மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி - 12

தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி ( ஆனந்த விகடன் )

வெ.நீலகண்டன், ஓவியம் : ஸ்யாம், படம்: என்.ஜி.மணிகண்டன்

வெள்ளச்சி வீடு, ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்துச்சு. அப்பன் விவசாயி. வெள்ளச்சி ஒரே மக. அந்த ஊரு மக்களுக்கு எந்த நல்லது கெட்டதுன்னாலும் வெள்ளச்சியோட அப்பங்காரன் நிப்பான்.பக்கத்து வீட்டுல வேலாயின்னு ஒரு அம்மை இருந்தா. அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு வருஷத்துல புருஷங்காரன் பாம்பு தீண்டிச் செத்துப்போனான். ஒருக்கா ஊர் எல்லையில, பெறந்து அஞ்சாறு நாளான ஆம்புளைப் புள்ளைய யாரோ கொண்டாந்து போட்டுட்டுப் போயிட்டாக. பஞ்சாயத்துக் கூடி, அந்தப் புள்ளைய, வேலாயிக்கிட்டக் குடுத்திரலாம்னு முடிவு செஞ்சாக. `துணைக்குத் துணையா இந்தப் புள்ளையாவது இருக்கட்டுமே’ன்னு வேலாயியும் அந்தப் புள்ளையை வாங்கி ஆசை ஆசையா வளர்த்தா. `தீயான்’னு அவனுக்குப் பேரு. ஊரே அந்தப் புள்ளையை ஊட்டி வளர்த்துச்சு. தீயான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பய. யாரும் அவனை வேத்துப்புள்ளையா நினைச்சதில்லை. யாரு வீட்டுல வேலை இருந்தாலும் அவன் வீட்டு வேலை கணக்கா எடுத்துப் பாப்பான்.

காலம் அதுபாட்டு நாலு காலு பாய்ச்சல்ல ஓடுச்சு. தீயானும் வெள்ளச்சியும் வளந்தாக. ஒண்ணுக்கொண்ணு அன்பா பழகுன புள்ளைக, ஒருகட்டத்துல இணைபிரியாத அளவுக்கு மனசால கலந்திருச்சுக. ஒருத்தர் இல்லாம ஒருத்தர் வாழ முடியாதுன்னு ஆகிப்போச்சு.

வடக்கால ஏரியை ஒட்டி கள்ளித்தோப்பு. முள்ளும் புதருமா மண்டிக்கிடக்கிற பூமி. வேலைவெட்டியெல்லாம் முடிஞ்சபெறவு, தீயான் அந்தக் காட்டுக்கு வந்திருவான். ஆட்டுக்குட்டிகள ஓட்டிக்கிட்டு வெள்ளச்சியும் அங்கே போயிருவா. ரெண்டு பேரும் புளியமரத்து நிழல்ல உக்காந்து பேசுவாக.

தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி
தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி
ஆனந்த விகடன்

வெள்ளச்சிக்கு ஒரு மாமம்புள்ள இருக் கான். பேரு மயிலான். பெரிய முரட்டுப்பய. யாரோடவும் ஒட்டமாட்டான். எல்லாக் கெட்டபழக்கங்களும் உண்டு. வேலைவெட்டிக்கும் போறதில்லை. அவனுக்கு, பேரழகியா இருக்கிற வெள்ளச்சி மேல ஒரு கண்ணு.

வெள்ளச்சி பின்னாடியே சுத்துனான் மயிலான். வெள்ளச்சிக்கு மயிலானைப் புடிக்கவே புடிக்காது. சில நேரங்கள்ல பாதையை மறிச்சுக்கிட்டு வம்பு பண்ணுவான் மயிலான். வெள்ளச்சி, அப்பங்காரங்கிட்ட வந்து சொல்லி அழுவா. அவன், `உரிமைக்காரன்தானே... சும்மா வெளையாடுறான்'னு சொல்லி வெள்ளச்சியைச் சமாதானப்படுத்துவான்.

ஒருநா, கள்ளித்தோப்புக்குள்ள தீயானும் வெள்ளச்சியும் உக்காந்து பேசிக்கிட்டிருக்கிறதை பாத்துப்புட்டான் மயிலான். கண்ணெல்லாம் செவந்துபோச்சு... நேரா, வெள்ளச்சி அப்பங்காரங்கிட்டப் போயி, ``உங்க
மவ செய்யற காரியத்தைப் பாத்தியளா”ன்னு விஷயத்தைச் சொல்லிப்புட்டான். அப்பனுக்குக் கடுமையா கோவம் வந்திருச்சு.

வெள்ளச்சியைக் கூப்புட்டு, ``என்ன வெள்ளை... நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா”ன்னு கேட்டான் அப்பங்காரன், ஒண்ணும்தெரியாத மாதிரி நின்னா வெள்ளச்சி. ``அந்தத் தீயான் பயலையும் உன்னையும் பத்தி அரசல்புரசலா பேசுறாகளே புள்ள”ன்னு அதட்டலா கேட்டான். வெள்ளச்சிக்கு கண்ணுல தண்ணியா ஊத்துது. ``அய்யோ... அப்படியெல்லாம் எதுவுமில்லப்பா. யாரோ வேணும்னு பத்தி விடுறாக”னு சொன்னா. ``சரி புத்தியோடு நடந்துக்க”ன்னு சொல்லிட்டு நேரா வேலாயி வீட்டுக்குப் போனான். அங்கே தீயான் சாப்பிட்டுக்கிட்டிருந்தான்.

``எலே தீயான். உடம்பு விறுவிறுங்குதா? ஊருக்குள்ள தப்பா பேச்சு வருதே. யாரு வீட்டுப் புள்ளக்கிட்ட வேலை காட்டுறே. தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு”ன்னு அடிக்கப்போனான். பக்கத்துல நின்னவுகலாம் தடுத்துவுட்டாக. வேலாயி மிரண்டுபோனா. தீயானுக்கு உடம்பெல்லாம் வேர்த்துப்போச்சு. மவனைப் பார்த்து, ``என்னடா இதெல்லாம்”னு கட்டிப்பிடிச்சு அழுதா வேலாயி.

அதுக்கப்புறம் தீயானால வெள்ளச்சியைப் பாக்கவே முடியலே. தவிச்சுப்போனான். மயிலான் வேற இவனைக் கண்காணிச்சுக்கிட்டே திரிஞ்சான்.

வெள்ளச்சி வீட்டுல மயிலானுக்கும் அவளுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி நாள் குறிச்சுட்டாக. எவ்வளவோ மன்றாடிப்பாத்துட்டா வெள்ளச்சி. அடி உதைன்னு ஒரே அழுகையா கிடந்துச்சு வீடு. அழுதழுது அடிவாங்கி முகம் உடம்பெல்லாம் வீங்கிப்போச்சு அவளுக்கு.

ஒருநா, எல்லாரும் அசந்த நேரத்துல கள்ளித்தோப்புக்குப் போனா வெள்ளச்சி. தீயானும் அங்கே வந்தான். ரெண்டு பேரும் ரொம்ப நேரம் அழுது தீத்தாக. யாருக்கும் பேச்சு வரலே. ``உங்க அப்பனும் மாமன் மகனும் நம்மளைச் சேர விடமாட்டாக போலருக்கு”ன்னான் தீயான். ``சாவா இருந்தாலும் வாழ்வா இருந்தாலும் உன்னோடதான்”னு சொல்லி கட்டிப்புடிச்சு அழுதா வெள்ளச்சி.

ரெண்டு புள்ளைகளும் பேசிக்கிட்டிருந்ததை அந்த கடங்காரப்பாவி மயிலான் பாத்துப்புட்டான். நேரா, வெள்ளச்சி அப்பங்கிட்டபோய் சொல்ல, அவன் ஆளுகளைக் கூட்டிக்கிட்டு கள்ளித்தோப்புக்கு வந்தான். வந்தவுக, ரெண்டு புள்ளைகளையும் சுத்தி வளைச்சுட்டாக. வெள்ளச்சிக்கு ரெண்டு உதை விட்டான் அப்பங்காரன். நாலு பயலுவ, தீயானை வளைச்சுப் புடிச்சுக்கிட்டானுவ. வெள்ளச்சி அவுக கால்ல விழுந்து, ``அவனை ஒண்ணும் பண்ணிராதிய”ன்னு அழுதா.

தீயானை இழுத்துக்கிட்டு ஊருக்குள்ள வாராக. அவங்கையை கயிறு கொண்டு கட்டியிருக்காக. ஆலமரத்தடியில பஞ்சாயத்துக் கூடுச்சு. எல்லாப் பயலும் கொலைவெறியோடு தீயானைப் பாத்துக்கிட்டு நிக்கிறானுவ. பெரியாளுவ எல்லாம் மரத்தடியில வரிசையா உக்காந்திருக்காக. ஒருபக்கம் வாயில சேலை முந்தானையை வெச்சுக்கிட்டு குமுறு குமுறி அழுதுக்கிட்டு நிக்கிறா வேலாயி. முகமெல்லாம் ரத்தம் வடிய, கூனி குறுகி நிக்கிற புள்ளையைப் பாக்க சகிக்கலே அவளுக்கு. இன்னொரு பக்கம் வெள்ளச்சியைக் கொண்டாந்து நிப்பாட்டியிருக்காக. பாதி மயக்கத்துல கெடக்குற வெள்ளச்சி, ``நான் வாழ்ந்தா தீயானோடுதான் வாழுவேன். என்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லேன்னா அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதையே எனக்கும் கொடுங்க”னு சொன்னா.

பெரியாளுகெல்லாம் கடைசியா ஒரு முடிவுக்கு வந்தாக. ``இந்த நிமிஷத்துல இருந்து, தீயான் பய இந்த சுத்து வட்டாரத்துல இருக்கப்புடாது. வேலாயியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம். தீயான் திரும்பவும் வெள்ளச்சியோடு பேச்சு வார்த்தை வெச்சுக்கிட்டா அவனைக் கல்லால அடிச்சுக் கொல்லலாம்”ன்னு தீர்ப்புச் சொன்னாக. வெள்ளச்சி கதறி அழுதா...

எப்படியாவது தீயான் தன்னைப் பாக்க வருவான்னு வெள்ளச்சி தினமும் ஆடுகளைப் பத்திக்கிட்டு கள்ளித்தோப்புக்குப் போனா. அவ நம்பிக்கை வீண்போகலே. ஒருநா, வானம் கறுத்த பொறவு ஒளிஞ்சு ஒளிஞ்சு கள்ளித்தோப்புக்கு வந்தான் தீயான். ``நாளைக்கு இதே நேரத்துக்கு கள்ளித்தோப்புக்கு வந்துரு. ரெண்டு பேரும் வெளியூரு போயிருவோம்”னு சொன்னான் தீயான்.

தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி
தெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி
ஆனந்த விகடன்

இந்தச் சேதி வெள்ளச்சி அப்பன் காதுக்கு எட்டிருச்சு. `இனி அந்தப்பயலை விட்டு வைக்கக்கூடாது’னு முடிவுக்கு வந்தான். ஏழெட்டுப்பேரை அழைச்சுக்கிட்டு தீயானை தேடி அலைஞ்சு கண்டுபிடிச்சான். அவனை இழுத்துக்கிட்டுக் கள்ளித்தோப்புக்கு போனாக. கதறக்கதற கண்டந்துண்டமா வெட்டி அங்கேயே தீ மூட்டி எரிச்சுப்புட்டாக.

சேதி வெள்ளச்சிக்கு போச்சு. `தீயான்... தீயான்'னு கத்திக்கிட்டே கள்ளித்தோப்புக்கு ஓடுனா. ஆயி, அப்பன்லாம் தடுத்தாக. எல்லாரையும் கீழே தள்ளிவிட்டுட்டு ஓடுனா. கள்ளித்தோப்புக்குள்ள எரிஞ்சுக்கிட்டிருக்கான் தீயான். பாதிக்கு மேல எரிஞ்சு எழுந்து எழுந்து அடங்குது உடம்பு. நேராப்போயி அந்தத் தீக்குள்ள குதிச்சுட்டா. அதோடு அடங்கி, நெருப்போடு நெருப்பா கலந்திருச்சு தீயான் உடம்பு.

கண்ணு முன்னாடியே மகள் தீக்குள்ள இறங்கிச் செத்துப்போனதை அப்பனால தாங்க முடியலே. மாரு அடைச்சு மயங்கிச் சரிஞ்சுட்டான். அவங்கதையும் முடிஞ்சிருச்சு.

அந்தச் சம்பவத்துக்கப்புறம் யாரும் கள்ளித்தோப்புப் பக்கமே போறதில்லை. ஊரே களையிழந்து போச்சு. அஞ்சாறு வருஷமா வானமும் வஞ்சனை பண்ணிருச்சு. பொட்டுத்தண்ணி இல்லே. தொலைதூரம் போயி தண்ணியெடுத்தே காலசந்து போனாக பொம்பளைகளெல்லாம். அம்மை, காலரான்னு வரிசையா நோய்கள் வந்து மக்களைக் கொத்துகொத்தா சாச்சுப் போட்டுச்சு. அதுக்கப்புறம்தான் மக்களுக்குப் புரிஞ்சுச்சு. எல்லாம் வெள்ளச்சி, தீயானோட கோவம்தான்னு. கள்ளித்தோப்பு பக்கமா, ரெண்டு பேருக்கும் செலையெடுத்து புகை காமிச்சு படையல் போட்டு,  `நாங்க பண்ணுன தவறுகளை மன்னிச்சு எங்களைக் காப்பாத்துங்க சாமிகளா'ன்னு வேண்டிக்கிட்டாக. அதுக்கப்பறம்தான் மேகம் கூடி நாலு மழைத்துளி மண்ணு மேல விழுந்துச்சு.  நோய் நொடியெல்லாம் விலகுச்சு.  

வெள்ளச்சியைப் பாக்கணும்னா பெரம்பலூர் மாவட்டத்துக்குப் போகணும். அங்கே வேலூருங்கிற ஊர்ல கள்ளித்தோப்புல நின்னுக்கிருக்கா வெள்ளச்சி.

கூடவே தீயானும் நிக்குறான். அந்த வெளிக்்குள்ள நுழைஞ்சாலே  மனசுக்குள்ள சுளீர்னு ஒரு சூடு இறங்குது!