Published:Updated:

மகா பெரியவா - 9

மகா பெரியவா - 9
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 9

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

மகா பெரியவா - 9

வீயெஸ்வி, ஓவியம்: கேஷவ்

Published:Updated:
மகா பெரியவா - 9
பிரீமியம் ஸ்டோரி
மகா பெரியவா - 9

‘அது எப்படி கண்மூடித் திறக்கறதுக்குள்ளே அத்தனையும் நடந்து முடிஞ்சுடுத்து…?’ என்று கலவையில் காமகோடி பக்தர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

சுவாமிநாதனை மடாதிபதியாக்கவேண்டும் என்பது குருவின் விருப்பமாக இருந்திருக்கிறது. இதை தெரிந்துவைத்திருந்த 67-வது பீடாதிபதி, குரு நினைத்த அதே சுவாமிநாதன்தான் இந்த பீடத்துக்கு உரியவர் என்று நினைத்ததுபோல் எட்டாம் நாளே ஸித்தியாகிவிட்டார்.

மகா பெரியவா - 9

‘தெய்வ சித்தம்கறது இதுதானோ…’ என்று அங்கிருந்த பக்தர்கள் வியந்திருக்கிறார்கள்.

மங்கள வாத்தியம் இசைக்கப்பட, மேளங்கள் முரசுக் கொட்ட, வேத கோஷங்கள் முழங்க, 1907-ம் வருடம், பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, கலவையில் தனது 13-வது வயதில் சந்நியாச ஆஸ்ரமம் பெற்றார் சுவாமிநாதன். திருக் கோலமும் மாறியது; திருப்பெயரும் மாறியது. ஆம்! சுவாமிநாதன், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆனார். கருமேகங்கள் சூழ்ந்துகொள்ள, வருணபகவான் கருணை மழையைப் பொழிந்தார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 1907-ம் வருடம், மே மாதம் 9-ம் தேதி, கும்பகோணத்தில் காமகோடி பீடத்தின் மடாதிபதியாக அதனை அலங்கரிக்கத் தொடங்கினார். இளம் சந்திரசேகேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

‘தலைமைப் பீடம் கும்பகோணத்துக்கு மாறியதற்கு ஒரு காரணம் உண்டு…’ என்கிறார் கணேச சர்மா, தனது நூலில்.

ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக் காரர் களுக்கும் இடையே `கர்நாடகப் போர்' என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சண்டை நடைபெற்றது. அந்த நேரத்தில் காமகோடி மடத்தின் 62-வது பீடாதிபதியாக இருந்தவர், சண்டை- சச்சரவு காரணமாக நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று வருந்தினார். 

இந்துக்கோயில்கள் சூறையாடப்பட்டு, சிலைகள் சின்னாபின்னமாயின. காமாட்சி அம்மன் கோயில் அமைந்திருக்கும் காஞ்சி புரத்தில் இருந்த சுவாமிகள், பங்காரு காமாட்சி என்ற அந்த பொற்சிலையையும் எடுத்துக் கொண்டு உடையார் பாளையம் சென்று சில காலம் தங்கினார். இன்னொரு பக்கம், போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது தஞ்சையை ஆட்சி செய்த மகாராஷ்டிர மன்னர், ஆசார்ய பெருமக்களை தம்முடன் வந்து தங்கியிருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  மோட்சபுரியான காஞ்சியைவிட்டு கும்பகோணத்தில் மோட்ச நதியான காவிரி தீரத்தில் முகாமிட விரும்பினார் சுவாமிகள். அதன்படியே, பழுது அடைந்திருந்த சங்கர மடத்தைப் புதுப்பித்து, பெரிதாக்கி, சுவாமிகளுக்குக் கைங்கர்யம் பண்ணுபவர்களுக்கும் ஏற்றபடி இடங்கள் அமைத்துக் கொடுத்தார் அரசர். காவிரி நதியில் ஸ்நானம் செய்ய வசதியாகப் படித்துறையும் அமைத்துக் கொடுத்தார். அன்று முதல் கும்ப கோணம் சங்கரமடம் தலைமைப் பீடமாக ஆனது.

மறுபடியும் 1907-ம் வருடத்துக்குள் பிரவேசம் செய்வோம்…

மகா பெரியவா - 9

இளம் சந்திரசேகரேந்திர சுவாமிகள் காமகோடி மடத்தில் பீடாதிபதியாகப் பொறுப்பு ஏற்கிறார். ஆடம்பரமும் ஆரவார மும் இல்லாத எளிமையான பதவியேற்பு அது. கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலிருந்த பக்தகோடிகள், தேஜஸ் வியாகத் திகழ்ந்த பால சுவாமிகளைக் கண்டு பரவசமானார்கள். அவரிடம் பிரசாதம் பெற்று புனிதம் அடைந்தார்கள். சுவாமிகளும் இதை புது அனுபவமாகக் கருதி, மடத்தின் நடைமுறை விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

‘ஏன் சந்நியாசியாக அவதாரம்?’ என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, மகாபெரியவா அவர்களின் பேருரைகளைத் தஞ்சம் அடைந் தேன்.

‘சந்நியாசிதான் ஞானியாக இருக்க முடியும் என்பதில்லை. ஒரு சண்டாளன்கூட ஞானி யாக இருக்கும் பட்சத்தில் அவனே என் குரு’ என்கிறார் ஆதிசங்கரர்.

அபூர்வமாக ஞானிகள் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் தோன்றலாம் என்றாலும் அந்தப் பரிபக்குவத் தைப் பெற, உயர்ந்த முறையில் பிரம்மசார் யமோ, கிருகஸ்தாச்ரமமோ வகித்த பிற்பாடு சந்நியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், உபநிஷத்துகளின் மகா வாக்கியங்களைத் தீர்க்கமாக தியானம் செய்தே ஞானம் அடையவேண்டும் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சந்நியாசியாக இல்லாத கிருஷ்ணரும் ஞானோபதேசம் செய்தார் என்றாலும், அது அவர் செய்த அநேக காரியங்களில் ஒன்று தான். அந்தக் காலத்தில் அந்த மட்டும் செய்ததே போதுமாயிருந்தது. ஜீவிதத்தின் பின்பாகத்தில் மட்டும் கொஞ்சம் உபதேசம் செய்தே அவர் ‘ஜகத்குரு’ பட்டத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டார்.

`கிரகஸ்தனுக்கு ஏகப்பட்ட கர்மானுஷ் டானங்கள் உண்டு. அவனுக்கு விருந்தோம்பல் உள்பட எத்தனையோ சமூகத் தொண்டுகள் உண்டு. அத்தனையையும் அவன்தான் செய்ய வேண்டும்.

இதெல்லாம் போகத்தான் உபதேசிப்பது என்றால் அன்றைய (ஆதிசங்கரர்) அபாய மான சூழ்நிலையில் போதவே போதாது. எனவே, இந்தப் பொறுப்புகளும், இத்தனை கர்மானுஷ்டானங்களும் இல்லாத சந்நியாசி தான் ‘உபதேச கர்மா; அதுவே தன் பொறுப்பு’ என்று ‘டெடிகேட்’ செய்துகொண்டு ஞான பிரசாரத்துக்காக உழைத்துக் காட்ட வேண்டும் என்று ஏற்பட்டது.

குடும்பப் பொறுப்புள்ள கிரகஸ்தன் எப்படி இந்த மாதிரி எப்பவும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்? மாறாக, சந்நியாசிகள்தான் எப்பவும் சஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கணும். ஒரே இடத்தில் அதிக நாள் இருந்தால் ‘லோகல் அட்டாச்மென்ட்’கள் உண் டாகிவிடுமாதலால் இடம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும்’ என்று சாஸ்திரமே விதி செய்திருக்கிறது’ என்கிறார் மகாபெரியவா.

ஊருக்கு உபதேசம் செய்வதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தவர் அல்ல மகா பெரியவா. தர்ம சாஸ்திரங்களை ஆழமாகப் பயின்று, அதன் வழி நடந்து மக்களை நல்வழிப் படுத்திய மகான் அவர்.

மடாதிபதிகள் கூடிய வரை யாத்திரை செய்வதே சிறப்பு என்று சாஸ்திரம் சொல்வ தைப் பின்பற்றிய தர்மசீலர் அவர்.

மகா பெரியவா கிட்டத்தட்ட 21 வருடங்கள் யாத்திரை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா போன்ற இடங்களுக்குப் பயணித்து, அங்குள்ள புண்ணிய நதிகளில் நீராடி, அனைத்து ஆலயங்களையும் தரிசனம் செய்திருக்கிறார். மக்களுக்கும் தரிசனம் தந்து அருளினார்.

வட வாம்பலம் - அப்போதைய தென் னாற்காடு ஜில்லாவில், பண்ருட்டிக்கு அருகி லுள்ள இடம். காமகோடி பீடத்தின் 58-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸித்தியான இடம். கோவிந்தபுரத்தில் பிரபலமாயிருக்கும் ஸ்ரீபகவந்நாம போதேந்திரரின் குரு இந்த ஸ்ரீஆத்ம போதேந்திரர்.

300 வருடங்களுக்கு முன் இங்கு ஸித்தியா னதால், இருந்த தடயங்க ளெல்லாம் மறைந்து விட்டிருந்தன.

`ஸித்தியான மடாதிபதிக்கு கோயில் எதுவும் எழுப்பப்படவில்லை. அவர் ஸித்தியான இடத்தைக் கண்டறிவதுதான் எப்படி?' என்று யோசனை செய்தபடியே வயல்பரப்பில் நடந்து செல்கிறார் பெரியவா.
வழியில் ஒரு வாழைத்தோப்பு. பெரியவா நிற்கிறார். குறிப்பிட்ட ஒரு பகுதியைக் காண்பித்து ``இந்த இடத்தில் தோண்டு'' என்கிறார். குறிப்பிட்ட அளவு ஆழம் சென்ற தும் மண்வெட்டி எதன் மேலேயோ படுகிறது. `டங்' என்ற சத்தம்.

அது ஒரு மண்டை ஓடு! `சதாசிவம்... சதாசிவம்...' என்றபடி மூர்ச்சையாகிறார், அந்த இடத்தைத் தோண்டிய குமாரமங்கலம் சாம்பமூர்த்தி.

``இதுதான் மடாதிபதி சமாதியான இடம்...'' என்று சொல்லிவிட்டு, மேலே என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கி விட்டு யாத்தி ரையைத் தொடர்ந்தார் பெரியவா.

``ஒரு அடி தோண்டும்போதே மறைந்த மடாதிபதியின் உருவம் ஒரு குழந்தை மாதிரி யாகத் தெரிந்தது. அதுவே பிறகு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தது.

முகத்தில் தேஜோமயமான ஒளி. சுற்றிலும் நிறையபேர் வேதபாராயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே `சதாசிவம்... சதாசிவம்... நிறுத்து நிறுத்து...' என்று குரல் கேட் டது. அதையே நானும் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது...'' என்று இந்தச் சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார் சாம்பமூர்த்தி.

- வளரும்...