மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 5

மகா பெரியவா - 5
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 5

வீயெஸ்வி, ஓவியங்கள்: கேஷவ்

`அம்பாளை ஸ்ரீவித்யா என்றும் உபாஸிக்கிறோம்.

வித்யா என்றாலே ஞானம்தான்’


- மகா பெரியவா

ச்சையப்பன் ப்ரைமரி பள்ளியில் சேர்ந்த சுவாமிநாதனுக்கு ஏனோ சுட்டுப்போட்டாலும் படிப்பு ஏறவில்லை என்பது ஒரு விநோத முரண்பாடு. எந்த சப்ஜெக்ட் எடுத்தாலும் மார்க் பூஜ்ஜியம்தான். ரிப்போர்ட் கார்டில் சிகப்பு மையில் அடிக்கோடிட்டிருப்பதையே அதிகம் பார்க்க முடிந்தது.

“சுவாமிநாதா...” என்று கோபம் கொப்பளிக்க அழைத்தார் சுப்பிரமணிய சாஸ்திரிகள்.

“என்னப்பா..?”

“ஏண்டா உனக்கு மூளை மழுங்கிப்போச்சு? இப்படி எல்லா பாடத்திலேயும் ஃபெயிலாயிட்டு வந்து நிக்கறே? வெட்கமா இல்லையா உனக்கு?”

மகனிடம் பதிலில்லை. சிந்தித்தார் தந்தை. ‘இவனை வேறு துறையில் ஈடுபடுத்தறதைத் தவிர வேறு வழியில்லை.’

சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. இனிமையான சாரீரத்தில் நன்றாகப் பாடுவார். மூத்தவன் கணபதி நன்றாகப் படிக்கிறான். அவன் வழியில் குறுக்கிடவேண்டாம். இளையவனுக்கு சங்கீதம் கற்றுக்கொடுக்க முடிவெடுத்து, அவரே சொல்லிக் கொடுக்கவும் செய்தார்.

சங்கீத அப்பியாசம் செய்ய தெலுங்கு மொழி தெரிய வேண்டும் என்று உணர்ந்திருந்தார் தந்தை. தியாகராஜரின் கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கில் அமைந்தவைதான். அவற்றைப் பொருள் புரிந்து அர்த்தபாவத்துடன் பாடவேண்டும் என்றால், அதற்குத் தெலுங்கு மொழியறிவு அத்தியாவசியம். மனைவியிடமும் கலந்தாலோசித்தார்.

மகா பெரியவா - 5

“மகாலட்சுமி... சுவாமிநாதனை தெலுங்கு வாத்தியார் ஒருத்தர்கிட்டே பாடம் படிக்க அனுப்பினால் என்ன?”

“நானும் அதப்பத்திதான் நினைச்சுண்டு இருந்தேன். நாளைக்கு நல்ல நாளா இருக்கு. அவனை அழைச்சுண்டுப் போய் சேர்த்துடுங்கோ...”

சேர்த்துவிட்டார் சுப்பிரமணிய சாஸ்திரிகள். சுவாமிநாதனும் தெலுங்கை முறையாகக் கற்றுக்கொண்டார். வீட்டில் தந்தையிடம் சங்கீதப் பாடங்கள்.

சில மாதங்கள் இப்படியே கழிந்தன. சுப்பிரமணிய சாஸ்திரி களுக்கு, சிதம்பரத்திலிருந்து விழுப்புரத்துக்குப் பணிமாற்றம் ஆனது. குடும்பம் இடம்பெயர்ந்தது. ஆனால், விழுப்புரத்தில் சுவாமிநாதனின் தெலுங்குப் படிப்பைத் தொடர வசதிகள் இருக்கவில்லை. தந்தையைப் பொறுத்தவரை, மகனின் எதிர்காலம் மறுபடியும் கேள்விக்குறி ஆகிவிட்டது!

காஞ்சி மகா சுவாமிகளுக்கு சங்கீதத்தின்பால் இருந்த ஈடுபாடும், அந்த மகான் அறிந்திருந்த நுணுக்கங்களும், அவருக்கிருந்த இசைஞானமும் பக்தர்கள் பலரை பல சந்தர்ப்பங்களில் பிரமிப்பில் மூழ்கடித்துச் சிலிர்க்கச் செய்ததுண்டு. வித்வான்களிடம் பல தருணங்களில் அவர் நிகழ்த்திய சங்கீத விவாதம் ஒவ்வொன்றும் வரலாற்றுப் பொக்கிஷம்.

சில துளிகளைப் பார்ப்போம்...

`லோகத்தில் மனதுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு அப்பர் சுவாமிகள் ஒரு ‘லிஸ்ட்’ கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள் போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்விகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துகளைச் சொல்லும்போது, முதலில் அவர் சொல்வது தோஷமே இல்லாத வீணா கானம். அப்புறம் பால் போன்ற நிலா; தென்றல் காற்று, வசந்த காலத்தின் மலர்ச்சி, வண்டுகள் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே


இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈஸ்வர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, ‘மாசில் வீணை’ என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.

நல்ல சங்கீதம் - அதுவும் குறிப்பாக நம்முடைய சங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் - என்றால் அது ஈஸ்வரனின் பாதத்துக்குக் கொண்டு சேர்ப்பதாகவே இருக்கும். நம் பூர்வீகர்கள் இசையை பகவானின் சரணங்களிலேயே சமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து ஈஸ்வர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது.

தர்மசாஸ்திரம் தந்த மகரிஷி யாக்ஞவல்கியரும் ‘சுஸ்வரமாக வீணையை மீட்டிக்கொண்டு, சுருதி சத்தத்தோடு லயம் தவறாமல் நாதோபாசனை செய்துவிட்டால் போதும் - தியானம் வேண்டாம், யோகம் வேண்டாம், தபஸ் வேண்டாம், பூஜைகள் வேண்டாம், கஷ்டமான சாதனைகள் வேண்டாம் - இதுவே மோக்ஷத்துக்கு வழிகாட்டிவிடும்’ என்கிறார்.

இதிலே இன்னொரு விசேஷம். சங்கீத வித்வான் மட்டுமில்லாமல், அவர் கானம் செய்வதை வெறுமே கேட்டுக்கொண்டிருக்கற அத்தனைபேருக்கும், அவர் ஒருத்தர் செய்கிற சாதனையின் பூரண பலனான நிறைந்த திவ்விய சுகம் கிட்டிவிடுகிறது.

வித்யா தேவதையான சரஸ்வதி எப்போதும் வீணா கானம் செய்கிறாள். லௌகீகமான பாட்டே கூடாது. பகவானைப் பற்றித்தான் பாடவேண்டும். சரஸ்வதியும் பலவித லீலைகளைப் பற்றித்தான் பாடுகிறாள் என்று ‘ஸௌந்தர்ய லஹரி’ சுலோகம் சொல்கிறது.

பரமேஸ்வரனின் பத்தினியான சாக்ஷாத் பார்வதியும் கையில் வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் ‘நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக்கொண்டிருப்பதாகவும், 'ஸரிகமபதநி' என்ற ஸப்த ஸ்வரங்களின் சாதுர்யத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

காளிதாஸர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை சங்கீதத்தில் அமிழ்ந்து இருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்று கிறது. அதேபோல், சங்கீத அனுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக, புஷ்பத்தைப்போல் மென்மையாக, கருணா மயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

கடுமையான பிரயாசை இல்லாமலே, சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார் யாக்ஞவல்கிய மகிரிஷி.

சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம், தங்கள் இருதயங்களை பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக்ஷாத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.’

சுவாமிநாதனின் பள்ளிப் பருவத்தைத் தொடருவோம்...

சிதம்பரத்தில் நின்றுபோன சுவாமிநாதனின் படிப்பை விழுப்புரத்தில் தொடர்வதற்கு முயன்றார் சுப்பிரமணிய சாஸ்திரிகள். விழுப்புரம் போர்டு ஹைஸ்கூலின் தலைமையாசிரியர் இவரின் நண்பர். சுவாமிநாதனை முதல் பாரத்தில் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். அப்போதெல்லாம் ஐந்தாவது வகுப்பு கிடையாது. நான்காவதில் பாஸாகிவிட்டால் அடுத்து முதல் பாரம்தான்!

போர்டு ஹைஸ்கூலில் சேர்ந்த பின்பு சுவாமிநாதனுக்குப் படிப்பு பிரமாதமாக வந்தது. ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதைக் கற்பூரம் மாதிரி பற்றிக்கொள்ள முடிந்தது. பெற்றோர் எதிர்பார்ப் பதைவிட அதிக மார்க் வாங்க முடிந்தது. பிரச்னை எதுவும் இன்றி இரண்டாவது பாரத்துக்குப் போக முடிந்தது.

மீண்டும் சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்பர்! இப்போது திண்டிவனம். இங்கே அமெரிக்கன் மிஷன் ஹைஸ்கூல் சுவாமிநாதனுக்குக் கதவு திறந்துவிட்டது. 1904-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாவது பாரத்தில் சேர்ந்தார் சுவாமிநாதன். பள்ளிக்கூடத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு சப்ஜெக்டிலும் அதிக மார்க்குகள் வாங்கி பிரகாசித்தார்.

மகா பெரியவா - 5

“சுவாமிநாதா! வருங்காலத்தில் நீ பெரிய விஞ்ஞானியாகப் பெயரும் புகழும் பெறப்போவது உறுதி” என்று அப்போது வாழ்த்தியிருக்கிறார், சாமுவேல் என்ற ஆசிரியர். ஆனால், பின்னாட்களில் சுவாமிநாதன் போற்றப்பட்டது ஞானியாக!

சுவாமிநாதனுக்கு ஆங்கிலத்திலும் ஆழ்ந்த தேர்ச்சி இருந்திருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ‘ஜான் அரசன்’ நாடகத்தில் ஆர்தர் இளவரசனாக நடித்து (மேக்அப் கிடையாது. வசனங்களை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடிக்க வேண்டும்), ‘ஓல்ட் இங்கிலீஷ்’ புத்தகம் ஒன்று பரிசாகப் பெற்றிருக்கிறார். பரிசளிப்பு விழாவில் முழு நிஜார், கோட்டு, பூட்ஸ், தொப்பி எல்லாம் அணிந்து ஸ்மார்ட்டாகத் தோற்றமளித்திருக்கிறார்.

'இவை எதுவுமே சுவாமிநாதனுக்குச் சொந்தம் கிடையாது. எல்லாமே போட்டோவுக்காக கிருஷ்ணசாமி என்ற நண்பரிடம் இரவலாக வாங்கி அணிந்துகொண்டவை. சில மாதங்களில் எதுவுமே சொந்தமில்லாத துறவியாகப் போகிறவர் ஆயிற்றே!' என்று கட்டுரை ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பரணீதரன்.

வருடம் 1907. ஐந்தாவது பாரத்தில் காலெடுத்து வைக்கிறார் சுவாமிநாதன்.

“உனக்கு மெட்ரிகுலேஷன் தேர்வு எழுத இன்னும் வயசாகலையே.. ‘அண்டர் ஏஜ்’னு சொல்லிடுவாங்க. அநேகமா உனக்கு ஒரு வருஷம் வீணாகத்தான் போகப் போறது...” என்று பள்ளிக்கூடத்தில் நிறையபேர் எச்சரித்தார்கள்.

சுவாமிநாதனுக்குப் பன்னிரண்டு வயது அப்போது. ஒரு நாள் காலை மகாலட்சுமி கண்விழித்தபோது, பக்கத்தில் சுவாமி நாதனைக் காணவில்லை. பதறிப்போனாள் தாய். “ஏன்னா... சுவாமிநாதனைக் காணலியே... உங்ககிட்ட சொல்லிட்டு எங்கேயாவது வெளியே போனானா?” என்று கணவரைக் கேட்க, “இல்லையே... எங்கே போயிருப்பான்?” என்ற சுப்பிரமணிய சாஸ்திரிகள் முகத்தில் கவலை ரேகைகள் படிந்தன.

தேடுதல் வேட்டை துவங்கியது.

(வளரும்)