தொடர்கள்
Published:Updated:

ஆஹா... ஆன்மிகம்!

ஆஹா... ஆன்மிகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஹா... ஆன்மிகம்!

ஆர்.சி.சம்பத், ஓவியங்கள்: ரமணன்

யாளி வந்த கதை!

‘சிங்கத்தின் கற்பனை வடிவம்தான் யாளி. பல ஆண்டுகளுக்கு முன்பு, முதலில் மத்தியக் கிழக்கு ஐரோப்பாவில் மிகக் கம்பீரமான, தத்ரூபமான சிங்கத்தைச் செதுக்கிவைத்திருக்கின்றனர். அந்தக் கலை பின்னர் எகிப்து நாட்டுக்குப் பரவியது. அந்த நாட்டில் அதற்கு மனித வடிவம் கொடுத்தனர். நம்முடைய காம தேனுவுக்கு முகம் அமைத்திருக்கிறோமே, அதேபோல!

சிங்க உடலையும் மனித முகத்தையும் சேர்த்து வடிவம் அமைத்தனர். அதன் பிறகு இந்தியாவுக்கு அது வந்தபோது, சற்று மாறுதல் அடைந்து யாளியாக உருவெடுத்தது. நாம் கொஞ்சம் அலங்காரப் பிரியர்கள். தென்னிந்தியாவுக்கு வரும்போது யானைத் தும்பிக்கை யையும் சேர்த்துக்கொண்டோம்.

ஆஹா... ஆன்மிகம்!

இங்கிருந்து இந்தோனேஷியா, இந்தோ சீனாவுக்குப் போனபோது, அவர்கள் இறக்கை ஒன்றை அமைத்துக் கொண்டனர். சிங்கத்துக்கே யாளி முகம், இறக்கை! சீனாவில் அதையே டிராகன் மாதிரி செய்துவிட்டனர். யாளி முகம், பாம்பின் உருவம் - இரண்டும் சேர்த்து கால்கள் அமைந்தது அது!’

ஆஹா... ஆன்மிகம்!

(ஓவியர் கோபுலு ஒரு பேட்டியில் சொன்னது)

`ஆட்டை அவிழ்த்துவிடு!'

ஒரு சந்நியாசி இருந்தார். அவருக்குப் பக்தர்கள் பலர். ஒருநாள், ஏழை ஒருவர் அவரிடம் வந்து, ‘’சுவாமி! என் வீட்டில் கூட்டம் தாங்க முடியலே... நான், என் மனைவி, என் நான்கு பிள்ளைகள், என் தகப்பனார், தாயார் ஆக எட்டு பேர் ஒரு சிறிய குடிசையில் வசிக்கிறோம்” என்றார். அதற்குச் சந்நியாசி, “இவர்களோடு உன் ஆட்டையும் அந்த குடிசைக்குள்ளேயே கட்டி வை” என்று சொன்னார்.

ஏழை பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் குருவின் வாக்காயிற்றே... தட்ட முடியுமா? எனவே, ஆட்டையும் தன் குடிசைக்குள் கட்டி வைத்தார். அவதி மேலும் அதிகமானது!

ஆஹா... ஆன்மிகம்!

பத்து நாள்களாயிற்று. பக்தர் மீண்டும் சந்நியாசி யைக் காண வந்தார். ‘`என் வீட்டில் வசிக்கவே முடியவில்லை. தாங்கள்தான் ஏதாவது வழி செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

உடனே சந்நியாசி, ‘`ஆட்டை அவிழ்த்துவிடு!” என்றார். அவ்வளவுதான். வீட்டுக்கு ஓடோடிச் சென்று ஆட்டை அவிழ்த்துக் குடிசைக்கு வெளியே விட்டார். பக்தர். அதன் பிறகு அவருக்கு ஏற்பட்ட இன்பத்துக்கு அளவில்லை. “ஆகா, ஆடு போன பிறகு வாழ்க்கை எத்தனை இன்பமாக இருக்கிறது... குருவின் யோசனையே யோசனை” என்று சந்நியாசியைப் புகழ்ந்தார்.

ஆஹா... ஆன்மிகம்!

வேதமும் வேதாந்தமும்

வேதம் என்பது முழு நூலுக்கும் பெயர். வேதாந்தம் என்பது அதன் இறுதிப் பகுதிக்குப் பெயர். வேதம் கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்ற மூன்று பகுதிகள் உடையது. ஞான காண்டமே வேதாந்தமாகிய உபநிஷத்துகள்!

ஆஹா... ஆன்மிகம்!

கி.வா.ஜகந்நாதன் ‘என் ஆசிரிய பிரான்’ நூலில், உ.வே.சா. பற்றி எழுதியது:

‘அந்தக் காலத்தில் சிவாலயங்களில் தங்கி இருந்து சிவத் தொண்டுகளைச் செய்து வந்தனர் ருத்திர கணிகையர். அதனால் அவர்களுக்குத் ‘தேவரடியார்’ என்ற பெயர் அமைந்தது. அது பிற்காலத்தில் வேறு விதமாக மாறிவிட்டது.

ருத்திர கணிகையர் தொண்டுகளில் தட்டு எடுப்பதும் ஒன்று. ‘ஆலவாய்ச் சொக்கருக்குத் தட்டெடுக்கும் தளியிலார்’ என்று விரலி விடு தூதில் வருகிறது. அவர்கள் பாடும் பாடல்களில், குறிப்பிட்ட தலம் சம்பந்தமான பல செய்திகள் இருக்கும். இறைவன் - இறை விக்கு உரிய பெயர்கள் வடமொழியில் வழங்கி வந்தாலும் அவற்றுக்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் அந்தப் பாடல்களில் இருக்கும். இதை அறிந்தவர் ஆசிரியர்.

ஆஹா... ஆன்மிகம்!

ஒரு முறை, ஆசிரியப் பிரான் புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். அதற்கு அருகில் உள்ள குடுமியான் மலை சென்று தரிசனம் செய்தார். பிறகு, ‘இந்தத் தலத்துக்கு ருத்திர கணிகையர் இருக்கிறார்களா?’ என்று கேட்டார். ‘இருந்தால், அவரை இங்கே வரும்படி சொல்ல வேண்டும்’ என்றும் சொன்னார். எதற்காக இப்படிக் கேட்கிறார் என்று யாருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ஒரு முதிய ருத்திர கணிகை வந்தாள். ‘அம்மா, உனக்கு தட்டெடுக்கும்போது பாடும் பாட்டுத் தெரியுமா? தெரிந்தால், சொல்!’ என்று சொன்னார் ஆசிரியர்.

அந்த அம்மாள் தனக்குத் தெரிந்த பாடல்களைச் சொன்னாள். அவற்றை ஆசிரியர் குறித்துக்கொண்டார். அந்த அம்மாளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினார். பிறகு, உடன் இருந்தவர்களைப் பார்த்து, ‘இப்போது வர வரப் பழைய பழக்கங்களெல்லாம் மறைந்து வருகின்றன. தலங்கள் சம்பந்தமான பழைய வரலாறுகள், சொல்வார் இல்லாமல் மறைந்துபோய் விடுகின்றன. இந்த மாதிரி உள்ள பெண்மணிகளின் பாடல்களில், தலம் சம்பந்தமான குறிப்புகள் இருக்கும். அவை, பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக வந்திருப் பவை. இப்போதெல்லாம் அவற்றைப் பாடுகிறவர்கள் குறைவாகப் போய்விட்டனர்’ என்று சொல்லி வருந்தினார்.