மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 11

மகா பெரியவா - 11
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 11

மகா பெரியவா - 11

மது பதிமூன்றாவது வயதில் துறவுக்கோலம் பூண்டு ஸ்ரீகாமகோடி பீடத்தின் அதிபதியானவர் மகா பெரியவா. சுய முயற்சியாலேயே சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தெளிந்தார். முதல் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் அவர் தனிமையை நாடிச் சென்றதாகவும், வட மொழிப் பயிற்சியிலும் தர்ம நூல்களைக் கற்பதிலும் தீவிர கவனம் செலுத் தியதாகவும் தெரிகிறது.

சந்தேகங்கள் ஏற்படும்போதெல்லாம் பக்கத் தைத் திருப்பிவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்க வில்லை அவர். அந்தந்த சாஸ்திரங்களில் விற்பன்னர்களாக விளங்கியவர்களை அணுகி, உடனுக்குடன் தெளிவு பெறுவார்.

மகா பெரியவா - 11

மடாதிபதியாகவும். அத்வைத மத குருவாகவும் பொறுப்பேற்றுக்கொண்டவர், கடும் தவம் மேற்கொண்டார். தமக்கென ஆசார அனுஷ்டாங் களையும், நியம நிஷ்டைகளையும் வகுத்துக் கொண்டார். மக்களை நேரில் சந்திப்பதை தமது துறவு வாழ்வில் முக்கிய நிகழ்வாகக் கொண்டிருந்த மாமுனிவர் மகாபெரியவா. முதலில் சில காலம் பல்லக்கில் சென்றவர், பின்னர் பாதயாத்திரை யாகவே நாடெங்கும் பவனி வந்தார்.

தம்மிடம் மகா முனிவரின் பாதங்கள் மட்டும் கொண்டதான ஓர் புகைப்படம் இருப்பதாக கடந்த ஜூலையில் நிகழ்த்திய சொற்பொழிவில் குறிப்பிட்டார் கணேச சர்மா. அன்றலர்ந்த தாமரைப் பூக்கள் மாதிரியாக அத்தனை மிருது வானதாக பாதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர் (படம்).

“வெறும் கட்டைச் செருப்புடன் நாடெங்கும் பல மைல்கள் மூலைமுடுக்குகளிலுள்ள பகுதி களிலெல்லாம் கல்லிலும், முள்ளிலும் நடந்து வந்தவரின் பாதங்கள் புஷ்பம் மாதிரி இருப்பது ஆச்சர்யம். பத்தடி நடந்தாலே நமக்கு பித்தவெடிப்பு வந்து இம்சிக்கிறது” என்றார் கணேச சர்மா.

தமது பாதயாத்திரையின்போது, ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த மக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் மாமுனிவர். அப்படி சந்திக்கும்போது ஊர் மக்களிடம் ‘பெட்டி ஷன்’ வாங்கிக்கொண்டு, அதை போட்டோ எடுத்துக்கொண்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தவர் அல்ல அவர். மக்களின் வழிபாட்டு முறைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அவர்களுடைய ஆசாரங்களையும் பழக்கவழக்கங் களையும் அறிந்துகொள்வார். அவர்களின் ஆன்மிகப் பிரச்னைகளையும் சமூகத் தேவைகளை யும் புரிந்துகொள்வார். சுவாமிகள் தொடங்கிய அரும்பெரும் பணிகளுக்கு வித்திட்டது இந்தப் ‘பாத தரிசனம்’தான்.

படிப்பு முடிந்து பெரியவா மீண்டும் கும்ப கோணம் வந்தபோது, அவருக்கு வயது 21. அரசு வசம் இருந்த மடத்து நிர்வாகம் இவர் கைக்கு வந்தது. இவரது நேரடி பார்வையில் வந்த முதல் நிகழ்ச்சி அந்த வருட நவராத்திரி. 1916-ம் வருடம் அந்த வைபவம் மிக விமர்சையாக நடத்தப்பட்டது. லட்சார்ச்சனையும் லட்ச தீபமும் களை கட்டின. இப்படி மகோன்னதமாக நடைபெற்ற ஒன்பது நாள் விழாவைப் பற்றி கேள்விப்பட்டு நெகிழ்ந்து, மகா பெரியவருக்குக் கடிதம் எழுதி தன் வந்தனத் தைத் தெரிவித்துக் கொண்டார் மகாகவி பாரதி!

நவராத்திரி நாயகியர் பற்றி நவயுகப் புருஷர் அருளியிருக்கும் விவரங்கள் இங்கே நினைவுக் கூறத் தக்கன.

‘நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசு வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.

மகா பெரியவா - 11

இந்த உண்மையைத்தான்... லலிதா ஸஹஸ்ர நாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள், அவளே பரிபாலனம் செய்பவள், அவளே சம்ஹாரம் செய்பவள் என்று கூறுகிறது. லலிதையாக, துர்கையாக இருக்கிற பராசக்திதான் மகாலட்சுமியாகவும், சரஸ்வதி யாகவும் இருக்கிறது. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மகாலட்சுமியாகி சம்பத்துகளைத் தருகிறது. சரஸ்வதியாகி ஞானம் தருகிறது.

ஆதிபராசக்தியான துர்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதால் அலை மகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.

பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீர சாகரத்திலிருந்து பிறந்த மகாலட்சுமியும் இரண்டு மகரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக் கிறார்கள். மகாலட்சுமியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்கவேண்டும் என்று பிருகு மகரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லட்சுமிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால், அவளுக்கு `பார்கவி' என்று பெயர் ஏற்பட்டது.

காத்யாயன மகரிஷி பரமேசுவரியைப் பெண் ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தவம் மேற்கொண்டார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கு பெண் என்பதாலேயே அவளுக்கு `கார்த்யாயனி' என்ற பெயர் உண்டாயிற்று.

லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங் களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. குழந்தைக்கு நம்மைப் போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை, அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்துபோகிறது. நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனதைக் கெடுத்துக் கொள்கிறோம். பராசக்தியை கார்த்யாயனியாகவும் மகா லட்சுமியைப் பார்கவியாகவும் குழந்தை களாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத்தன்மை சாக்ஷாத்கரித்துவிடும்.

மகா பெரியவா - 11

இந்த நாளில் `வாட்டர் ப்ரூஃப்' என்று சொல் வது போல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்த மாக ஆவோம். குழந்தை ரூபத் தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அனுக்கிரகத்தைச் செய்வாள்.

குழந்தையாக வந்த கார்த்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ‘காத்தாயி’ என்று சொல்கிற கிராமதேவதை ‘கார்த்யாயனி’தான் என்று நினைக்கிறேன்.

‘பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸ கர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் ‘பிடாரி’ என்று சொல்லி பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதைப் ‘பிடாரிமானியம்’ என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம். இவ்வாறே கிராம ஜனங்களும்கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். ‘பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயி யான சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.’

வருடம் 1908. மடாதிபதியாக மகா பெரியவா பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்த நிலை. கும்ப கோணத்து மக்கள் நாளும் மடத்துக்கு வந்து இளம் சுவாமிகளை தரிசனம் செய்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

“சுவாமிகள் முகத்துல என்னவொரு தேஜஸ் கவனிச்சேளா..?”

“தான் துறவறம் மேற்கொண்டதை ஒரு வரமாக நினைக்கும் மனோ பாவம் அவரோட ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரியறது...”

“அவர் தீர்த்தப் பிரசாதம் கொடுக்கும்போது பக்தர்கள்கிட்டே அவருக்கு இருக்கற வாத்சல்யம் தெரியறது பாருங்கோ...”

- என்றெல்லாம் பேசி பூரித்துப்போனார்கள் அந்த மக்கள்.

அன்று பழக்கூடையுடன் நான்கைந்து பேர் மடத்துக்குள் நுழைந்தார்கள். நின்றிருந்த அணுக்கத் தொண்டர்களிடம் “திருச்சிலேர்ந்து பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருக்கோம்” என்றார்கள்.

மகா பெரியவா - 11

“நீங்க..?”

பதில் சொல்வதற்குள் சுவாமிகள் அங்கே வந்துவிடுகிறார்.

தனக்கான ஆசனத்தில் அமர்ந்தவர், திருச்சியிலிருந்து வந்திருந்தவர் களை ஏறிட்டுப் பார்த்தார். வதனத்தில் குழந்தை மாதிரியானப் புன்னகை.

“பெரியவா... இவா திருச்சிலேர்ந்து வந்திருக்கா...” என்று அறிமுகம் செய்துவைத்தார் தொண்டர்.

“உட்காருங்கோ...”

பழத்தட்டைத் தரையில் வைத்து நமஸ்கரித்துவிட்டு உட்கார்ந்து கொண்டார்கள், திருச்சியிலிருந்து வந்திருந்தவர்கள்.

“பெரியவா... நாங்க ஜம்புகேசுவரர் அகிலாண்டேஸ்வரி கோயிலிலிருந்து வர்றோம்...” என்றார், வந்திருந்தவர்களில் ஒருவர்.

“கும்பாபிஷேக ஏற்பாடெல்லாம் நல்லபடியா நடந்துண்டு வர்றதா?” என்று கேட்ட சுவாமிகள், தேதியைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் வழங்கி அனுப்பினார்.

திருச்சி ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் பெரியவா கலந்துகொண்ட முதல் கும்பாபிஷேகம். இங்கே அம்மன் உக்கிரம் மிக்கவளாக இருந்தாள் என்பது வரலாறு. யாரும் நேரில் நின்று தரிசனம் செய்ய இயலாத நிலை. ஆதிசங்கரர் அங்கு வந்து தாடங்கம் பண்ணி அம்மனின் உக்கிரத்தை அடக்கினாராம். அப்போது முதல் அந்தக் கோயிலில் எல்லா முக்கிய நிகழ்வுகளும் காமகோடி பீடாதிபதி களால் நடத்தப்பட வேண்டும் என்பது சம்பிரதாயம். சிருங்கேரி சங்கராசார்யரும் அந்த வைபவத்தில் கலந்துகொண்டது கூடுதல் சிறப்பு.

சுவாமிகள் சிறுவயதில் வாழ்ந்த திண்டிவனம் அன்று திருவிழாக் கோலத்துடன் காணப்பட்டது. சுவாமிநாதனாக வெளியேறி, துறவறம் மேற்கொண்டு, சந்திரசேகேந்திர சரஸ்வதியாக உருமாறிய புனிதர், இன்னும் சற்றுநேரத்தில் இங்கே எழுந்தருள இருக்கிறார். அன்னாரின் அகில இந்திய பாத யாத்திரையின் ஆரம்பக் கட்டம் அது.

பூரணக் கும்பத்துடன் அவரை வரவேற்க ஊர்மக்கள் வரிசையில் காத்திருந்தார்கள். அவர்களில் முறுக்குப் பாட்டியும் ஒருத்தி!

- வளரும்...

- வீயெஸ்வி , ஓவியங்கள்: கேஷவ்

மகா பெரியவா - 11

சுசீந்திரம் தாணுமாலயர் ஆலயம் மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் காளை வாகனத்துடன் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம்.