Published:Updated:

கவனிப்பாரின்றி இருக்கும் கருப்பறியலூர் ஆலயம்... விமோசனம் கிடைக்குமா?

கவனிப்பாரின்றி இருக்கும் கருப்பறியலூர் ஆலயம்... விமோசனம் கிடைக்குமா?
கவனிப்பாரின்றி இருக்கும் கருப்பறியலூர் ஆலயம்... விமோசனம் கிடைக்குமா?

கவனிப்பாரின்றி இருக்கும் கருப்பறியலூர் ஆலயம்... விமோசனம் கிடைக்குமா?

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில், 27-வது தேவாரத் தலமாக இருப்பது திருகருப்பறியலூர். இங்கு இறைவன் குற்றம் பொறுத்த நாதர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை இறைவன் மேல் எறிந்தான். அதனால், ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்து அருளியதால் இவர் `குற்றம் பொறுத்த நாதர்’ என அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு `அபராத சமேஷ்வரர்’ என்ற பெயரும் உண்டு. 

இந்தத் திருத்தலத்திலுள்ள இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்து, இறந்துவிடும் தோஷம் உள்ளவர்களுக்கும், ஆண், பெண் வாரிசு வேண்டுபவர்களுக்கும் நன்மை நடக்கும் என்பது ஐதீகம். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகில் பட்டவர்த்தி என்னும் ஊரின் வடகிழக்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

இந்தக் கோயில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள் மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்பில் அமைந்திருக்கிறது. மூலவர் குற்றம்பொறுத்த நாதர் சுயம்பு லிங்கமாகக் கிழக்கு நோக்கியும், தாயார் கோல்வளை நாயகி தெற்கு நோக்கியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், லிங்கோத்பவர், துர்கை மற்றும் பிரம்மா காட்சி தருகின்றனர்.

விசித்திராங்கன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு வந்து வழிபாடு செய்து, இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்தத் தலத்தை அழகுறக் கட்டினான் என்பது வரலாறு. 

சிலருக்குக் கருவிலே சிசு கலைவது உண்டு. சிலருக்கு குழந்தைப் பிறந்தவுடன் இறந்துவிடும். சில குடும்பங்களில் விபத்துகளினால் துர்மரணம் நிகழ்வதும் உண்டு. இவை அனைத்தும் 'ஆலாள' என்ற தோஷத்தினால் ஏற்படுகின்றன. இங்குள்ள இறைவனை வந்து வழிபட்டால் மேற்படி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை!

சூரிய பகவான் இந்தத் தலத்தை வழிபட்டதால் `தலைஞாயிறு’ என்றும் அழைக்கப்படுகிறது. தான் பெற்ற சாபத்தில் இருந்து விடுபடப் பல சிவஸ்தலங்களில் சூரியன் வழிபட்டான். அவ்வாறு வழிபட்ட தலங்கள் அனைத்தும் சூரிய தோஷ பரிகாரத் தலங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில், திருக்கருப்பறியலூர் தலமும் சூரிய தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதன் மூலம் தோஷம் நீங்கப் பெறலாம்.

இந்தத் தலத்திலுள்ள இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். யுத்தத்தில் ராவணனைக் கொன்றார் ராமர். அந்த தோஷத்தை நீக்க ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய நினைத்தார். அனுமனிடம் இரண்டு நாழிகைகளுக்குள் சிவலிங்கம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். ராமரின் கட்டளையை ஏற்ற அனுமன் வடதிசை நோக்கிச் சென்றார். ஆனால், அனுமன்  வரத் தாமதமானது. 
ராமர் மணலால் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது தோஷமும் நீங்கியது. தான் வருவதற்குள் ராமர் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்தான். முடியவில்லை. இப்படிச் செய்ததால் அனுமனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

``சிவனை நோக்கி தவமிருந்தால் அந்த அபராதம் நீங்கும்’’ என ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்தான். அவன் முன்னால் சிவன் தோன்றி ``அனுமனே.. நீ தலைஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்’’ என அருள்பாலித்தார். அனுமனும் அவ்வாறே இங்கு வந்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இந்தத் தலத்தின் வட கிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து, வழிபாடு செய்தார். இன்று, அந்தத் தலம் `திருக்குரக்கா’ என அழைக்கப்படுகிறது.

``இந்தத் தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்குப் பத்தாக பெருகும்’’ என்பதை பிரம்மன் வசிஷ்டருக்குக் கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு, மெய்ஞானம் பெற்றார் என்கிறது தலபுராணம்.

``தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான இந்தத் திருத்தலம் 50 வருடங்களுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. சிதிலமடைந்த கோயிலை சீர்செய்யவும் கோயில் நிர்வாகம் முன்வரவில்லை’’ என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் புகார். இது குறித்து, தருமபுரம் ஆதீனம் கல்விக் குழுமங்களின் செயலர் திருநாவுக்கரசுவிடம் கேட்டோம்.

``தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் சிதிலமடைந்து இருப்பது தெரிந்தவுடனே அதைச் சரி செய்யும் பணிகளைத் தொடங்கி, பாலாலயம் செய்துவிட்டோம். `கும்பாபிஷேகம் செய்ய இந்து அறநிலையத் துறையின் ஒப்புதல் வேண்டும்’ என்று அரசாணை இருக்கிறது. கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரிய கடிதத்தையும் அதற்கான சான்றுகளையும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் ஒப்புதல் கொடுத்தவுடனே கும்பாபிஷேகம் செய்வதற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம்’’ என்றார் திருநாவுக்கரசு.

`விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும்’ என்பதே பக்தர்களின் பிரார்த்தனை. பிரார்த்தனை நிறைவேறுமா?
 

அடுத்த கட்டுரைக்கு