மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 13

சிவமகுடம் - பாகம் 2 - 13
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 13

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 13

காரணமும் காரியமும்!

காரணமின்றி காரியம் இல்லை என்பது பெரியோர் திருவாக்கு. உண்மைதான். பூக்களுக்குள் தேன் போன்றும், பழங்களில் இன்சுவை போன்றும், பாலில் நெய் போன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் மறைபொருளாய்  பொதிந்து கிடக்கும் காரண ரகசியங்களே பெருமளவு காரியங்களை நிகழ்த்துகின்றன.

பாண்டிய தேசத்திலும் ஒரு காரணம், பலரையும் பலவிதமாகக் காய்நகர்த்தச் செய்திருக்கிறது; பல கோணங்களில் காரியங்கள் ஆற்றப் பணித்திருக்கிறது. அந்தக் காரணம்... சிவமகுடம் எனும் பெரும் ரகசியம்!

பாண்டிமாதேவியாருக்காக தன் தந்தை கொடுத்தனுப்பிய பரிசுப்பொருளுடன் இளங்குமரன் பாண்டிய தேசத்தின் எல்லையை அடைந்ததற்கும், விழா கோலாகலத்துக்கிடையே அது அவனிடமிருந்து அபகரிக்கப்பட்டதற்கும், பின்னர் பேரமைச்சர் குலச்சிறையார் மூலம் அந்தப் பரிசுப்பொருள் குறத்திப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டதற்கும், சமணத் துறவியார் நம்பிதேவனைச் சிறைப்படுத்தியதற்கும், அவரிட மிருந்து மீண்ட நம்பிதேவனும் இளங்குமரனும் பேரரசரின் மெய்க்காவல் படையிடம் சிக்கிக்கொண்டதற்கும் ஒரு காரணம் உண்டென்றால், அது சிவமகுடம் எனும் அந்தப் பரம ரகசியம்தான்!

சிவமகுடம் - பாகம் 2 - 13

இத்தனை நிகழ்வுகளுக்கும் அவற்றுக்கான அந்தக் காரணத்துக்கும் கர்த்தாவான பாண்டிமா தேவியார், அவர் தங்கியிருந்த கிராமத்தைத் திடுமென சூழ்ந்துவிட்ட பேராபத்துக்கான காரணம் புரியாமல் ஒரு கணம் திகைத்துப் போனார். எனினும், மறுகணம்  காரண ஆராய்ச் சியைப் புறந்தள்ளிவிட்டு, போருக்குச் சன்னத்தமாக துடித்தெழுந்தார்.

ஆம்! ஐம்பது-அறுபது புரவி வீரர்கள் அடங்கிய சேரதேசத்தின் படை ஒன்று ஊருக்குள் புகுந்து விட்டிருந்தது. சேரப் படை வீரர்களில் சிலர் கண்ணில்பட்ட கிராமத்து மக்களை சாட்டையால் விளாசினார்கள். வேறு சிலரோ, புரவியில் அமர்ந்திருந்த நிலையில், எதிரில் ஓடி வருவோரை காலாலேயே உதைத்துத் தள்ளினார்கள்.

இன்னும் சிலர், பெரும் வாளை சுழற்றியபடி உலா வந்து, மக்களுக்கு உயிர்ப் பயம் காட்டிக் கொண்டிருந்தார் கள். சேரர்களை எதிர்கொள்ள... பாண்டிமா தேவியாரின் மெய்க்காவல் வீரர்கள் ஆயத்தமாகவும் வாய்ப்பில்லாத சூழல். நிலைமை இப்படியே நீடித்தால் கிராமம் எளிதில் எதிரிகளின் வசப்பட்டுவிடும்!

அகாலச் சூழலில், எதிர்பாராத தருணத்தில் தாக்குதலை நிகழ்த்தும் எதிரிகளின் இந்தக் கோழைத்தனத்தை எண்ணி ஒருபுறம் துணுக்குற் றாலும், மறுபுறம் வெகு நாள்களுக்குப் பிறகு வாளேந்தும் வாய்ப்பைக் கொடுத்ததற்காக அவர்களின்மீது நன்றியுணர்ச்சியும் உள்ளுக்குள் எழாமல் இல்லை பாண்டிமாதேவியாருக்கு.

கணப்பொழுதில்... ஏற்கெனவே தாம் உடுத்தி யிருந்த ஆடையிலேயே அங்குமிங்குமாய் சில மாற்றங்களைச் செய்தும், சில இடங்களில் தளர்த்திவிட்டும், சில இடங்களில் இறுக்கிக் கொண்டும் போருக்கு ஆயத்தமாகிவிட்ட தேவியாரின் திருக்கோலத்தைக் கண்ட அவரின் அணுக்கத் தோழியருக்கு, வெகு நாள்களுக்குப் பிறகு தங்களின் இளவரசி மானியாரைத் தரிசித்தப் பரவசம். அதில் அவர்கள் திளைத்திருந்த தருணத் தில்தான், விநோதப் பேரரவம் ஒன்று கேட்டது கிராமத்தின் தலைவாயிலில்!

பார்வை மாடத்துக்கு ஓடோடி வந்தார் பாண்டிமாதேவியார். தலைவாயிலில் தேவியார் கண்ட காட்சி அவரைச் சிலிர்க்கவைத்தது.   பெரும் பிளிறலுடன் நின்றிருந்தது அந்தக் களிறு. அதன் மீது அதே மனிதர் கம்பீரமாக அமர்ந்திருந் தார். யானையின் பிளிறல் எதிரிகளுடைய புரவி களைக் கலவரப்படுத்தியது. அதன் காரணமாக ஒழுங்கு குலைந்து ஓடத் தொடங்கின.  எதிரிகளோ மகா திறமைசாலிகள்தான். நிலைகுலைந்த தங்களுடைய புரவிகளைச் சடுதியில் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். அவர்களில் சிலர் தங்களின் புரவிகளை தலைவாயிலில் நிற்கும் யானையை நோக்கி நகர்த்தவும், மற்றவர்கள் மீண்டும் தாக்குதலைத் தொடங்கவும் முற்பட்ட தருணத்தில் மீண்டும் நிகழ்ந்தது ஓர் அற்புதம்.

யானை மனிதர், தன் இடையிலிருந்த கொம்பு வாத்தியத்தை எடுத்து முழங்கினார். அந்தக் கொம்பு வாத்தியம், அதுவரையிலும் சேர வீரர்கள் கேட்டிராத விநோதச் சத்தத்தை வெளிப்படுத்தியது.  
 
`அந்த மனிதர் யார், கொம்புவாத்தியத்தின் முழக்கம் யாருக்கான அழைப்பு...’ என்று குழப்பம் எழுந்தது எதிரிகளிடம். அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்குள் நிலம் அதிர்ந்தது மிகப்பெரிதாக.

அடுத்த சில நொடிகளில், நிலத்தின் பேரதிர்வுக் குக் காரணமான வேறுசில பெருங்களிறுகள் வந்து சேர்ந்தன. அவை, ஏற்கெனவே வந்து நின்றிருந்த களிறுடன் இணைந்து கிராமத்தின் தலைவாயிலை ஆக்கிரமித்திருந்தன.

சிவமகுடம் - பாகம் 2 - 13

யானை மனிதர் மீண்டும் கொம்பு வாத்தியத்தை முழக்கினார். அதன் முழக்கம் அந்தக் களிறுகளை இயக்கியது. பெருங்களிறுகள் பகைவர்களை நோக்கி ஓடி வந்தன. அடுத்தடுத்து நிகழ்ந்தச் சம்பவங்களைக் கேட்கவா வேண்டும்?!

தரையில் ஓடிக்கொண்டிருந்த கிராம மக்கள் பாதுகாப்பாக ஒதுங்கிக்கொள்ள, களிறுகளிடம் வகையாகச் சிக்கிக்கொண்டது, சேரதேசத்தின் புரவிப்படை. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டிமாதேவியாரின் மெய்க்காவல் வீரர்களும் கிராம மக்களில் வீரமறவர்கள் பலரும் யானை மனிதரின் உதவிக்கு வர, வெகுவிரைவில் சேரர்களின் புரவிப்படை அடிபணிந்தது!

என்ன... யானை மனிதரின் விஜயத்தால் பாண்டிமாதேவியாரின் வாளுக்கும் சுழற் படைக்கும்தான் வேலையில்லாமல் போய்விட்டது. அவர், பார்வை மாடத்தில் நின்றபடியே யானை மனிதரின் செயல்பாடுகளை வெகுவாய் ரசித்துக் கொண்டிருந்தார்; காட்டு  யானைகளை ஆட்டுவிக் கும் அந்த மனிதரை எண்ணி மனதுக்குள் வியந்து கொண்டிருந்தார்!

சண்டை முடிவுக்கு வந்தது; பகை வீரர்கள் சிறைப்பட்டார்கள்.  கொம்பு வாத்தியம் மீண்டும் முழங்கி, காட்டு யானைகளுக்கு விடைகொடுத்தது. தொடர்ந்து, அந்த மனிதரைச் சுமந்துகொண்டிருந்த களிறு, பாண்டிமாதேவியாரை நோக்கி நகர்ந்து வந்தது. அவர் தங்கியிருந்த இல்லத்தின் வாயிலை அடைந்ததும், தன்னுடைய முன்னங்கால்களை மடக்கி மேனியைத் தாழ்த்தி, தன் துதிக்கையால் எஜமானருக்குக் கரம் கொடுத்து, அவரைத் தரையிறக்கியது. அப்படி இறங்கியவர், ஓட்டமும் நடையுமாய் அந்த இல்லத்துக்குள் புகுந்தார்.

தேவியாரின் மெய்க்காவலர்கள் பதைபதைத்துப் போனார்கள்.  அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த மனிதர் தேவியார் நின்றிருந்த மாடத்துக்கே வந்து விட்டார். தேவியாரை நெருங்கியதும் அவரைத் தன் தோளோடு சேர்த்து அணைத்தும் கொண்டார். தேவியாரின் திருமுகத்திலோ... அந்த மனிதரின் செயலுக்காக கோபம் எழுவதற்குப் பதில் புன்னகையே மலர்ந்தது. அனைத்தையும் கண்டு மெய்க்காவல் வீரர்களும் கிராமத்து மக்களும் திகைத்து நிற்க, அவர்களது திகைப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது அடுத்து நிகழ்ந்த சம்பவம்.
 
அந்த மனிதர், மெள்ள தன் முகத்திரையை விலக்கினார். நிலவின் தண்ணொளியில் அவரின் திருமுகத்தைத் தரிசித்த மறுகணம்... கீழே நின்றிருந்த அனைவரும் முழந்தாளிட்டு சிரம் தாழ்த்தினார்கள். மெய்க்காவல் வீரர்களின் வாள்கள், முதற்கண் பணிந்து அந்த மனிதருக்கு வீரவணக்கம் செலுத் தின. தொடர்ந்து, அந்த வாள்களால் தத்தமது கேடயத்தில் ஓங்கித் தட்டி சத்தம் உண்டாக்கி, தங்களின் மாமன்னருக்கு ஒலி வாழ்த்தை அர்ப்பணித்தார்கள்.

மக்களும் புரிந்துகொண்டார்கள் வந்திருப்பது யாரென்று!

`தென்னவன் வாழ்க...
பாண்டிய மாமன்னர் வாழ்க...
பிறைகுலத்தோனாம் எங்கள் மாறவர்மர் அரிகேசரி
பல்லாண்டு வாழ்க வாழ்க’

அவர்களின் வாழ்த்தொலியால் அதிர்ந்தது அந்தப் பிராந்தியம்!

இங்ஙனம், சேரப்படை தென்னவனின் அடிபணிந்த அந்தத் தினத்திலிருந்து மிகச்சரியாக நான்கு நாள்கள் கழித்து, வைகைக் கரைக்கு வந்துசேர்ந்திருந்தான் புதியவன் ஒருவன்.

ஏற்கெனவே மதுரைக்கு வந்த இளங்குமரன், வைகையின் கரையில் எந்த மணற்திட்டின் மீது ஏறி நின்று மாமதுரையைப் பார்த்து வியந்தானோ... அதே மணற்திட்டில், அவனைப் போன்றே தன் புரவியுடன் ஏறி நின்று, பேருவகையுடன் மாமதுரையை நோக்கினான் அந்தப் புதியவன்.

ஏதோ... திருவிழாவுக்குத் தயாராவது போன்று அந்த நள்ளிரவிலும் ஒளிச் சூழத் திகழ்ந்தது, அந்தப் பெருநகரம்!

சிவமகுடம் - பாகம் 2 - 13

திகாலையிலிருந்தே  படைவீரர்களின் ஒத்திகை அணிவகுப்பு, ஆங்காங்கே அதிகாரத் தொனியுடன் கூடிய அரசாங்க அதிகாரிகளது ஏவல் ஒலிகள், நள்ளிரவு முதற்கொண்டு இப்போது வரையிலும் எங்கெங்கெல்லாமோ இருந்து செய்திகளைச் சுமந்து வந்த தூதர்களும் ஒற்றர்களும் உள்நுழைய வசதியாக அவ்வப்போது கோட்டைக் கதவுகள் திறந்து மூடியதால் உண்டான சத்தம், இவற்றோடு அரண்மனை தலைவாயிலில் அலங்காரத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானையின் பிளிறலும், அஸ்வத்தங்களின் கனைப்பொலிகளும் சேர்ந்துகொள்ள, அல்லோல கல்லோலப்பட்டது மாமதுரை.

கோட்டை வாயிலிலிருந்து அரண்மனை முகப்புச் சதுக்கம் வரை வழிநெடுகிலும் பாக்கு, வாழை, குமுகு, தென்னைப் பாளைகள் எனத் தோரணங்கள் களைகட்ட, தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
அதேநேரம், இவை அனைத்தும் துரிதகதியில் நடந்த ஏற்பாடுகள் என்பதால், காரணத்தை அறிந்துகொள்ள கோட்டைவாசிகள் தவித்தார்கள். காவல் வீரர்களிடம் கேட்க லாம் என்றால், அவர்களுக்கும் அதுகுறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்வது தங்களுக்கு இழுக்கு என்பதால், கண்டிப்பு கலந்த குரலில் ‘உம்’காரம் கொட்டியபடியும், ‘விலகிச் செல்’ என்று உத்தரவிட்டபடியும் தங்களைக் கேள்வி கேட்ட மக்களைத் தவிர்த்துவிட்டு நகர்ந்தார்கள்.

கீழ்த்திசை ஆதவன் மெள்ள வானுயர்ந்த தருணத்தில் மாமன்னரும் அரண்மனை முகப்புக்கு வந்துவிட, பரபரப்பு இன்னும் அதிகமானது. மிகச் சரியாக நண்பகல் வேளையில், கோட்டைக் கொத்தளங்களில் பேரிகைகளும் எக்காளங்களும், விஜய வரவேற்பு முரசங்களும் மிகப்பெரிதாக முழங்க, கோட் டைக் கதவுகள் திறந்துகொண்டன.

அதேநேரம், சதுக்கத்தில் அணிவகுத்து நின்ற முன்னெதிர் முகைமைப் படையினர் தங்களது இடக்கை கேடயத்தை மார்பில் பொருத்தி, வாளால் அதன்மீது ஓங்கித்தட்டி ஒலியெழுப்ப...

‘உதயகிரி மத்தியத் துறுசுடர் போலத் தெற்றென்று திசைநடுங்க...’

-  உச்சஸ்தாயியில் பாடப்பட்டது மாமன்னரின் மெய்க் கீர்த்தி.

இவற்றினூடே கோட்டைவாயிலில் நுழைந்து, மெள்ள ஊர்ந்து வந்த அந்தச் சிவிகை அரண்மனை முகப்பை அடைந் ததும் தரையிறக்கப்பட்டது. சிவிகையிலிருந்து வெளியேறிய அந்த உருவம் முதற்கண் முழந்தாழிட்டு மண்ணை முத்தமிட்டு, பரதகண்டத்தின் பெரும்புகழுக்குக் காரணமான தென்னகத்தின் மீது தான் கொண்ட நேசத்தை வெளிப்படுத்தியதோடு, மாமன்னரையும் பணிந்து வணங்கியது.
மாமன்னர் ஓடோடி வந்து கட்டியணைத்துக்கொண்டார் அந்த உருவத்தை. அத்துடன் மிகப்பரிவோடு கேட்கவும் செய்தார்...

‘‘வாருங்கள் யுவான்சுவாங். எப்படி இருக்கிறீர்கள்..?’’

- மகுடம் சூடுவோம்...