Published:Updated:

'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’
'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

ஓவியர் பத்மவாசன்

பிரீமியம் ஸ்டோரி

ன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கருணையே  வடிவானவள். அவள் பல யுகங்களாகவே இங்கே இருப்பதாக மகான் ஒருவர் என்னிடம் கூறியது, இப்போது நினைவுக்கு வருகிறது. ஆம்! இந்தக் கலியுகத்தில் `மதி ஒளி சரஸ்வதி’ என்ற பெயரில் அவதரித்து, இருக்குமிடம் தெரியாவண்ணம் எண்ணற்ற நற்காரியங்களை நடத்திக் கொண்டிருந்தவர். இந்த மே மாதம் 9-ம் தேதி ஸ்தூல உடம்புடனான தமது அவதார நோக்கை முடித்துக் கொண்டு, சர்வவியாபியாகிவிட்டார்.

சரி, `அகிலாண்டேஸ்வரி அவதாரம்’ என்று யார் சொன்னது?

எனக்கு, என் குருநாதர் ஸ்ரீசில்பியவர்கள் சொன்னார்கள். அப்படியா... அவருக்கு யார் சொன்னது? வேறு யார் சொல்வார்கள். அன்னையைப் பற்றி ஐயன்தானே சொல்ல முடியும். ஆம்! காஞ்சி மகா பெரியவர்கள் தான் இதைச் சொல்லியருளியது.

இதற்கொரு காரணமும் உண்டு.

ஸ்ரீசில்பியவர்களின் துணை வியாரின் தீவிர பிரார்த்தனைக்கான பதிலாக அமைந்ததே இது. எப்படி?

அதிபதிவிரதையான பத்மாவதி அவர்கள், காஞ்சி  ஸ்ரீபரமாசார்யரிடம் ``நாம் பரமேஸ்வரனைப் பார்க்கிறோம், அம்பாளை எங்கே பார்க்கலாம்?’’ என்றொரு கேள்வியை எப்போதும் பிரார்த்தனை யோடு முன்வைப்பாராம்.

'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

காஞ்சி ஸ்ரீபரமாசார்யர் இதற்குச் சட்டென்று பதில் சொல்லிவிடவில்லை. ஒரு நாள் அம்பாளைக் காட்டி விட்டாராம். அப்படி அம்பாளாக அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கே நின்றிருந்தவர் - பாவாடை  சட்டையோடு காட்சி கொடுத்த அன்னை, ஸ்ரீமதி ஒளி சரஸ்வதி.

பத்மாவதி அவர்கள் மூலம் ஸ்ரீசில்பியவர்களுக்கும், அவர் மூலம் எனக்கும் என் பிள்ளை களுக்கும் வாய்த்த அந்த அம்மையின் அம்பாளின் திருவருள், அடுத்து வரும் சந்ததிக்கும் சுரந்து கொண்டேதான் இருக்கும். இது என்வரையில் நான் கூறுவது. இன்னும் எண்ணில் அடங்காத அன்பர்கள் இதே போன்று கருணைக் கயிற்றில் கட்டுண்டு கிடக்கிறார்கள்.

சும்மா வெறுமே `இவர் அகிலாண்டேஸ்வரி அம்சம்... இவருக்குச் சாமி வரும்... பெளர்ணமி, அமாவாசை என்றால் இவருக்குள் அம்பாள் பேசுவாள்... என்பதுமாதிரியான அரை குறையில்லை. இவர்கள் அகில நாயகி. அகிலாண்டேஸ்வரியின் அவதாரம். இதன்பொருட்டும் ஒன்று சொல்கிறேன்.

காஞ்சி மடத்துக்குத்தான் திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பிகைக்குத் தாடங்கம் பிரதிஷ்டை பண்ணும் உரிமை உண்டு. இது, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் என நினைக்கிறேன். அந்த நேரத்தில், இங்கே ஸ்ரீஅம்பாளுக்கும் (ஸ்ரீமதிஒளி அம்மா) அவர்கள் வீட்டில் தாடங்க பிரதிஷ்டை -  பூஜைகள் நடக்கும்.

ஸ்ரீஅம்பாளே அழைத்து அவர்கள் வீட்டுக்குப் போனாலும், அவர் உள்ளே அழைக்கும் வரையிலும் வெளியே நிற்கும் நான், ஒருமுறை என்னையுமறியாமல் உள்ளே சென்று... அதாவது எப்படி உள்ளே சென்றேன் என்று எனக்கே தெரியவில்லை... தாடங்க வைபவக் காட்சியை ஒரு கணம் தரிசித்துவிட்டு, எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். பிறகு, அன்று மாலையில் போனபோது, அவர் சிரித்த சிரிப்பு என்னுள் அப்படியே பதிந்திருக்கிறது.

'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

இதையெல்லாம் கூறி அவர்கள் அம்பாள் என்று நிறுவவேண்டிய அவசியம் ஒன்றுமில்லை தான். ஆனாலும், இப்போதுகூட இவற்றைச் சொல்லாமல் விடுவதுதான் குற்றமோ என்ற எண்ணம் எனக்குள் எழுந்துவிட்டது.  இதையெல்லாம் படித்துவிட்டு, நாங்களும் அவரைத் தரிசித்திருக்கிறோம். ஆனால் அம்பாள் என்று தெரியாமல் போச்சே என்று சிலர் எண்ணலாம். இப்போது தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? பிடித்துக்கொள்ளுங்கள்.

வெறுமே ஆன்மிகக் காரியங்கள் மட்டுமே என்றில்லை... அவர்கள் குழந்தைகளுக்காகப் பாடு பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக ஏராளமான புத்தகங்கள், ஒரு பள்ளிக்கூடம், பால் வழங்கும் திட்டம், இலவச மருத்துவமனை... என அவருடைய சேவைகள் சத்தமின்றி நடந்து கொண்டேயிருந்தன. இனியும் நடக்கும்.

மதுராவில் கல்லெடுத்து வடிக்கப்பட்டு, இங்கே அழைத்துவரப்பட்ட கிருஷ்ணர் `நந்தலாலா’வாக இன்று அருள்கிறார். இங்கும் குழந்தைகளுக்கே முக்கியத்துவம். `இது ஒருநாள் திருப்பதி போல் திகழும்’ என்பது அவரது அருள்வாக்கு.

எனக்குப் `பத்மவாசன்’ எனும் பெரும்பெயரைச் சூட்டி அழகு பார்த்தவள் அவள். எனது ஓவியங்களை ரசித்து மகிழ்ந்து பாராட்டி, சின்னச் சின்னதாக பரிசுகள் வேறு வழங்குவாள். தாயினும் சாலப்பரிந்து என்று சிவனைப் பாடுவார்கள். அந்தச் சிவபெருமானுக்கே அள்ளி வழங்கும் அகிலாண்ட ஈஸ்வரி, இன்று ஸ்தூலமாக இல்லையே என்பதை நினைத்தால் என்னவோபோல்தான் இருக்கிறது. ஆனாலும் இனிமேல்தான் அதிக அருளோடும் சக்தியோடும் வழிகாட்டுவார்கள் என்ற உண்மை உணர்ந்து சமாதானம் கொள்கிறோம்.

'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

முடிக்குமுன் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. ஒருமுறை என் குருநாதர் ஸ்ரீசில்பியவர்கள் காஞ்சிக்குப் புறப்பட்டாராம். எதற்கும் அம்பாளிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்து, அம்பாளின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மெள்ள வந்த அன்னை ‘‘என்ன காஞ்சிபுரம் போறியா? இந்தா இதை அவர்கிட்டக் கொடு...’’ என்று ஒரு பன்னீர் ரோஜாப்பூவை கொடுத்தாராம்.

அதைப் பெற்றுக்கொண்டு காஞ்சிபுரம் சென்று சேர்ந்த குருநாதருக்கு, மகாபெரியவர் பாலாற்றில் இருப்பதாகத் தெரியவர, அங்கு சென்றாராம். குருநாதர் இருந்த திசைக்கு எதிர் திசையைப் பார்த்தப்டி நீராடிக் கொண்டிருந்த மகாபெரியவர், திரும்பிப் பார்க்காமலேயே ‘`என்ன சில்பி... அம்பாள் பூ கொடுத்துவிட்டாளா? அதைக் கொடு’’ என்று தன் தோள் மேலாக வலது கையைக் காட்ட,  பூவை எடுத்துக் கையில் கொடுத்தாராம் சில்பியவர்கள். அதைத் தனது இடது  மார்பு மேல் வைத்துக்கொண்டு, நீரில் மூழ்கி மூழ்கிக் குளித்தாராம். அப்போதும் பூவில் ஓர் இதழ்கூட பிரியவில்லையாம்.

'அகிலாண்டேஸ்வரியின் அவதாரம்’

பின்னர், சில்பியவர்களை நோக்கித் திரும்பிய மகாபெரியவர், பெரிதாகச் சிரித்தபடியே மடத்தை நோக்கி வேகமாகச் சென்று விட்டாராம். அந்த ரோஜாப்பூவும் அவரின் மார்பில், அவரது சிரிப்போடு போட்டி போட்டபடிச் சிரித்துக் கொண்டிருந்ததாம்!

இது சில்பியவர்கள், நான் அவருடன் தங்கியிருந்த ஒரு மாத காலத்தில் என்னிடமும், என் தந்தையிடமும் கூறியது. இதுவரை நான் யாரிடமும் இதைக் கூறியதில்லை. ஆனால், இன்று மூட்டையை அவிழ்த்துவிட்டேன். இதுபோல் ஏராளமான நெல்லிக்கனிகள் உள்ளன.

மதியொளி நீயே கதி
மதியொளி நீயே வழி


இது நான் தினம் சொல்லும் மந்திரம். இது அவளே அருளிய  மந்திரம். எல்லோரும் சொல்லலாம். அன்னை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருவடியே சரணம் சரணம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு