தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - கற்பகம் - 8

 Godly women - Karpagam - Aval Vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
Godly women - Karpagam - Aval Vikatan

வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம் படம் : எல்.ராஜேந்திரன்

ற்பகத்துக்குப் பாட்டிதான் எல்லாமே. அந்தத் தள்ளாத வயசுலயும் தன் பேத்திக்காக அந்தக் கெழவி படுற பாடு,  கொஞ்சநஞ்சமில்லே.

முண்டும் முகடுமாக மொந்தல் மலை. மலைக்கு மேல குட்டி குட்டியா நிறைய சுனைங்க. பச்சைப் பசுமையா ஊரைச்சுத்தி பெருங்காடு. கற்பகத்தோட அப்பங்காரனுக்கு வெறகு வெட்டுற வேலை. ஒருக்கா, காட்டுக்குள்ள வெறகு வெட்டிக்கிட்டு திரும்பும்போது கருநாகம் தீண்டிச் செத்துப்போனான். புருஷன் செத்த அஞ்சாறு மாசத்துல, ஒத்தைப்புள்ள கற்பகத்தைத் தனியா விட்டுப்புட்டு அம்மாகாரியும் போய்ச் சேர்ந்துட்டா. யாருமில்லாம தனிச்சு நின்ன கற்பகத்தை பாட்டிகாரிதான் தூக்கியாந்து வளத்தா. அம்மா அப்பா முகம்கூட மறந்து போச்சு கற்பகத்துக்கு. எல்லாமுமா இருந்தவ பாட்டிதான். அப்படி பேத்தியை உசுருக்கு உசுரா பாத்துக்கிட்டா கெழவி.

அது வெள்ளைக்காரன் காலம். எல்லாத் துக்கும் கட்டுப்பாடு. நாலஞ்சு ஆளுக சேர்ந்து நின்னு பேசிக்கிட்டிருந்தாக்கூட புடிச்சு செயில்ல போட்டுருவானுக.திடீர்னு ஊருக்குள்ள வர்ற தொரைங்க, பொண்டு புள்ளைகளை கிண்டல் பண்றது, ஆடு, கோழிகளை அடிச்சுத் திங்கிறது, ஆம்புளைகளை கட்டி வெச்சு உதைக்கிறதுன்னு அக்கிரமம் செஞ்சானுக. அதுலயும் அந்தச் சீமைக்கு ஆளாயிருந்த வெள்ளைக்கார தொரை இருக்கானே... ரொம்பவே மோசமான ஆளு. அவன் வர்றான்னு தெரிஞ்சாலே பொண்டு புள்ளைகள்லாம் ஓடி ஒளிஞ்சிருங்க.

வெள்ளைக்காரனுக்குத் தெரியாமத்தான் காட்டுக்குள்ள போவணும். வெறகு எடுக்க, காட்டுப்பொருள் சேகரிக்க, கல்பாசி சுரண்ட, தேன்கூடு எடுக்கன்னு இப்பல்லாம் எதுக்காகவும் காட்டுக்குள்ள போவ முடியலே. வெள்ளைக்காரன் பாத்தா, எல்லாத்தையும் பறிச்சுக்கிட்டு, அடிச்சுத் தொரத்திருவான். ஒருக்கா, மூங்கிக்குச்சி வெட்டப்போன செந்தலையான் மவனை அடிச்சு கொன்னேபுட்டான் அந்த வெள்ளைக்காரத் தொரை.

தெய்வ மனுஷிகள்  - கற்பகம் | Godly women - Karpagam - Aval Vikatan
தெய்வ மனுஷிகள் - கற்பகம் | Godly women - Karpagam - Aval Vikatan

கற்பகத்தோட பாட்டி, முதுகொடிஞ்ச ஆளு.  வயசுக்கு வந்த பேத்தியைப் பொத்திப் பொத்தி வீட்டுக்குள்ளாற வெச்சுட்டு, அந்தக் கெழவிதான் காட்டுக்குள்ள போயி வெள்ளைக்காரனுக்குத் தெரியாம வெறகு எடுத்துவரும். அதைத் தலைச்சுமையா கொண்டு போயி பெருந்தனக்காரங்க வீட்டுல வித்துட்டு அரிசி, பருப்பு வாங்கியாந்தாத்தான் சோறு. இல்லேன்னா, குப்பைக்கீரையும் புளிச்ச தண்ணியுந்தான்.

அன்னிக்கு அய்யனார் கோயிலு கொடை.  சிறுகச் சிறுகச் சேத்து வெச்சிருந்த காசுல பேத்திக்குப் புதுப் பாவாடை, சட்டை வாங்கியாந்து குடுத்தா கெழவி. அதை உடுத்திக்கிட்டு இளவரசி  மாதிரி ஊருக்குள்ள சுத்தி வந்தா கற்பகம். 

அன்னிக்குப் பாத்து கெழவிக்குக் கடுங் காய்ச்சல். உடம்பு நெருப்பாக் கொதிக்குது. சோந்து படுத்துட்டா. பச்சைத் தண்ணி வெச்சு கெழவிக்கு ஒத்தடம் கொடுத்தா கற்பகம். கெழவி காட்டுக்குப் போயி வெறகு வெட்டியாந்தாத்தான் நாளைக்குச் சாப்பாடு. இப்படி காய்ச்சல் கண்டு படுத்திட்டாளேன்னு கற்பகத்துக்குக் கவலை. சரி... பாட்டிக்குப் பதிலா நாம வெறகு வெட்டப் போகலாம்னு முடிவு செஞ்சா. துணைக்குத் துணையா பக்கத்து வீட்டுல இருந்த தோழியைக் கூப்பிட்டா. அவளும் வாரேனு கிளம்பிட்டா.

தென்னமுடிக் கயித்தையும் அருவாளையும் எடுத்துக்கிட்டுப் பேத்தி கிளம்புறதைப் பாத்து பயந்துபோனா பாட்டி, ``அடியே கழுத. வயசுப்புள்ள காட்டுக்குள்ள வெறகு வெட்டப்போறது நல்லதில்லை. ஒழுங்கா வீட்டுல கெட. காய்ச்சல் குணம் கண்டவுடனே நானே போயி வெறகு கொண்டாரேன். அதுவரைக்கும் யாருக்கிட்டயாவது கால்படி அரிசி கடன் வாங்கிப் பொங்கிக்கலாம். காலம் கெட்டுக்கெடக்கு. அடக்கமா இரு''ன்னு தலையால அடிச்சுக்கிட்டா. ``பாட்டி... துணைக்குத் தோழி வர்றா. கவலைப்படாம தூங்கு. நேரத்தோடு போயி, வெளிச்சத்தோடு வந்துருவேன்''னு சொல்லிட்டு கெளம்பிட்டா கற்பகம்.

உச்சி நேரம். மொந்தல் மலையோட வெயிலு உச்சந்தலையில விழுந்து எதிரொலிக்குது. கற்பகமும் தோழியும் ஊருக்கதைப் பேசிக்கிட்டே வனத்துக்குள்ள நுழையுறாக. காராம்பழம், நெல்லிக்காய், சீத்தாப்பழம், எலந்தப்பழம்னு போற வழியெல்லாம் காய்ச்சுத் தொங்குற பழங்களைப் பறிச்சுத் தின்னுக்கிட்டே நடக்குறாக. உச்சிக்குப் போயாச்சு.

விறுவிறுன்னு காஞ்சுபோன கட்டைகளை வெட்டி அடுக்குறாக. தலைச்சுமைக்குத் தகுந்தமாதிரி ஆளுக்கொரு கட்டுக் கட்டியாச்சு. அப்பதான் அந்தச் சத்தம் கேக்குது. குதிரையோட குளம்புச் சத்தம். அவுகளை நோக்கித்தான் வருது. மிரண்டு போனாக, கற்பகமும் தோழியும். ``வெள்ளைக்கார படுபாவி வந்துட்டான். வெறகைத் தூக்கிட்டுக் கிளம்புடி''ன்னு தோழி பதறிப்போய் சொல்றா. கட்டைத் தூக்கி தலையில வெச்சுக்கிட்டு ரெண்டு பேரும் விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சாக.

மொந்தல் மலை வித்தியாசமான அமைப்புல இருக்கும். மூணு பக்கமும் பாதாளம். விழுந்தா எலும்புகூட மிஞ்சாது. ஒருபக்கம்தான் வழி. ஓட்டமும் நடையுமா அந்தப் பாதைச் சரிவுல இறங்குறாக. குதிரையோட குளம்புச் சத்தம் பின்னாடியே நெருக்கமா வருது. ``அடியே கற்பகம்... விறகை தூக்கிக்கிட்டு ஓட முடியாது.வெள்ளைக்காரங்கிட்ட மாட்டிக்குவோம். கட்டைத் தூக்கிப்போட்டுட்டு ஓடுவோம்''னு சொல்லிட்டு விறுவிறுன்னு சரிவுல குதிச்சு ஓடுனா தோழி. கற்பகம், கட்டைத் தூக்கிப் போட்டுட்டு எறங்க எத்தனிச்சா. எதிர்ல வந்து நிக்குது குதிரை. குதிரைக்கு மேல துப்பாக்கியோடு அந்த படுபாவி வெள்ளக்காரத் தொரை. உசரமா, தடிச்சுப் போயிருந்த வெள்ளைக்காரனைப் பாத்ததும் மெரண்டு போயிட்டா கற்பகம்.

தெய்வ மனுஷிகள்  - கற்பகம் | Godly women - Karpagam - Aval Vikatan
தெய்வ மனுஷிகள் - கற்பகம் | Godly women - Karpagam - Aval Vikatan

அழகுப்பதுமை மாதிரி ஒரு கன்னிப் பொண்ணு. நடுக்காட்டுல தனியா மாட்டிக்கிட்டா. வெள்ளைக்காரனுக்கு சந்தோஷ மாப் போச்சு. நமுட்டுச் சிரிப்போட, ``யாரைக் கேட்டுக் காட்டுக்குள்ள எறங்கினே? வா... குதிரையில ஏறு. உன்னை விசாரிக்கணும்''னு சொல்லி கை நீட்டுனான் வெள்ளைக்காரன். கற்பகம் சுத்தும் முத்தும் பாத்தா. கால் போன போக்குல ஓட ஆரம்பிச்சா. சரிவுகள்ல தட்டுத்தடுமாறி, விழுந்து எழுந்து ஓடுறா. வெள்ளைக்காரன் குதிரையைத் தட்டிவிட்டு துரத்துறான்.

ஓட்டம்னா ஓட்டம்... எதிர்ல என்ன இருக்குன்னு தெரியலே. வேடனோட அம்புக்குத் தப்பி ஓடுற பறவையாட்டம் பறக்குறா. அதோ... அடிவாரம் கண்ணுக்குத் தெரியுது. இன்னங்கொஞ்சம் வேகமா அடி எடுத்து வெச்சா ஊருக்குள்ள நுழைஞ்சிடலாம். ஏதாவது ஒரு வீட்டுக்குள்ள நுழைஞ்சு தஞ்சம்னு ஒண்டிக்கலாம். `அய்யா... திருவேட்ட அய்யனாரே... இந்த கொடுமைக்காரன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துய்யா...'ன்னு வேண்டிக்கிட்டே ஓடுறா.

நெருங்கி வந்துட்டான் வெள்ளைக்காரன். எதிர்ல ஒரு பெரிய பாறை. திகைச்சுப் போய் நிக்குறா கற்பகம். அந்தப் பக்கம் ஓடலாம்னு திரும்புனா `சோ'ன்னு ஊத்திக்கிட்டிருக்கு ஓர் அருவி. ரெண்டு பக்கமும் அணைகட்டி நிக்குது இயற்கை. குதிரைச்சத்தம் காதுக்கு நெருக்கமா கேக்குது.

தட்டுத்தடுமாறி அந்தப் பாறையில ஏறுனா கற்பகம். கீழே பாத்தா பெரிய பள்ளம். பாறைக்குக் கீழே குதிரையை நிறுத்திட்டுச் சிரிக்கிறான் வெள்ளைக்காரன். பாத்தா கற்பகம். `இனி தாமதிச்சா, வெள்ளைக்காரன் கையில சிக்கி சின்னாபின்னமாயிருவோம்...' - கண்ணை மூடிக்கிட்டு குதிச்சா. பாறையில இருந்துவிழுந்த சத்தம் கூட மேலே எழும்பலே. அப்படியொரு பள்ளம் அது... விழுந்து அடங்கிட்டா.

திகைச்சுப்போயிட்டான் வெள்ளைக்காரன். திடீர்னு அவன் குதிரை, முன்னங்காலைத் தூக்கிக்கிட்டு கனைக்குது. கட்டுப்படுத்த என்னன்னவோ செய்றான் வெள்ளைக்காரன். முடியலே... பாசியில காலு வழுக்கி குதிரை சரியுது. வெள்ளைக்காரன் எட்டிப்போயி அருவியில விழுகிறான். தலை பாறையில பட்டுத் தெறிக்குது. ‘சோ’ன்னு ஊத்துற பச்சைத்தண்ணி செக்கச் சிவப்பா மாறிப்போச்சு.

எல்லாத்தையும் ஒரு புதர் மறைவுல இருந்து பாத்துக்கிட்டிருந்த தோழி, பதறிப்போய் ஊருக்குள்ள ஓடித் தகவல் சொன்னா. ‘புள்ளைக்குப் புள்ளையா, பேத்திக்குப் பேத்தியா வளர்த்த கன்னி, இப்படி பாதியில விட்டுட்டுப் போயிட்டாளே’ன்னு கெழவி நெக்குருகிப்போனா. அந்த வேதனையிலேயே அவ உயிரும் போயிருச்சு.

வெள்ளைக்காரன் கையில சிக்காம, தன் மானத்தைக் காப்பாத்த மலையில இருந்து குதிச்ச கற்பகத்தை ஊரே சாமியாக் கும்புட ஆரம்பிச்சிச்சு.

திருநெல்வேலி மாவட்டத்துல, கடையநல்லூர் பக்கத்துல புன்னயாபுரம்னு ஓர் ஊரு இருக்கு... அங்கேதான் இருக்கு மொந்தல் மலை. மலைக்கு மேல தூணா நிக்குறா கற்பகம். கீழே கோயில் கட்டித் திருவுருவம் எழுப்பியிருக்காக. கற்பகத்துக்குப் பக்கத்துல அவ தோழியும் நிக்குறா. கற்பகம் முகத்துல சாந்தமும் அன்பும் நிறைஞ்சிருக்கு. வெள்ளைக்காரத் தொரை செஞ்ச தப்புக்காக எல்லா ஆம்பளைகளும் கையெடுத்துக் கும்பிட்டு அவகிட்ட மன்னிப்புக் கேக்குறாக...