Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 14

சிவமகுடம் - பாகம் 2 - 14
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 14

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - பாகம் 2 - 14

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - பாகம் 2 - 14
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - பாகம் 2 - 14
சிவமகுடம் - பாகம் 2 - 14

குலச்சிறையாரின் பிரகடனம்!

ன்னை நம்பாதவர், தெய்வத்தை நம்பிப் புண்ணியமில்லை என்பது பேரரசர் கூன்பாண்டியரின் கொள்கை. அவ்வகையில், ஒவ்வொரு காரியத்திலும் அதீத தன்னம்பிக்கையுடன் காய் நகர்த்துபவர் அவர். தன் மீது கொண்ட அதே அளவு நம்பிக்கை பேரமைச்சர் குலச்சிறையார் மீதும் பேரரசருக்கு உண்டு.

பரந்துபட்ட பாண்டியதேசத்தில் பேரமைச்சரின் கண்ணசைவு இன்றி ஓர் அணுவும் அசையாது. தன் உடல், உயிர், உடைமை அனைத்தையும் பாண்டிய தேசத்துக்காகவே அர்ப்பணித்துவிட்டிருந்த அந்த மகாபுருஷருக்கு, தனக்கு நிகரான அதிகாரத்தை அளித்திருந்தார் கூன்பாண்டியர். குலச்சிறையாரும் மன்னவரின் எதிர்பார்ப்புகளைப் பரிபூரண மாக நிறைவேற்றி வந்தார். அவர் இல்லையெனில், சோழம் பாண்டியதேசத்துடன் கைகோத்திருக்காது. மணிமுடிச் சோழர் பாண்டியரிடம் நட்பு பாராட்டவும், சோழ இளவரசியார் பாண்டிமாதேவியாராக வந்து வாய்க்கவும் மிக முக்கிய காரணம் குலச்சிறையார்தான்.

தெற்கிலும் மேற்கிலும் சேரர்களும் சில குறுநில அதிபதி களும், வடக்கில் பல்லவர்களும் தரும் நெருக்கடிகளை மிக எளிதில் சமாளிக்க முடிகிறது என்றால், அது குலச்சிறையாரின் சமயோசிதத்தாலும் அரசியல் தந்திரங்களாலும்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஆனால்... சமீபகாலமாக பாண்டியரின் மனதுக்குள் ஒரு போராட்டம்.  தன் உயிருக்கு நிகராக மதிக்கும் குலச்சிறையாரின் மீதே சந்தேகம் கொள்ளத் தூண்டுகிறது, அவரின் மனம். காரணம், அவ்வப்போது ஒற்றர்கள் கொண்டு வரும் தகவல்கள்; புதியவர்கள் பலரது நடமாட்டம். முத்தாய்ப்பாக... சில நாள்களுக்கு முன், நம்பிதேவனையும் இளங்குமரனையும் பாண்டியரின் ஆபத்துதவிகள் சிறைப்படுத்தியபோது, நம்பி தேவன் உதிர்த்த வார்த்தைகளும் விஷ முட்களாகப்  பேரரசரின் நெஞ்சை உறுத்திக்கொண்டிருந்தன.

பாண்டியப் பேரரசின் பெருமதிப்புக்கு உரிய சமண அடிக ளாரின் மீதே கைவைக்கத் துணிந்திருக்கிறார்கள். `யார் கொடுத்த துணிவு அது’ என்று விசாரித்தால், பேரமைச்சரின் பெயரைச் சொல்கிறார்கள். எனில், இந்தத் தேசத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது?

அதுமட்டுமா? பாண்டிமாதேவியாருக்குப் பேரரசரால் பரிசளிக்கப்பட்ட வனப்புறக் கிராமத்தில் சர்வ சாதாரணமாக நுழைந்து தாக்குதல் நடத்துகிறது பகைவனின் படை. எனில், அந்த இடத்துக்கான பாதுகாப்பு விஷயத்தில் குலச்சிறையார் கோட்டைவிட்டது எப்படி?

இந்த ஒரு காரணம் போதுமே, பேரமைச்சரை விசாரணைக்கு அழைக்க. ஆனாலும் பாண்டிய மாமன்னர் அதை விரும்ப வில்லை. அவையில் அழைத்து விசாரித்தால், அதையே பூதாகாரமாக்கி வேறுவிதமான ராஜாங்கக் குழப்பங்களுக்கு வித்திடுவார்கள் எதிரிகள். அதற்கு இடம்கொடுத்துவிடக் கூடாது என்பதால்தான், அமைச்சரை தனிமையில் விசாரிக்கும் முடிவுக்கு வந்திருந்தார் பேரரசர்.

காலையில் சீனப் பயணிக்கான வரவேற்பும் விருந்துபசரிப்பும்  அவருடனான கலந்துரையாடலும் முடிந்ததும் தகவல் அனுப்பி னார் அமைச்சருக்கு; இரவில் அரண்மனை நந்தவனத்தில் தன்னைச் சந்திக்கும்படி.

வைகையை ஒட்டிய மதிலுடன் திகழ்ந்தது அந்த அரண் மனை நந்தவனம். சிறு வாய்க்கால் மூலம் வைகையின் தண்ணீர் நந்தவனத்துக்குள் பாய்ந்து, அங்கிருந்த தாவர ஜன்மங்களைச் செழிப்பாக்கி வைத்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - பாகம் 2 - 14

நந்தவனத்தின் மையத்திலிருந்த நீராட்டக் குளத்தில்,  மகர மீன் சிற்பத்தின் வாயிலிருந்து கொட்டிக்கொண்டிருந்த நீர்த் தாரைக்குத் தடை ஏற்படுத்துவதுபோல், குளத்தின் உள்புற மாகக் கிளைத்து வளர்ந்திருந்த மலர்ச்செடியின் பிரம்மகமலப் பூவொன்று, நீர்த்தாரையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தலையாட்டிக்கொண்டிருந்தது. குளத்தின் நீர்ப் பரப்பிலோ, தாரையின் வீழ்ச்சியால் உண்டான சலனத்தால் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது பிறைச்சந்திரனின் பிம்பம்.

கூன்பாண்டியர் அண்ணாந்து விண்ணை நோக்கினார். நந்நவனத்தின் வான் பரப்பிலும் மலர்ந்து சிரித்தன வெண்பூக்கள்! இல்லையில்லை... அங்கிருந்தபடி இவரை நோக்கிக் கண்சிமிட்டியவை கீழ்வானின் தாரகைகள். அவை ஒளிர்ந்து திகழ்ந்தாலும், சந்திரனோ... அது தேய்பிறைக் காலம் என்பதால். பொலிவிழந்து திகழ்ந்தான்.

அவனுக்கு மட்டுமா? மனிதர்கள் வாழ்விலும் தேய்தலும் வளர்தலும் உண்டு.

`இருக்கலாம்! ஆனால், பாண்டிய தேசத்துக்கு வளர்ச்சி மட்டுமே நிரந்தரமாக வேண்டும். அதற்குத் தடையாக எவர் இருப்பினும்... குலச்சிறையாராகவே இருந்தாலும்... ஏன், பாண்டிமாதேவியாரே காரணமாயினும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.’

தேசத்தின் மீதான பற்றும் பாசமும் பாண்டி யரை இப்படி உள்ளுக்குள் மிகக் கடுமையாகச் சூளுரைக்கச் செய்தன.

ஒருபுறம் இப்படியென்றால், மறுபுறம் குலச்சிறையாரின் அர்ப்பணிப்பையும் பாண்டிமா தேவியார் நாட்டு மக்களின் மீது கொண் டிருக்கும் நேசத்தையும் அதன்பொருட்டு அவர் செயல்படுத்தும் காரியங்களையும் எண்ணி உருகவும் செய்தது கூன்பாண்டியரின் மனம்.

இப்படி, அவரின் மனம் நிலையில்லாமல் தவித்துக்கொண்டிருந்த வேளையில்தான், எவ்வித முன்னறிவிப்புமின்றி நந்தவனத்துக்குள் பிரவேசித்தார் பேரமைச்சர் குலச்சிறையார். முந்தைய நாள் இரவுப் பொழுதில் வைகைக் கரையை அடைந்திருந்த அந்தப் புதியவனும் அவருடன் பிரவேசித்தான்.

பேரமைச்சர் இப்படி பிரவேசிப்பது இது முதல்முறையல்ல என்பதால், அதன்பொருட்டு மாமன்னருக்கு வியப்பேதும் இல்லை.  அவருக்கு அப்படியான உரிமையை மாமன்னரே அளித்திருந்தார். ஆனால், புதியவன் ஒருவனும் அவருடன் வந்திருந்தது, மன்னருக்கு ஆச்சர்யத்தையும் கோபத்தையும் ஏககாலத்தில் தோற்றுவித்தது.

அதன் விளைவு... புருவநெறிப்பிலும் திரு முகத்தின் இறுக்கத்திலும் மட்டுமல்ல, மாமன் னரின் வரவேற்பு வார்த்தைகளிலும் கடுமை வெளிப்பட்டது. அதை குலச்சிறையாரும் கவனிக் கவே செய்தார். எனினும், புன்னகையோடு சிரம் தாழ்த்தி மாமன்னருக்குத் தமது வணக்கத்தை அர்ப்பணித்தார். புதியவனோ நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்தான்; தென்னவனின் பாதங்களையே பற்றி முத்தமிடுவது போல் தரையை முத்தமிட்டான்.

‘‘எழுந்திரு!’’

மாமன்னரின் ஒற்றை வார்த்தை அவனை எழுந்து நிற்கச் செய்தது. அப்படி எழுந்தவன், அவசர அவசரமாக தனது இடைக்கச்சையில் செருகப்பட்டிருந்த பெரும் வாளை எடுத்து மன்னனின் பாதங்களில் சமர்ப்பித்து மீண்டும் அவரை வணங்கினான். அந்தப் புதியவனின் செய்கைகளைப் பொருட்படுத்தாமல் பேரமைச் சரை நோக்கினார் மன்னவர். தொடர்ந்து அவரிடமிருந்து அடுத்தடுத்துப் பாய்ந்து வந்தன கேள்விக்கணைகள். 

ஏன், எப்படி, எதற்காக... என்ற முனைகளோடு வந்த கேள்விச் சரங்கள் அனைத்தையும் புன்னகையோடு எதிர்கொண்ட பாண்டிய தேசத்தின் பேரமைச்சர் குலச்சிறையார், அவை அனைத்துக்கும் போதுமானதாக பொதுவானதாக ஒற்றை வரிப் பதிலைச் சொன்னார்.

அந்தப் பதில், தென்னகத்தின் பெரும் போர் பிரகடனம் என்பதை அறிந்தபோது, எதற்கும் அசராத மாவீரரும் `மாறவர்மன் அரிகேசரி' என்று சரித்திரம் போற்றும் சிறந்த மதியூகியுமான கூன்பாண்டியரே அதிர்ந்துதான் போனார்!

இப்படியாக, கூன்பாண்டியருக்குப் பேரதிர்ச் சியை அளித்த அந்த இரவு கழிந்து, பொழுது புலரும் வேளையில், பாண்டிய தேசத்தின் சேனைகள் எதன்பொருட்டோ தலைநகரின் எல்லையிலிருந்து வேகவேகமாக நகரத் தொடங்கியிருந்தன.

அவற்றில் ஒரு பிரிவு, வைகையைக் கடந்து மேற்குத் தொடர் மலைகளின் வனப்புறத்தில் பிரவேசித்தது. அந்தச் சேனையின் பாதையி லிருந்து சற்று உள்ளடங்கிய இடத்தில், ஒரு விருட்சத்தின் கீழே... சேனாவீரர்களை நோக்கிக் கையசைத்து அவர்களை உதவிக்கு அழைக்க பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார் சமணத் துறவியார். ஆனால், அவரின் முயற்சிகளைத் தனது வல்லமையால் தோற்கடித்துக்கொண்டிருந்தது முரட்டு உருவம் ஒன்று.
 
அடிகளாருக்கான அந்த ஆபத்தை அறியாமல் அவரைக் கடந்து நகர்ந்துகொண்டிருந்தது பாண்டிய சைன்னியம்!

- மகுடம் சூடுவோம்...