15-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக் கும் சக்தி விகடனுக்கு வாழ்த்துகள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியொரு விஷ்ணு ஆலயம் இருக்கும் தகவலை, (படவேடு கோட்டைமலை) முதன் முதலாகச் சக்தி விகடன் வாயிலாக அறிந்து கொண்டதில் பெருமிதம் அடைந்தேன்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி
எங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி, அனைவரது ஆவலையும் பூர்த்திசெய்துவிட்டது; 15-ம் ஆண்டு சிறப்பிதழ். வாழ்த்துகள்.
- வெ.லெட்சுமி நாராயணன், வடலூர்
சித்திரை மாதத்தில் புறவார் பனங்காட்டூர் ஈசனை, சூரியபகவான் வழிபடும் காட்சி தரிசிக்கவேண்டிய ஒன்று. அற்புதமான அந்தத் தலத்தைப் பற்றிய சிறப்புக் கட்டுரை வெளியிட்ட சக்தி விகடனுக்கு நன்றி.
- சி.வி.அனந்தராமன், சென்னை.
‘மகா பெரியவா’ தொடர் ஆரம்பமே அருமை! மகா பெரியவா சரிதத்தை, அவர் பற்றிய சிலிர்ப்பூட்டும் தகவல்களை படித்தறிய ஆவலாக இருக்கிறோம்.
-ஆர்.பிருந்தா இரமணி, மதுரை
பரவசப்படுத்தி விட்டது 15-ம் ஆண்டுச் சிறப்பிதழ். திருவரங்கனின் மகிமையைச் சொல்லும் ‘ரங்க ராஜ்ஜியம்’ தொடர், என் போன்ற வைணவ பக்தர்களுக்கு வரப்பிரசாதம்!
- த.சத்தியநாராயணன், சென்னை
ஆனந்தமாய் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தானின் தரிசனம் அட்டையில்,மனக்கவலைகளை நொடிப் பொழுதில் போக்கும் மாமருந்தாம் மகான்களின் தரிசனம், வேண்டும் வரம் அருளும் தேவியரின் அற்புத தரிசனம்... மொத்தத்தில் 15-ஆம் ஆண்டு சிறப்பிதழ், அற்புதம்... அதி அற்புதம்!
-த.சிவகுமார், திருச்சி
சக்தி விகடனின் சக்தி தரிசனம், அம்பிகையின் அருள் தலங்களை, அவற்றின் மகிமைகளுடன் தந்த விதம் அருமை. இல்லமெல்லாம் அம்பிகையின் அருளை நிறைத்தது.
-பி.சந்திரா, திருச்சி
‘காலப்பெட்டகம்’ என்ற தலைப்பில் சிற்பங்களின் அணிவகுப்புடன், அந்தச் சிற்பங்களின் சரித்திரச் சிறப்பையும் எடுத்துரைத்தது, சிறப்பிதழுக்குச் சிறப்பு சேர்த்தது.
-வி.மோனிகா பிரியங்கா, திருச்சி
புடவை பரிசுப் போட்டி, படக்கதை, புதிய தொடர்கள், சுவாரஸ்யமான துணுக்குகள்... என பக்கத்துக்குப் பக்கம் பொலிவுடன் திகழ்ந்தது சக்திவிகடன். சக்தி யாத்திரை அறிவிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது.
- ஆர்.கவிதா, கடலூர்
