மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 15

சிவமகுடம் - பாகம் 2 - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 15

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

யூகமும் வியூகமும்!

வானின் உச்சிக்கு ஏறியிருந்த பிறைச் சந்திரனை, திட்டுத் திட்டாக மிதந்துவந்த கருமேகப் பொதிகள் அவ்வப்போது மறைத்தும் வெளிப்படுத்தியும் சென்ற காட்சி, பாண்டியரின் ஆக்ரோஷமான திருமுக வதனத்தைக் காண்பதற்குப் பயந்து, சந்திரனே மேகத்திரைக்குள் முகம் புதைத்துக்கொள்வது போலிருந்தது.

ஆம்! வைகை தீரத்தை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்த அந்த நடுநிசிப் பொழுது, அரண்மனை நந்தவனத்திலிருந்த அந்த மூவருக்கும் நீண்டநெடும் உரையாடலில் கழிந்துகொண்டிருந்தது. குலச்சிறையார் சொன்ன சிறு பதிலின் தீவிரம் அப்படி!

‘சாளுக்கியப்படை வாதாபியிலிருந்து நகரத் தொடங்கிவிட்டது’

பேரமைச்சர் குலச்சிறை யாரின் வாயிலிருந்து வந்த பதில் இதுதான்.

சிவமகுடம் - பாகம் 2 - 15

இந்தப் பதிலே, பேரமைச்சரின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் காரணம் சொல்லிவிட்டது மாமன்னருக்கு.

ஆனாலும் அதுகுறித்து பேரமைச்சரின் வாக்குமூலம்  விரிவாகக் கிடைத்தால், இப்போது தன் மனதுக்குள் தான் கட்டமைக் கும் கணக்குகள்  சரியானத் தீர்வை அளிக்குமா என்பதை தெளிவுபட அறிந்துகொள்ளலாம் என விரும்பினார் கூன்பாண்டியர். ஆகவே, அந்தப் பதிலில் திருப்தி இல்லாதவர் போல், அமைச்சரை மேற்கொண்டு விசாரிக்க முனைந்தார்.

இதைப் பேரமைச்சரும் புரிந்துகொண்டார். மாமன்னரின் இமைத் துடிப்புக்கும் அவரால் காரண சொல்ல முடியுமே! அந்த அளவுக்கு அவரின் அணுக்கராய் - மன்னரின் சகல எதிர்பார்ப்புகளையும் உள்வாங்கி வைத்திருக்கும் குலச்சிறையாருக்கு, மன்னரின் இந்த விசாரணை ஏன் என்பதற்கான காரணம் தெரியாமல் இருக்குமா?

‘என்னிடம் விளக்கங்களைப் பெற்று, தனது யூக-வியூகங் களைச்  சரிபார்த்துக்கொள்ள முனைகிறார் மாமன்னர்’ என்பது அமைச்சருக்கு நன்றாகவே புரிந்தது. ஆகவே, மன்னரின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் சொல்ல தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டார்.

பாண்டிய மாமன்னர், உரமேறிய திருக்கரங்களை முதுகுக்குப் பின்னால் கோத்தபடி ஒரு சிம்மம் போன்று கிழக்கு மேற்குமாக நடைபோட்டபடியே கேள்விக் கணை களைத் தொடுத்தார்.

‘‘அமைச்சரே! சமீப காலமாக உங்களின் அணுக்கச் சைன்னியம் நம் வனப்புறத்தில் உலவிக்கொண்டிருக்கிறது... சரிதானே?’’

‘‘ஆம்! மாமன்னருக்கும் என் படை நகர்வு குறித்த தகவலை அனுப்பியிருந்தேன்.’’

‘‘நான் எதிர்பார்த்த பதில் இதுவல்ல. எனக்குப்  படை நகர்வு குறித்த தகவல் கிடைத்ததுதான். ஆனால் காரணம் கிடைக்கவில்லையே...’’

‘‘காரணத்தை வேறொருவர் மூலமோ, வெளிப்படை யாகவோ சொல்லி அனுப்பமுடியாத நிலை. காரணத்தின் ரகசியச் சுமை அப்படி. அதுமட்டுமின்றி, என் அசைவு ஒவ்வொன்றுக்குமான காரணத்தையும் நான் சொல்லாம லேயே பேரரசர் எளிதில் தெரிந்துகொள்வார் என்று எதிர்பார்த்தேன்.’’

‘‘குலச்சிறை பெருந்தகையே! என் மீது நீங்கள் வைத்திருக் கும் நம்பிக்கைக்கு நன்றி. ஆனால் உண்மை என்னவென்றால், கடந்த ஓரிரு திங்கள்களாக உங்களுடைய நடவடிக்கைகள் பெரும் புதிராகவே இருக்கின்றன...’’

மாமன்னர் முடிப்பதற்குள் பேரமைச்சர் இடைமறித்து சொன்னார். ‘‘குறுக்கீட்டுக்கு மாமன்னர் மன்னிக்க வேண்டும். என்னுடைய நடவடிக்கைகளில் புதிரேதும் இருப்பதாகக் கருதவில்லை. ஒருவகையில், தாங்கள் ஆரம்பித்துவைத்ததையே நான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றே சொல்லலாம்.’’

‘‘என்ன... நான் ஆரம்பித்துவைத்தேனா?’’

‘‘ஆம்! எதிரிகள் முந்துவதற்குள் நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்பது நீங்கள் சொல்லிக் கொடுத்த பால பாடம் அல்லவா?’’

‘‘ஆமாம்! அதற்கென்ன இப்போது?’’

யாதொன்றையும் அறியாதவர்போல் மாமன்னர் இப்படிக் கேட்டதும், மெள்ளப் புன்னகைத்தார் அமைச்சர். பிறகு ஒரு கணம் அவரின் விழிகள் மாமன்னரின் விழிகளைச் சந்தித்து விலகின.

சிறு அசைவிலேயே அசாத்தியமான ஆயிரமாயிரம் காரியங்களையும் அரை நொடிப் பொழுதில் சாத்தியமாக்கிவிடும் அந்தக் கண் மலர்களின் அந்த ஒருகணப் பொழுது சந்திப்பு போதுமானதுதான், இருவருக்குள்ளும் உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள. ஆனாலும் கூன்பாண்டியரின் கட்டளை, விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லும்படிச் செய்துவிட்டதால், வேறுவழியின்றி குலச்சிறையார் நீண்ட தொரு விளக்கத்துக்குத் தயாரானார்.

அப்படி அமைச்சர் தம்மைத் தயார் படுத்திக்கொண்டு பேச முற்பட்டபோது, அவரைக் கையமர்த்திய கூன்பாண்டியர் ‘இந்த நேரத்தில் இவன் இங்கு அவசியமா’ என்பதுபோல் புதியவனை நோக்கினார். பிறகு, அதற்குப் பதிலை எதிர்பார்த்து அமைச்சரைப் பார்த்தார்.

அமைச்சர் பதில் சொன்னார்: ‘‘தங்களின் ஒற்றனை வைத்திருப்பதா, வெளியேற்றுவதா என்பது தங்களது விருப்பத்தைச் சார்ந்தது மன்னவா?’’

சிவமகுடம் - பாகம் 2 - 15

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் மாமன்னர். அத்துடன், `புதியவன் என் ஒற்றன் என்பதையும் தெரிந்துகொண்டுவிட்டாரே இந்த அசகாயச் சூரர்’ என்று பேரமைச்சரின் புலனாய்வுத் திறனை எண்ணி பெருமிதம் கொள்ளவும் செய்தார். தொடர்ந்து, ‘இவர் விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டாயே’ என்பதுபோன்ற பார்வையை ஒற்றனின் மீது வீசினார்.

அந்தப் புதியவனுக்கேகூட அது ஆச்சர்யம்தான். ஏனெனில்,  `தான் இன்னார்’ என்பது அமைச்சருக்குத் தெரியாது என்ற எண்ணத்தில்தான் அவனும் இருந்தான். அதையொட்டியே பல செய்திகளையும் அவரிடம் அளவளா வியிருக்கிறான். ஆனால் இப்போது, `அவருக்கு அவனைத் தெரியும்’ என்ற விஷயம், அவனைப் பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தியது. மன்னரும் சுட்டெரிப்பதுபோல் தன்னைப் பார்க்கவே, வேதனைக்குள்ளானவன், இருவரில் ஒருவர் கட்டளையிடுவதற்கு முன், தானாகவே அங்கிருந்து நகர முற்பட்டான். ஆனால்...

‘‘நில்!’’ மாமன்னரின் கர்ஜனைக் குரல் ஒலிக்க, அதன் பிறகு அவன் கால்கள் அங்கிருந்து நகரமுற்படவில்லை. மன்னவர் தொடர்ந்தார்.

‘‘வேல்மாறா! ஒற்றுப் பணியில் நீ தோற்றுப்போனது குலச்சிறையாரிடம்தான். அதனால் பழுதொன்றும் இல்லை. தவிர, இப்பூவுலகில் குலச்சிறையாரை ஏமாற்ற இனியொருவன் பிறந்துதான் வரவேண்டும்.

ஆகவே, நீ பெற்றது தோல்வியல்ல பயிற்சி என்று எடுத்துக்கொள். அவ்வகையில், உனக்கான பயிற்சிகள் இன்னும் முடியவில்லை. ஆம்... அடுத்தடுத்து நடக்கப் போகும் காரியங்களுக்கான காரணக் கருவியாய் நீதான் இருக்கப் போகிறாய். ஆகவே, இங்கிருந்து நீ விலகத் தேவை இல்லை’’

கூன்பாண்டியரின் ஆணையைச் சிரம்தாழ்த்தி ஏற்றுக்கொண்ட வேல்மாறன், அடுத்து குலச்சிறையார் என்ன சொல்லப் போகிறார் என்பதைச் செவிமடுக்க ஆயத்தமானான். அவர், சற்றே தொண்டையைச் செருமிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

‘‘வடக்கில் பல்லவதேசத்தைப் போர்மேகங்கள் சூழ்ந்திருக் கின்றன. எப்போது வேண்டுமானாலும் சாளுக்கியர்கள் பல்லவத்தின் மீது பாயலாம். `இதைப் பல்லவர்கள் எதிர்பார்க்கவில்லை’ என்றும், `எதிர்பார்த்திருந்தார்கள்... ஆனால், சாளுக்கியத்தை எதிர்கொள்ள அவர்கள் ஆயத்தமாகவில்லை’ என்றும் முரண்பட்ட தகவல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன நமக்கு. தகவல்கள் முரண்பட்டாலும்  தீர்வு என்னவோ ஒன்றுதான்.''

‘‘தீர்வு என்னவாக இருக்கும்?’’

‘‘பல்லவர் வீழ்வது உறுதி!’’

‘‘அடுத்து என்ன நடக்கும் என்று உத்தேசித்துள்ளீர்கள் பேரமைச்சரே?’’

கூன்பாண்டியரின் இந்தக் கேள்விக்குச் சட்டென்று பதில் சொன்னார் குலச்சிறையார்.

‘‘கரை உடைந்தால் வெள்ளம் சூழும் என்பது தங்களுக்குத் தெரியாததா தென்னவரே. பல்லவம் வீழ்ந்தால், சாளுக்கிய சைன்னியம் தெற்கே நகரும்; சோழத்தை நொறுக்கும். ருசி கண்ட பூனை சும்மாயிருக்குமா. பரந்துபட்ட பாண்டிய தேசத்தையும் விழுங்க ஆசைப்படும் சாளுக்கியப் பூனை. ஆக, நமக்கும் சோழத்துக்கும் கரையெனத் திகழும் பல்லவ சாம்ராஜ்ஜியம் சரியப்போகிறது...’’

இந்த இடத்தில் கூன்பாண்டியர் அமைச்சரை இடை மறித்தார்.

‘‘ஏன் அமைச்சரே... இப்படியும் யோசிக்கலாம் அல்லவா? அதாவது, சாளுக்கியர்கள் நம்மோடு நட்பு பாராட்ட விரும்பினால்... பல்லவ தேசத்தை வீழ்த்த நமது துணை தேவை என்று அவர்கள் எண்ணினால்...’’

‘‘பழைய கதை இப்போது நடக்காது என்பது சாளுக்கி யருக்குத் தெரியும். தென்னகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் அடிமைப்படுத்த நினைக்கும் சாளுக்கிய தேசத்தின் பேராசைக்கு, பாண்டிய மாமன்னர் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டார் என்பதைத் தெள்ளத் தெளிவாக அவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்’’ என்று அமைச்சர் குலச்சிறையார் உறுதிபடச் சொல்லவும், அதை ஆமோதிப்பதுபோல் பெரிதாகக் குரலெடுத்துச் சிரித்தார் பேரரசர்.

பிறகு, சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் கேட்டார்: ‘‘சரி! மீண்டும் பழைய கேள்விக்கே வருகிறேன். பேரமைச்சரே, தங்களின் அணுக்கப்படை வனப்புறத்துக்கு நகர்ந்தது ஏன்?’’

‘‘சேரனைக் கண்காணிக்க! நம்மைப்போன்று அவனும் சாளுக்கிய  நகர்வுகளை அறிந்து வைத்திருக்கிறான். இந்தத் தருணத்தில்  நமது கவனம் இங்கே சேர எல்லையில் இருக்காது; சோழம் தாண்டி பல்லவ எல்லை யிலேயே அதிகம் லயித்திருக்கும் என்றும் முடிவெடுத்திருக்கிறான்.

இதைப் பயன்படுத்தி, பாண்டிய தேசத் துக்குள் மாபெரும் ஊடுறுவலுக்கும் அவன் தயாராவதாக செய்தி கிடைத்தது. முன்னோட் டமாக மலைக் கிராமங்களை வசப்படுத்துவது அவன் திட்டம்’’

சிவமகுடம் - பாகம் 2 - 15

‘‘ஓஹோ... அந்தத் திட்டத்தின் முதல் கட்டமாகவே, பாண்டிய பேரரசியாருக்குச் சொந்தமான கிராமத்தின் மீதே கைவைக்க துணிந்தான் போலும்’’ என்று சீறிய மாமன்னர், தொடர்ந்து கேட்டார்.

‘‘அதுசரி குலச்சிறையாரே... சேரர்களின் புரவிப்படை அந்தக் கிராமத்துக்குள் நுழைந்த போது தங்களின் சேனை உதவிக்கு வராமல் அமைதி காத்தது ஏனோ?’’

‘‘நீங்கள், அந்தக் கிராமத்தின் அருகில் இருக்கிறீர்கள் என்ற தைரியம்தான். பாண்டி யரையும் அவரின் ஆபத்துதவிகளை மீறி அந்தக் கிராமத்துக்கு ஆபத்து நிகழ்ந்து விடுமா என்ன?

மட்டுமின்றி, ஒருவேளை, நீங்கள் அங்கு வராமலிருந்திருந்தால்... பாவம் சேரர் படை... எங்கள்  பாண்டிமாதேவியாரின் தீரத்துக்குமுன் சின்னாபின்னமாயிருக்கும்’’ என்ற பேரமைச்சர் தொடர்ந்து சொன்னார், ‘‘வேறொரு காரணமும் உண்டு’’ என்று.

`அது என்ன’ என்பதுபோல் அவரை நோக்கினார் மாமன்னர்.

பேரமைச்சர் தீர்க்கமாகப் பதில் சொன் னார்: ‘‘சேரன் எதிர்பார்ப்பதுபோலவே, நம் கவனமும் கண்காணிப்பும் வன எல்லையில் இல்லை என்பதாக அவனுக்குக் காட்ட நினைத்தேன். அதன்படியே நடந்தது.

அவர்களது முயற்சி தோல்வியில் முடிந் தாலும், `பாண்டிய பேரரசி தங்கியிருக்கும் கிராமத்திலேயே அதிகக் காவல் இல்லை. யாரோ ஒரு வீரன் காட்டு யானைகளை ஏவியதாலேயே ஏமாற்றம் அடைந்தோம்’ என்பதாகவே தங்களிடம் தப்பிப்பிழைத்த வீரர்களிடமிருந்து சேரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது’’

‘‘எனில், இப்போது வன எல்லையில்...’’ - மன்னர் கேட்டார்

‘‘ஏற்கெனவே என் படைகள் அங்கு ரகசியமாய் முகாமிட்டிருக்கிறார்கள். அத்துடன், மதுரையிலிருந்தும் நம் படைகள் நகரத் தொடங்கிவிட்டன. அதன்பொருட்டு உத்தரவு இட்டுவிட்டே தங்களிடம் வந்தேன்’’ என்றார் பேரமைச்சர் குலச்சிறையார்.

மாமன்னரின் முகத்தில் பெரும் திருப்தி வெளிப்பட்டது. அமைச்சரின் வியூகங்கள் அனைத்தும் தன் எண்ணப்படியே அமைந்ததில் அவருக்கு மகிழ்ச்சியே. அடுத்து தன் ஒற்றனை நோக்கினார்.

‘‘வேல்மாறா! நீ கொண்டு வந்த செய்தி என்ன?’’

மாமன்னர் கூன்பாண்டியரின் இந்தக் கேள்விக்குப் பதிலாக... விருந்தினராய் வந்து சென்ற சீனப் பயணியான யுவான்சுவாங் குறித்து, ஒற்றன் வேல்மாறன் சொல்ல வந்த அந்த முக்கியமானச் செய்தியைச் சொல்ல விடாமல் தடுத்துவிட்டது, பேரமைச்சரை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வந்த அம்பு ஒன்று!

- மகுடம் சூடுவோம்...

சிவமகுடம் - பாகம் 2 - 15

அறிவினால் விளையும் செயல்களை எல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, எப்போதும் என்னையே சித்தத்தில் கொண்டிரு. உன் மனதை எனதாக்கு. என்னை எய்துவாய்.

- பகவத் கீதை