Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 12

சிவமகுடம் - பாகம் 2 - 12
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 12

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 12

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - பாகம் 2 - 12
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 12
சிவமகுடம் - பாகம் 2 - 12

ந்த மலையடிவாரக் கிராமத்தை மெள்ள மெள்ள இருள்சூழத் தொடங்கியிருந்தது. மாலைச் சூரியன் மேற்கில் மலை முகடுகளுக் கிடையே மறையும்வரை விட்டுச் சென்றிருந்த வெம்மையும் கதகதப்பும் கொஞ்சம் கொஞ்ச மாக விலகிக் கொண்டிருந்தன.

மேற்கு மலைத்தொடர்களிலிருந்துப் புறப் பட்டு, மலைச்சாரலின் மூலிகைச் சுகந்தத்தைச் சுமந்தபடி, கிராமத்தின் எல்லையில் பாய்ந் தோடும் நதி நீரில் தோய்ந்தெழுந்து அதன் குளிர்ச்சியையும் தனதாக்கிக்கொண்டு, வயல்வெளி நெற்கதிர்களில் மோதி அவற்றைச் சதிராடச் செய்ததுடன், ஊருக்குள் புகுந்து இல்லக்கிழத்திகளின் கூந்தலை வருடி, அவற்றை அவர்களின் திருமுகத்தில் அலை பாயவும் செய்துகொண்டிருந்து, பருவக்காற்று!

இப்படியான பருவச் சூழல் கிராமத்து மக்களுக்குப் பழகிவிட்டிருந்ததால், குளிரையோ காற்றின் அலைக்கழிப்பையோ பொருட் படுத்தாமல், அவரவர் வேலைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.

அப்படி அவர்கள் புறக்கணித்ததால் சீற்றம் உண்டானதோ என்னவோ, காற்று தனது வேகத்தை அதிகப்படுத்தியது. அது, தெரு முனைகளில் வெளிச்சத்துக்காகப் பந்த தீபம் ஏற்றிக்கொண்டிருந்த பணியாளுக்குச் சிரமத்தைக் கொடுத்தது. காற்றுக்குத் தடுப்பாக முதுகைக்காட்டிக்கொண்டு, பந்தத்தின் துணிப் பொதியை மீண்டும் ஒருமுறை தைலத்தில் தோய்த்தெடுத்து நெருப்பேற்றினான். ஒருவழியாக பந்தம் பற்றிக்கொண்டது.

அந்தப் பந்தம் பொருத்தப்பட்ட இடம், கிராமக்காரர் இல்லத்து முகப்புத் தீபமாடம். அது, காற்றின் திசைக்கு மறைவாக சற்று உள்ளடங்கி இருந்தது. ஆகவே, காற்றின் காரண மாக பந்தத்தின் சுடர் அலைபாய்ந் தாலும் அணைந்துவிடாது என்பதை உறுதிசெய்து கொண்ட பணியாள், திருப்தியுடன் அடுத்த இடத்துக்கு நகரத்தொடங்கினான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - பாகம் 2 - 12

அவன் யூகித்தபடியே காற்றினால் அந்தப் பந்த தீபத்தை அணைக்கமுடிய வில்லைதான் என்றாலும், கிராமக்காரர் இல்லத்தின் மேல் மாடத்தில் பாண்டிமாதேவியார் தங்கியிருந்த அறையின் விளக்குத் தீபங்களைப் பதம் பார்க்கவே செய்தது. ஒன்றிரண்டு தீபங்கள் அணைந்து போக, வேறுசில அணைவதற்கு முற்பட்டு அலைபாய்ந்துகொண்டிருந்தன; தேவியாரின் மனதைப் போலவே!

சேடிப்பெண்கள் ஓடோடி வந்து அணைந்த தீபங்களை மீண்டும் ஏற்ற முனைந்தனர். அறையின் மையப்பகுதியில் மஞ்சத்தில் சாய்ந்திருந்த பாண்டிமாதேவியார், அவர்களின் செயலைக் கவனித்தாலும் அவரின் மனது வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது என்பதைச், சேடிப்பெண்களால் யூகிக்க முடிந்தது.

அவர்களின் யூகம் சரிதான். பாண்டிமா தேவியாரின் மனதை மிகப்பெரிய அந்தக் காட்டு யானையும் அதன் எஜமானரும்தான் ஆக்கிரமித் துக்கொண்டிருந்தனர்.

இந்தக் கிராமத்தை வந்தடைவதற்குச் சில நாழிகைகளுக்குமுன், வனத்தின் வழியில் நிகழ்ந்த சம்பவங்கள் அவரின் மனதில் நிழலாடிக் கொண் டிருந்தன. அப்படியான நினைவுகளின் ஊடே, ``மிகவும் பொல்லாதவர்’’ என்று அவரையும் அறியாமல் அவரின் வாய் முணுமுணுக்க, சேடிப் பெண்கள் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களில் ஒருத்தி அருகிலேயே வந்து ‘`அழைத்தீர் களா தாயே’’ என்று கேட்கவும் செய்தாள்.

பாண்டிமாதேவியார் சிரித்துக்கொண்டார்.

‘`இல்லையில்லை...’’ என்று அவசரமாக மறுத்து மழுப்பியவர், தன்னால் தனக்கு உண்டான இந்தத் தர்மச் சங்கடத்தைத் தவிர்க்கும் வகையில், மஞ்சத்திலிருந்து எழுந்து வெளியே மாடத்துக்கு வந்தார். விண்ணை நோக்கினார். ஆகாயத்தில் ஆங்காங்கே தென்பட்ட தாரகைகள் விட்டு விட்டு ஒளிர்ந்த காட்சி, அவை அவரைப் பார்த்துக் கேலியாகக் கண்சிமிட்டுவது போல் தோன்றியது!

‘சரிதான்! என் உள்ளத்தின் காட்சிகளை, சேடிப் பெண்களைப் போன்று இந்தத் தாரகைகளும் புலனாய்ந்துவிட்டன போலும்’ என்று சிந்தித்தவர், மீண்டும் அந்தச் சம்பவத்தை மனதில் அசை போட ஆரம்பித்தார்.

திடுமெனப் பாய்ந்துவிட்ட காட்டுக் களிறை நோக்கி வீரர்கள் வேலெறிந்தார்கள். வில்லவர் கள் அம்பு தொடுத்தார்கள். ஆனாலும் பலனில் லாமல் போனது. ஒருசில நொடிகளில் தேவியாரின் மெய்க்காவல் படையை அந்த முரட்டுக் களிறு ஒட்டுமொத்தமாக அழித்து விடும் நிலை. இக்கட்டான அந்தத் தருணத்தில், பாண்டிமாதேவியாரின் வலக் கரம் அவரையும் அறியாமல் அவரின் இடுப்புப் பாகத்திலிருந்த சுழற் படையை (ஓர் ஆயுதம்) நோக்கி நகர்ந்தது.

ஆம்! நிலைமை அப்படியே நீடித்திருந்தால், அவரிடமிருந்து புறப் பட்டிருக்கும்  சுழற்படை யானையின் துதிக்கையைத் துண்டாடியிருக்கும். தொடந்து தேவியாரும் யானையுடன் போராடத் துணிந்திருப்பார். ஆனால், அதற்கு இடம்கொடுக்காமல் நிகழ்ந்தது, அடுத்தச் சம்பவம்.

பாண்டிமாதேவியார் சுழற்படையில் கை வைத்த கணத்தில், அருகில் எங்கோ விநோதச் சத்தம் ஒன்று கேட் டது. அந்தச் சத்தத்தைச் செவிமடுத்ததோ இல்லையோ...அந்தக் களிறு சட்டென்று தனது ஆக்ரோஷத்தைக் குறைத் துக் கொண்டது. அத்துடன், அங்குமிங்கும் தலையசைத்து எதையோ, எவரையோ தேடியது.

சிவமகுடம் - பாகம் 2 - 12

பெரும் விருட்சத்தின் கீழ் நின்றிருந்த அந்தக் களிறை அனைவரும் வியந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அந்த விருட்சத்தின் கிளை ஒன்றிலிருந்து சட்டென்று களிறின் முதுகில் குதித்தது ஓர் உருவம். தொடர்ந்து அந்தக் களிறின் மத்தகத்தைத் தடவிக் கொடுத்தபடியே, ஏதேதோ விநோத பாஷை பேசியது அந்த உருவம். அதையடுத்து அந்தக் களிறு, தான் வந்த திசை நோக்கித் திரும்பி ஓடியது.

‘`யார் அவன்? பெரும் வீரனாக இருக்கிறானே...’’ என்று மெய்க்காவலர்கள் அந்த உருவத்துக்குச் சொந்தக்காரனைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தோன்றியது யானை. அப்போதும் அதன் மீது ஆரோகணித் திருந்தான் அந்த வீரன். ஆனால் இப்போது யானையிடம் சீற்றம் இல்லை. தனது கரிய மேனி குலுங்க ஓடி வந்து கொண்டிருந்த அதன் துதிக்கையில் மாலை வேறு!

அதை அப்படி வழிநடத்துவது அந்த வீரனாகத் தான் இருக்கும் என்று பாண்டி மாதேவியார் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவரின் பல்லக்கை நெருங்கிவிட்ட யானை, அருகில் வந்ததும் ஏதோ கட்டளைக்குக் கட்டுப் பட்டதுபோல் முன்னங்கால்களை மடக்கிப் பணிந்து பாண்டிமாதேவியாருக்கு மாலையிட்டது. உடன், ‘`வாழ்க பாண்டிமாதேவி...’’ என்று அந்த வீரன் கரகரத்தக் குரலில் கூவ, மெய்க்காவலர்களும் பதிலுக்கு ஓங்கிக் குரலெடுத்துக் கூவினார்கள்... ‘`வாழ்க பாண்டிய தேசம்... வாழ்க வாழ்க பாண்டிமாதேவியார்...’’ என்று. 

அந்த நேரத்தில்... அந்த அணுக்கத்தில்தான் ஒரு ரகசியத் தைக் கண்டுகொண்டார் பாண்டிமாதேவியார். கண்கள் மட்டுமே தெரியும்படி முகத்தை மறைத்து திரை கட்டியிருந்த அந்த வீரர் யாரென்பதை?!
- இப்படியான நினைவுகளில் பாண்டிமாதேவியார் மூழ்கியிருக்க, கிராமத்தின் தலைவாயிலில் தீபப் பந்தத்தை ஏற்றிக்கொண்டிருந்தான் அந்தச் சேவகன். திடீரென அவனிடமிருந்து பெரும் அலறல், தொடர்ந்து அவன் கையி லிருந்த தீபப் பந்தம் தரையில் விழ, மறுகணம் ஒருநூறு தீபப் பந்தங்கள் முளைத்தன தலைவாயிலில்!

அந்நிய சேனையொன்று கிராமத்துக்குள் புகுந்தது. 

- மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism