மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10

வெ.நீலகண்டன் - படங்கள்: க.தனசேகரன்

ம்பிக்கை என்ற வேரிலிருந்து துளிர்த்ததுதான் வழிபாடு. சிறு கல், சின்னதொரு செங்கல், தனித்து நிற்கும் ஒரு மரம், காய்ந்த ஒரு கம்பம், ஒரு புற்று... அவற்றின் மேல் நம்பிக்கையைக் குவித்து, சக்தியூட்டுகிறார்கள் மக்கள். அரூப வெளியில் தங்களது தெய்விக உணர்வை அந்தச் சக்தியில் உறையச் செய்து, அறுக்கவியலா இழைபோல் ஒரு பந்தத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

அப்படியான காவல் தெய்வங்கள், ஒரு பாதுகாப்பு அரண் போல் நின்று, எல்லா எதிர்மறைச் சக்திகளிடமிருந்தும் அவர்களைக் காத்து வழிநடத்தும் மூத்தோனின் இடத்தில் தங்களை இருத்திக்கொள்கின்றன.

ஊருக்கு அப்பால் யாருமற்ற ஒரு திறந்தவெளியில், சிறு குடிசையில், ஒரு மரத்தின் நிழலில், ஒரு வனத்துக்கு மத்தியில்... எங்கும் இருக்கலாம். ஆனால், அந்த இறைமை எதிலும் நிறைந்திருக்கிறது என்ற நம்பிக்கையும் அச்சமும்தான், பிறருக்குப் பங்கம் செய்யாமல் அவரவர் வாழ்க்கையை நேர்க்கோட்டில் வாழச் செய்கின்றன.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10

மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கும் லாரி ஓட்டுநர் அவர். தமிழகத்தில் லாரித் தொழில் அதிகம் நடக்கும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர். அடர்ந்த வனங்களையும், மலைகளையும், சமவெளிகளையும், பாதாளங்களையும் கடந்த பயணம் அவருடை யது. அப்படியான ஒரு பயணத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நள்ளிரவு நேரம். சரக்குகளை இறக்கிவிட்டு ஊர் திரும்பும் பயணத்தின்போது, ஒரு வனத்தைக் கடக்கிறார். அவரையறியாமல் லேசாகக் கண்கள் மூடிக்கொள்கின்றன. ஆழ்ந்த உறக்கம் நொடிப்பொழுதில் கவ்விக்கொள்கிறது. அடுத்தநொடி, லாரியின் டயருக்குக்கடியில் ஏதோ நொறுங்கும் சத்தம். திடுக்கிட்டு விழித்த அந்த ஓட்டுநர், லாரியை நிறுத்திவிட்டு பதற்றத்தோடு இறங்கி கீழே பார்க்கிறார்.

ஒரு நரி... அநேகமாக கர்ப்பிணியாக இருக்க வேண்டும். டயரில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சிதைந்து கிடக்கிறது. இதுநாள் வரை, அவரது அனுபவத்தில் எந்த உயிருக்கும் பங்கம் ஏற்படுத்தியிராதவர். வயிற்றில் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் நரியைக் கொன்றுவிட்டோமே என்று கலங்கித் தவிக்கிறார்.

ரத்த வெள்ளத்தில் அடங்கிக்கிடக்கிற நரியை ஒரு குழந்தையைப் போலத் தூக்கி ஒரு சாக்கில் வைத்து லாரியில் ஏற்றிக்கொள்கிறார். ஊர் நோக்கிப் பயணம் நீள்கிறது. மனம் கலங்கித் தவிக்கிறது. கண்களில் இருந்து நீர் வழிகிறது. `நான் தவறு செய்துவிட்டேன்... இறைவா... என் குடும்பத்தைத் தண்டித்துவிடாதே' என்று புலம்பியபடியே லாரியை இயக்குகிறார்.

ஊர் வந்து விட்டது. நரியை இறக்கி, தன் வீட்டுக்கருகில் குழிதோண்டி புதைக் கிறார். அன்றுமுதல் தினமும் தன் பணியைத் தொடங்குமுன், நரியைப் புதைத்த இடத்தில் நின்று தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டார்.

அவருடைய செயலை அவருடைய சந்ததிகளும் தொடர்ந்தார்கள். ஒரு கட்டத் தில் அது ஒரு வழிபாடாக வளர்ந்தது. நரியைப் புதைத்த இடத்தில் சிறு மாடம் அமைத்தார்கள். நரிச்சாமி கோயில் என்று அது புகழ்பெற்றது. ஊர் கடந்து, மாவட்டம் கடந்தெல்லாம் அந்தக் கோயிலுக்குப் பக்தர்கள் உருவானார்கள். நரிச் சாமி வழிபாடு பெரிதானது.

 இன்றும், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் நரிச்சாமியைத் தரிசிக்கலாம். உள்ளே ஒரு நடுகல் இருக்கிறது. அருகில் மண்சுதையாலான நரியின் சிலைகளை வைத்திருக்கிறார்கள். நரிச்சாமிக்கு கோலாகலமாகத் திருவிழா நடத்துகிறார்கள். அறியாமல் நடந்த ஒரு பிழைக்காக ஒரு மனிதன்  அடைந்த குற்ற உணர்ச்சியில் தழைத்த வழிபாடு இது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகிலிருக்கும் பாகவெளி கிராமத்தில் நடக்கும் பாப்பாத்தி கன்னியம்மா வழிபாடு இன்னொரு வகை.

அந்தக் கிராமத்தின் காவல் தெய்வமான பாப்பாத்தி கன்னியம்மா குடியிருப்பது, 100 அடி ஆழக் கிணற்றுக்குள். சித்திரை மாதம், முதல் ஞாயிற்றுக் கிழமை மட்டும் கிணற்றிலிருந்து மேலெழுந்து வந்து, மஞ்சளும் குங்குமமும் தளும்பத் தளும்பத் தரித்து, அரை மணி நேரம் ஊஞ்சலாடிக் களித்து மீண்டும் தன் குடிலுக்குள் இறங்கிவிடுகிறாள் இந்தத் தாய். அந்தத் திருமுகத்தை தரிசிக்க ஊர் கடந்து, மாவட்டம் கடந்தெல்லாம் மனிதர்கள் அந்தச் சிறு கிராமத்தில் குவிகிறார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10

``கன்னியம்மா ஏன் நீருக்குள்ளாகவே இருக்கிறாள்?'' என்று கேட்டால், அந்த மக்கள் சொல்கிறார்கள்... ``கன்னியம்மா மேலே இருந்தால் அந்த உக்ரத்துல ஊரே அழிஞ்சிடும்...''

கன்னியம்மா கதையை பாகவெளியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் அவரது மொழியில் சொல்கிறார்.

‘‘ஏழெட்டுத் தலைமுறைக்கு முன்னால, பாலாத்துல குடிமல்லூர்க்காரங்க மீனுக்கு வலை போட்டப்போ இந்த கன்னியம்மா சிலை சிக்கியிருக்கு. முக்கால் அடி உயரம்... ரெண்டு கை அகலம், அதுல ஏழு கன்னிகளும் சின்னச்சின்ன உருவத்துல இருப்பாங்க. அதுல இருக்கிறது கன்னியம்மான்னு தெரியாம, வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயி, பின்பக்கமா திருப்பிவச்சு மிளகா அரைச் சிருக்காங்க. திடீர்ன்னு தீ விபத்தாகி வீடே எரிஞ்சிருச்சாம். அதுக்கப்புறம் இந்தச் சிலையைக் கொண்டாந்து திரும்பவும் பாலாத்துலயே வீசிட்டாக.

ஆறு மாசம் கழிச்சு, திருபாற்கடல்ன்னு ஒரு ஊருக்குப் பக்கத்துல இந்தக்  கன்னியம்மா சிலை கரை ஒதுங்கியிருக்கு. அந்தப் பக்கமாப் போன குடுகுடுப்பைக்காரங்க எடுத்துக்கிட்டுப் போய் மூலிகை மருந்து அரைச்சிருக் காங்க. அவங்களுக்கும் சில கெட்ட சகுனங்களைக் காட்ட, அவங்களும் பாலாத்துல தூக்கிப் போட்டுட்டாங்க. அது நடந்து அஞ்சாறு மாசம் கழிச்சு, எங்கூரு ஆளுங்களின் கண்ணுல பட்டுருக்கு இந்தக் கன்னியம்மா..."

விவசாயத்துக்காகப் போடப்பட்டுள்ள ஒரு கிணற்றுக்குள்தான் பாப்பாத்தி கன்னியம்மா குடியிருக்கிறாள். கிணற்றுக்கு அருகிலேயே ஒரு பீடம் அமைத்திருக்கிறார்கள்.

கன்னியம்மா சிலை கிடைத்தவுடன்  மஞ்சள், குங்குமமிட்டுப் பலி கொடுக்கத் திட்டமிட்டுள் ளார்கள் பாகவெளி மக்கள். ஆனால், அம்மன் ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கு எலுமிச்சைப் பழம்கூட வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டதாம். பானகமும் பொங்கலும்தான் கன்னியம்மாவுக்குப் படையல்.

முதன்முதலில் தன்னைக் கண்டெடுத்தவர்கள், தன்மேல் மிளகாய் அரைத்துவிட்டதால் உடம்பெல்லாம் எரிவதாகச் சொல்ல, உடனடியாக ஊர் மக்கள் கூடி முடிவு செய்து சிலையைக் கிணற்றுக்குள் போட்டிருக்கிறார்கள்.  பிற கிராம தெய்வங்களைப் போல பலியை விரும்பாமல் சைவ விரும்பியாக இருப்பதால், `பாப்பாத்தி கன்னியம்மா' என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். 

தினமும் நள்ளிரவில்,  சிலை கண்டெடுக்கப்பட்ட பாலாற்றுக் கரையிலிருந்து சுழற்காற்றாக கன்னிகள் கிளம்பி இந்தக் கிணற்றுக்குள் அடங்குவதாக நம்பும் இந்த மக்கள், கன்னியை மீட்ட சித்திரை முதல் ஞாயிற்றுக்கிழமையை, கன்னியம்மாவின் பிறந்த நாளாக சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

அன்றையதினம் நாற்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்கள் கிணற்றுக்குள் குதித்து அம்மனைத் தேடுவார்கள். அந்தத் தருணத்தில் சிலர் கிணற்றுக்குள்ளாகவே அருள் வந்து ஆடுவார்கள். அம்மன் அவர்கள் கையில் சிக்காமல் விளையாடுவதாக நம்புகிறார்கள் மக்கள். யார் கையில் சிலை கிடைக்கிறதோ அவர்கள் நினைத்த செயல்கள் நிறைவேறும் என்கிறார்கள். 

அம்மன் கிடைத்ததும் அபிஷேகம் செய்து, கஸ்தூரி மஞ்சளை அரைத்துப் பூசி பீடத்தில் கட்டியிருக்கும் ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். அரை மணி நேரம் மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும். பிறகு, சிலையை எடுத்தவரே மீண்டும் கிணற்றுக்குள் இறக்கி வைத்துவிட வேண்டும்.

அம்மன் குடியிருக்கும் கிணற்று நீரை நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதி அருந்துகிறார்கள். அரை மணி நேர தரிசனத்தில் அம்மனின்  மேனிபட்ட மஞ்சளையும், குங்குமத்தையும் பிரசாதமாகப் பாதுகாக்கிறார்கள்.

இப்படியான நம்பிக்கைகள், நம் கிராமங்கள் முழுமையும் விரவிக் கிடக்கின்றன. அந்த நம்பிக்கைகள்தான் கிராமங்களின் இயல்பைக் காத்துக்கொண்டும் இருக்கின்றன!   

- மண் மணக்கும்...

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 10

பெருங்கடலில் ஆறுகள் சென்று அடங்குவதுபோல், எவன் ஒருவனிடம் ஆசைகள் அனைத்தும் சென்று ஒடுங்குகின்றனவோ, அவனே மன அமைதி பெற்று நிறைவாழ்வு வாழ்கிறான்.

- பகவத் கீதை