மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா

மகா பெரியவா
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

‘காலையில் நாராயண ஸ்மரணம்;
மாலையில் பரமேஸ்வர தியானம்!

- மகா பெரியவா அருள்மொழி

‘உம்மாச்சி’ என்பது உமா மகேஸ்வரனே!

ப்போதுதான் டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மொபைல் போன் கேட்டறியாத ஒன்று. முகநூல், வாட்ஸ்அப், யூடியூப் இத்யாதிகளும் கிடையாது. தொலைக்காட்சிப் பெட்டிகள்கூட பிறந்திருக்கவில்லை. அப்படிப் பட்ட நிலையில், பிறந்து மூன்று, நான்கு வருடங்கள்கூட நிரம்பாத சுவாமிநாதனுக்குப் பொழுதுபோக்கு என்னவாக இருந்திருக்க முடியும்?

கிராமத்துத் தெருவில் அண்ணன் தம்பிகளுடன் ‘ஓடிப்பிடித்து’ விளையாடி யிருக்கலாம். அல்லது, தூண் மறைவில் நின்றபடி அவர்களுடன் கண்ணாமூச்சி ஆடியிருக்கலாம். அம்மாவும் பாட்டியும் பல்லாங்குழியும், சோழியும் விளையாடும்போது, பக்கத்தில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்திருக்கலாம்.

இவை எல்லாவற்றையும்விட, தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், குழந்தையை நிறையக் கோயில்களுக்கு அழைத்துச் சென்றிருப்பார். அதேபோல், தாய் மகாலட்சுமி மாலை வேளைகளில் தெருக்கோடிக் கோயிலுக்கு விளக்கேற்றச் செல்லும்போது, சுவாமிநாதனும் உடன் சென்றிருக் கக்கூடும். எப்போதாவது உறவினர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்றிருக்கலாம். தீபாவளிக்குப் புத்தாடை அணிந்து மத்தாப்பூக் கொளுத்திப் பூரித்திருக்கலாம்! ஆனால், பிரதான பொழுதுபோக்கு ஸ்தலமாகக் கோயில்கள்தான் இருந்திருக்கக்கூடும்.

மகா பெரியவா

காஞ்சி மகான், தமது புனித யாத்திரைகளின்போது நிகழ்த்திய அருளுரை களில் தெய்வங்கள் குறித்தும், இறை வழிபாடு பற்றியும் நிறையவே வலியுறுத்தி யிருப்பதைப் பார்க்கும்போது, கோயில்களில் உறையும் தெய்வ விக்கிரகங்கள், குழந்தையாக இருந்தபோதே அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கவேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

‘`எல்லோரும் காலையில் எழுந்ததும் உலகக் காரியங்களைத் தொடங்குமுன் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும். மாலையில் பரமேசுவரனை தியானிக்க வேண்டும். மகாவிஷ்ணு உலகைப் பரிபாலிப்பவர். பரமேசுவரனிடம் உலகமெல்லாம் லயித்து ஒடுங்குகின்றன. மாலையில் நம் வேலைகள் ஓய்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறது. பட்சிகள் கூட்டுக்குள் ஒடுங்குகின்றன. ஊரெல்லாம் மேய்ந்த பசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்கு கின்றன. வெளியிலே திரியும் எண்ணங்களையெல் லாம் அப்போது இருதயத்துக்குள் திருப்பி பரமேஸ்வரனை ஸ்மரிக்கவேண்டும்.

தோஷம் என்றால் இரவு. இரவு வருவதற்கு முற்பட்ட மாலை வேளை ப்ர-தோஷம். ப்ரதோஷத்தில் பரமேஸ்வரனை நினைக்க வேண்டும். ஈசுவரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்கவேண்டும். ஈசுவரன் சிவன் எனப்படுகிறார். அம்பாளுக்கும் `சிவா’ என்று பெயர்.

குழந்தைகள் ஸ்வாமியை ‘உம்மாச்சி’ என்றே சொல்லும். ‘உம்மாச்சி’ என்ற குழந்தை மொழிக்கு ‘ஸ்வாமி’ என்று அர்த்தம். என்னிடம் குழந்தைகளை அழைத்து வருபவர்கள்கூட, ‘உம்மாச்சித் தாத்தாவை நமஸ்காரம் செய்' என்று அவற்றிடம் சொல்வது உண்டு’’ என்று ஒருமுறை அருளியிருக் கிறார் மகா பெரியவா.

‘இதென்ன உம்மாச்சி? இதன் சரியான மூலம் என்ன?’ என்று ஒருமுறை யோசித்துக் கொண்டிருந் தாராம் மகா பெரியவா.

அப்போது திருச்சி மலைக்கோட்டையில் மடம் முகாமிட்டிருந்த நேரம். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதம் தாங்கிகளில், திருநல்லத்திலிருந்து (கோனேரிராஜபுரம்) வந்தவர்களும் இருந்திருக் கிறார்கள்.

அவர்களில் ஒருவரை இன்னொருவர் ‘உம்மாச்சு’ என்று கூப்பிடுவதைக் கேட்டிருக்கிறார். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேசுவரன் என்பது. பெரியவாளுக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்துவிட்டது! உம்மாச்சு, உம்மாச்சி எல்லாம் உமாமகேசனைக் குறிப்பவையே என்று தெரிந்துகொண்டாராம்.

மகா பெரியவா

“ஆக, குழந்தைகளின் பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவி யுடன் சேர்ந்த மகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரியவந்தது..” என்று குறிப்பிடுகிறார், காஞ்சி மகா ஸ்வாமிகள்.

ஸ்வாமிகளுக்கு அப்போது ஐந்து வயது. குடும்பம் பரங்கிப்பேட்டையில் வசித்து வந்த தருணம். ஒரு நாள் தந்தை பள்ளிக்கூடம் புறப்பட் டுச் செல்லத் தயாரானபோது, இரு கைகளையும் நீட்டி வைத்துக்கொண்டு அவரை வழிமறிக்கிறார் சுவாமிநாதன்.

“அப்பா...”

“என்னடா, சீக்கிரம் சொல்லு... எனக்கு ஸ்கூலுக்கு நாழியாறது.”

“அப்பா! எனக்குச் சிதம்பரம் போகணும்.”

“எதுக்கு திடீர்னு அங்க போகணும்கற..?”

“சிதம்பரத்துல திருவிழா நடக்கறது... நானும் திருவிழாவைப் பார்க்கணும்பா.”

“அதுக்கெல்லாம் எனக்கு அவகாசம் கிடை யாது. எனக்கு இங்க ஏகத்துக்கும் ஜோலி இருக்கு.”

சுவாமிநாதன் விடுவதாக இல்லை. அழுது அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்ய, தந்தையின் மனம் இளகுகிறது. சம்மதிக்கிறார் சுப்பிரமணிய சாஸ்திரிகள். அப்பாவும், மகனும் அன்று இரவே சிதம்பரத்துக்குப் புறப்படுகிறார்கள். அம்மா உடன் செல்லவில்லை; பரங்கிப்பேட்டையிலேயே தங்கிவிடுகிறார்.

ஆசையோடு சிதம்பரம் வந்த சுவாமிநாதன், திருவிழாவுக்குப் போகவில்லை. மாலையில் கிளம்பும்போதுதான் தங்கியிருந்த வீட்டில் மகனைத் தேடியிருக்கிறார், சுப்பிரமணிய சாஸ்திரிகள். சுவாமிநாதன் தூங்கிக்கொண்டிருக் கவே, எழுப்ப மனமில்லாமல் தந்தை மட்டும் திருவிழாவுக்குச் சென்றுவிட்டார். அதுவும் ஒரு வகையில் தெய்வ சித்தம்தான்.

மகா பெரியவா

ன்று இரவு மணி பத்து, பதினொன்று இருக்கும். திருவிழா நடந்த இடத்திலிருந்து திடீரென்று மக்களின் பெரும் கூச்சல்; செய்வ தறியாமல் அங்குமிங்கும் சிதறி பதற்றத்துடன் ஓடினார்கள்!
காரணம், அங்கு நடந்த பயங்கர தீ விபத்து. நெருப்பின் ஜ்வாலை வேகமாகப் பரவ, காற்றும் சேர்ந்துகொண்டது. எரிந்து சாம்பலான வீடுகளும், கடைகளும் ஏராளம். அந்தக் கோர விபத்தில் ஐந்நூறுக்கு மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிர் இழந்திருக்கிறார்கள்.

இவை எதுவுமே சுவாமிநாதனுக்குத் தெரியாது. மறுநாள் காலையில் எழுந்தபிறகுதான், தான் திருவிழாவுக்குப் போகவில்லை என்பது தெரிந்தது. ஏமாற்றமும், கோபமும் அந்தப் பாலகனை ஆட்கொண்டன. அதன் காரணமாக காது மடல்கள் சிவந்தன.

“ஏன் திருவிழாவுக்கு என்னை விட்டுட்டுப் போயிட்டீங்கப்பா. அதைப் பார்க்கத்தானே நான் பரங்கிப்பேட்டைலேர்ந்து உங்ககூட வந்திருக் கேன்...”

சுவாமிநாதனின் கண்களில் நீர் தளும்பியது. அப்பா விவரம் சொன்னார். மகன் நம்பவில்லை. தனக்கு ஏதோ சமாதானம் சொல்வதாக நினைத்தது அந்தப் பிஞ்சு மனது. ஆனால், ஊருக்குத் திரும்பும் வழியில் தீ விபத்தால் ஏற்பட்ட பயங்கர விளைவுகளைக் காண்பித்து விவரித்தபோதுதான், சுவாமிநாதனுக்குத் தந்தை கூறியது அத்தனையும் உண்மை என்று புரிந்தது. குழந்தை சுவாமிநாதனின் மனம் கனத்தது.

அன்று விடியற்காலை பரங்கிப்பேட்டை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மகாலட்சுமிக்கு ஒரு கனவு வந்தது.

(வளரும்)

சீதையின் நாணம்!

சீ
தைக்கு ராமனை மணக்கோலத்தில் கண்டுவிட கொள்ளை ஆசை! யாரும் அறியாதவாறு கார்மேக வண்ணனைக் கடைக்கண்ணால் கண்டாள். அப்போது தோழியர், சீதையின் கைகளைக் கிள்ளினார்களாம். உடனே, சீதை நாணத்துடன் தலைகுனிந்தபோது, அந்தச் சேடியர் கூட்டம் அவளைப் பார்த்து சிரித்ததாம்.

மகா பெரியவா

உண்மையில் நடந்தது என்ன?

கடைக்கண்களால் ராமனை நோக்கியபோது, உள்ளத்தால் மட்டுமின்றி உடலாலும் சீதை பூரித்துப்போனாளாம். அவளது கைகள் பூரித்தபோது, வளையல்கள்தான் அவ்வாறு கிள்ளினவாம். அப்போது தோழியர் கிள்ளுவதாக எண்ணி சீதை தலைகுனிந்தபோது, ராமனைக் காணாத அந்தச் சிறு பொழுதில், அவள் ரொம்பவும் தளர்ந்துபோனாளாம். அப்படி அவள் பூரிப்பெல்லாம் போய், அவளது வளையல்கள் தங்களின் பழைய நிலையை அடையும்போது ஏற்படுத்திய ஓசைதான் தோழியர் சிரித்ததுபோல் தோன்றியதாம்!

கம்பனின் வர்ணனை இது!

(கம்பன் கவிநயம் நூலிலிருந்து...)