ஆடி மாதத்தின் நாயகியாகவே அருள்பவள் அம்மன். அதிலும் கண்ணனுக்குத் தங்கையாகத் தோன்றி கம்சனை எச்சரித்த ஸ்ரீவிஷ்ணு துர்கை மிகவும் விசேஷமானவள். இந்தியாவெங்கும், சிற்ப அழகிலும் சாந்நித்தியத்திலும் சிறப்புற்று விளங்கும் துர்காதேவியின் தரிசனத்துக்கு உகந்த தலங்களில் குறிப்பிடத்தக்கது, பட்டீஸ்வரம்.
கோவைக்கு அருகில் சுமார் 8 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது பட்டீஸ்வரம். இங்கு ஸ்ரீபட்டீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் துர்கை ஆனந்த மயமானவள். சங்கு, சக்கரம் தாங்கி நிற்கும் இந்தத் தேவியை துதித்தால் கலங்காத நெஞ்சமும் கனிவான வாழ்க்கையும் பெறலாம் என்கின்றன ஞானநூல்கள்.
பட்டீஸ்வரம் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்தால் நந்தியைக் கடந்து பட்டீஸ்வரர் சந்நிதியை அடையலாம். அதற்கு முன்பாக இடது புறம் சந்நிதி கொண்டிருக்கிறாள் ஸ்ரீதுர்கையம்மன். பட்டீஸ்வரத்தைப் பொறுத்தவரை, பட்டீஸ்வரருக்கு என்ன சிறப்பு உண்டோ அந்தச் சிறப்பு இந்தத் துர்கைக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

‘அம்மையே சரணம்’ என்று தன்னைச் சரணாகதி அடையும் பிள்ளைகளுக்கு ஓடிவந்து அருள்புரியும் விதம், ஒரு காலை முன்னெடுத்து வைத்த திருக்கோலத்தில் அருள்கிறாள் இந்த அம்பிகை. எட்டு திருக்கரங்களில், இடது கீழ் கரத்தை இடையில் வைத்திருக்க, அதன் மீது கிளியொன்று திகழ, `ஷ்யாமளா தேவி’யின் அம்சமாகக் காட்சி தருகிறாள் இந்தத் துர்காம்பிகை. அன்னையின் மற்ற திருக்கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வீரகட்கம், கேடயம் ஆகியவை திகழ, ஒரு திருக்கரத்தால் அபயம் அருள்கிறாள் ஸ்ரீதுர்கை.
மறக்கருணையோடு திகழும் மகிஷாசுர மர்த்தினிதான் என்றா லும் அம்பிகையின் கண்மலர்கள் காட்டும் அறக்கருணை, நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது. ஆம்! அசுர சம்ஹாரம் முடிந்த திருப்தியில் சாந்த சொரூபிணியாகக் காட்சியளிக்கிறாளாம் இந்த அம்பிகை. மேலும், செவிகளில் மகர வேலைப்பாடுடன்கூடிய அகன்ற தாடங் கங்கள் துலங்க, மூன்று நேத்திரங்களுடன் இந்த அன்னை அருள் பாலிப்பது விசேஷ அம்சம் என்கிறார்கள். பட்டீஸ்வரம் துர்கையை ஒருமுறை தரிசித்தாலே போதும் நம் தீவினைகள் யாவும் அகலும்; நல்வினைகள் சூழும் என்கிறார்கள்.
இந்தத் தலத்தில் பரமேஸ்வரனைத் துதித்து வழிபட்டு வரம் பெற்றாள் இந்த அன்னை என்கின்றன புராணங்கள். ஏழாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவள் இந்தத் துர்கை, சோழ இளவரசியாக இருந்து பாண்டிமாதேவியாக மாறிய மங்கையற்கரசியார், சோழப் பேரரசன் ராஜராஜன், அவரின் சகோதரியான குந்தவை ஆகியோர் வழிபட்ட கொற்றவை இவள் என்கிறது சரித்திரம்.
பட்டீஸ்வரம் துர்கையை வணங்கினால் ராகு, கேது மற்றும் செவ்வாய் தோஷங்கள், கடன் தொல்லை ஆகியவை நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் முதலான வரங்கள் கிடைக்கும். செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்கள் பட்டீஸ்வரம் துர்கையை வழிபட உகந்தவை. செவ்வாய்க்கிழமைகளில் மஞ்சள் பூசிக் குளித்து விரதம் இருந்து இந்தத் துர்கையை வணங்கினால் மாங்கல்ய பலம் கிட்டும் என்பது நம்பிக்கை.
- மு.ஹரி காமராஜ்