தொடர்கள்
Published:Updated:

சரணம்... சாயி சரணம்!

சரணம்... சாயி சரணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சரணம்... சாயி சரணம்!

சரணம்... சாயி சரணம்!

சரணம்... சாயி சரணம்!

‘எனக்கு எட்டு விதமான அல்லது பதினாறு விதமான உபசாரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தூய்மையான பரிபூர்ண பக்தி உள்ள இடத்தில் நான் இருப்பேன்.’’

- ஷீர்டி ஸ்ரீசாயிபாபா

சரணம்... சாயி சரணம்!

ஷீர்டி ஸ்ரீசாயிபாபா கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக அவதரித்தவர். எவரிடமும் பேதம் பாராட்டாமல் கருணை மழை பொழிந்தவர்.

பொருள் வேண்டி வருவோர்க்குப் பொருளும், ஞானம் வேண்டி வருவோர்க்கு ஞானமும் அருளிய கருணைக்கடல் ஷீர்டிநாதன் ஸ்ரீசாயிபாபா.

நம்முடைய கஷ்டங்களுக் கான காரணங்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அறிந்தவர் ஸ்ரீசாயிபாபா.

அவரது அருள் ஒன்றே நம்முடைய வினைகளையெல்லாம் இல்லாமல் செய்யும்.

நம்முடைய பிரச்னை களிலிருந்து விடுபட ஒரே வழி, அவருடைய திருவடிகளில் சரண் அடைவதுதான்.

அப்படி, தன்னுடைய பாதாரவிந்தங்களில் சரணடைந்து பக்தி செலுத்திய அடியார்களின் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்- அருளாடல்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக...

தொகுப்பு: க. புவனேஸ்வரி

விரதம் பூர்த்தியானது!

காராஷ்டிர மாநிலத்தில், `தானே' என்ற இடத்திலுள்ள சிவில் நீதிமன்றத்தில் தற்காலிக குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார் சோல்கர் என்பவர்.

சொற்ப சம்பளத்தில் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவது, அவருக்குச் சிரமமாக இருந்தது. ஒரு நாள் அவர் வசித்த இடத்துக்கு அருகில் நடைபெற்ற ஆன்மிகச் சொற்பொழிவைக் கேட்பதற்குச் சென்றார்.

பாபாவின் கீர்த்தனைகளைப் பாடி, அவரின் புகழைப் பரப்பி வந்த தாஸ்கணு என்பவர், பாபாவின் மகிமைகளைப் பற்றி உருக்கமாகக் கூறிக் கொண்டிருந்தார்.

அவரது சொற்பொழிவில் தன்னை மறந்த சோல்கர் தனக்குள், ‘பாபா! நான் மிகவும் ஏழை. எனது குடும்பத்தைக்கூட பராமரிக்க முடியாத நிலையில் உள்ளேன். உமது அருளால் நான், எனது வேலை சம்பந்தமான தேர்வில் வெற்றி பெற்று, எனது உத்தியோகம் நிரந்தரமானால், ஷீர்டிக்கு வந்து உம்மை தரிசிப்பதுடன், உமது பெயரால் கற்கண்டு விநியோகிக்கிறேன்’ என்று வேண்டிக்கொண்டார்.

சரணம்... சாயி சரணம்!

வேண்டுதல் பலித்தது.இலாகா தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். பணியும் நிரந்தரமானது. ஆனாலும் வறுமையின் காரணமாக, ஷீர்டிக்குச் செல்லத் தேவையான பணத்தை உடனடியாக அவரால் திரட்ட முடியவில்லை. எனவே, ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து கற்கண்டு விநியோகிக்கும் வரை, தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என்று உறுதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், ஓரளவு பணம் சேர்ந்ததும் ஷீர்டிக்குச் சென்று, ஸ்ரீசாயியை தரிசித்து வணங்கினார். அத்துடன், தான் வேண்டிக்கொண்டபடி கற்கண்டு விநியோகமும் செய்தார்.

சோல்கருடன் ஷீர்டியைச் சேர்ந்த `ஜோக்' என்பவரும் சென்றிருந்தார்.

அவரிடம் பாபா, ‘`உன் நண்பருக்குச் நிறைய சர்க்கரை சேர்த்த தேநீரைப் பருகக் கொடு'’ என்று கூறினார். ஆம்!

அதன் மூலம் சோல்கரின் விரதம் பூர்த்தியடைந்ததை பாபா உணர்த்தியருளினார்.

சரணம்... சாயி சரணம்!

வெள்ளி நாணயங்கள்

பாபாவின் பக்தரான பிரதான் என்பவர் ஒருமுறை பாபாவை தரிசிப்பதற்காக ஷீர்டிக்குச் சென்றார்.

அப்போது அவரிடம் சில தங்க நாணயங்களும், சில ரூபாய் நோட்டுகளும் இருந்தன. `பாபா தட்சிணை கேட்டால், வெள்ளி நாணயங்களாகக் கொடுக்கலாம்' என்ற எண்ணத்துடன் சில ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து இருபது வெள்ளி நாணயங்களாக சில்லரை மாற்றி வைத்துக்கொண்டார்.
ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து வணங்கினார். பாபா அவரிடம் தட்சிணை கேட்டார்.

அப்போது, பிரதான் தான் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்தபடி வெள்ளி நாணயங்களைக் கொடுக்காமல், பாபாவுக்குத் தங்கமாகவே கொடுப்போம் என்ற எண்ணத்துடன், ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்தார். பாபா அதை ஏற்க மறுத்ததுடன், அருகிலிருந்த நூல்கர் என்ற அன்பரிடம், ``இந்தத் தங்க நாணயத்தின் மதிப்பு எவ்வளவு'' என்று கேட்டார். ``பதினைந்து வெள்ளி நாணயங்கள் மதிப்புடையது'' என்று நூல்கர் கூறினார்.

சரணம்... சாயி சரணம்!

உடனே பிரதானிடம், ``இந்தத் தங்க நாணயத்துக்குச் சரியான மதிப்புள்ள வெள்ளி நாணயங்களைக் கொடு'' என்றார் பாபா. அதன்படியே பிரதான் பாபாவுக்கு பதினைந்து வெள்ளி நாணயங் களைக் கொடுத்தார். ஆனால், பாபாவோ அந்த வெள்ளி நாணயங்களைத் திரும்பத் திரும்ப எண்ணி, பத்து வெள்ளி நாணயங்களே இருப்பதைப் போல் பாவனை செய்துகொண்டு, `இன்னும் ஐந்து வெள்ளி நாணயங்கள் வேண்டும்' என்று கேட்டார்.

``ஏற்கெனவே நான் கொடுக்க விரும்பியபடி இருபது வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொள்ளவே பாபா விரும்புகிறார்' என்பதைப் புரிந்துகொண்டார் பிரதான்.ஆகவே, மேலும் ஐந்து வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார்.

ஆம்! பக்தர்களின் மனதில் உள்ளதையும் அவர்கள் தம்மீது வைத்திருக்கும் தூய பக்தியையும் நன்கு அறிந்தவர் ஸ்ரீசாயிபாபா.

சரணம்... சாயி சரணம்!

`மஸ்லின் துணி’

பாபாவின் பக்தரான சின்னிகிருஷ்ணா என்பவர் ஒருமுறை ஸ்ரீராமநவமி உற்சவத்தின்போது ஷீர்டிக்குச் சென்றார்.

பாபாவுக்கு அளிப்பதற்காக ஏதேனும் வாங்கிச் செல்ல நினைத்தவர், கடை கடையாக ஏறி இறங்கினார். கடைசியில் ஒரு கடையில் அழகான மஸ்லின் துணியைக் கண்டார். ‘பாபா இதை அணிந்துகொண்டால் நன்றாக இருக்குமே’ என்று நினைத்தவர், அந்த மஸ்லின் துணியை வாங்கிக்கொண்டு ஷீர்டிக்குச் சென்றார்.

மற்ற பக்தர்களும் பாபாவுக்காக தாங்கள் வாங்கி வந்த பரிசுப்பொருள்களைக் கொடுத்தனர். அவற்றை வாங்கிக்கொண்ட பாபா, மறுபடியும் அவர்களுக்கே திரும்பக் கொடுத்துவிட்டார்.

அதைப் பார்த்ததும், தான் கொடுக்கப்போகும் மஸ்லின் துணியையும் பாபா தனக்கே திருப்பிக் கொடுத்துவிடுவாரோ என்று நினைத்த சின்னி கிருஷ்ணா, ஒரு காரியம் செய்தார். பாபாவுக்குத் தெரியாமல், அவரது இருக்கைக்கு அடியில் மஸ்லின் துணியைப் பத்திரமாக மடித்து வைத்து விட்டார்.

அன்பர்களுடனான சந்திப்பு - தரிசனம் நேரம் முடிந்ததும் ஆசனத்திலிருந்து எழுந்த பாபா, ஆசனத்தை எடுத்து தூசி தட்டும்படிக் கூறினார். ஆசனத்தை எடுத்ததும், அதனடியில் இருந்த மஸ்லின் துணியை எடுத்து தன் மேனியுடன் அணைத்துக்கொண்டவராக, ‘இந்த மஸ்லின்தான் எத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது! இது என்னுடையது. இதை நான் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை’ என்று கூறியபடி, அந்த மஸ்லின் துணியை அணிந்து கொண்டார். பிறகு சின்னிகிருஷ்ணாவிடம் ‘இந்த மஸ்லின் எனக்கு அழகாக இருக்கிறதுதானே!’ என்று கேட்டார். தனது விருப்பத்தை நிறைவேற்றிய பாபாவின் கருணையை நினைத்து நெகிழ்ந்தார் சின்னிகிருஷ்ணா!

சரணம்... சாயி சரணம்!

புலிக்கும் மோட்சம்...

ஸ்ரீ
சாயிபாபா, தான் சமாதி அடைவதற்கு ஏழு நாள்களுக்குமுன், புலி ஒன்றுக்கு மோட்சம் அருளிய சம்பவம் இது.

விஜயதசமிக்கு ஏழுநாள் களுக்கு முன், சிலர் பாபாவை தரிசிப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள், தங்களுடன் கூண்டு வண்டியில் அடைத்து வைத்திருந்த நிலையில் புலி ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர்.

அந்தப் புலி நோய்வாய்ப்பட்டிருந்தது. அதை, அவர்கள் ஒரு சர்க்கஸ் கம்பெனியிடமிருந்து வாங்கியிருந்தனர். ஊர் ஊராகப் போய் புலியைக் காட்டி பணம் பெற்று வந்தனர்.

ஷீர்டியில் இருக்கும் சாயிபாபா நோய்களைத் தீர்க்கிறார் என்று கேள்விப்பட்டு, ஷீர்டிக்கு அழைத்து வந்தனர். புலியின் நோய் குணமாகிவிட்டால், அதை மறுபடியும் சர்க்கஸ் கம்பெனிக்கு நல்ல விலைக்கு விற்றுவிடலாமே என்பதுதான் அவர்களது எண்ணம்.

அந்தப் புலிக்கு நோய்களிலிருந்து நிரந்தரமாக விடுதலை அளிக்க விரும்பிய பாபா, அந்தப் புலியைத் தம்மிடம் அழைத்து வரும்படிக் கூறினார்.

அதன்படி, கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட புலி, துவாரகாமாயியின் படிகளில் ஏறிச் சென்று, ஸ்ரீசாயிபாபாவுக்கு எதிரில் வந்து நின்றது. அது, சில கணங்கள் பாபாவின் தேஜஸ் நிறைந்த திருமுகத்தையே பார்த்தபடி இருந்தது. பின்னர், தன் வாலால் மூன்று முறை தரையில் தட்டியபடியே கீழே விழுந்து உயிர்விட்டது. ஆம்! பாபா அந்தப் புலிக்கு மோட்சம் அருளினார்.

சரணம்... சாயி சரணம்!

தண்ணீரில் எரிந்த தீபங்கள்!

வ்வொரு நாளும் மாலை நேரத்தில், ஸ்ரீசாயிபாபா மசூதியில் தீபம் ஏற்றுவது வழக்கம். அவர் தினமும் கடைத்தெருவில் இருக்கும் கடைகளுக்குச் சென்று தானமாக எண்ணெய் வாங்கி வந்து, தீபம் ஏற்றுவது வழக்கம்.

ஒருநாள் கடைக்காரர்கள் அனைவரும் ஒன்று கூடி, இனி யாரும் பாபாவுக்கு எண்ணெய் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

அதன்படி, பாபா தங்களது கடைக்கு வந்து எண்ணெய் கேட்டபோது, `எண்ணெய் இல்லை' என்று கூறி மறுத்துவிட்டனர்.

அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது பாபாவுக்குத் தெரியாதா என்ன? எனவே, அவர்களுக்குப் பாடம் கற்பிக்க நினைத்தார்.

அவர்களிடம் பதில் எதுவும் பேசாமல் தனது மசூதிக்குச் சென்றார். அவர் என்னதான் செய்யப் போகிறார் என்பதைக் காண எண்ணெய் வியாபாரிகள் அவரைப் பின்தொடர்ந்து  சென்றனர்.

சரணம்... சாயி சரணம்!

பாபா எண்ணெய் டப்பாவை கையில் எடுத்துக்கொண்டார்.

அதில் சிறிது நீரை ஊற்றினார். பிறகு அந்த நீரை தன் வாயில் ஊற்றிக்கொண்டவர், மீண்டும் அதை எண்ணெய் டப்பாவிலேயே கொப்பளித்தார்.

இப்போது, அந்த நீரையே விளக்குகளில் ஊற்றி தீபங்களை ஏற்றினார்.

அவரை மிகச் சாதாரண மானிடர் என்று அதுவரை எண்ணியிருந்த வியாபாரிகள் அனைவரும் அதிசயிக்கும் வகையில்,

நீரால் நிரப்பப்பட்ட அந்த விளக்குகளின் தீபங்கள் நன்கு சுடர்விட்டு எரியத் தொடங்கின!

இதைக் கண்ட வியாபாரிகள், ஓடோடிச் சென்று ஸ்ரீசாயிபாபாவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். பாபா அவர்களுக்கு ஞானம் வழங்கி ஆசி கூறினார். மேலும், பொய்யும் பொருளாசையும் மனிதர்களுக்கு இருக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு உபதேசித்தார்.

சரணம்... சாயி சரணம்!

‘சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்!’

பாந்த்ரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் தார்க்காட். அவரின் மனைவி மற்றும் மகன் இருவரும் பாபாவின் பக்தர்கள்.

தினமும் வீட்டு பூஜையறையிலுள்ள ஸ்ரீசாயிபாபாவின் திருவுருவப் படத்துக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அதன் பிறகே சாப்பிடுவது அவர்களது வழக்கம்.

ஒருமுறை தாயும் மகனும் ஷீர்டிக்குச் செல்ல விரும்பினர். ஆனால், வீட்டிலுள்ள பாபாவின் திருவுருவப் படத்துக்கு நைவேத்தியம் செய்ய வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு.

தார்க்காட் அவர்களிடம், அவர்கள் ஊர் திரும்பும் வரையில், தாம் தினமும் பாபாவுக்கு நைவேத்தியம் செய்வதாக உறுதி கூறினார். ஆகவே, தாயும் மகனும் மகிழ்ச்சியோடு ஷீர்டிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

முதல் மூன்றுநாள்கள் தார்க்காட் பாபாவுக்கு நைவேத்தியம் சமர்ப்பித்தார். நான்காவது நாள் அவசர வேலைகளின் காரணமாக பாபாவுக்கு நைவேத்தியம் செய்ய மறந்துவிட்டார்.

சரணம்... சாயி சரணம்!

மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தபோதுதான், பாபாவுக்கு அன்று காலை நைவேத்தியம் செய்யவில்லை என்பது நினைவுக்கு வந்தது.பாபாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன், ஷீர்டியிலிருந்த தன் மனைவி- மகனிடமும் கடிதத்தின் மூலம் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

அதே நாள் மதியம், தாயும் மகனும் ஷீர்டியில் பாபாவின் முன்னிலையில் இருந்தபோது, ‘`இன்று நான் பசியோடு பாந்த்ராவிலுள்ள உன் வீட்டுக்குச் சென்றேன். எனக்கு உன் கணவர் உணவு எதுவும் வைத்திருக்கவில்லை. பசியுடனே திரும்பினேன்’’ என்று கூறினார்.

அடுத்தநாள் தார்க்காட் எழுதிய கடிதம் வந்து சேர்ந்தபோதுதான், ஸ்ரீசாயிபாபா கூறியதன் பொருள் அவர்களுக்கு விளங்கியது. சிலிர்த்துப் போனார்கள் இருவரும்.

இதன் மூலம் தாம் சித்திரத்திலும் உயிருடன் இருப்பதை நிரூபித்தார் பாபா.

சரணம்... சாயி சரணம்!

நோயைக் குணமாக்கிய கனவுகள்!

நாராயண்காங்க் என்ற ஊரில் வசித்த பீமாஜி பட்டேல் என்பவர், தீவிரமான காசநோயால் பீடிக்கப்பட்டு, மிகவும் அவதிப்பட்டு வந்தார். எத்தனையோ மருத்துவர் களைப் பார்த்து, பல மருந்துகளை எடுத்துக் கொண்டும் நோய் குணமாகவில்லை.

நோயின் கடுமையால் அடிக்கடி ரத்த வாந்தி எடுத்துக்கொண்டிருந்தவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். தனது முடிவு எப்போது வருமோ என்ற கவலையிலிருந்த பீமாஜி பட்டேலை, ஷீர்டி சாயிபாபாவிடம் செல்லும்படி வலியுறுத்தினார் நானா சாஹேப் சாந்தோர்க்கர். அத்துடன், நானாவும் ஷாமாவும் அவரை ஷீர்டிக்கு அழைத்து வந்தனர்.

முதலில் பாபா அவரைக் குணப்படுத்த இசையவில்லை. பீமாஜி பட்டேல் முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாகவே அவர் இப்படி அவதியுறுகிறார் என்றும், அதில் தாம் தலையிட விரும்பவில்லை என்றும் கூறி மறுத்துவிட்டார். ஆனால் பீமாஜியோ, தாம் ஆதரற்றவர் என்றும், பாபாவையே சரணாகதி அடைந்திருப்பதாகவும் கூறி அவரின் பாதத்தடியில் வீழ்ந்தார்.  தம்மிடமே பரிபூரணமாக சரணடைந்து விட்ட பீமாஜி பட்டேலிடம் பாபாவுக்குக் கருணை ஏற்பட்டது. அவரது திருவருள் பார்வை பட்டதுமே, பீமாஜி ரத்த வாந்தி எடுப்பது நின்று விட்டது.

சரணம்... சாயி சரணம்!

தொடர்ந்து ஸ்ரீசாயிபாபா பின்வருமாறு கூறினார்...

“இந்தத் துவாரகாமாயியில் பாதம் வைத்தவுடன் உன்னுடைய அனைத்துத் துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இங்குள்ள பக்கீர் மிகவும் கருணையுள்ளவர். அவர் உனது நோயினைக் குணப்படுத்துவார்’’ என்று கூறி பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

இவ்வாறு பாபா ஆசி வழங்கிய நாளிலிருந்து பீமாஜி பட்டேல் மெள்ள மெள்ள குணமடையத் தொடங்கினார். தொடர்ந்து அவரை பீமாபாயின் வீட்டில் தங்கியிருக்கும்படி கூறினார் பாபா. முற்றிலும் சுகாதாரமற்ற அந்த வீடு, காசநோயால் அவதிப்படும் பீமாஜி பட்டேலுக்கு ஏற்ற இடமல்ல. இருந்தாலும், பாபா சொன்னதன் காரணமாக அவர் அந்த வீட்டில் தங்கினார். அங்கே இரண்டு கனவுகளின் மூலமாக அவரை குணப்படுத்தினார், பாபா.

ஆம்! முதலில் மாணவனாகத் திகழும் தன்னை, மராட்டிய செய்யுள் ஒப்பிக்காததால், ஆசிரியர் அடிப்பது போன்று கனவு கண்டார். அடுத்த கனவில், யாரோ ஒருவர் தன் நெஞ்சின் மீது ஒரு பெரிய கல்லை வைத்து, மேலும் கீழுமாக உருட்டுவதுபோலவும், அதனால் கடுமையான வலி ஏற்படுவது போலவும் கனவு கண்டார்.

அடுத்தடுத்த நாள்களில், பீமாஜி பட்டேல் பூரண குணம் அடைந்தார். பின்னர் அவர் பாபாவிடம் ஆசி பெற்றுக் கொண்டு தனது சொந்த கிராமத்துக்குச் சென்றார்.

அவரது கிராமத்தில் வியாக்கிழமைதோறும் சத்யநாராயண பூஜை அனுஷ்டிப்பது வழக்கம். ஆனால், பீமாஜி பட்டேல் சத்யநாராயண பூஜைக்குப் பதிலாக சாயி சத்ய விரத பூஜையைத் தொடங்கினார்.

சரணம்... சாயி சரணம்!

வரம் அருளும் சாயி வழிபாடு!

பாபாவின் வழிபாடுகளில் பிரதானமானவை சத்சரித சப்தாஹ பாராயணமும், ஒன்பது வார விரத வழிபாடும் மகத்துவமானவை.

இவற்றில் சாயி பக்தர்களால் பக்தியோடு கடைப்பிடிக்கப்படும் ஒன்பது வார விரதத்தின் பின்னணியில், செவிவழிச் செய்தியாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

கணவர் - மனைவி இருவரில், கணவர் மிகவும் முன்கோபம் உள்ளவர். கோபம் வந்துவிட்டால் வரைமுறை இல்லாமல் கடும் சொற்களைப் பேசுவார். இதன் காரணமாகவே மற்றவர்கள் அவருடன் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. இது அவருடைய வியாபாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. சில வருடங்களிலேயே அவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அவர் மனைவியோ கணவருக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தாள். ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை கொண்டிருந்த அந்தப் பெண்மணி, தங்கள் குடும்பத்தின் வறுமையைப் போக்கும்படி தினமும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தாள். ஒருநாள் அவளது வீட்டுக்கு வந்து உணவு பெற்றுச் சாப்பிட்ட சாது ஒருவர், அவளை ஆசீர்வதித்தார். அத்துடன்,

‘`நீ பாபாவை வேண்டிக் கொண்டு 9 வியாழக் கிழமைகள் விரதம் இரு. நீ நினைத்தது நடக்கும்’’ என்று கூறிச் சென்றார். அதன்படியே அந்தப் பெண்மணி விரதம் அனுஷ்டித்தாள். பாபாவின் அருளால் அவள் கணவரின் மனப்போக்கு மாறியதுடன், குடும்பத்தின் வறுமை நிலையும் நீங்கியது.

வியாழன் விரதம் அனுஷ்டிக்கும் முறை

விரதம் இருப்பவர்கள் இந்த விரதத்தை ஏதேனும் ஒரு வியாழக் கிழமையன்று தொடங்கவேண்டும்.

இரவு ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். முடியாதவர்கள் இடையில் பழரசம் அருந்தலாம்.

சரணம்... சாயி சரணம்!

விரதத்தைத் தொடங்கும் முறை:

வீட்டு பூஜையறையில் - ஒரு தூய ஆசனத்தில் மஞ்சள் வஸ்திரம் விரித்து, பாபாவின் திருவுருவப் படத்தை வைக்கவேண்டும். அந்தப் படத்துக்குச் சந்தனப் பொட்டிட்டு, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், விளக்கு ஏற்றிவைத்து, தூபம் காட்டி, ஆரத்தி எடுக்கவேண்டும். தொடர்ந்து பாபாவின் மூல மந்திரத்தை ஜபிக்கவேண்டும். காலை, மாலை அல்லது ஏதேனும் ஒருவேளை பாபாவின் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.வெளியூர்ப் பயணம் செல்ல நேரிட்டாலும், இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

பெண்கள் விரதம் அனுஷ்டிக்கும் காலத்தில், மாதவிடாய் போன்ற தடங்கல் ஏற்பட்டால், அவர்கள் அடுத்த வாரம் விரதத்தைத் தொடரலாம்.

ஒன்பது வார விரதம் பூர்த்தியடைந்த பிறகு, குறைந்தபட்சம் ஐந்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். தங்களால் நேரடியாக உணவு வழங்க முடியாதவர்கள், சாயிபாபா கோயில்களில் நடைபெறும் அன்னதானத்துக்கு நன்கொடை கொடுக்கலாம்.

நாமும் விரதமிருந்து, ஷீர்டி நாதனைச் சரணடைவோம். சாயியின் திருவருளால் சகல நலன்களும் கைகூடும்!