Published:Updated:

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

மு.வ.சம்பத் - படங்கள்: உ.பாண்டி

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

மு.வ.சம்பத் - படங்கள்: உ.பாண்டி

Published:Updated:
குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

பெற்றோருக்குப் பணிவிடை புரிவதே மிகச் சிறந்த வழிபாடு என்பதை உணர்த்தும் அற்புதமே பண்டரிபுரம் பாண்டுரங்கனின் திருக்கதை. அந்த பாண்டுரங்கன், தன் பக்தர் ஒருவருக்காக குடிகொண்ட திருக்கோயில், நம் ராமநாதபுரத்தில் அமைந்திருக்கிறது.


சுமார் 70 வருடங்களுக்குமுன் ராமநாதபுரத்தில் வாழ்ந்தவர் ஸ்ரீசெல்லமய்யங்கார்; பாண்டுரங்கனின் பரம பக்தர். தினமும் மதிய வேளையில், அவ்வூரின் தெற்கு ரத வீதியிலிருந்த ரமண மடத்துக்குச் சென்று பாகவதம் படித்து வருவது அவரது வழக்கம்.

ஒருமுறை பண்டரிபுரத்துக்குச் சென்றவர் கண்குளிர, உள்ளம் மகிழ பாண்டுரங்கனை சேவித்தார். பிறகு, அந்த இறைவனைப் பிரிய மனமில்லாமல் பிரிந்து, ஊருக்கு வந்து சேர்ந்தார். எனினும் பாண்டுரங்கனை அவரால் மறக்க இயல வில்லை. அவரின் மனதை இமைப் பொழுதும் நீங்காமல் பாண்டுரங்கனே வியாபித்திருந்தார்.

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில் ஒருநாள் பக்தரின் கனவில் தோன்றிய பாண்டு ரங்கன், ராமநாதபுரத்தில் தனக்கு ஓர் ஆலயம் எழுப்பும்படி கட்டளை யிட்டார். கனவில் வாய்த்த பாண்டுரங்கனின் தரிசனமும், அவரது உத்தரவும் பக்தருக்கு மிகுந்த உற்சாகத்தையும் பேரானந்தத்தையும் அளித்தன. சற்றும் தாமதிக்காமல் திருக்கோயில் திருப் பணியைத் தொடங்கினார்.

ஆனால், பொருளாதார நிலை அவரை வாட்டி வதைத்தது. எனினும் பக்தர் கலங்கவில்லை. `ஆலயம் அமைக்க உத்தரவிட்டது பாண்டுரங்கன். அவரே பார்த்துக்கொள்வார்’ என்று பாரத்தைப் பகவானின் மீது போட்டுவிட்டு பணிகளைக் கவனித்து வந்தார்.

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. அடுத்தடுத்த உதவிகள் பக்தரைத் தேடி வந்தன. ராமநாதபுரத்தின் வடக்கு ரத வீதியில் இருந்த துவாதசி கட்டளைக்குச் சொந்தமான பழைய கட்டடம் ஒன்றை, விஜயத்தம்மாள் என்பவரின் குடும்பத்தினர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை யாகக் கொடுத்தனர். அந்த இடத்தில், சிறியளவில் திருக்கோயில் எழுப்பினார் ஸ்ரீசெல்லமய்யங்கார். ருக்மிணி சமேதராக ஸ்ரீபாண்டுரங்கன் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 1960-ம் வருடம் முதல் சம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடைபெற்றது.

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து, 2001-ம் வருடம் குமுதம் மாள் என்பவர் பெருமுயற்சி செய்து மூன்று நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்தை எழுப்பிட, அதையொட்டி சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பின்னர், 2010-ம் வருடமும் திருப்பணிகள் பல மேற்கொள்ளப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

இன்றைக்கு, தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் தெய்வமாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார், தென்னகத்தின் இந்தப் பாண்டுரங்கன்.

அர்த்த மண்டபம் மற்றும் கருவறை மண்டபத்துடன் திகழ்கிறது ஆலயம். சிறிய விமானத்துடன் கூடிய கருவறையில் ருக்மிணி பிராட்டி சமேதராக இதழ்களில் புன்னகை துலங்க, இடுப்பில் கைகளை ஊன்றியபடி, நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் பாண்டுரங்கன். அவருக்கு முன்பாக உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

ராமநாதபுரம் செல்லும் அன்பர்கள், அப்படியே இந்த பாண்டுரங்கனின் ஆலயத்துக்கும் சென்று தரிசியுங்கள். அவரை தரிசித்த  மாத்திரத்திலேயே துக்கங்கள், கலக்கங்கள் யாவும் நீங்கி மனம் லேசாகிவிடுவதை உணர்வீர்கள். அவ்வளவு சாந்நித்தியமானவர் இந்தப் பாண்டுரங்கன். இவரின் ஆலயம் குபேர திசையில் அமைந்திருப்பது மிகவும் விசேஷமானதாகப் போற்றப்படுகிறது. எனவே, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் பக்தர்களது வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

குபேர யோகம் அருளும் தென்னகத்தின் பாண்டுரங்கன்!

கருவறைக்கு வெளியில் ஸ்ரீஅனுமனின் சந்நிதியை தரிசிக்கலாம். அவருக்கு வெற்றிலை மாலை சாற்றி வேண்டிக் கொண்டால் வேண்டுதல்கள் நிறைவேறும்; நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களது நம்பிக்கை.

‘`நாங்கள் குடும்பத்துடன் வந்து பாண்டுரங்கனைச் சேவித்து, எங்கள் குறையைச் சொல்லி முறையிட்டுச் சென் றோம். அவரின் திருவருளால் எங்கள் குறை தீர்ந்தது. அதற்கு நன்றிக்காணிக்கை செலுத்தவே தற்போது வந்திருக்கிறோம்’’ என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார், கோயிலுக்கு வந்திருந்த தேனியைச் சேர்ந்த வைரவன் என்ற பக்தர்.

அவருக்கு மட்டுமல்ல, நம் துன்பங்களைக் களையவும் காத்திருக்கிறார் ராமநாதபுரம் பாண்டுரங்கன். புண்ணிய யாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் அன்பர்கள், அப்படியே ராமநாதபுரத்துக்கும் சென்று பாண்டுரங்கனை தரிசித்து வரம் பெற்று வாருங்கள்.

உங்கள் கவனத்துக்கு...

தலம்: ராமநாதபுரம்

சுவாமி: ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீபாண்டுரங்கன்.

உற்சவ மூர்த்திகள்: ஸ்ரீருக்மிணி, ஸ்ரீபாண்டுரங்கன், ஸ்ரீசத்ய நாராயண பெருமாள், ஸ்ரீமகாலட்சுமி.

விழாக்கள் விசேஷங்கள்: சனிக்கிழமை தோறும் விஷ்ணுசஹஸ்ர நாம பாராயணம், ரோகிணி நட்சத்திர நாளில் திருமஞ்சனம், பௌர்ணமியன்று ஸ்ரீசத்யநாராயண பூஜை ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தையொட்டி மூன்று நாள்கள் திருவிழா நடைபெறு கிறது. அப்போது ஸ்ரீருக்மிணி சமேதராக கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார் ஸ்ரீபாண்டுரங்கன்.

எங்கே இருக்கிறது?:
ராமநாதபுரம் சிவன் கோயிலின் வடக்கு ரத வீதியில் அமைந்திருக்கிறது, அருள்மிகு பாண்டுரங்கனின் ஆலயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism