத்தை வழங்கிய தமிழர் யார் தெரியுமா?

பரிமலை கோயிலுக்குப் பெண்கள் போகலாமா கூடாதா எனும் சர்ச்சை, தென்னிந்தியா முழுவதும் பரவலாக நடந்து வரும் வேளையிது. 41 நாள்கள் விரதமிருந்து, கன்னி பூஜை செய்து,  சபரிமலையின் மண்டல பூஜைக்கும், மகரஜோதிக்கும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் கேரள மக்கள் மட்டுமே சென்று வந்த இந்த ஆலயத்துக்குக் காலப்போக்கில் தமிழக மக்களும், ஆந்திரா மற்றும் கர்நாடகமென தென்னிந்திய மாநில மக்கள் பலரும் சென்று வழிபடத் தொடங்கினார்கள்.  இன்று இந்தியாவின் முக்கிய ஆன்மிக மையமாக மாறியிருக்கிறது சபரிமலை. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் போய் சுவாமி தரிசனம் செய்து வரும் வழக்கம் எப்படி இந்த அளவு விஸ்வரூபம் எடுத்தது என்பது பற்றி சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய இணைச் செயலாளர் துரை சங்கரிடம் பேசினோம்.

''சைவம், வைணவம் ரெண்டுக்கும் பொதுவான தெய்வமா ஐயப்பன் பார்க்கப்படறார்.  12 வயசு வரைக்கும் மணிகண்டன்  மனித உருவமாக வளர்ந்து  தன்னுடைய அவதார நோக்கம் முடிஞ்சதும், தியானம் செய்வதற்காகப் போன  இடம்தான் இன்னிக்கு இருக்கிற சபரிமலை

 1894 - ம் ஆண்டிலேயே சபரிமலைக்குப் போறவங்களோட  எண்ணிக்கை ஆண்டுதோறும் 15,000-ங்கிற அளவுல இருந்ததா வரலாற்றுப் பதிவுகள் முறையான ஆதாரத்தோட இருக்கு. இத்தனைக்கும் அப்போ தென் இந்தியாவோட மக்கள் தொகை 5 கோடிக்கும் கீழதான் இருந்துச்சு. 

1940-கள்ல தமிழ்நாட்டுல, 'நவாப்' ராஜ மாணிக்கம்கிறவர்தான் முதன்முதலா சபரிமலை பற்றியும் சுவாமி ஐயப்பன் பற்றியும் நாடகங்கள் போட்டு பலருக்கும் அறிமுகப்படுத்தி வெச்சார். 

நாடக மேடையில பல வித்தியாசமான முயற்சிகளைச் செஞ்சவர். நாடகத்தில் சுவாமி ஐயப்பன் 12 வயது பாலகனாக புலிப்பால் எடுக்கக் காட்டுக்குள் போய்விட்டு வருவார்.  அப்படி வரும்போது புலிமீது உட்கார்ந்த நிலையில் திரும்பி வருவார். இதற்கு நிஜமான புலியையும் புலிக்குட்டிகளையும் பயன்படுத்தினார். இந்த நாடகத்தை பெரும்திரளான மக்கள் வந்து பார்த்தனர். 

1950-ம் வருஷத்துல சபரிமலைக் கோயில் தீப்பிடித்து எரிந்துபோனது. அதன்பிறகு தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு, மறைந்த முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தை பி.டி.ராஜன் அமைத்துத் தந்த ஐயப்பன் சிலைதான் இப்போது வழிபாட்டில் உள்ள சிலையாகும். 

இவருக்கு அடுத்துச் சொல்றதுன்னா நம்பியார் சுவாமிகள். 70 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்குப் போய் சாமி தரிசனம் செய்து வந்தவர். அவர் ஒவ்வோர் ஆண்டு மலைக்குப் போகும்போதும் திரைப்படத்துறையிலிருந்து பலரையும் அழைச்சிக்கிட்டுப்போவார். அவருடன் செல்வதை பெரும்பாக்கியமாகவே நடிகர்கள் நினைச்சாங்க. 

சிவாஜி தொடங்கி, அமிதாப்பச்சன் வரை பலரும்  சபரிமலைக்குப் போய் சுவாமி தரிசனம் செஞ்சிருக்காங்க. இதுக்கிடையில கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய சபரிமலை ஐயப்பன் பத்தின பக்திப் பாடல்கள் மலையாளம் மற்றும் தமிழிலும் வெளியாகிப் பெரிய அளவுல பிரபலமாச்சு. பல லட்சக்கணக்கான காஸெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

இப்போதும் மலையில் 'ஹரிவராஸனம் விஸ்வமோஹனம்' என்ற புகழ்பெற்ற  கே ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒலித்தபிறகுதான் நடை சாத்தப்படுது. ஐயப்பன் உறங்கறதுக்காக இசைக்கப்படுற இந்தப் பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.இவரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி. இப்படி தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானரோட பங்கு சபரிமலையில இருக்கு'' என்றார்.

சபரிமலைக்கு போவதில் இருக்கும் சிறப்பான அம்சங்கள் என்ன என்பது பற்றி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்குப் போய் வரும் வீரமணிதாசனிடம் கேட்டோம். ''வீரமணி அண்ணா பாடிய 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டி யெங்கும் ஒலிச்சுது.

அவரைத் தொடர்ந்து, வீரமணி சோமு, வீரமணிராஜூவும் கோயில் நிகழ்ச்சிகளில் ஐயப்பன் பாடல்களைப் பாடத் தொடங்கினாங்க. அப்புறம் என்னைப் போன்றவர்களும் கோயில் விழாக்கள், விசேஷங்கள்ல பாட ஆரம்பிச்சோம். கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் எனத் தமிழகம் முழுவதுமிருந்து பலரும் மாலையணிந்து சபரிமலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. 

முன்பெல்லாம் ஒருத்தர் சபரிமலைக்கு மாலை அணிந்து போகிறார்னா முதல்ல அவர் குருசாமிகிட்டே போய் அனுமதி கேட்பார். அவர் அந்தப் பையன் பற்றிய விவரங்களை கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டுதான் அழைச்சிக்கிட்டுப் போவார். 

சபரிமலைக்கு மாலை அணிஞ்சு போறதுல எவ்வளவோ சிறப்பான அம்சங்கள் இருக்கு.  மாலை போட்டு விரதமிருக்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சுப் பார்த்துக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு.  மற்ற நாள்களை விட மாலை அணிந்திருக்கிறபோது நம்ம மனசு, மனசாட்சியிடம் பேசிக்கிட்டே இருக்கும். எண்ணம், வாக்கு, செயல் இது மூணுலயும் நல்ல விஷயங்களையே நாம நிலை நிறுத்து வோம். 

விரதம், வைராக்கியம், வெற்றின்னு சொல்லுவாங்க. ஒருத்தரோட வைராக்கியத்தைத் தெரிஞ்சிக்கிறதுக்கு இது நல்ல வாய்ப்பு. அவ்வளவு சுத்தபத்தமா விரதம் இருந்து போறதாலதான் நாம மனசுல நினைச்ச காரியம் வெற்றி அடையுது.  

நாம விரதம் இருக்கிற நாள்களெல்லாம், நம்ம அம்மா, திருமணத்துக்குப் பிறகு நம் மனைவின்னு அவங்களும் மலைக்கு வரலையே ஒழிய அவங்களும் வீடுவாசல் மெழுகி, நம் கூடவே விரதமிருந்து விரத உணவையே சாப்பிடுவாங்க. 

மார்கழி மாதக் குளிரில் காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது தொடங்கி, விரதம், சுவாமியின் நாமத்தை ஜபிக்கறது, மாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஐயப்பசாமிகளின் வீடுகளுக்கோ கோயில்களுக்கோ சென்று பூஜையில் கலந்துகொள்வதென ஐயப்பனின் சிந்தனையே 41 நாள்களும் மிகுந்திருக்கும். 

ஏழை, பணக்காரர், படித்தவர், பாமரர், சாதி மத பேதமில்லாமல் சமத்துவமான அன்பான ஒரு சமூகச்சூழல் உருவாகக் காரணமா இருந்ததால நிறைய பேர் மலைக்கு மாலை போட ஆரம்பிச்சாங்க.

சபரிமலைக்கு இருமுடி கட்டிப் புறப்படுறதுக்கு முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து, ஐயப்பனின் பட ஊர்வலம், விளக்கு பூஜை, அன்னதானம் செஞ்சு புறப்படுவாங்க. இதற்கு தமிழகம் முழுக்க உள்ள எல்லா ஊர்களிலும் பெரும் வரவேற்பும் கிடைச்சது. இந்தப் பணியை ஒருங்கிணைக்கிறதுக்காகத்தான் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் உருவானது.  

எல்லா ஊர்களிலும் பல குழுக்களாக இருந்த ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்துச் செல்லும் பணியைச் சிறப்பா செஞ்சுக்கிட்டு வர்றாங்க. இங்கு மட்டும் அவங்களோட சேவை முடிஞ்சுப் போறதில்ல.

அடர்ந்த காட்டுப் பகுதியான சபரிமலைக்குச் செல்லும்   பெரிய வழிப்பாதையான 60 கிலோமீட்டர் வரையிலும் அங்கங்கே தங்கறதுக்காக  தாவளம் (கீற்றுக் கொட்டகை) அமைச்சுக் கொடுப்பது,  குடிப்பதற்கு சீரகத்தண்ணீர், உணவு, மருத்துவ வசதின்னு பல சேவைகளைச் செஞ்சு வருது. மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் ஐயப்பனாகப் பார்க்கிற மனோபாவம்தான் இந்தச் சேவைகளுக்கு அஸ்திவாரம்'' என்று சிலிர்ப்புடன் கூறினார்.