Published:Updated:

சகல வரங்கள் அருள்வாள்!

சகல வரங்கள் அருள்வாள்!
பிரீமியம் ஸ்டோரி
சகல வரங்கள் அருள்வாள்!

காயத்ரி

சகல வரங்கள் அருள்வாள்!

காயத்ரி

Published:Updated:
சகல வரங்கள் அருள்வாள்!
பிரீமியம் ஸ்டோரி
சகல வரங்கள் அருள்வாள்!

கேட்கும் வரங்கள் அனைத்தையும் வாரி வழங்குபவள் ஸ்ரீமகாலட்சுமிதேவி. பாற்கடலில் அந்த அன்னை அவதரித்த தினமே, வரலட்சுமி விரதத் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

‘ஓம் வரோத்பவாயை நம’ என்பார்கள் சான்றோர்கள். அதாவது, ‘வரங்களைத் தருவதற்கா கவே தோன்றியவள்’ என ஸ்ரீமகாலட்சுமியைப் போற்றுவார்கள். அந்த அன்னையிடம் நம்முடைய விருப்பங்களைச் சமர்ப்பித்து, அவற்றை வரமாகக் கேட்டுப் பெற உகந்தநாள்  வரலட்சுமி விரதம்.

வருடந்தோறும், ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி பூஜை கடைப்பிடிக்கப்படும். சில வருடங்களில், இந்த வெள்ளிக்கிழமையானது ஆடி மாதத்திலும் வரும். இந்த வருடம், 24.8.18 வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி விரதம்.

இந்தத் நாளில் உடல், உள்ளத் தூய்மையுடன் விரதம் மேற்கொண்டு ஸ்ரீலட்சுமிதேவியை வழிபட்டால், சகல வரங்களையும் அள்ளித் தந்து நம்மை மகிழச் செய்வாள், லட்சுமிதேவி. அற்புத மான இந்த வழிபாட்டு நியதிகளை அறியுமுன், இந்த விரதம் குறித்துப் புராணங்கள் சொல்லும் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம்.

சகல வரங்கள் அருள்வாள்!

வரலட்சுமி விரதமும் மகிமைகளும்

மு
த்துஸ்வாமி தீட்சிதர், தனது ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தை மிக அற்புதமாகப் பாடியிருக்கிறார். வரலட்சுமி விரதத் துக்குப் புராணக்கதைகளும் உண்டு.

தேவலோகத்தில் `சித்ரநேமி’ என்றொரு தேவதை இருந்தாள். இவள் தேவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிபதி. ஒருமுறை, இந்தத் தேவதை பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதன் காரணமாக பார்வதிதேவியின் கோபத்துக்கு ஆளாகி, சாபம் பெற்றாள். அவள் தனது தவற்றை உணர்ந்து பார்வதிதேவியிடம் மன்னிப்புக் கோரியதுடன், சாபவிமோசனம் தரும் படியும் வேண்டிக்கொண்டாள். “வரலட்சுமி விரதம் இருந்து அலைமகளை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்” என்று அருள்பாலித்தார் பார்வதிதேவி. அதன்படி, சித்ரநேமி ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, உரிய நியதிப்படி வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்து, சாபவிமோசனம் அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பூலோகத்தில் `பத்ரச்ரவஸ்’ என்ற மன்னன் இருந்தான். இவன் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் மகளான சியாமபாலா, வரலட்சுமி விரதம் இருந்து, மங்கலமான வாழ்க்கையைப் பெற்றிருந்தாள். அத்துடன், தன் பெற்றோருக்கும் இந்த விரத மகிமையைக்கூறி அவர்களையும் வாழவைத்தாள் என்கிறது புராணம்.

ரலட்சுமி விரத நாளில் வீட்டில் வழிபடுவ துடன், தீர்த்தங்களில் புண்ணிய நீராடுவது உயர்வான விஷயம். இதன் மூலம், வருடம் முழுவதும் ஏழு புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும்.

திருமணம் ஆகாத பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு மஞ்சள் சரடை கையில் கட்டிக் கொண்டால், மனதுக்குப் பிடித்த கணவன் அமைவான்; எதிர்காலம் வளமாக அமையும். சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், மாங்கல்ய பலம்  அதிகரிக்கும்; வீட்டில் சுபிட்சம் நிலவும்.

புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்ணானவள், கணவனின் உறவினர்களைத் தன் உறவினர் களாகவே பாவித்து போற்றுவதன் மூலம் வரலட்சுமி விரதம் இருந்த புண்ணிய பலன்களைப் பெறுவார்களாம். மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பெண், தன் புகுந்த வீட்டினரைப் போற்றிச் சிறப்பித்து வரலட்சுமியின் அருளைப் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்ததாக ஒரு திருக்கதை உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகல வரங்கள் அருள்வாள்!

வரலட்சுமி பூஜை

விரத நாளுக்கு முந்தைய நாள்... அதாவது வியாழன்றே வரலட்சுமி பூஜைக்குத் தயாராவார் கள். இந்தத் தினத்திலேயே வீட்டைக் கழுவி சுத்தம் செய்து, மகாலட்சுமி தேவியை எழுந்தருளச் செய்யவேண்டிய இடத்தில் மாக்கோலம் இட்டு, தோரணங்கள் முதலானவற்றைக் கட்டி, அலங்கார மேடை அமைப்பார்கள். வீட்டின் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தைத் தேர்வு செய்து மண்டபம் அமைப்பது விசேஷம்.

சிலர், வியாழனன்று மாலையில் அன்னைக்குப் புளகம் படைத்து அதையே சாப்பிடுவார்கள். வெண்பொங்கலைப் போலவே பாசிப் பருப்புக்குப் பதில் துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படுவதுதான் புளகம் (ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொள்வது அவசியம்).

புளகம் செய்வது எதற்காக? பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் முதலில் சாப்பிடக் கொடுப் பது புளகம். அன்னையானவள், வியாழனன்று நம் வீட்டுக்கு வருகிறாள் அல்லவா... அதனால் அவளுக்கு முதலில் படைப்பது புளகம். அத்துடன், மறுநாள் படைக்க வேண்டிய பதார்த்தங்களுக்கான முன்னேற்பாடுகளும் வியாழனன்றே நிகழும்!

மறுநாள் வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்யவேண்டும். தூய்மை யின் பிறப்பிடம் அவள். எனவே, வீட்டையும் நம் மனத்தையும் தூய்மையாக்கிக் கொள்வது சிறப்பு. தூய்மையான ஆடை உடுத்தி, சுத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திருமகளை வழிபடவேண்டும்.

வீட்டுச் சுவரைச் சுத்தப்படுத்தி, அதில் ஸ்ரீமகா லட்சுமியின் திருவுருவத்தை வரைந்து வழிபடு வார்கள், சிலர். கலசம் ஸ்தாபித்தும் வழிபடலாம். அவ்வகையில், கலசத்தில் திருமகளின் திருமுகத் தைத் தீட்டிக்கொள்ள வேண்டும். அந்தக் கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைக்கவேண்டும்.

அப்போது, ‘தாயே மகாலட்சுமி! எங்கள் வீட்டில் எழுந்தருளி சகல செளபாக்கியங்களையும் அருள வேண்டும்’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் தொடங்கலாம். இந்தத் தருணத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவையும் மனதால் தியானிப்பது விசேஷம். அடுத்து, நமக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி, பாடல்கள் பாடி உபசரித்து, ஸ்ரீமகாலட்சுமியை பூஜிக்கவேண்டும்.

சகல வரங்கள் அருள்வாள்!

‘ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ந்யை தீமஹிதந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’ - என்பது ஸ்ரீமகாலட்சுமி தேவியின் காயத்ரீ. இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அவளை ஆராதித் தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறலாம்.

பூஜையில் சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் ஆகிய இனிப்புகளைப் படைத்து, தாமரை, துளசி, வில்வம் ஆகியவற்றால் அவளை அர்ச்சித்து வழிபடலாம்.

‘ததாதி பிரதி க்ருஹ்ணாதி’ என்பார்கள். அதாவது, என்ன கொடுக்கிறோமோ, அதையே பெறுகிறோம். கனிவும் கருணையும் கொண்ட நம்முடைய தாய் மகா லட்சுமி. அவளை மகிழ்வித்தால், அவள் நம்மையும் நம் குடும்பத்தையும் மகிழச் செய்வாள்.

இந்த பூஜையில், வெண்மையான சில இழைகள் கொண்ட நூலில், மங்கலங்களை அள்ளித் தருகிற மஞ்சளைத் தடவி, நவசக்தி களின் வடிவமாக, ஒன்பது முடிச்சுகளை அதில் இட்டு, நடுவில் ஒரு பூவையும் வைத்து, தேவியின் அம்சமாகவே திகழ்கிற கலசத்தின் மீது சாற்றி, பிறகு பூஜை முடிந்ததும், வீட்டில் உள்ள பெரியோர் முதலில் கையில் கட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது, ஸ்ரீவரலட்சுமி பூஜையை நிறைவு செய்ததையும் ஒளிமயமான வாழ்வின் துவக்கத்தையும் குறிக்கும்.

அன்றாட வாழ்வில், நமக்குத் தேவையான பொருள்செல்வத்தை மட்டுமின்றி, கல்விச் செல்வம், மக்கள் செல்வம் என சகல செல்வங்களையும் வாரி வழங்கக்கூடியவள் அன்னை மகாலட்சுமி. அவள் உதித்த நாளில், அவளை ஆராதித்து வணங்கினால், சகல வரங்களையும் செல்வங்களையும் வாரி வழங்கி அருள்புரிவாள்.

ஆகஸ்ட் -  24 : வரலட்சுமி நோன்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism