`அப்பனை நினைத்தேன் இப்பனை வந்தது!’
கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் புழுக்கம் ஏற்பட்டு வியர்த்துக் கொட்டியது. உடனே அடியார்கள் சிலர், வாரியார் சுவாமிகள் விசிறிக்கொள்ள வசதியாகப் பனை விசிறி ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தனர்.
அதைக் கையில் வாங்கிக் கொண்ட வாரியார் சுவாமிகள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்: “அப்பனை நினைத்தேன். இப்பனை வந்தது” என்று.
அவரது சமயோசிதப் பேச்சைப் பாராட்டிக் கூட்டத்தில்எழுந்த கரகோஷம் அடங்க வெகுநேரம் பிடித்தது!

`யாரை அனுப்புவது?’
ஓர் ஊரில் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. பகாசுரனின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார் சுவாமிகள்.
முன்னதாக அந்தக் கதையில், `அசுரனைச் சந்திக்க யாரை அனுப்புவது’ என்பது குறித்து கேள்வி எழும். அதுகுறித்து வாரியார் சுவாமிகள் தமக்கே உரிய பாணியில் பேசத் தொடங்கினார்
“கோடி வீட்டுக் கோபாலனை அனுப்பலாமா? இல்லை... அது சரி வராது. அவனுக்கு ஒரு கை கிடையாது. ஆகவே வேண்டாம்.
நடுவீட்டு நாச்சிமுத்து..? அவருக்கு ஒரு கால் விளங்காது; வேண்டாம்.
முடுக்குத் தெரு முனுசாமி..? அவனுக்கு ஆஸ்துமா, உடலில் தெம்பு கிடையாது...’’ என்று பேசிக்கொண்டே வந்தவர், தன் அருகிலிருந்த பிடில்காரரைப் பார்த்து, ‘‘இவரை அனுப்பலாம் என்றால், ரொம்ப ஒல்லியாக இருக்கிறார்...’’ என்றார், நகைச்சுவையுடன்.
அப்போது முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு சின்னப் பெண் எழுந்து “நீங்கள் போகலாமே!” என்றாள்.
அவள் அப்படிக் கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தார் வாரியார் சுவாமிகள். தொடர்ந்து கூட்டத்திலும் பலத்த சிரிப்பொலி. வாரியார் சுவாமிகள் அந்தச் சிறுமியை அழைத்துத் தட்டிக்கொடுத்து, சிறு புத்தகம் ஒன்றையும் பரிசளித்தார்.
- ஆர்.சி.சம்பத்
ஓவியம் : ரமணன்
