மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 16

சிவமகுடம் - பாகம் 2 - 16
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 16

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

ள்ளிரவு நீங்கி விடியல் பிறந்தது. விடியலுக்கு முந்தைய அருணோதய காலத்துக்குள்ளாகவே மாமதுரையின் பாண்டியர் நந்தவனத்து களேபரங்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்ததால், வழக்கமானச் சூழலில் திளைக்கத் தொடங்கியிருந்தது பாண்டிய தலைநகரம்.

கதிரவன் முகம் காட்டத் தொடங்கியிருக்க, அவனின் கிரணங்கள் எவ்விதத் தடங்கலுமின்றி... 7-ம் நூற்றாண்டில், உலக வல்லரசுகளை எல்லாம் தன்னுடைய மகிமைகளால் மலைக்கவைத்துக்கொண்டிருந்த மாமதுரையின் மீது விழுந்து, அவ்வூரைத் தகிக்கச் செய்தன. அதனால் உண்டான பூரிப்பாலோ என்னவோ, மென்மேலும் ஒளிவீசி ஜொலித்தான் ஆதவன்!

சிவமகுடம் - பாகம் 2 - 16

மாமதுரையின் வான்பரப்பைப் போலவே தெள்ளத் தெளி வாகி விட்டிருந்தது கூன்பாண்டியரின் உள்ளமும். பூமியில் உதித்த சூரியனாய் அவரின் திருமுகம் ஒளிவீசித் திகழ, பஞ்சணையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார் மாமன்னர். மிகச் சீராக ஏறியிறங்கும் அவரின் மார்பு, அவருக்குள் பரிபூரணமாய் நிம்மதி குடிகொண்டுவிட்டதை உணர்த்தியது.

பெரும் நிம்மதிக்குக் காரணம்... இரவுப்பொழுதில் நிகழ்ந்த சம்பவங்கள், இவ்வளவு காலமும் அவருக்குள்ளிருந்த கேள்வி களுக்குத் தெளிவான துல்லியமான விடைகளைத் தந்திருந்தன. ஆம்! குலச்சிறையாரை இலக்கு வைத்து கணை தொடுத்தவன் யாரென்பதை அறிந்தபிறகு, திரைமறைவு எதிரிகளையும் தெள்ளத்தெளிவாக இனம் கண்டுகொண்டார் பாண்டியர்.

ஆம்! வேல்மாறன் சீனப் பயணி குறித்து ஏதோ செய்து சொல்ல முற்பட்ட வேளையில்தான், குலச்சிறையாரை நோக்கி அம்பு ஒன்று பாய்ந்து வருவதைக் கண்டான். சற்றும் தாமதிக்காமல் குறுக்கே பாய்ந்து எதிரியின் அம்பை தன் புஜத்தில் ஏற்றுக்கொண்டவன், குருதிப் பெருக்கால் மயங்கி விழுந்தான். அம்புக் காயம் ஆழமில்லை ஆதலால் ஆபத்தும் இல்லைதான். அதன்பொருட்டு மாமன்னருக்குத் திருப்தியே. அவன் விழித்தெழுந்ததும் சீனப்பயணி குறித்த செய்தியை அறிந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த மாமன்னர், அடுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட யத்தனிப்பதற்குள், உள்ளே பாய்ந்து வந்து விட்டார்கள் அவரின் ஆபத்துதவிகள்.

அம்பு தைத்ததும் வேல்மாறன் எழுப்பிய அலறல் சத்தம் அவர்களை உசுப்பியிருக்க வேண்டும். ஆகவே, மன்னரைக் காக்க ஓடோடி வந்துவிட்டார்கள். அவர்களிடம் தன் கண் அசைவாலேயே அம்பு வந்த திசையை கூன் பாண்டியர் சுட்டிக்காட்ட, அவர்களில் சிலர் அந்தத் திசைநோக்கி பாய்ந்தனர். அடுத்த சில கணங்களில் மீண்டும் ஓர் அலறல் சத்தம்! `அது அந்த எதிரியாகத்தான் இருக்க வேண்டும்’ என்று பேரமைச்சர் யூகித்தது சரியாகவே இருந்தது.

ஒருவனது உடம்பைத் தூக்கி வந்து போட்ட ஆபத்துதவிகள், ``விண்ணேகி விட்டான்’’ என்ற தகவலையும் சொன்னார்கள். அவன் முதுகில் குருதி வழிய குத்தி நின்றது குறுவாள் ஒன்று. அது இந்த ஆபத்துதவிகளின் கைங்கர்யமே என்பதைச்  சொல்லவா வேண்டும் பேரமைச்சருக்கு!

``நந்தவனத்துக் கோட்டை மதிலைநோக்கி நகர்ந்துகொண்டிருந்தவனை எச்சரித்தும் கேட்கவில்லை. மதிலையொட்டிய விருட்சக் கிளைகளில் ஏறத் தொடங்கிவிட்டான். விட்டால் தப்பியிருப்பான். வேறுவழியின்றி...’’ என்ற விளக்கம் சொல்ல முனைந்த தலைமை வீரனை கையமர்த்திய பேரரசர், பகையாளியின் உடம்பை நோட்டமிட்டார்.

அவன் புஜங்களிலிருந்த சர்ப்ப வளையங்கள், அவன் எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெளிவாகக் காட்டின.

மாமன்னர் பேரமைச்சரைப் பார்க்க, அவரும் ஏதோ ஓர் உண்மை யைப் புரிந்து கொண்டவராகத் தலையை ஆட்டினார். மாமன்னர் மீண்டும் ஆபத்துதவிகளுக்கு கண்களால் கட்டளையிட, அந்த உடம்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அதற்குள்ளாக வேல்மாறனும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.

அனைவரும் அங்கிருந்து அகன்றதும் மாமன்னரும் அமைச்சரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். மாமன்ன ரிடம் இருந்து நிம்மதிப் பெருமூச்சு வெளிப் பட்டது. பின்னர், அவரிடமிருந்து ஒற்றை வரியில் கட்டளை பிறந்தது:

சிவமகுடம் - பாகம் 2 - 16

‘‘நடவடிக்கையைத் துரிதப்படுத்துங்கள்!’’

பேரமைச்சர் தலையசைத்து ஆமோதிக்க, மாமன்னர் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது அறைக்கு  வந்து மஞ்சத்தில் விழுந்தார். இதோ, பொழுதுவிடிந்து பல நாழிகைகள் கழிந்தும் நீடித்துக்கொண்டிருக்கிறது, அவரின் ஆழ்ந்த துயில்.

இதே காலைப் பொழுதில் அங்கே பாண்டிமாதேவியாரின் மலைக் கிராமத்தின் சிவாலயத்துக்கு விஜயம் செய்திருந்தார், அந்தச் சிவனடியார். ஏற்கெனவே பாண்டிமா தேவியாருக்கு விபூதிப் பிரசாதத்துடன், அரிய தகவல் ஒன்றையும் கொடுத்துச் சென்ற அதே சிவனடியார்தான். கிராம மக்களோடு சேர்ந்து அமர்ந்து அவரிடம், சிவ பாடம் கேட்டுக்    கொண்டிருந்தார் தென்னவன் தேவியார்.

‘‘திருநெறி, அறநெறி, அருள்நெறி, செந்நெறி, வாழ்வியல்நெறி என்றெல்லாமும் அழைக்கலாம் நம் சிவநெறியை. இறைவன் இவ்வாறு இருக்கிறான்... நான் கண்டேன்... நீங்களும் கண்டு வணங்கி, இன்புறுங்கள் என்று பெரியோர்கள் காட்டிச் சென்ற தூய நெறியம்மா இது!’’

கொன்றை மலர் வண்ணமாயும் பொன்னிறமாயும் மேனி துலங்க, அன்றலர்ந்த தாமரையாய் திருமுகம் மலர்ச்சி காட்ட, பொலிவூட்டும் புன்னகை யோடு பொன்னார்மேனி யனின் புகழ்நெறியை மிக அற்புதமாய் சொல்லத் தொடங்கிய அந்தச் அடியாரிடம் பாண்டிமா தேவியார் கேட்டார்:

‘‘சுவாமி! சிவம் என்றால் என்ன?’’

`சிவம்’ என்ற சொல்லைக் கேட்டதுமே அதீதமாய் மலர்ந்தார் அந்த அடியார். அந்த மலர்ச்சி அங்கிருந்த அனை வருக்கும் பரவும் விதம் உரிய விளக்கத்தையும் எடுத்துரைத்தார்.

‘‘ `சிவம்’ என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நித்திய யோகம், நன்மை, பசு, வேதம், மங்களம் இப்படி பல அர்த்தங்கள் உண்டு ‘செம்மேனி எம்மான்’ என்பார்கள் பெரியோர்கள். ஆக சிவப்பு எனும் பதத்திலிருந்தும் சிவம் எனும் சொல் வந்திருக்கலாம் என்பது எனது யூகம்’’ ’’ என்று கூறிப் புன்னகைத்தவர், மேலும் தொடர முற்பட்டபோது, மீண்டும் ஒரு கேள்வியை முன்வைத்தார் தேவியார்.

‘‘இறைவனுக்கு உருவம் உண்டா?’’

‘‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவனை ஓர் உருவத்தில் அடக்கிவிட முடியுமா தாயே?’’ - பளிச்சென்று பதில் சொன்னார் அடியவர்.

‘‘எனில், இதோ கருவறையில் லிங்க மூர்த்தமாய் அருள்பாலிக்கிறாரே எம்பிரான்... அந்தத் திருவுருவுக்குக் காரணம் என்ன சொல்வீர்கள்?’’

‘‘நல்ல கேள்வி’’ என்றபடி, தோள்கள் குலுங்க சிரித்தவர், பாண்டிமா தேவியாருக்கு விளக்கம் அளிக்க முனைந்தார்.

‘‘நம் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதுதானே?’’

‘‘ஆமாம். அதிலென்ன சந்தேகம் தங்களுக்கு?’’

‘‘வைகையின் நீர் எனக்கு மிகப் பிடிக்கும். கைகளில் அள்ளிப் பருகினால் தேனாய் இனிக்கும்...’’

சிவமகுடம் - பாகம் 2 - 16

‘‘சுவாமி, என் கேள்விக்கு விடை பகராமல், வேறு என்னென்னவோ சொல்லிக்கொண்டி ருக்கிறீர்களே! வைகைத் தண்ணீரை பிடிக்காது என்று சொல்லும் பாண்டி தேசத்தவன் யாராவது உண்டா?’’

‘‘பொறு தாயே! பதிலைத்தான் சொல்ல வருகிறேன். நம் எல்லோருக்குமே வைகையைப் பிடிக்கும்தான். அதற்காக அந்தப் பிரவாகத்தை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சிவிடும் வல்லமை நமக்கு உண்டா என்ன?’’

‘‘அதெப்படி... நாங்கள் என்ன மீனாட்சியம்மை கல்யாணத்துக்கு வந்த பூதகணமா? வைகைப் பிரவாகத்தை அப்படியே வயிற்றில் வார்க்கும் வல்லமை சாதாரண மனிதர்களுக்கு ஏது?’’

‘‘ஹா... ஹா..! சரியாகச் சொன்னீர்கள் தாயே!  வைகையின் வெள்ளத்தைப் பாத்திரத்தில் ஏற்று அருந்துவது போன்று, பரம்பொருளின் சக்தியை இந்த உருவத்தால் பெற்று மகிழ்கிறோம்; சர்வ வல்லமை மிகுந்த பரம்பொருளை  சிறியதொரு உருவமாய் ஏற்று வழிபடுகிறோம் நாம்...’’

எளியதாக, மிக இனியதாக மேலும் தொடர்ந்தது சிவனடியாரின்  சிவ தத்துவ விளக்கங்கள். அவற்றை மிகக் கவனமாகச் செவிமடுக்கத் தொடங்கினார் பாண்டிமாதேவியார். நாம் அவர்களை இடையூறு செய்யவேண்டாம்.  வாருங்கள்... பெரியோர்கள் பலரும், ஞான நூல்கள் பலவும் விவரிக்கும் சிவலிங்க மகத்து வத்தை, இங்கே தனியே நாம் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

உலக உயிர்கள் உய்யும் வண்ணம் முழுமுதற் பொருளாகிய சிவபிரான் கொண்ட வடிவங்கள் உருவம், அருவம், அருவுருவம் ஆகியன. உருவம் - வடிவம் உள்ளது. இதில் பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்), ருத்ரன், மகேசன் எனும் நான்கு வடிவங்கள் உண்டு. அருவம் என்பது வடிவம் இல்லாதது. இது, சிவம், சக்தி, விந்து, நாதம் எனும் நான்காகும். அருவுருவம் - வடிவம் இருந்தும் இல்லாததுமான சிவலிங்கத் திருமேனிகள் ஆகும்.

கண்ணுக்குப் புலப்படும் உருவத் திருமேனிக்கும், புலப்படாத அருவத் திருமேனிக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.

`லிங்கம்' என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் எனப் பொருள். லிங்- லயம்; கம்- தோற்றம். அதாவது உலகு, தோன்றி ஒடுங்கும் இடம் லிங்கம். உலக முடிவில் அண்ட சராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் லிங்கம். அவ்வாறு லயித்த பொருட்கள், அதிலிருந்தே மீண்டும் வெளிப்படுகின்றன. `லிங்கம்’ என்பதற்கு `பிரகாசம்’ என்றும் பொருள் உண்டு. படைத்தல் உட்பட ஐந்தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது என்கின்றன ஞான நூல்கள். எனவே, லிங்க வடிவம் என்பது பரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

லிங்கத்துக்கு மூன்று பகுதிகள் உண்டு. அடிப்பகுதி- பிரம்ம பாகம். நடுப்பகுதி- ஆவுடை ஆகிய விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம்- ருத்ர பாகம். பூமிக்கு அதிபதி யான பிரம்ம பாகம், பூமிக்குள் மறைந்து நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவ பாகம், மேலோங்கி ஜோதி போல் ஒளியுடன் இருக்கும்.

அதேபோல், லிங்கத்தில் பல வகை உண்டு. குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம்.

தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப்பட்டவை பரார்த்த லிங்கம். தானாக உண்டா னவை சுயம்பு லிங்கம். உலக மாதாவான அம்பிகையால் வழிபடப்பட்டது தேவிக லிங்கம். தேவர்கள் பூஜித்தது திவ்ய லிங்கம். மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம். அசுரர்களால் பூஜிக்கப்பட்டது ராட்சச லிங்கம். இதற்கு உதாரணம் பாண லிங்கம். இது, பாணாசுரனால் பூஜிக்கப்பட்டதாம்!

சிவலிங்க வகை குறித்த இத்தகவலை அடியாரும் நம் பாண்டிமாதேவியாருக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். பாணாசுரன் குறித்து அவர் சொன்னதைக் கேட்டு வியந்த பாண்டிமாதேவியார், அவன் கதையை விரிவாகச் சொல்லும் படி கேட்டுக்கொண்டார்.

அசுரக் கதையை அடியவர் சொல்ல ஆரம்பித்த அதே நேரத்தில், மனிதகுல அசுரனாகப்பட்ட ஒருவனிடம் சிக்கிக் கொண்டிருந்தான்,  இளங்குமரன். பேரரசரின் பிடியிலிருந்து இளங்குமரன் விடுபட்டதும், கொடியவன் ஒருவனிடம் அவன் அகப்பட்டதும் விதி நிகழ்த்திய விளையாடலே!

- மகுடம் சூடுவோம்...

சிவமகுடம் - பாகம் 2 - 16

வித்தியாசமாக குதிரை வாகனத்துடன் கடலூர் சென்னப்ப நாயக்கன் பகுதி மலையாண்டவர் கோயிலில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.