மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 10

மகா பெரியவா - 10
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 10

வீயெஸ்வி - ஓவியங்கள்: கேஷவ்

ந்திரசேகரேந்திர சுவாமிகளுக்கு வித்தியாப்பியாசம் ஆரம்பமானது. காமகோடி பீடத்தை, ‘ஸர்வக்ஞ பீடம்’ என்பார்கள். அதாவது நாலும் கற்றுத் தெளிந்தவர் அமரும் பீடம் என்று பொருள். ஐந்து ஆண்டுகள் வேத, வேதாந்தம் முதல் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றறிந்தார் இளம் சுவாமிகள். திருச்சிக்கு அருகிலுள்ள மகேந்திரமங்கலம் என்ற இடத்தில் இவருக்குப் ‘படிப்பு’ தொடர்ந்தது...

மகேந்திரமங்கலத்துக்குள் நாம் நுழைவதற்கு முன் கல்வி பற்றியும் அதன் பயன்பாடு குறித்தும் மகா பெரியவா அருளிய உபதேச சாரத்தைக் கொஞ்சம் சுவைப்பது பொருத்தமாக இருக்கும்.

‘உள்ளத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அமைதி நிலவுகிறதோ அந்த அளவுக்கு இன்பம் மேலிடுகிறது. அமைதி குறையக் குறைய துன்பம் வளரும். மனிதர்கள் தங்களின் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சி செய்யும்போது, பிறரைத் துன்புறுத்தவும் நேரிடுகிறது. இதனால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது.

இதை அடக்கி அமைதியையும் சமாதானத்தையும் நிலைநிறுத்த வேண்டு மானால், அதற்கு உண்மையான பரிகாரம், புலன்களைப் பறிக்கும் வெளி விஷயங்களிலிருந்து தங்கள் மனதைத் திருப்பி அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க முற்பட வேண்டும். அப்போதுதான் துன்பம் அணுகாமல் இருக்கும். அவர்களால் பிறருக்குத் துன்பம் விளையாமலும் இருக்கும். நல்ல கல்வியைப் பயிலும் பயனாகத்தான் இத்தகைய வெளி அமைதியும் உள் அமைதியும் நம் நாட்டில் காலம் காலமாகச் சித்தித்து வந்திருக்கின்றன.

மகா பெரியவா - 10

புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல், புலன்கள் போன வழியே அவற்றைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந் தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும்கூட கெட்ட எண்ணங்களும் துராசைகளும்தான் வளரும்; துன்பங்கள் பெருகும்.

ஆஸ்திகமயமான கல்வி போதனையுடன், அந்நிய நாட்டாரின் முறைகளைக் கலந்து போதிப்பதில் நாம் மிகவும் ஜாக்கிரதையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். நம்முடைய ஆத்ம சுத்தி, அந்தரங்க சுத்தி, ஒழுக்கம் ஆகியவற்றைக் கல்வியின் உருபயனாகக் கருதவேண்டும்.

நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையிலான எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேல்நாட்டாரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவற்றில்  ஈடுபட்டு அவற்றைக் கையாளுவோமானால், படிப்படியாக நம் பண்பாடு, அறம் ஆகியவற்றிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்து கொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்திவிடுவோம்.

தற்போது நம் மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே நம் தேசத்துக்கு உரிய ஒழுக்கம். பண்பாடு, இறை வணக்கம், ஆத்ம தியானம் இவ்விதமான பழக்கங்களே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்க்கை முறையிலும் வெளிநாட்டவரின் முறைகளையே பின்பற்றி வருகின்றனர்.

கல்வியின் முதல் பிரயோஜனமாக விநயம் ஏற்படவேண்டும். பழைய நாளில் மாணவனுக்கு ‘விநேயன்’ என்றே பெயர் இருந்தது. அடக்கம் இல்லாத படிப்பு படிப்பே ஆகாது. தன்னைத்தானே அடக்கிக்கொள்ளும் படியான நல்ல குணம் முதலில் வர வேண்டும். இப்போது நாட்டில் முன்னைவிட நிறைய படிப்பு இருக்கிறது. ஹைஸ்கூலில் இடம் இல்லாமல், ‘ஷிப்டு’ வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். எனினும், படிப்பின் பிரயோஜமான விநயம் ஏற்படவில்லை. அதற்கு நேர் விரோதமான குணம்தான் வளர்கிறது. படிக்கிற பையன்கள் இருக்கிற இடத்துக்குத்தான் போலீஸ், ராணுவம் எல்லாம் அடிக்கடி வர வேண்டியிருக்கிறது.

மகா பெரியவா - 10

நம் தேசப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். பெண்களுக்கு, சுவபாவமான அடக்க குணத்தோடு கல்வியின் பிரயோஜனமாகப் பின்னும் அதிக அடக்கம் வளரவேண்டும்.

‘படிப்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப் படிக்க  வேண்டும்? சிஷ்யர்கள் எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும்?’ என்பனவற்றை எல்லாம் விளக்கிச் சொல்கிற நீதி நூல்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒரு நீதியாக ‘இளமையில் கல்!’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு குருவினிடத்தில் போய்ப் படிக்கவேண்டும் என்பது சாஸ்திரம். சிஷ்யன் பிக்ஷை எடுத்து வந்து குருவுக்குத் தருவான். பிக்ஷை எடுப்பதால், அவனுக்கு அகங்காரம் கரைந்து விநயம் ஏற்பட்டது. ஆசிரியருடனேயே வசித்ததால் அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் பிரியம் இருந்தது.சிஷ்யர்களைக் கூடவே வைத்துக் கொண்டிருந்த குரு, அவர்களது மரியாதையைப் பெறுகிற விதத்தில், நல்ல ஒழுக்கங்களுடனேயே வாழ வேண்டியதாயிற்று. இயல்பாகவே மாண வனுக்குப் பக்தி உண்டாயிற்று.

முன்பு மாணவர்களுக்கு இருந்த குரு பக்தி என்பதே இப்போது அடியோடு போய் விட்டது. பையன் வாத்தியாரைப் பார்த்து, ‘கேள்வித் தாளைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலைமை வந்துவிட்டது! முன்பு இருந்த பாடங்கள் இப்போதும் இருக்கின்றன. ஆனால் முறை மாறிவிட்டது. மருந்து ஒன்றாகவே இருந்தாலும், பத்தியம் மாறி விட்டால் மருந்தே விஷமாகிவிடும் என்பது போல் ஆகிவிட்டது. குருபக்தி போனதும் பத்தியம் போய்விட்டது.’

மீண்டும் மகேந்திரமங்கலம் செல்வோம்.

தினைந்து வயது டீன் ஏஜராக ‘மேல் படிப்பு’க்காக மகேந்திரமங்கலம் வந்தார் பெரியவா. கும்பகோணம் மடத்திலேயே தங்கிப் படிப்பதில் சில தொந்தரவுகள் இருந்ததால், சுவாமிகளை மகேந்திரமங்கலம் அழைத்து வந்து தங்கவைத்தார்கள். அந்தக் காலத்தில், பெரிய மேதைகள் மற்ற இடங்களிலிருந்து கும்ப கோணத்திலும், மகேந்திரமங்கலத்திலும் வந்து தங்கியிருந்து, அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

ரம்மியமான சூழல். சூரியன் உதயமாகும் விடியற்காலை வேளையில் இயற்கைக் காற்று தென்றலாக வீசிக்கொண்டிருக்கும். பட்சிகள் ரீங்கரித்துக்கொண்டிருக்கும். பின்னால் இருந்த தோட்டத்தில் கொட்டகை அமைத்து, அதில் காவேரி மணலைப் பரப்பிய இடத்தில் ‘வகுப்பு’ நடக்கும். சொல்லிக் கொடுக்க வரும் குரு, சீடரான சுவாமிகளை நமஸ்கரித்து விட்டுத்தான் பாடம் தொடங்குவார். ஜகத்குருவுக்கு மரியாதை.

அன்று வகுப்பு ஆரம்பமாகிவிட்டது. தலை குனிந்து மணலை அளைந்து கொண்டே இருந்தார் சீடரான சந்திரசேகேந்திர சுவாமிகள். அதைக் கவனித்துவிட்ட குரு, எதுவும் சொல் லாமல் எடுத்துக்கொண்டிருந்த பாடத்தைத் தொடர்ந்தார். வகுப்பும் முடிந்தது.

மறுநாள் வகுப்பு தொடங்கியது. முதல் நாள் மாதிரியே மணலை அளைந்து விளையாடிய படியே உட்கார்ந்திருந்தார் சுவாமிகள். ஆசான் பாடத்தை நிறுத்தினார். முகம் லேசாகச் சிவக்க, எழுந்து நின்றார். மாணவரும் எழுந்து நின்றார்.

மகா பெரியவா - 10

“நான் இப்பவே ஊருக்குப் போறேன்!” என்றார். சீடருக்கு எதுவும் புரியவில்லை.

“பாடம் நடந்துகொண்டிருக்கிறதே...” என்றார் சன்னமானக் குரலில். ‘என்னப் பிரச்னை’ என்று அவரால் கேட்க முடியவில்லை. குருவே விளக்கினார்.

“இப்போது படிப்பது சாதாரண படிப்பு என்று நினைத்துவிடக் கூடாது. புத்தி முழுவதையும் ஒருமுகப்படுத்த வேண்டிய படிப்பு. கவனம் எங்கேயும் திசை திரும்பக்கூடாது...” என்றார், சற்றே கண்டிப்பான குரலில்.

மாணவர், மணலை அளைந்தபடி இருந்தது ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. பொறுக்கவும் முடியவில்லை. ஆனால் கற்பவர் ஜகத்குரு என்ப தால் கண்டிக் கவும் இயலவில்லை. அதேநேரம், ‘பாடம் கேட்கப் பிடிக்காதவருக்காக நான் ஏன் சிரமப் பட்டு ஊர் விட்டு ஊர் வந்து, என் நேரத்தை விரயம் பண்ண வேண்டும்?’ என்று மனதுக்குள் உறுமியிருப்பாரோ!

பெரியவா அடக்கமாகவும் விநயத்துடனும் பேசினார். “கோபித்துக் கொள்ளக்கூடாது. நேற்றும் இன்றும் நான் மணலில் விளையாடிக் கொண்டிருந்தது உண்மைதான். இருந்தாலும் எனது முழுக் கவனமும் நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடத்தில்தான் இருந்தது.”

குருவுக்கோ கோபம் குறையவில்லை. இதை எப்படி நம்புவது என்பதும் புரியவில்லை. ஆசிரியரின் இந்த மனநிலை மாணவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

“நான் சொன்னதில் நம்பிக்கையில்லை என்றால் தாங்கள் சோதித்துப் பார்க்கலாமே” என்றார். குருவுக்கும் அது சரி என்றே பட்டது. முன் தினம் நடந்த பாடத்திலிருந்து கடினமான சில கேள்விகளை எழுப்பினார். ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே மாணவரிடமிருந்து பளீரென்று பதில் வந்து விழுந்தது. மட்டுமல்லாமல், முன்னால் நடந்த சம்பவங்களையும் பின்னால் வரவிருக்கும் நிகழ்வு களையும் தீர்மானமாகச் சொன்னார். குரு ஸ்தம்பித்துப் போனார். “மன்னிக்கணும்...” என்று மனமுருகி கண்ணீர் விட்டார். சாஷ்டாங்கமாக சுவாமிகளின் காலில் விழுந்து நமஸ்கரித்தார். “எனக்கு உத்தரவு தரணும்... நான் ஊருக்குப் போகிறேன்...” என்றார்.

சுவாமிகளுக்குப் புதிராக இருந்தது. முதலில் படிப்பில் நான் கவனம் செலுத்தவில்லை என்று கோபித்துக்கொண்டு புறப்பட்டது நியாயம். இப்போது நான் எல்லாம் சரியாகச் சொல்லியும் கோபம் தணியவில்லையே!

“மன்னிக்கணும்... நான் சரியாக பதில் சொல்லிவிட்டேன் போலிருக்கே...” என்றார் தயங்கியபடி.

“அதில் என்ன சந்தேகம்? நான் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் மிக அருமையாக பதில் சொன்னீர்கள். உங்களிடமிருந்து நான்தான் நிறைய தெரிந்துகொள்ளணும். இனி, எனக்கு இங்கே ஒரு வேலையும் இல்லை. உத்தரவு கொடுங்கள்... நான் கிளம்புகிறேன்” என்றார் குரு.

சில்லென்று குளிர்காற்று வீசி வெப்பத்தைத் தணித்தது!

- வளரும்...

மகா பெரியவரும் மகாத்மாவும்!

பா
லக்காட்டில் நெல்லிச்சேரி என்ற இடம். இங்கேதான் ஒரு வீட்டில் காஞ்சி முனிவரை தரிசனம் செய்தார் மகாத்மா காந்தி. இருவரும் பல விஷயங்கள் குறித்து விவாதம் செய்திருக்கிறார்கள். உடன் யாருமில்லை. ராஜாஜிகூட வீட்டுக்கு வெளியேதான் காத்திருந்தார்.

நேரம் கடந்துகொண்டிருக்க, உள்ளே வந்த ராஜாஜி சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டினார். ஆனால் காந்திஜியோ, ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.

‘`சுவாமி! ஸ்ரத்தானந்தா என்ற சாதுவை இஸ்லாமியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்து விட்டார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதே தெரியவில்லை. என் கண் முன்னாலேயே இப்படியான கொடூரங்கள் நடக்கின்றன. பிற்காலத் தில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ” என்று பெரியவாளிடம் முறையிட்ட காந்தியின் முகத்தில் கவலை ரேகைகள்.

சற்று நேரம் அமைதி காத்தார் பெரியவா. பிறகு சொன்னார்:

“யாரோ ஒருவன் துஷ்டனாக இருந்தால், எல்லோரும் அப்படித்தான் இருப்பா என்று ஏன் நினைக்கணும்? நல்லவாளும் அல்லாதவாளும் எல்லா இடங்களிலும் உண்டு”

பெரியவா சொன்னதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் காந்தி. மகா பெரியவா தொடர்ந்தார்.

“ஒரு பேச்சுக்கு சொல்றேன்... என்னையோ, உங்களையோ ஓர் இந்துவே சுட்டு விட்டானென்றால், எல்லா இந்துக்களும் கொடியவர்கள் என்று முடிவு செய்துவிட முடியாதே...”

இந்தச் சம்பவத்தை நினைத்துப்பார்த்தால் பகீரென்கிறது. எப்போதோ இருபது  வருடங் களுக்குப் பின் நடக்கப்போவதை ஞான திருஷ்டி யின் மூலம் கணித்து, சம்பந்தப்பட்டவரிடமே அதை மகா பெரியவா சூசகமாகத் தெரிவித்திருக்கிறாரே!