பிரீமியம் ஸ்டோரி
அருள் மழை!

``மனிதப் பிறவியின் நோக்கமே மற்ற உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான். உண்மையான அன்புக்குக் காரணமோ, நோக்கமோ தேவையில்லை. அப்படி ஒரு காரணமும் இல்லாமல், அனைத்து ஜீவன்களையும் நேசிக்கும் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் சாட்சாத் சர்வேஸ்வரன்தான்''

-  காஞ்சி மகா பெரியவா

ஆன்ம தத்துவங்களோடு அன்பு, அறம், வழிபாடு முதலாக சகல சாஸ்திர தர்மங்களையும் அடியார்களுக்கு மிக எளிய வழியில் போதித்ததுடன், அதன்படி வாழ்ந்தும் வழிகாட்டியவர், காஞ்சி மாமுனிவர்
ஸ்ரீமகாபெரியவா.

அருள் மழை!

நம்மிடையே நடமாடும் தெய்வமாய்த் திகழ்ந்த அந்த மகான், கருணை மழையெனப் பொழிந்த அருளுரைகள் - அமுதத் துளிகள், கால வெள்ளத்தில் அழிந்துபோகாத ஆன்மிகப் பொக்கிஷங்கள்!
வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம், அவரின் அவதாரத் திருநாள். இவ்வருடம் வருவது, காஞ்சி மகாபெரியவரின் 125-வது ஜயந்தி திருநாள் (29.5.18 செவ்வாய்) என்பது கூடுதல் சிறப்பு.

இறையருளைப் பெற குருவருள் துணை செய்யும் என்பார்கள் பெரியோர்கள்.  அவ்வகையில், நாமும், ஜகத்குருவாம் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசார்ய மகாசுவாமிகளின் அவதாரத் திருநாளில், அவரை வணங்கி அவரின் திருவருளுக்குப் பாத்திரர்களாவோம். அதற்கு அவரின் அருளுரைகளும் துணை செய்யும்.

அருள் மழை!

நம் லௌகீக வாழ்வுக்கு மட்டுமல்ல, ஆன்ம முன்னேற்றத்துக்கும் வழிகாட்டும் மகாசுவாமி களின் அருள் மொழிகள், இங்கே உங்களுக்காக...

எளிய தெய்வம் பிள்ளையார்!

பிள்ளையார், ஏழைஎளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி. மஞ்சள்  பொடியிலும், களி மண்ணி லும், சாணத்திலும்கூட எவரும் பிள்ளையாரைப் பிடித்துவைத்து வழிபடலாம்.

அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர்.

எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து... அது கல்லோ, களி மண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள்செய்வார்.

அருள் மழை!

நதிக்கரைகளில், மரத்தடிகளில் என்று நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் அருள்பாலித்து வருகிறார். அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை.

ஒன்றும் படிக்காத வருக்கும், அவர் கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவார். பாவித்த மாத்திரத்தில், எந்த மூர்த்தியிலும் எழுந்தருளி விடுவார் பிள்ளையார். தோப்புக்கரணம் அவருக்கான விசேஷம்!

தோப்புக்கரணம்  ஏன்?

சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் ஒருவருக்கே உரியவை.

பிள்ளையார் சந்நிதியில், இரண்டு கைகளையும் குறுக்கே மறித்து நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக்கரணம் போடவேண்டும்.

அருள் மழை!

இவை எதற்கு என்றால், யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால் எப்படி மனதையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லியிருக்கிறது.
நம் உடம்பைப் பல தினுசாக வளைத்துச் செய்கிற அப்பியாஸங்களால், சுவாசத்தின் கதியில் நல்லவித மாற்றங்கள் நிகழ்கின்றன. நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது இவற்றால் நம் நாடிகளின் சலனம் மாறும்; மனதில் தெய்விகமான மாறுதல்கள் உண்டாகும்.

குருவருள் பெரிது!

‘ஈசுவரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?’

அருள் மழை!

ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு மனிதர்- எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்துவிட்டால், நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ, அந்தச் சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது, அதனால்தான், குருவருள் பெரிது என்பார்கள்.

குருர் ப்ரஹ்மா
குருர் விஷ்ணு: குருர்
தேவோ மஹேச்வர:


எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான், தக்ஷிணாமூர்த்திதான். காலத்தில் கட்டுப்படாதவர் ஆதலால் ஈசனே ஆதி குருவுக்கும் குரு.

நம் குருவுக்கும், அந்தக் குருவுடைய குருவுக்கும், அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூரணமாக ஏற்பட்டிருக்கும்?

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக் கொண்டே போனால், கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷாத் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தைத் தந்திருக்கவேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக்கூடாது என்றார்கள். இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல், ஈசுவரனே குருவாக வந்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்று இரண்டை தனித் தனியாகக் கடைப்பிடிக்க வேண்டாம்.

அருள் மழை!

குருவே ஈசுவரன் என்று கருதி, அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூரணமாகச் சரணாகதி பண்ணிவிடலாம். குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லா விட்டாலும்கூட, அவர் மூலமாக நாம்
நித்ய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே அந்த குரு மூலமாக நமக்கு அனுக்கிரகம் பண்ணிவிடுவார்.

இதனால்தான் குருவையே ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.

உலகின் மாமருந்து!

“பயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரமமங்களமான ஒரு ஸ்வரூபம் உண்டு. அதற்கு  ‘சிவா’ என்று பெயர். அந்தச் சிவாதான் உலக தாபத்துக்கெல்லாம் ஔஷதமாக இருக்கிறது. ருத்திரனுக்கும் ஔஷதம் அந்தச் சிவாவே.”

ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம், இந்தச் சிவா என்கிற அம்பாளான ‘மிருத ஸஞ்சீவினி’தான்.

அருள் மழை!

“அம்மா, உன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தை உண்டும்கூட அழியாமல் இருக்கிறார்?” என்று ஆசார்யாள் (ஸ்ரீஆதிசங்கரர்) ‘ஸௌந்தர்ய லஹரி’யில் கேட்கிறார்.

அப்படிப்பட்ட சிவாவோடு சேர்த்து, ஸாம்பப் பரமேசுவரனைத் (ஸ+அம்ப = ஸாம்ப; அம்பாளோடு கூடியவராக) தியானிக்கவேண்டும். ஸாம்பமூர்த்தி, ஸாம்பசிவன் என்று அம்பாளோடு சேர்த்தே ஈசுவரனைச் சொல்வது வழக்கம்.

குழந்தையாக இரு!

குழந்தைகளிடம் காமமும் குரோதமும் நிலைத்திருப்பதில்லை. இந்த வினாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை, அடுத்த வினாடி கீழே போட்டு விட்டுப் போய்விடும். இந்த வினாடி கோபித்துக் கொண்ட ஒருவரிடம் அடுத்த வினாடியே ஆசையோடு ஓடிப்போய் ஒட்டிக்கொள்ளும். இதனால்தான் உபநிஷத்துகளும் நம்மைக் ‘குழந்தை யாக இரு’ என்று உபதேசிக்கின்றன.

பசுவின் சொந்தக்காரர்!

பரமேசுவரனுக்கு, ‘பசுபதி’ என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது, அவருடைய வாகனமான ரிஷபத்தையோ, காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு எஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

அருள் மழை!

தழையைக் கண்ட இடமெல்லாம் ஓடுகிற பசுவைப்போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப்போடுவது போல், பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.

‘எங்கே கட்டியிருக்கிறார்? கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே?’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப் பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம்.

ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம். அப்படியும் அது பலிதமாகவில்லை. அப்படியான தருணத்தில் ‘முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது. காரியம் ஜயிக்கவில்லை...’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்.

‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.

கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின் மீது கோபம்தான் வரும். ஆனால், கட்டை அவிழ்த்து விட்டால் என்ன ஆகிறது?அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை ‘வெளுவெளு’ என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப் போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.

அருள் மழை!

பசுவைக் கட்டிப் போடாவிட்டால், அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது.

அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடா விட்டால், நாம் நம்மையும் கெடுத்துக்கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது, எவ்வளவு கெடுப்போம்?

கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு நேரத்திலாவது பசுவுக்குக் கட்டுத்தறியிடம் வந்து படுக்க முடிகிறது. அதேபோல், கர்மம் நம்மைக் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்று கொண்டேயிருப்போம்.

அருள் மழை!

நம்முடைய க்ஷேமத்துக்காக, நாமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.

‘எப்போது அவிழ்த்து விடுவீர்?’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்!

சமுத்திரத்துக்கு  அபிஷேகம் !

ராமேசுவரத்துக்குப் போனால் சேதுவில் `சமுத்திர பூஜை' செய்வார்கள். அப்போது, பூஜா அங்கமாக சமுத்திரத்துக்கு அபிஷேகம் பண்ணுவார்கள். அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, அதற்கே ஸ்நானம் செய்வார்கள்.

அதேபோல், வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிக்கைக்கு, அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய, இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று அடக்கத்துடன் சாக்ஷாத் ஈசுவர அவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.

அருள் மழை!

தந்தையும் தனயனும்

இமயமலை மகா பெரியதாக இருக்கலாம்; கடுகு சின்னஞ்சிறியதாக இருக்கலாம். ஆனால், இமயமலைக்குள் இருக்கிற அத்தனை அவயவங்களும் கடுகுக்குள்ளும் இருக்கும்.

கடுகைக்கூட அப்படிப் பிரித்துக்கொண்டே போகலாம். கடைசியில் ஓர் அணு வந்து நிற்கும். அப்புறம் பிரிக்க முடியாது. சர்வ வியாபகமாக, இத்தனை அண்ட சராசரங்களாகப் பிரிந்திருக்கிற சிவ - சக்திகளைப் பிரிக்க முடியாமல் ஓரிடத்தில் பார்க்க வேண்டும் என்றால், அது  அன்பு ஊற்றெடுக்கிற இருதய மத்தியில்தான். பலவாக அவர்களிடமிருந்து விரிந்திருப்பதெல்லாம் ஒன்றாகக் குவிவது, இந்த அன்பு என்கிற அணுவில்தான்.

அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே சிவமாவ(து)
ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவ(து)
ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்கிறார் திருமூலர். அன்பு ஒன்றே உள்ள அந்த மனஸைத் தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் நம் மனஸும் நூறாயிரம் திசைகளில் ஓடாது; அன்பிலேயே முழுகிக் கரைந்து அன்பாகவே ஆகிவிடும். அருணகிரிநாதர் பெற்ற அனுபூதி இதுதான்.

பரமேசுவரன் வஸ்து (Matter) அம்பாள் அதன் சக்தி (energy) என்கிற சயின்ஸ் சூத்திரமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வஸ்துவின் ஸத்தை (சிவமயமான வெறும் இருப்பு), அதன் மகாசக்தி (அம்பாளின் ஆற்றல்) இதுகளை மட்டும் சொல்லிக்கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம்?

நம்மைக் கடைத்தேற்றப் போவது அவர்களுடையை அன்புதான், அருள்தான். இருவருடைய அன்பும் பொங்கிப் பெருகிக் கலந்த இந்த இடம்தான் அவர்களுடைய செல்லப் பிள்ளையான சுப்ரமண்யர்.

உள்ளே ஒன்றாக இருந்த அன்பு, இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாகக் கலந்து, இப்படி நாம் உபாஸிப்பதற்குச் சுலபமாக, ஸ்ரீசுப்ரமண்யமாக மூர்த்தீகரித்திருக்கிறது.

வேறு வேறாவது எப்படி?

‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’, ‘சிவோஹம்’ என்று சொல்லுகிறீரே? நீரே பிரம்மம், நீரே சிவம் என்றால் எப்படி? வேறு மாதிரித்தானே தெரிகிறது - என்று மற்ற ஸித்தாந்திகள் அத்வைதியைக் கேட்கிறார்கள்.
எல்லாம் பிரம்மம் என்றாலும், தனியாக ஜீவன்கள் மாதிரித் தெரியத்தானே செய்கிறது?

அருள் மழை!

இதற்கு அத்வைதி பதில் சொல்லியாக வேண்டும்.

அத்வைத சாஸ்திரங்களில் இரண்டுவிதமாக விடை சொல்லப்பட்டிருக்கிறது.

‘ஸ்வாமி நாமாவதெப்படி?’ என்றால், அது இரண்டு தினுசு.

ஒன்று சூரியன் நன்றாகப் பிரகாசமாக இருக்கும்போது, தண்ணீரில் கையைத் தோய்த்துக் கீழே தெளித்தால் ஆயிரம் துளிகள் விழுகின்றன.

அந்த ஆயிரம் துளிகளிலும் ஆயிரம் சூரியர்கள் தெரிகிறார்கள். ஒரே சூரியன் அப்படி ஆயிரமாகத் தோன்றுகிறான்.

எந்தப் பதார்த்தத்தில் தெரிகிறானோ, அதற்குத் தக்கப்படி அவனுடைய அளவும் இருக்கின்றது.

இதுபோலவேதான், பிரம்மமாகிற ஒரே சைதன்யமானது (அறிவு), பலவிதமான மனிதர்கள், பிராணி வர்க்கங்களில் பலவாறான அறிவுகளாகப் பிரதிபலித்து, `வேறு வேறு' என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.

வாஸ்தவத்தில் ஒரே சூரியன் மாதிரி ஒரே சைதன்யம்தான். இந்த வாதத்தை ‘பிம்ப - ப்ரதிபிம்ப வாதம்’ என்று சொல்லுவார்கள்.

மூலப்பொருளாக இருக்கிறார்!


ம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதையே, இவள் பாதி - அவர் பாதியாக ஒன்றுசேர்ந்தது போல், அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம்.

சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாகி திகழ்கிறார்கள். ‘வாக் அர்த்தாவிவ’ - என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார்.

அருள் மழை!

நான் ‘பசு’ என்று சொன்னால், அது ‘ப’ என்கிற சத்தமும் ‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான்.

சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது,  எப்படியிருக்கிறது? என்று கேட்டால், எப்படிச் சொல்வது?

எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும், இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது.

வாக்கும் ஆர்வமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன.

இப்படித்தான் பிரபஞ்சத்தில், ஜீவராசிகளில், அவற்றின் எண்ணங்கள் ஆகியவற்றில் பிரம்மம் திகழ்கிறது.

எங்கே, எப்படி இருக்கிறதென்று தெரியாவிட்டாலும், இவை எல்லாம் ‘சொல்’ என்றால், இவற்றுக்குப் ‘பொருளாக’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.

அம்பாள் ஆராதனை!

ம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை.

அருள் மழை!

அம்பாளை ஸ்ரீவித்யா என்றும் உபாஸிக்கிறோம். வித்யா என்றாலே ஞானம்தான். ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானமளித்தவள் அவள் என்று கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.

கதை இதுதான்...

ரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியால்தான், அவரது அனுக்கிகத்தால்தான் வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக்கொண்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்தத் தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே’ என்று பார்த்தார் பரமாத்மா.அவர்கள் அப்படிக் கெட்டுப்போகாமல் ரக்ஷிப்பதற்காக, அவர்களுடைய கண்ணுக் கெட்டிய தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதி ஸ்வரூபமாக நின்றார்.

‘இது என்ன யக்ஷ வடிவம்’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். அது என்ன என்று தெரிந்து கொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி ‘‘நீ யார்?’’ என்று கேட்பதற்கு முன்னதாகவே, அது இவனைப் பார்த்து ‘‘நீ யார்’’ என்று கேட்டது. ‘‘நான் அக்னியாக்கும். நான் எதையும் எரித்துப் பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்’’ என்றான்.

அருள் மழை!

‘‘ஓஹோ! அப்படியானால், இதை எரி பார்க்கலாம்’’ என்று சொல்லி, ஒரு துரும்பை எடுத்துப் போட்டது யக்ஷம். அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான். ஆனால் துரும்பு எரியவேயில்லை. அக்னி வெட்கத்துடன் திரும்பிவந்து, மற்றவர்களிடம் நடந்ததைச் சொன்னான். அடுத்து வாயு அனுப்பப் பட்டான். அவனிடம், ‘‘இந்தச் சின்னத் துரும்பைத் தூக்கிப் பார்’’ என்றது யக்ஷம். வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்கக்கூட முடியவில்லை. தோல்வியே மிஞ்சியது.

இப்போது தேவராஜனுக்கே ஓர் அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று.

அருள் மழை!

ஆகவே, யக்ஷத்தை விநயத் துடன் நெருங்கியவுடன், மகா காருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அனுக்கிரகம் செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் காட்சியளித்தது. ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதி யான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து.  அத்துடன் சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசார்ய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்: ‘‘பிரம்மம்தான் அந்த யக்ஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத் துக்கும், உனக்கும்; சகல தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளியாக இருக்கிறது’’ என்று உபதேசித்தாள்.

`எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞத் தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார் ஆதிசகங்கர பகவத்பாதாள். அப்படியான அம்பாளை ஆராதிக்கப் புது மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. தேவர்களும், பெரிய ரிஷிகளும், மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மகா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும்; அவளுடைய கடாட்சம் கிடைத்துவிடும்.

[விகடன் அருள் உரை தொகுப்பிலிருந்து...]

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு