Published:Updated:

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!
பிரீமியம் ஸ்டோரி
ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

மு.ஹரிகாமராஜ் - படங்கள்: ச.வேங்கடேசன்

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

மு.ஹரிகாமராஜ் - படங்கள்: ச.வேங்கடேசன்

Published:Updated:
ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!
பிரீமியம் ஸ்டோரி
ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை’


ண்ணனைப் பாடிப் பாடிப் பரவசம் அடையும் நமக்கு, அவனது திரு அவதார தினம் என்றாலே கொண்டாட்டம்தான்; குதூகலம்தான். பூர்ணாவதாரமான ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுபவர்களுக்கு அனைத்து யோகங்களும் வாய்ப்பதுடன், நிறைவான ஞானமும் கிட்டும் என்பது உறுதி.

புண்ணிய பூமியாம் நம் பாரதத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு எத்தனையோ ஆலயங்கள் உண்டு. குறிப்பாக த் தமிழகத்தில்... கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள், சென்னை-திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், நெல்லை மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம், பாளை ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி... இப்படி கண்ணனின் பெருமைகளைச் சொல்லும் புண்ணிய தலங்கள் பல உண்டு. இந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் மிக அற்புதமான க்ஷேத்திரம் ஒன்று உண்டு.

திருவண்ணாமலையிலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் செங்கம் எனும் பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில். செங்கண்மா மாலவன், செம்பொன் ரங்க பெருமாள் என்றெல்லாம் போற்றப்படுகிறார் இந்த வேணுகோபாலர்.

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

‘பல்குன்றக் கோட்டத்துச் செங்கம்’ என்று செங்கம் நகரைப் போற்றுகின்றன இலக்கியங்கள். இந்தப் பகுதியை ‘செங்கண் மாநகரம்’ என்றும், நன்னன் எனும் மன்னர் இங்கே சிறப்புற ஆட்சி செய்ததையும் மிக அழகாக விவரிக்கிறது, சங்க இலக்கியமான மலைபடுகடாம். இந்தத் தலத்தை `கண்ணை’ எனக் குறிப்பிட்டு வைப்புத் தலமாகப் பாடியுள்ளார் அப்பர் பெருமான்.

ஆதியில், ‘ஏக சக்ரபுரி’ என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் சங்க காலத்திலேயே திருமாலுக்கு ஆலயங்கள் இருந்ததாகப் புராணங்கள் தெரிவிக் கின்றன. குருக்ஷேத்திர யுத்தம் முடிந்ததும் இந்தத் தலத்துக்குக் குடும்ப சகிதமாக விஜயம் செய்த பகவான் கிருஷ்ணர், தேவர்களையும் முனிவர் களையும் ஆசீர்வதித்தார். அவருக்கு, தேவர்கள் இங்கே ஆலயம் எழுப்பி வழிபட்டார்கள் என்றொரு தகவல் கூறப்படுகிறது.

சங்க காலத்திலிருந்தே சிறப்புற்று விளங்கிய இந்தக் கோயில், பிற்காலத்தில் சிதிலமடைந்தது. எனினும் இங்கு மீண்டும் திருக்கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டார் பகவான்.

அப்போது செங்கம் பகுதியை விஜயநகரப் பேரரசரின் பிரதிநிதி யாக ஆட்சி செய்து வந்தவர் திம்மப்ப நாயக்கர். அவரது கனவில் தோன்றிய பரந்தாமன், ‘`நாம் உகந்த தலமான செங்கண் மாநகரில் எமக்கு ஒரு கோயிலை எழுப்புவாயாக’’ என்று அருள்பாலித்தார். அதன்படி திம்மப்ப நாயக்கர் பிரமாண்டமான கோயிலை எழுப்பினார் என்கிறது தலபுராணம். சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்தக் கோயிலின் ராஜகோபுரத்தை முன் மாதிரியாகக் கொண்டே, திருவண்ணாமலை கோயிலின் ராஜகோபுரம் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அரிய கலைப் பொக்கிஷங்கள் நிறைந்த ஆலயம் இது. கோயில் வளாகத்தின் விஸ்தீரணமும், சந்நிதிகளின் நேர்த்தியும் அழகும் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கின்றன!

மண்டப விதானத்தில் ராமாயணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களின் அழகே அழகு. இயற்கையான வண்ணங்களால் தீட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் புதுப்பொலிவுடன் திகழ்கின்றன. சிற்பங்களில் தசாவதார திருக்கோலங்கள், ஆநிரை மேய்க்கும் கிருஷ்ணன் ஆகிய சிற்பங்கள் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

கருவறையில் சதுர்புஜ நாயகராக ருக்மிணி, சத்யபாமாவுடன் அழகுக் கோலம் காட்டுகிறார்  வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி. நான்கு திருக்கரங்களில் மேலிரண்டில் சங்கும் சக்கரமும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றி, வலக்கரத்தில் சாட்டையை ஏந்தியபடி அருளும் இந்தக் கண்ணனை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு! வேறெங்கும் காண்பதற்கரிய திருக்கோலத்தில் அருளும் ஆயர் தம் நாயகனை, ஆத்மாக்களை உய்விப்பவனை மனமாரத் தரிசித்து மகிழ்ந்தோம். ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து வேணு கோபாலரை தரிசித்து, அர்ச்சனை செய்து வழிபடும் அன்பர்களின் குடும்பத்தில் சகல பிரச்னைகளும் நீங்கும், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.

கருவறை திருச்சுற்றில் சர்வாலங்கார பூஷிதையாக அருள்கிறார் கனகவல்லித் தாயார். அருகிலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பார்த்தசாரதி பெருமாள் உற்சவருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக் கிறது. பிராகாரத்தில் ஆண்டாள், விஷ்வக்சேனர், ஆழ்வார்கள், வீரசுந்தர அனுமன், ராமாநுஜர், துளசி அம்மன் ஆகியோரையும் தரிசித்து மகிழலாம்.

‘பற்றலர் வீயக்கோல் கைக் கொண்டு பார்த்தன் தேர் முன் நின்ற’ பார்த்தசாரதி, வேணுகோபாலனாய் அருளும் செங்கம் நகருக்கு நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அந்தக் கண்ணனின் திருவருளால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் அகலும்; சந்தோஷம் பொங்கிப் பெருகும் என்பது நிச்சயம்.

ஏகசக்ரபுரியில்... யசோதை மைந்தன்!

உங்கள் கவனத்துக்கு...

திருத்தலம்: செங்கம்

இறைவன்: ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி சுவாமி

தாயார்:
ஸ்ரீகனகவல்லித் தாயார்

உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபார்த்தசாரதி.

பிரார்த்தனைச் சிறப்பு: ரோகிணி நட்சத்திரத்தன்று இந்தக் கோயிலுக்கு வந்து  இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பப் பிரச்னைகள் நீங்கும்; இல்லறம் இனிக்கும் என்பது ஐதீகம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 முதல் 10 மணி வரை; மாலை 5.30 முதல் 8 மணி வரை. சனிக்கிழமைகளில் காலை 5.30 முதல் 12 மணி வரை; மாலை 5.30 முதல் 9 மணி வரை.

எப்படிச் செல்வது?:
திருவண்ணாமலை - பெங்களூரு சாலையில் திருவண்ணாமலையி லிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செங்கம். திருவண்ணாமலையி லிருந்து பேருந்து வசதி உண்டு.

ஆலயத் தொடர்புக்கு: தாமோதரன் - 99941 25384

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism