Published:Updated:

மகா பெரியவா - 4

மகா பெரியவா - 4
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 4

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

மகா பெரியவா - 4

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 4
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 4

‘ஆத்ம சுத்தி... அந்தரங்க சுத்தி...
ஒழுக்கம் இவையே கல்வியின் பயன்’

- மகா பெரியவா 

மகா பெரியவா - 4

சுவாமிநாதனுக்கு டபுள் பிரமோஷன்!

சுவாமிநாதனும் சுப்பிரமணிய சாஸ்திரி களும் சிதம்பரம் திருவிழாவைக் காணச் சென்ற அன்று, மகாலட்சுமி கண்டக் கனவு, சற்று விபரீதமானதுதான். கணவரும் மகனும் சென்றிருந்த ஊர் தீப்பற்றி எரிகிறது. மக்கள் கூக்குரலிட்டு நாலாபுறமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். களேபரமான சூழல்.

திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறார் மகாலட்சுமி. இதயம் படபடக்கிறது. உடல் வியர்த்துக் கொட்டுகிறது. வீட்டிலும் யாருமில்லை. ‘அவரும் சுவாமிநாதனும் என்ன ஆனார்களோ?’ என்று கவலை பற்றிக்கொள்கிறது. ‘தெய்வமே... காப்பாற்று..’ என்றபடியே சுவாமி அறையில் விளக்கை ஏற்றுகிறாள்.

காலையில் வீட்டுக்கு வந்த தயிர்க்காரி, வாசல் படிக்கட்டில் உட்கார்ந்து சிதம்பரம் தீவிபத்தைத் தலைப்புச் செய்தியாக அறிவிக்கிறாள். ஐந்நூறுக்கும் மேற்பட்டவர் கள் விபத்தில் பலியாகி விட்ட தகவலைச் சொல்கிறாள். ஊரே பரபரப்பாகி விட்டதைச் சொல்லி, மகாலட்சுமியின் படபடப்பை இன்னும் அதிகமாக்குகிறாள்.

“இது என்ன கிரகசாரம். நான் சொப்பனம் கண்டது நிஜமாயிடுத்தே.நான் என்ன பண்ணுவேன்? அம்பிகையே... ஈஸ்வரியே... அவரையும் சுவாமிநாதனையும் எப்படியாவது காப்பாத்திக் கொடுத்துடு தாயே...” என்று கதறிக் கொண்டே பூஜை அறையை நோக்கி ஓடுகிறாள் அந்தத் தாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா - 4

நன்றாக விடிந்துவிட்டிருந்தது. சூரிய வெளிச்சம், சுப்பிரமணிய சாஸ்திரிகளின் வீட்டு உள் தாவாரம் வரை ஊடுறுவியது.

சுவர்க் கடிகாரம் எட்டு முறை ஒலித்து ஓய்ந்தது. ‘அம்மா...’ என்று பூரித்த முகத்துடன் சுவாமிநாதன் ஓடிவர, பின்னாலேயே சுப்பிரமணிய சாஸ்திரிகள்.

“மகாலட்சுமி... நேத்து ராத்திரி திருவிழாவுல என்ன ஆச்சுன்னா...” என்றபடியே மர நாற்காலியில் உட்கார்ந்தார் சாஸ்திரிகள்.

“நீங்க எதுவும் சொல்லவேணாம். தயிர்க்காரி எல்லாத்தையும் சொல்லிட்டா...”என்றபடியே சுவாமிநாதனை வாஞ்சையுடன் வாரி அணைத்து, நெற்றியிலும் கன்னத்திலும் முத்தம் கொடுத்து உள்ளம் குளிர்ந்தார் மகாலட்சுமி.

“சுவாமிநாதா! உன்னை இனிமேல் எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன். நீ எப்பவும் என்கூடவே இருக்கணும். ஆயுசுக்கும்  என்னை விட்டு பிரியக்கூடாது, சரியா? ஏன்னா... குழந்தை ராத்திரி ஒழுங்கா சாப்பிட்டானா?” என்று தாயுள்ளம் கேட்டது.

தனயன் சுவாமிநாதனின் உதட்டோரத்தில் லேசான புன்னகை! அதில் எளிதில் புரிந்து கொள்ள இயலாத ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கவேண்டும்!!

சிதம்பரம் தேரடித் தெருவில் இயங்கிக் கொண்டிருந்தது அந்தச் சிறு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களில் ஒருவராக சுவாமிநாதன். புத்திசாலி மாணவராக பலராலும் கண்டறியப்பட்டவர்.
ஒரு நாள், பள்ளியைப் பார்வையிட வருகிறார் கல்வி அதிகாரி. பள்ளித் தலைமையாசிரியர்் பின்தொடர, முதல் வகுப்பில் நுழைகிறார். அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று, சொல்லிக்கொடுத்தபடி ‘குட்மார்னிங் சார்’ என்று கோரஸ் குரல் எழுப்புகிறார்கள். சைகை மூலமாகவே அவர்களை உட்காரச் சொல்கிறார் கல்வி அதிகாரி. சற்றுநேர அமைதிக்குப் பின், ஒவ்வொரு மாணவராக அழைத்துப் பாடங்களைப்  படிக்கச் சொல்ல, சுவாமிநாதனின் முறை வருகிறது. எழுந்து நிற்கிறார்.

“உன் பேர் என்ன தம்பி?”

“சுவாமிநாதன் சார்.”

“அப்பா பேர்?”

“சுப்பிரமணிய சாஸ்திரிகள் சார்.”

“சரி... இப்ப நீ என்ன படிக்கப் போறே?”

அப்போது பாடப்புத்தகமாக இருந்த ஓரியண்ட் லாங்மென்ஸ் ரீடர் ஒன்றிலிருந்த பாடத்தில், ‘காட்டில் உள்ள பாட்டையெல்லாம் அனுமாருக்கு வாய்ப் பாடம்’ என்ற வரியைக் கம்பீரமாக, அழுத்தம் திருத்தமாக சுவாமிநாதன் படிக்க, வியந்து போகிறார் கல்வி அதிகாரி. ‘இவன் அர்த்தம் புரிந்து சொல்றமாதிரிதான் இருக்கு...’ என்கிறார் தலைமையாசிரியரிடம்.

கல்வி அதிகாரியிடமிருந்து அடுத்தடுத்து இரண்டு கேள்விகள் வர, அவற்றுக்கு சுவாமிநாதனிடமிருந்து பளீரென்று பதில் வருகிறது. வயதுக்கு மீறிய அறிவுகொண்ட சிறுவன், அறிவுக்குக் குறைவான வகுப்பில் இருப்பதில் அதிகாரிக்கு உடன்பாடில்லை.

“சுவாமிநாதன் அதிபுத்திசாலியாக இருக்கிறான். சிறுவனை மூன்றாம் வகுப்புக்கு மாற்றிவிடுங்கள்” என்று டபுள் பிரமோஷனுக்கு உத்தரவிட்டார், அதிகாரி.

அந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்புவரைதான் உண்டு. அதை வெற்றிகரமாக முடித்த சுவாமிநாதன், மேற்கொண்டு படிப்பைத் தொடர பச்சையப்பன் ப்ரைமரி பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

கல்வி சார்ந்த பல விஷயங்களை தமது பேருரைகளில் விளக்கியிருக்கிறார் மகா பெரியவா. அவற்றில் சில துளிகளைச் சுவைப்போம்.

‘நமது பாரத நாட்டின் முற்காலக் கல்வியின் முதல் நோக்கம் மன அமைதியை அடைவதேயாகும். புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை.

ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல், புலன்கள் போன வழியே அவற்றை பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந்தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும், கெட்ட எண்ணங்களும் துராசைகளும்தான் வளரும். இன்னல்களும் துன்பங்களும்தான் பெருகும்.

உண்மையான கல்வி என்பது ஆத்மஞானம் அடைய உதவுவதே ஆகும். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ, அந்தப் பயனை உண்மைக் கல்வி அளிக்கிறது. மற்ற விதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப் பயன்களைத்தான் அளிக்கின்றன. ஆனால், அவையும் படிப்படியாக பரமாத்மாவைச் சேர உபயோகப்படலாம். பொதுவாக, உலகப் பயன் என்பது பணம் திரட்டுவதையே குறிக்கிறது. பொருள்கூடப் பலவித தர்மங்களைச் செய்யப் பயன்படுகிறது. லௌகீக தர்மங்களும் பிரம்ம ஞானத்துக்குச் சாதகமாகின்றன. ‘தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர நடத்துவதாலும், தவத்தினாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும் ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைகிறான்’ என்று ஆதி ஆசாரியர்கள் கூறியுள்ளார்கள்.

மகா பெரியவா - 4

ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் ‘பரவித்யை’ எனவும், மற்றவற்றை ‘அபரவித்யை’ எனவும் கூறுவர். பரவித்யை எனும் பிரம்ம ஞானம், இப்போது நமக்குக் கொஞ்சம்கூடப் புலனாகாத, பரம ஸத்தியத்தை நாம் அறிவதில் நேரான பலனை அளிக்கிறது. அஞ்ஞான இருளைப் போக்குகிறது. ஆனாலும், மனிதனது புத்தி நுட்பத்தால் கண்களுக்குப் புலனாகும் பயனை மட்டும் விளக்கக்கூடிய வான சாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், சரித்திரம், சயின்ஸ் இவையும், வெளிநாட்டாரது ஆராய்ச்சி முறைகளும் கற்பிக்கப்படுவதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியாகத்தான் இருக்கிறது.

ஆஸ்திகமயமான கல்வி போதனையுடன் அந்நிய நாட்டாரின் முறைகளைக் கலந்து போதிப்பதில் நாம் மிகவும் ஜாக்கிரதையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். நமது ஆத்ம சுத்தி, அந்தரங்க சுத்தி, ஒழுக்கம் இவற்றையே கல்வியின் உறுபயனாகக் கருதவேண்டும்.

நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சி யையும், மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையில் உள்ள எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேல்நாட்டாரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவற்றில் ஈடுபட்டு அவற்றைக் கையாளுவோமானால், படிப்படியாக நமது பண்பாடு, அறம் ஆகியவற்றிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்துகொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்த பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்திவிடுவோம்.

தற்காலத்தில் நம்முடைய மக்கள் பெரும்பாலும் சிறுபிராயம் முதலே தம் தேசத்துக்கு உரிய ஒழுக்கம், பண்பாடு, இறை வணக்கம், ஆத்ம தியானம் போன்ற பழக்கங்களைக் கடைப்பிடிக்காமல் இருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும்கூட வெளிநாட்டாரது முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்தின் சாமான்ய இன்பத்தையும் மறு உலகத்தின் பேரின்ப வழியையும் அடையத் தடை ஏற்படுகிறது என்பது தெளிவு.

ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்கு, சிறு வயது முதலே நமது பண்புக்கு உரிய தர்மம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கவேண்டியதே நம் முதல் கடமை!’

(வளரும்)

மகா பெரியவா - 4

வள்ளலார் பாட்டு

“வானத்தின்  மீது  மயிலாடக்  கண்டேன்;    மயில்  குயில்  ஆச்சுதடி” 

இந்த  வள்ளலார்  பாடலுக்கு  பொருள் என்ன?

இப்பாடலைப் பலரும் யோகநிலை விளக்கமாகவே கருதுவர். ஆனால் வள்ளலார் குறிப்பிடும் உண்மைப் பொருள் வெளிப்படையானதல்ல. அது மிக ரகசியமானது. யோக, ஞான நெறி நின்றார்க்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடியது.

“யோகம்  செய்பவருக்கு  உண்டாகும்  அனுபவத்தைக்  கூறுவது  இது.  அழகிய  ஒளி  மயிலைப் போல சோதியின் காட்சி. முதலில்  தோன்ற,  பின்பு  இனிய நாதம் (குயில் ஒலி)  கேட்குமாம்”.  அதனையே  இவ்வாறு  குறிப்பாகச் சொன்னார் ராமலிங்க  சுவாமிகள்.

ஆன்மிக அமுதம் நூலில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism