தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

கண்ணன் கோபாலன், படங்கள்: தே.சிலம்பரசன்

ர்தோறும் கோயில்கள்; கோயில்தோறும் நித்திய பூஜைகள், திருவிழாக்கள்! ஊர் மக்களின் மனங்களிலெல்லாம் பக்திப் பெருக்கும், மகிழ்ச்சி யின் நிறைவும் இருந்த காலம் ஒரு காலம்.

அந்தக் காலங்களில் வானம் பொய்க்கவில்லை; விளைச்சல் குறையவில்லை; மக்களின் வாழ்விலோ வறுமைக்கு இடமேயில்லை. தொண்டைநாடு, நடுநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலைநாடு என்று தென்தமிழகத்தின் செழுமைக்கும் வளமைக் கும் பஞ்சமே இல்லாத காலம் அது. காரணம்?

தென் தமிழகமெங்கும் எண்ணற்ற திருத்தலங் களில் கோயில் கொண்டு, அளவற்ற அருளாடல்கள் புரிந்த சிவபெருமானின் பேரருள் திறம்தான்! ஆனால், இன்று?

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

சிவபெருமானின் பல திருக்கோயில்கள் சிதிலமடைந்து, நித்திய பூஜைகளும் விழாக்களும் இல்லாமல் பொலிவிழந்து காணப்படும் அவல நிலையைக் காணவும், கண்டு மனம் துடிக்கவுமான நிலை ஏற்பட்டுவிட்டதே!

இதோ, இப்போது நாம் தரிசிக்கும் அருள்மிகு வண்டார்குழலி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயிலும் சிதிலமடைந்திருப்பதைக் கண்டு நம் மனம் துடித்த துடிப்பும், அடைந்த பதற்றமும் அந்த அகத்தீஸ்வரருக்கு மட்டுமே தெரியும்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளப்புலியூர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது ஐயன் அகத்தீஸ் வரர் ஆலயம். முற்காலத்தில் மிகப் பிரமாண்ட மாக அமைந்திருந்த ஆலயம் என்பதைப் பார்த்ததும் நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.

தெற்கு நோக்கிய ஆலயத்துக்குள் செல்கிறோம். கருவறையில் ஐயன் மேற்கு நோக்கி அருள்கிறார். ஐயனின் திருமேனியின் பொலிவு நம் மனதைக் கொள்ளைகொள்கிறது. ஐயனுக்கு எதிரில் நந்தியும் பலிபீடமும். சிவபெருமானைச் சிந்தை குளிர தரிசித்து, ‘ஐயனே, நீ உகந்த நின் திருக்கோயில் மறுபடியும் புதுப் பொலிவுடன் திகழ நீதான் அருள்புரியவேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண் டோம். கருவறை மண்டபத்தில் அனுமனும், அகத்தியரும் தூண் சிற்பங்களாகத் திகழ்கிறார்கள். மேலும் நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோரின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது.

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக அமைந்திருக்கிறது. சந்நிதி தான் இருக்கிறதே தவிர, அம்பிகையின் அருள்கோலத்தை நம்மால் தரிசிக்க முடியவில்லை. ஆம்! அம்பிகையின் திருவுருவச் சிலை எப்போது, எப்படிக் காணாமல் போனது என்பது அந்த அம்பிகைக்கே வெளிச்சம். மண்டபத்துக்கு வெளியில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வெட்டவெளியில் காட்சி தருகிறார்கள்.  விநாயகருக்கு அருகிலுள்ள ஒரு தூணில் குபேரன் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார்.

கோயிலின் வரலாறு பற்றி, ஆலயத்தில் தற்போது பூஜை செய்து வரும் அன்பர் பி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம்.

‘`இங்குள்ள இறைவன் அகத்தியரால் பிரதிஷ்டை செய்து வழிபடப் பெற்றவர். குபேரன், ஆஞ்சநேயர் ஆகியோரும் வழிபட்ட தலம் என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த கோயில். ஆனால், பல வருடங்களாக கவனிக்கப்படாத காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்துவிட்டது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறையைச் சேர்ந்த சிலர் வந்து ஆய்வு  செய்தபோதுதான், இந்தக் கோயில் 700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது எங்களுக்குத் தெரிய வந்தது’’ என்றவர், அதுபற்றி இதழ்களில் வெளியான செய்திகளை நம்மிடம் கொடுத்தார்.

`இங்குள்ள கல்வெட்டுகள் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஜெயங் கொண்ட உத்தமசோழ வளநாட்டு களப்புலியூர் என ஊரின் பெயரும், இங்குள்ள சிவனின் பெயர், ‘அகத்தீஸ்வரமுடைய நாயனார்’ என்றும்  அறியமுடிகிறது. 14-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த ராஜநாராயண சம்புவராயர் என்பவர், இக்கோயிலுக்குக் கொடுத்த மானியங்கள் குறித்தும், விஜயநகர மன்னர் கம்பண உடையார் வழங்கிய கொடைகள் குறித்தும் கல்வெட்டில் தகவல்கள் உள்ளன’ என்ற தகவல்களோடு திகழ்ந்தன அந்தச் செய்திக்குறிப்புகள். மன்னர்களால் வழங்கப்பட சொத்துகள் இப்போது யாரிடம் இருக்கின்றன என்பதை அகத்தீஸ்வரர்தான் அறிவார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி, ‘`சில வருடங்களாக பிரதோஷ பூஜையும் தினமும் ஒரு கால பூஜையும் நடைபெற்று வருகின்றன. இந்த அகத்தீஸ்வரர் அளவற்ற சாந்நித்யம் கொண்டவர். குறிப்பாக நீண்டகால மாகத் திருமணம் நடைபெறாமல் கஷ்டப்படுப வர்கள், தொடர்ந்து ஆறு பிரதோஷங்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்களுக்கு உடனே திருமணம் கைகூடும். பக்தர்கள் பலரும் என்னிடம் பகிர்ந்துகொண்ட அனுபவபூர்வமான உண்மை இது.

ஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்!

தொல்லியல் துறையினர் வந்து சொன்னதும் தான், கோயிலின் புராதனச் சிறப்பு எங்களுக்குத் தெரியவந்தது. இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய நினைத்த ஊர்மக்கள், அது தொடர்பாக அறநிலையத்துறைக்கும் மனு கொடுத்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது ஊர் மக்கள் சேர்ந்து, சுவாமி பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, திருப்பணிகளைத் தொடங்க உள்ளனர். முதலில் அம்பாள் திருவுருவச் சிலை செய்ய வேண்டும். தொடர்ந்து மற்ற திருப்பணிகள் நடைபெறவேண்டும். மிகப் பெரிய அளவில் நிதி கிடைத்தால்தான், திருப்பணிகளை முடித்து, கும்பாபிஷேகம் செய்ய முடியும். அகத்தீஸ்வரரும், அவரை வழிபட்ட அகத்தியரும்தான் கருணை காட்டவேண்டும்’’ என்று சிலிர்ப்பும் ஏக்கமுமாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உண்மைதான். ‘அவன் அருளாலே அவன் தாள் பணிந்து’ என்று மாணிக்கவாசகர் பாடியது போல், இறைவன் உகந்த திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவு பெறவும், இறைவனின் அருள் வேண்டும் தானே!

அதன்பொருட்டு நாமும், ‘ஐயனே, அகத்தியர் வழிபட்ட நின் திருக்கோயில் விரைவிலேயே புதுப்பொலிவுடன் திகழவேண்டும். நாளும் நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் தடையின்றி நடக்க வேண்டும். அதன் பயனாக எங்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கவேண்டும்’ என்று ஐயன் அகத்தீஸ்வரரை பிரார்த்தித்தபடி ஆலயத்திலிருந்து புறப்பட்டோம்.

தம்மை வழிபடும் பக்தர்களுக்கு திருமண வரமும், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையும் அரு ளும் ஐயனின் கருணைத் திறம் அளப்பரியது. அதற்கு நன்றிக்கடனாகவாவது, ஐயனின் ஆலயத் திருப்பணிக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன், நமக்குத் தெரிந்த மற்றவர்களுக்கும் விவரம் சொல்லி, அவர்களையும் இந்தக் கோயில் திருப்பணிக்கு ஆற்றுப்படுத்துவோம்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ளது கள்ளப்புலியூர் கிராமம். செஞ்சியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

மேலும் விவரங்களுக்கு:
பி.கிருஷ்ணமூர்த்தி,
தொடர்புக்கு: 9487137907

A/C NAME:
SHRI AGATHEESHWARAR
AALAYA ARAKATTALAI
A/C.No: 37255679860
IFSC: SBIN 0000758
BANK NAME:STATE BANK OF INDIA
BRANCH: ZINZEE