தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - சிங்கம்மா - 10

Godly women - Singamma - Aval Vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
Godly women - Singamma - Aval Vikatan

வெ.நீலகண்டன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார் ஓவியம் : ஸ்யாம்

நாடோடி சமூகத்துல பொம்பளைப் புள்ளை பெத்தாத்தான் மதிப்பு, மருவாதி. பாண்டியாயிக்கு நாலு பயலுவ. அதனால, ‘எனக்கொரு பொம்பளப் புள்ள வரம்கொடு சாமி’ன்னு தெனமும் தாதாஜிகிட்ட வேண்டிக்குவா. ஒருக்கா, ஒரு பொம்பளைப் புள்ள பெறந்துச்சு. அந்தக் குழந்தைக்கு, ’சிங்கம்மா’ன்னு பேரு வெச்சு வளர்த்தா பாண்டியாயி.

சிங்கம்மா மேல அண்ணங்காரனுகளுக்கு அவ்ளோ பாசம்... அவ கேட்டதையெல்லாம் வாங்கிக் குடுப்பானுக. காட்டுக்குள்ள போயி தேனெடுப்பானுக. காடை, கௌதாரின்னு வில்லுவாரு வெச்சு வேட்டையாடுவானுக. பக்கத்தூரு மார்க்கெட்டுல பொம்மைகளை வாங்கியாந்து கோயில் திருவிழா, சந்தைகள்ல கடை விரிச்சு விப்பானுக.பாண்டியாயி வேகத்துக்கு யாரும் பாசிமணி கோக்க முடியாது. பேச்சு பாட்டுக்கு ஒருபக்கம் ஓடும். கையில ஒரு இடுக்கிய வெச்சுக்கிட்டு முடுக்கி முடுக்கி கோத்துக்கிட்டு உக்காந்திருப்பா.

Godly women - Singamma
Godly women - Singamma

பாண்டியாயி குடும்பம் மருதைக்குப் பக்கத்துல ஒரு ஊருல குடிலு கட்டித் தங்கியிருக்கு. நாடோடி மக்களுக்கு வீடுன்னு ஒண்ணும் இருக்காது. ஒதுக்குப்புறத்துல துணியால குடிலுகட்டிக் குடியிருப்பாக. பொம்பளைப்புள்ளைக பகல்ல எங்கே வேணும்னாலும் போயி ஊசி மணி பாசி விக்கலாம். ஆனா, சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வீட்டுக்குத் திரும்பிடணும். இல்லேன்னா, கூட்டத்துல சேத்துக்க மாட்டாக. அந்தக் கட்டுப்பாடு இன்னிக்கு நேத்தில்ல... ஆண்டாண்டுக்காலமா இருக்கு.

பாண்டியாயி மாதிரியே சிங்கம்மாவும் ஊசி மணி பாசி கட்டுறதுல பேரெடுத்தா. பார்க்கவும் தேவதை மாதிரி இருப்பா. மத்த சமூகம் மாதிரி, கல்யாணம் கட்டுறதுக்கு மாப்பிள்ளைக்கு வரதட்சணை தர்றகதையெல்லாம் நாடோடி சமூகத்துல இல்லை. பொண்ணைப் பெத்தவங் களுக்குப் பணம் கொடுத்துப் பரிசம் போடணும். சிங்கம்மாவுக்குப் பதினாலு வயசாகும்போதே அவ அழகையும் திறமையையும் பார்த்து பல குடும்பங்கள் பரிசப் பணத்தோட வந்து நிக்குறாக. ஆனா, பாண்டியாயிக்கு எதுவும் திருப்திப்படலே. `இன்னும் எம்புள்ளைக்கி கல்யாணம் கட்டுற தெசை வரலே. அப்பறமா பேசிக்கலாம்'னு எல்லாத்தையும் துண்டிச்சு விட்டுட்டா.

ஒருக்கா, அண்டையூர்ல கோயில் திருவிழா. அன்னிக்குப் பார்த்துப் பாண்டியாயிக்கு உடம்புக்குச் சுகமில்லை. பயலுவல்லாம் தேனெடுக்கக் காட்டுக்குள்ள போயிட்டானுவ. திருவிழாவுல கடை போடணும். அப்பத்தான் நாலு காசு பார்க்க முடியும். சிங்கம்மாவையும் மருமக ரெண்டு பேரையும் கூப்பிட்டு, “திருவிழாவுல கடை போட்டுட்டு ஆறு மணிக்குள்ள வீட்டுக்குத் திரும்பிருங்க”னு அனுப்பி வெச்சா. விடியக்காத்தால கிளம்பி சிங்கம்மாவும் ரெண்டு அண்ணிமாரும் தலையில சாமான் மூட்டையைத் தூக்கி வெச்சுக்கிட்டு நடந்தாக. வழியில ஒரு காட்டைக் கடந்து போவணும். ஏதும் மிருகங்க தட்டுப்படும். பாத்து பதவுசா நடக்கணும். ஒரு வழியா அந்தக் கோயிலுக்குப் போயி சாக்கை விரிச்சு பொருளையெல்லாம் அள்ளி அடுக்குனாக. சிண்டு சிறுசுக, பொண்டு பொடுசுகள்லாம் கடையைக் கண்டதும் வந்து சுத்திருச்சுக. நல்ல யாவாரம்.

மணி மூணாச்சு. ஆறு மணிக்குள்ளாற குடிலுக்குப் போவணுமே. கடையை அவசர அவசரமா அள்ளிக்கட்டுனாக. ஆளுக்கொரு மூட்டையா தலையில சுமந்துக்கிட்டு விறுவிறுன்னு கோயிலைக் கடந்து நடக்குறாக மூணு பேரும்.

லேசா வானம் கறுக்குது. மழை வர்றது மாதிரியிருக்கு. நடையை வேகவேகமா போடுறாக. முன்னப்பின்ன போனதுல, மூணு பேரும் ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சுட்டாக. “ஏய்... அண்ணி... ஏய் அண்ணி”ன்னு கத்துறா சிங்கம்மா. அந்தப் புள்ளைகளுக்கு காதுல விழுவலே. ‘சரி, நமக்குத்தான் வழிதெரியுமே... போயிரலாம்’னு விறுவிறுன்னு நடக்குது புள்ள.

சிங்கம்மா தனியா நடந்துபோறதை அந்தப் பக்கமா போன மூணு பயலுவ பார்த்தானுவ. எல்லாம் வாலிபப் பயலுவ. கிட்டப்போயி, “சிங்கம்மா ஏன் தனியா போறே”னு கேட்டானுவ. அறிமுகமான பயலுவங்கிறதால, “அண்ணிமாரு ரெண்டு பேரும் முன்னாடி போயிட்டாக”ன்னு சொன்னா சிங்கம்மா. “ஓ... அவுக ரெண்டு பேரும் இப்பத்தான் தெக்கிக்காட்டுப் பக்கம் போய்க்கிட்டிருந்தாக. அங்கே ஒரு கல்யாண வீடு. விருந்தும் வெச்சிருக்காக. அதுக்குத்தான் போறாக. நீயும் வாரியா”னு கேட்டானுவ. ‘சரி... அண்ணிகாரிங்க போயிருக்காங்களே... நாமளும் போவணும்’னு, புள்ள அவனுவ பின்னாடி விறுவிறுன்னு நடந்தா.

வழியில, அரவமில்லாத ஓர் இடம். பக்கத்துல ஒரு பாழடைஞ்ச கட்டடம். அந்த இடம் வந்தவுடனே மூணு பயலுவலும் ஒருத்தனை ஒருத்தன் பார்த்துக்கிட்டானுவ. திடீர்னு சிங்கம்மாவைச் சுத்துப்போட்டு நின்னானுவக. ஒருத்தன் சிங்கம்மா கையப்புடிச்சு அந்தக் கட்டடத்துக்குள்ள இழுத்தான். தப்பான நோக்கத்துலதான் நம்மளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்காங்கனு சிங்கம்மாவுக்குப் புரிஞ்சுபோச்சு... ‘`சாமி... யாராவது என்னைக் காப்பாத் துங்க'’ன்னு சத்தம் போட ஆரம்பிச்சா. அந்த அந்துவானக் காட்டுக்குள்ள அவ சத்தம் யாருக்கும் கேட்கலே.

Godly women - Singamma
Godly women - Singamma

வேற வழியேயில்லை. உடம்புல இருக்கிற வலுவெல்லாம் திரட்டி கையைப் புடிச்சவனைத் தள்ளிவிட்டா சிங்கம்மா. தலையில வெச்சிருந்த சுமையை ஒருத்தன் மேல வீசுனா. கைநிறைய மண்ணையள்ளி இன்னொருத்தன் மூஞ்சியில வீசுனா. மூணு பேரும் நிலைகுலைஞ்சு நிக்க, அப்படியே காட்டுக்குள்ள இறங்கி ஓட ஆரம்பிச்சா. கல்லு முள்ளு கண்ணுக்குத் தெரியலே. பாதை, படுகுழி எதையும் பாக்கலே. கால் போன போக்குல ஓடுறா... பின்னாடியே தொறத்தி வாரானுவ மூணு பயலுகளும்.

ஒத்தையடிப் பாதையில மாடு ஓட்டிக்கிட்டு வாராரு ஒருத்தர். சிங்கம்மா ஓடியாறதையும், மூணு பயலுவ தொறத்திக்கிட்டு வர்றதையும் பாக்குறாரு. சிங்கம்மாவை நிக்கச் சொல்லிட்டு, அந்த மூணு பயலுவளையும் அடிச்சுத் தொரத்துறாரு. பிறகு, சிங்கம்மாவைப் பத்தி விசாரிச்சு, பாதுகாப்பா ஊர் எல்லை வரை கொண்டுவந்து விட்டுட்டுப் போனாரு.

மணி எட்டாயிருச்சு. கூடப்போன அண்ணிகாரிங்க ரெண்டு பேரும் குடிலுக்கு வந்து, ‘சிங்கம்மா தங்களை விட்டுட்டு எங்கேயோ போயிட்டா’னு சொல்லிட்டாக. சாதி சனமெல்லாம் பதறிப்போச்சு. பாண்டியாயி ஒருபக்கம் உக்காந்து ஒப்பாரி வைக்கிறா. ‘இப்படி குலமானத்தை வாங்கிட்டாளே’னு அண்ணங்காரன் நாலு பேரும் கண்ணு செவக்க கோவத்துல உக்காந்திருக்கானுவ. கூட்டத்துல மூத்தாளுகெல்லாம், ‘அடுத்து என்ன செய்யலாம்’னு யோசனையில இருக்காக.

ஒருவழியா, உடுப்பெல்லாம் கிழிய, தலைவிரிகோலமா தப்பிச்சோம், பிழைச்சோம்னு குடிலுக்கு வந்து சேர்ந்தா சிங்கம்மா. அண்ணங்காரனுவ கோவத்துல எழுந்து அடிக்கப் போனானுவ. பெரியாளுகெல்லாம் அவனுகளைக் கட்டுப்படுத்தி உக்கார வெச்சாக. சிங்கம்மாவை குடிலோட எல்லையிலயே நிக்க வெச்சுட்டாக. பாண்டியாயி மகளைப் பார்த்துப் பார்த்துப் பொங்கி அழுவுறா.

கூட்டத்துல ஒரு பெரியாளு சிங்கம்மா கிட்டபோயி என்ன, ஏதுன்னு விசாரிச்சாரு. அவ நடந்த கதையெல்லாம் சொன்னா. ஆனா, அதையெல்லாம் அவரு நம்புற மாதிரியில்லே. எல்லாப் பேரும் சேர்ந்து பாண்டியாயியையும் அண்ணங்காரங்களையும் கூப்புட்டாக. கூடி நின்னு ரகசியமாப் பேசிட்டு எல்லாரும் அவுகவுக குடிலுக்குப் போயிட்டாக.

பாண்டியாயியும் அண்ணன்மாருங்க நாலு பேரும் சிங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு கிளம்புனாக. வழியெல்லாம் அழுதுக்கிட்டே வந்தா சிங்கம்மா. மத்த எல்லாரும் அமைதியா வந்தாக. நடுராத்திரியாச்சு. புல்லும் புதரும் மண்டிக்கிடந்த ஒரு மந்தையில எல்லாரும் உக்காந்தாக. சிங்கம்மாவுக்குப் புடிச்ச பதார்த்தங்களையெல்லாம் திங்கக் கொடுத்தா பாண்டியாயி. சரி... அம்மாவும் அண்ணங்காரங்களும் மாதானமாயிட்டாங்கன்னு நெனச்சு எல்லாப் பண்டங்களையும் விரும்பித் தின்னா சிங்கம்மா. மகளை மடியில படுக்க வெச்சுக்கிட்டா பாண்டியாயி. தலைநிறைய பூ வெச்சுவிட்டா. நாலு அண்ணங்கள்ல ரெண்டு பேரு எழுந்திரிச்சுப் போயி ஒரு குழி வெட்டுனாக. ரெண்டு பேரு மட்டும் அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் பக்கத்துல உக்காந்திருந்தானுவ. பாண்டியாயி கண்ணுல இருந்து கண்ணீரு கொட்டுது. ‘அம்மா ஏன் அழுவுறா’னு சிங்கம்மாவுக்குப் புரியலே... தாய்மடிச்சூட்டுல அப்படியே மெள்ள கண்ணசந்துட்டா.

Godly women - Singamma
Godly women - Singamma

கொஞ்ச நேரத்துல திடீர்னு மண்டையில ஏதோ மோதுச்சு. தலையில சுளீர்னு வலி. சிங்கம்மாவால முழிக்க முடியலே. லேசா கண்ணைத் திறந்து பார்க்குறா.  அண்ணன், கையில கொட்டாப்புளியோட நிக்குறான்.  அம்மாகாரி மடியெல்லாம் சொதசொதன்னு ரத்தம். ஏதோ சொல்ல வாயெடுத்தா சிங்கம்மா. அதுக்குள்ள மெள்ள மெள்ள அடங்கிப்போயிட்டா. பாண்டியாயி கதறி அழுவுறா. அண்ணங்காரனுகளும் அழுவுறானுவ.  பக்கத்துல வெட்டி வெச்ச குழியில சிங்கம்மாவை வெச்சு அடக்கம் பண்ணிட்டு ராவோட ராவா குடிலுக்குப் போயிட்டாக பாண்டியாயியும் அண்ணங்காரனுங்களும்.

கொஞ்ச நாளாச்சு. அந்த இடத்தைக் கடக்குற வயசுப்புள்ளைகெல்லாம் திடீர், திடீர்னு தலைவிரிகோலமா அருள் வந்து ஆடத் தொடங்குச்சுக. நாடோடி சமூகத்தினர் போடுற மாதிரி உடைகளைக் கிழிச்சுப் போட்டுக்கிட்டு புரியாத மொழி பேசுச்சுக.  காய்ச்சல், பேதின்னு பெரியாளுக பல பேரு படுக்கையில விழுந்தாக. நடு மதியம், நடுச்சாமமெல்லாம் திடீர் திடீர்னு அழுகைச்சத்தம் கேட்கத் தொடங்குச்சு. ஊர்ப் பெரியாளுக, என்ன ஏதுன்னு கோடங்கிகிட்டே குறிகேட்டப்போ, நடந்த கதையெல்லாம் அவன் வரிவரியா சொல்லிட்டான்.

 சிங்கம்மாவைப் புதைச்ச இடத்தை கோடங்கி அடையாளம் காட்ட, அந்த இடத்துல ஒரு கோயிலை எழுப்பினாங்க. மேலூருக்குப் பக்கத்துல மில்கேட்னு ஓரிடமிருக்கு. அங்கேதான் இருக்கு சிங்கம்மா கோயில். சிலை ரூபத்துல இருக்கா சிங்கம்மா.  பல வருஷங்களானாலும் இப்பவும் அவ ஆவேசம் அடங்கல. அப்பப்போ இளவட்டப் புள்ளைங்க மேல புகுந்துக்கிட்டு நீதி கேட்குறா. அந்தப் புள்ளைகளை நாடோடி சமூகத்தினர் போலவே உடைபோட்டுக் கூட்டியாந்து இந்தக் கோயிலுக்குள்ள விடுகிறாக.  சிங்கம்மாவாவே மாறி அந்தப் புள்ளைக ஆடுற ஆட்டத்தைப் பார்க்கும்போது, உள்ளம் நடுங்குது!