
பட்டிக்கு ஏழு அண்ணங்காரனுங்க. ஏழு பேரும் அந்தூரு ஜமீனுக்கு, சுத்துப்போட்டு காவலாளு வேலை செய்யறவனுங்க. பட்டிக்குக் காலு கொஞ்சம் ஊனம்.
பட்டிக்கு ஏழு அண்ணங்காரனுங்க. ஏழு பேரும் அந்தூரு ஜமீனுக்கு, சுத்துப்போட்டு காவலாளு வேலை செய்யறவனுங்க. பட்டிக்குக் காலு கொஞ்சம் ஊனம். பெறப்புலயே ஆன கொறை அது. அதனால குடும்பத்துல எல்லாரும் பட்டியைத் தெய்வப் பெறப்பா வளர்த்தாக. குறிப்பா, அண்ணங்காரனுங்க தங்கச்சியை ‘தாங்கு தாங்கு’ன்னு தாங்குனானுங்க. எல்லாம் இருந்தும், ‘பொண்ணு காலுத்தாங்கி நடக்குறாள்’னு வந்த சம்பந்தமெல்லாம் வாசலோட போயிருச்சு.
இந்த நேரத்துலதான், நெசவு செய்யற அண்ணனும் தம்பியும் அந்தூருக்கு குடிவந்தானுவ. அண்ணன் பெரிய அவினாசி. தம்பி சின்ன அவினாசி. ஒருக்கா, ரெண்டு பேரும் தலைச்சுமையா பட்டுச் சேலைகளைச் சுமந்துக்கிட்டு வீதிவீதியா வித்துக்கிட்டு வந்தானுவ. ‘புடிச்ச சேலையை வாங்கிக்க புள்ளே’னு சொன்னான் பட்டியின் அப்பங்காரன். சின்ன அவினாசி, பட்டியைப் பார்த்தவுடனே மயங்கிட்டான். ‘கட்டுனா இவளத்தான் கட்டணும்’னு அப்பவே முடிவு பண்ணிட்டான். யாவாரம் முடிஞ்சு வீட்டுக்குப்போன அவினாசிக்கு, பட்டி நினைப்பாவே இருந்துச்சு. ‘அடேய் தம்பி... அவளுக்கு காலு பாதகமா இருக்கே... கவனிச்சியா’ன்னு கேட்டான் பெரியவன். ‘அதெல்லாம் பாத்தாச்சு... அவளுக்குக் காலா நான் இருப்பேன்... அவளைத்தான் கட்டிக்கு வேன்’னு உறுதியா நின்னான் சின்னவன்.

மறுநாள், தம்பியைக் கூட்டிக்கிட்டு பட்டி வீட்டுக்குப் போனான் பெரிய அவினாசி. அப்பங்காரனைப் பாத்து, ‘என் தம்பிக்கு உங்க பொண்ணைக் கட்டித்தாரியளா’னு கேட்டான். எல்லாப் பேருக்கும் சம்மதம். பட்டிக்கும் புடிச்சுப்போச்சு. ஊரு மெச்ச கல்யாணம் நடந்துச்சு. சீரு செனத்தினு வண்டி வண்டியா ஏத்தி விட்டானுக அண்ணங் காரனுங்க. போதாக்குறைக்கு, மச்சினன்மாரு நெசவு செஞ்சு கஷ்டப்படக் கூடாதுனு அவங்க பாத்துக்கிட்டிருந்த ஜமீன் வீட்டுக் காவலாளு வேலையையும் சீதனமா கொடுத்தானுங்க. பக்கத்தூருல எடம் வாங்கி வீடும் கட்டிக் கொடுத்தாச்சு. சின்ன அவினாசி பொண்டாட்டியை நல்லவிதமாப் பாத்துக்கிட்டான். பட்டி உண்டாகியிருக்கிறது தெரிஞ்சு அண்ணங்காரங்கெல்லாம் வந்து கொண்டாடிட்டுப் போயிட்டானுக.
எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருந்த நேரத்துல பெரிய அவினாசி மனசுக்குள்ள சாத்தான் புகுந்துட்டான். பட்டியும் சின்ன அவினாசியும் சந்தோஷமா இருக்கிறதைப் பாத்து பொறாமைப்பட ஆரம்பிச்சான். ‘தொட்டாக் குத்தம்’, ‘பட்டாக் குத்தம்’னு பேச ஆரம்பிச்சான்.
ஒருநா, அண்ணன் காவல் முடிஞ்சு, தம்பி காவல் தொடங்குற நேரம்... அன்னிக்கு, ஜமீன் வீட்டுக் குதிரை லாயத்துல வேலை. இதுதான் சாக்குன்னு பெரிய அவினாசி, லாயத்துல இருந்து ஒரு ராச குதிரையை ஓட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான். சின்ன அவினாசி இதை கவனிக்கலே. காலையில எழுந்து, குதிரைகளை எண்ணிப் பாத்தான். ராச குதிரையை மட்டும் காணோம். பதற்றமாகி, எல்லாப் பக்கமும் தேடிப் பாத்தான். எங்கேயும் அம்புடலே. ‘சரி... நடக்கிறது நடக்கட்டும்’னு நேராப் போயி, ‘ஜமீனய்யா... ராச குதிரையைக் காணுமுய்யா’னு கலக்கமாச் சொன்னான்.
கண்ணுக்குக் கண்ணா வளத்த ராச குதிரையைக் காணுமின்னா பொறுப்பாரா மனுஷன்? ‘ராத்திரிக்குள்ள குதிரை வந்தாகணும்... இல்லேன்னா மரண தண்டனைதான்’னு சொல்லி திருக்கை வாலால அடிச்சு அனுப்பிட்டாரு ஜமீன். உடம்பெல்லாம் ரத்தம் வழிய, சின்ன அவினாசி வீட்டுக்கு வந்தான். அவன் வந்த கோலத்தைப் பாத்து பட்டி பதறி ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா.
காடு கரையெல்லாம் தேடியலைஞ் சான் சின்ன அவினாசி. குதிரை எப்படிக் கிடைக்கும்..? அதைத்தான் பெரிய அவினாசி அசலூர்ல தொண்டிவாய்க் குதிரைக்காரன்கிட்ட வித்துப்புட்டானே... தம்பி தவிக்கிற தவிப்பை மனசுக்குள்ள ரசிச்சுக்கிட்டு, ஒண்ணும் தெரியாத மாதிரி உக்காந்திருந்தான் பெரிய அவினாசி.
ஊரெல்லாம் தேடியலைஞ்சும் குதிரை கிடைக்கலேங்கிற தகவலை ஜமீன்கிட்டப் போய் சொன்னான் சின்ன அவினாசி. ‘இந்தப்பய ஜமீனுக்குத் துரோகம் பண்ணிட்டான். இவனுக்கு மரண தண்டனை குடுக்கிறேன்’னுட்டாரு. தலைவெட்டி ஆட்களுக்குத் தகவல் போச்சு. அவனுக அருவாளை மலைப்படுகையில தீட்டி பளபளன்னு எடுத்துக்கிட்டு வந்துட்டானுக.
சேதி பட்டிக்கும் போச்சு. பதறி அடிச்சுக்கிட்டு, காலை இழுத்துக்கிட்டு ஓடியாறா மனுஷி. ஜமீன் கால்ல விழுந்து, ‘அய்யா, எம்புருஷனை விட்டுருங்கய்யா’னு கெஞ்சுனா... கதறுனா... ஜமீன் இறங்கி வரலே... எத்திவிட்டுட்டு, கையை அசைச்சான். தலவெட்டியான் அருவாளை ஓங்கி வீச, சின்ன அவினாசி தலை தரையில உருண்டுச்சு. அந்த ரத்தம் அந்த மண்ணையெல்லாம் செவப்பாக்கியிருச்சு. பாக்க மாட்டாம பட்டி மயங்கிச் சரிஞ்சுட்டா.

பட்டி ஆயி அப்பனும் அண்ணங்காரனுங் களும் ஓடி வாரானுவ. மயங்கிக் கெடந்த பட்டி மூஞ்சியில தண்ணிதெளிச்சு தெளிய வைக்குறானுவ. ஜமீன் காரியம்கிறதால யாரும் எதுத்துப் பேச முடியலே. சின்ன அவினாசி உடம்பையும் தலையையும் எடுத்துக்கிட்டுப் போயி அடக்கம் பண்ணிட்டு, தங்கச்சியை அழைச்சுக்கிட்டுப் போயிட்டானுவ.
மாசத்துக்கு ஓர் அண்ணன் வூடுன்னு முடிவாச்சு. சின்ன மனக்குறை கூட வராத அளவுக்கு முத அண்ணனும் அண்ணியும் பாத்துப் பாத்துச் செஞ்சாக... ரெண்டாவது அண்ணங்காரனும் தங்கச்சியை நல்லவிதமாப் பாத்துக்கிட்டான். இப்படியே அடுத்தடுத்துன்னு ஆறு மாசங்கள் ஓடுச்சு. ஏழாவது அண்ணங்காரன் வீட்டுக்குப் போனா பட்டி. அது நிறைமாசம் வேற. அந்தப் பய பொண்டாட்டி பெரிய கொடுமைக்காரி. அண்ணங்காரன் இல்லாத நேரத்துல, ‘வக்கத்தவ வந்து வீட்டுல உக்காந்துக்கிட்டு உசுர வாங்குறா’னு குத்தலாப் பேசவும் ஆரம்பிச்சா.
பட்டிக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு. ‘இனிமே யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது’னு முடிவு பண்ணி கிளம்பிட்டா. மலை, முகடு, பள்ளம், பாதாளம்னு நடந்து கிட்டே இருந்தா. திடீர்னு பிரசவ வலி வந்திடுச்சு. வயித்தைப் புடிச்சுக்கிட்டு விழுந்து கத்த ஆரம்பிச்சா. அந்தப் பக்கமா வந்த ஒரு பாட்டி, பட்டியைத் தன் குடிசைக்குத் தூக்கிட்டுப் போயி பிரசவம் பாத்தா. அழகான ஆண் குழந்தை பெறந்துச்சு.
பட்டிக்குப் பிரசவ மயக்கம் தீந்துச்சு. எழுந்து தன் மகனைப் பாத்தா. அப்பனை மாதிரியே மொகம். அப்படியே அள்ளிக் கொஞ்சிட்டு, பாட்டி கையில குழந்தையைக் குடுத்தா... ‘ஆயி... என் அண்ணங்காரனுங்க செல்வத்துல கொழிக்கிற ஆட்கள். என்னைத் தேடி இந்த வழியா வருவாக. அவுக கையில இதுதான் உங்க மருமகப்புள்ளைன்னு சேத்துருங்க’னு சொல்லிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பிச்சா.
ஆளரவமில்லாத ஓர் இடத்துல காஞ்ச மரங்களையெல்லாம் அள்ளி அடுக்கித் தீமூட்டுனா... தன் அண்ணனுங்களையும் பெத்தவுகளையும் நினைச்சு கண்ணீர் வடிச்சா... அப்படியே தீக்குள்ள பாஞ்சுட்டா...
பட்டியைத் தேடிவந்த அண்ணங்காரனுங்க கையில புள்ளையைக் கொடுத்தா கௌவி. பட்டி தீக்குளிச்ச எடத்தைக் கண்டுபிடித்து, அந்த இடத்துல விழுந்து புரண்டு அழுதானுங்க. நடந்ததையெல்லாம கேள்விப்பட்ட பெரிய அவினாசி, ‘தம்பிக்கும் தம்பி குடும்பத்துக்குத் துரோகம் பண்ணிட்டமே’ன்னு குற்ற உணர்வுல, ஜமீன்கிட்டப் போயி உண்மையைச் சொல்லிட்டு, கிணத்துல விழுந்து மாஞ்சுபோனான். ‘தப்பா முடிவு பண்ணி ஒரு குடும்பத்தை அழிச்சுட்டோமே’னு ஜமீனும் மாரடைப்பு வந்து செத்துப்போனான்.
ஏழு அண்ணங்காரனுங் களும் தங்கச்சியைச் சாமியா வெச்சு படைப்புப் போட்டுக் கும்பிட ஆரம்பிச்சானுக. அவனுக நினைப்புல கலந்து, உறவுல கலந்து, உணர்வுல கலந்து சந்ததி தாண்டி இன்னிக்கு வரைக்கும் அந்தக் குடும்பத்துல ஒருத்தியா வாழ்ந்துக்கிட்டிருக்கா பட்டி.
கரூருக்குப் பக்கத்துல வேப்பங்குடினு ஓர் ஊரு இருக்கு. அங்கேதான் ஒரு பீட வடிவத்துல உறைஞ்சிருக்கா பட்டி!
- வெ.நீலகண்டன்,
ஓவியங்கள்: ஸ்யாம்
படம் : நா.ராஜமுருகன்

வாங்க பேசலாம்!
நாம் பேசும்போது மொபைல் அல்லது லேப்டாப்பில் எதையாவது மேய்ந்துக் கொண்டோ, பேப்பர் படித்துக் கொண்டோ, `உம்' கொட்டுவார்கள். பிறகு, திடீரென்று தூங்கி எழுந்ததைப் போல, நாம் சொன்னதையே திருப்பி கேட்பார்கள். `நான் உங்ககிட்ட அஞ்சு நிமிஷம் பேசிக்கலாமா? வீட்டுச் செலவைப் பற்றி...' என்று என் கணவரிடம் கேட்பேன். ஒருவேளை கூடுதல் நேரம் எடுக்க சாத்தியம் போல தெரிந்தால், இரவு பேசலாம் என்பார். நாம் பேச வேண்டிய நபர், பொதுவாக உதாசீனப்படுத்துபவராக இருந்தால் அல்லது வேலைப்பளுமிக்க நபராக இருந்தால், என்ன பேசப் போகிறோம், உத்தேசமாக எத்தனை நேரம் எடுக்கும் என்பதைச் சொல்லிவிட்டுத் தொடங்கிப்பாருங்கள். ஆனால், ஐந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு ஒரு மணி நேரம் பேசினால், `இதுக்குத்தான் முதல்லயே தப்பிச்சிருக்கணும்' என்று கேட்பவர் நினைக்கக்கூடும்!