Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 11

திருவருள் செல்வர்கள்! - 11
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 11

ஓவியங்கள்: ரமணன்

திருவருள் செல்வர்கள்! - 11

ஓவியங்கள்: ரமணன்

Published:Updated:
திருவருள் செல்வர்கள்! - 11
பிரீமியம் ஸ்டோரி
திருவருள் செல்வர்கள்! - 11

ஏகம்பவாணன்

யர்ந்த நிலையில் உள்ளவர் களைப் பார்த்து ஏங்குவது என்பது, என்றும் உள்ளதுதான். நல்லதும் கெட்டதும் என்றும் உண்டு; எங்கும் உண்டு. இதை உணராமல், “காலம் இப்ப கெட்டுப்போச்சு. அந்தக் காலத்துலல்லாம்...'' என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை!

 பூமி தோன்றியதிலிருந்து காலம் கெட்டுப்போகவில்லை; கெட்டுப் போனது நாம்தான். கெட்டுப்போன நம்மைத் தேடிப்பிடித்து மறுபடியும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியே  ‘திருவருள் செல்வர்கள்’ எனும் இந்தத் தொடர்.

திருவருள் செல்வர்கள்! - 11


தொடக்கத்தில் சொன்னதுபோல், அடுத்தவர்கள் பார்த்து ஏங்கும் அளவுக்கு, அதுவும் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் பார்த்து ஏங்கும் அளவுக்கு வாழ்ந்த உத்தமர் ஒருவரின் சரிதத்தை இந்த அத்தியாயத்தில் காண்போம்.

ஆயிரம் ஏர்கள் கொண்டு, விவசா யம் செய்த வேளாளகுலத் திலகர், வாணன். `இறைவன் என்னைப் படைத்ததே, உழுது அடுத்தவர்க்கு உணவு போடத்தான்' எனும் எண் ணம் கொண்டவர் அவர்.

என்ன செய்வது? காய்த்த மரம் தான் கல்லடி படும்; நல்லவர்களுக் குத்தான் துன்பங்கள் அதிகமாக வரும்! வாணனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. வாணனும் அவர் மனைவியும் மகிழ்ந்தார்கள். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க வேண்டும் அல்லவா?

திருவருள் செல்வர்கள்! - 11

ஜோதிடர்களை வரவழைத்து, பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத் தார் வாணன். ஜோதிடர்கள் மகிழ்ச் சியுடன் ஜாதகம் எழுத உட்கார்ந் தார்கள். `வாணன் பணக்காரர். அள்ளிக் கொடுப்பார்’ என்ற மகிழ்ச் சியா... இல்லவே இல்லை! வாணன் செல் வந்தர் மட்டுமல்ல, நல்ல குணங்களும் பண்புகளும் வாய்க்கப் பெற்றவர். ‘அப்படிப்பட்ட நல்லவர் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு, நம்மை ஜாதகம் கணிக்கக் கூப்பிட்டார்களே’ என்ற மகிழ்ச்சிதான் ஜோதிடர்களுக்கு.

அவர்களும் பொறுப்பாகக் கணித் தார்கள். கணித்து முடிந்ததும் ஜோதி டர்களின் முகங்கள், ஒட்டுமொத்தமாக இருண்டுபோயின. அதைக் கவனித்த வாணன் கேட்டார்: “என்ன ஆயிற்று? எதுவாக இருந்தாலும், மறைக்காமல் தயங்காமல் சொல்லுங்கள்” என்றார். 

“இந்தக் குழந்தையின் பெற்றோர்களது  ஆயுள் அதிவிரைவில் முடிந்துவிடும்” என்றார்கள் ஜோதிடர்கள்.

அந்த ஜோதிடர்கள் திறமைசாலிகள். அவர்களது வாக்கு தப்பாது. ஆனால், அதற்காக வாணன் கலங்கவில்லை. அவர்களுக்கு உண்டான மரியாதை களைச் செய்து, அவர்களை வழியனுப்பி வைத்தார்.

ஜோதிடர்கள் சொன்னதுபோலவே, சில நாள்களில் வாணனின் மனைவி பூவுலக வாழ்வை நீத்தார். பார்த்தார் வாணன்... ‘எப்படியும் நமக்கும் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. குழந்தை யின் பொறுப்புக்கும் பாதுகாப்புக்கும் உறவினர் யாரையும் நம்ப முடியாது. அவர்கள், குழந்தையின் கதையை முடித்துவிட்டுச் செல்வங்களைச் சூறை யாடுவார்கள். ம்... என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவர், ஒரு முடிவுக்கு வந்தார்.

வாணனின் பணியாளர்களில் ஏகன் சாம்பன் என்பவர் மிகமிக நல்லவர்.நல்ல குணம், சத்தியம் தவறாத தன்மை கொண்டவர். அவரைக் கூப்பிட்ட வாணன், தன் மகனையும் செல்வத்தையும் அவரிடம் ஒப்படைத்தார்.

“அப்பா! இந்தச் சிறுவனை உன் சொந்தப் பிள்ளைபோல எண்ணி வளர்த்து ஆளாக்கு. இது உன் பொறுப்பு” என்றார்.

பணியாளர் திகைத்தார். வாணனோ, “கவலைப்படாதே! உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். எதன் மேலும் ஆசைப் படாதவன் நீ. கொல்லைப்புறத்தில், ஓரிடத்தில் ஏராளமாகப் பெரும்பொருள் புதைத்து வைத்திருக்கிறேன். அதையும் நீயே எடுத்துப் பையனை வளர்ப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்!” என்றார். அதன் பிறகு, சில தினங்களில் வாணன் இறந்தார்.

உத்தமப் பணியாளரான ஏகன் உள்ளம் கலங்கினாலும், சிறுவனைக் கொண்டு, அவன் தகப்பனாருக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செய்து முடித்தார். அதன்பின் பையனை ஒரு நல்ல இடத்தில் வைத்து, பொறுப்பாக வளர்த்து வந்தார்.

சிறுவனுக்கு ஐந்து வயதானதும் அவனுக்குக் கம்பரைக் கொண்டே கல்வி கற்பிக்கச் செய்தார். சிறுவன் நன்கு கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றதும், வாணன் குலத்திலேயே ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணமும் செய்து வைத்தார், அந்த உத்தமப் பணியாளர்.

சிறுவனின் பெற்றோர்களிடம் ‘திரு’ இருந்தது; பணியா ளரிடம் ‘அருள்’ இருந்தது. இரண்டும் சேர்ந்து உருவான சிறுவன், திருவருள் செல்வனாகவே மாறினான். இப்படிப் பட்ட ஓர் இணைப்பு எல்லோருக்கும் வாய்க்காது.

சிறுவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர், யாருக்கும் தெரி யாது. திருமணம் ஆகி விட்டதால், இனி அவனை வாலிபன் என்றே பார்க்கலாம்.

வாலிபனும் அவன் மனைவியுமாக சந்தோஷமாக வாழத் தொடங்கிய வேளையில், “தம்பி! உன் தந்தை சொற்படி, உன்னை நல்லமுறையில் வளர்த்துத் திருமணமும் செய்து வைத்துவிட்டேன். இந்தா... இனி பொறுப்பு உன்னுடையது” என்ற பணியாளர், விவரங்களையெல்லாம் சொல்லி, சொத்துகளை அப்படியே அவனிடம் ஒப்படைத்தார்.

கூடவே, “தம்பி! இவற்றைத் தவிர, கொல்லைப் பக்கத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஏராளமான செல்வத்தைப் புதைத்து வைத்திருப்பதாக முதலாளி சொல்லியிருக்கிறார். மறக்காமல், அதையும் எடுத்துக்கொள்!” என்ற விவரத்தையும் தெரியப் படுத்தினார் பணியாளர்.

விவரமறிந்த வாலிபன், கொல்லைப்பக்கத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த புதையலை எடுக்க முயற்சி செய்தான்.  அவன் ஆணைப்படி பணியாள் ஒருவன் புதையல் இருக்கும் இடத்தைத் தோண்ட முயற்சி செய்யும்போது, வாயிலும் மூக்கிலும் ரத்தம் கக்கி விழுந்தான். தொடர்ந்து ஏராளமான பெரும் பெரும் கருங்குளவிகள் பறந்து வந்து தாக்கின.

ஆகவே, தனது முயற்சியை நிறுத்திய வாலிபன், ‘மேலே என்ன செய்யலாம்?’ என்று யோசித்தான். யோசனைக்கான பதில், அன்றிரவே அவனுக்குக் கிடைத்தது.

வாலிபனின் கனவில் ஒரு பூதம் தோன்றி, “இவ்வளவு காலமாக நான் காவல் காத்து வரும் இந்த ஏழுகோடி பொன் னையும், நீ கொண்டு போகப் பார்க்கிறாயா? நடக்காது. அது உனக்கு வேண்டுமானால் அருள், அன்பு, உண்மை என நல்லியல்புகள் அனைத்தும் கொண்ட ஒருவனைப் பலி கொடுக்கவேண்டும். அப்போது, புதையலை உன்னிடம் ஒப்படைப்பது மட்டுமல்லாமல், உனக்குப் பணியாளனாக அடங்கி வேலையும் செய்வேன்” என்றது.

கனவு கலைந்தது விழித்தெழுந்த வாலிபன், தன்னை வளர்த்த ஏகன் சாம்பனை அழைத்து, அவரிடம் கனவைப் பற்றி விவரித்தான். அதற்கு ஏகன் சாம்பன், “கட்டாயம் முயற்சி செய்து, அந்தப் புதையலை அடையத்தான் வேண்டும்” என்றார்.

“அதற்காக உயிர்ப்பலி கொடுப்பதா'' என வாலிபன் கேட்க, ஏகன் சாம்பன் தொடர்ந்தார்.

திருவருள் செல்வர்கள்! - 11

“தம்பி! நான் ஏதோ நல்லவன் என்று உன் தந்தை சொல் லிக் கொண்டிருப்பார். நான் அப்படியானவனா என்று எனக்குத் தெரியாது. எது எப்படியோ, என்னைப் பலி கொடுத்து புதையலைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றார்.

நடுங்கினான் வாலிபன். “சிவசிவா! என்ன பேசுகிறீர்கள்? அன்போடு என்னை வளர்த்த நீங்கள் இப்படிச் சொல்ல லாமா; என்னைப் பெற்ற தந்தையைவிட உயர்ந்தவர் அல்லவா நீங்கள்? இதுவரைக்கும் நீங்கள் செய்தவற்றுக்கு பிரதியுபகாரம் செய்ய முடியுமா? இருப்பது போதும். அந்தப் புதையல் வேண்டாம். அதை அந்த பூதமே வைத்துக்கொள் ளட்டும். இனி, அந்தப் பக்கமே நான் போகப் போவதில்லை” என்றான்.

அங்கிருந்து அகன்ற ஏகன்சாம்பனோ, ‘என்றாவது ஒருநாள் இறந்துதானே ஆக வேண்டும். யாருக்கும் பலனின்றி வீணாக இறப்பதைவிட, நம் எஜமான னின் மகனுக்காக இறப்பது உயர்ந்தது அல்லவா' என்று எண்ணி, நள்ளிரவில் புதையல் இருக்கும் இடத்துக்குப் போய், தன்னையே பலி கொடுத்தார்.

உடனே, வாலிபனின் கனவில் தோன்றிய பூதம், “உன் பண்ணையாள் தன்னையே பலி கொடுத்துவிட்டார். உத்தமர் அவர். இனி, உன் தந்தையின் புதையலை நீ எடுத்துக்கொள்ளலாம்.சொன்னபடி, இனி உனக்கு நான் பணி யாளனாக இருப்பேன்”என்றது.

திடுக்கிட்ட வாலிபன் புதையல் இருக் கும் இடத்துக்குப் போய்ப் பார்த்தால், புதையல் இருந்த இடத்தில், ஏகன் சாம்பன் ரத்தம் சிதறி, கழுத்தறுபட்டுக் கிடந்தார். 

அவர் நிலையைப் பார்த்துக் கதறிய வாலிபன், தன் கைகளாலேயே அவருக் குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகள் எல்லாவற்றையும் செய்து முடித்தான்.

அது மட்டுமல்ல, எந்தவிதமான தீய எண்ணமும் இல்லாமல் பொறுப்போடு தன்னை நல்லவனாக வளர்த்த பணியாளரான ஏகன்சாம்பனுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, அவர் பெயரை முதலில் வைத்து; தனக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்த கம்பரின் பெயரை அடுத்ததாக வைத்து, மூன்றாவதாக தன்னைப் பெற்ற தந்தை யின் பெயரையும் வைத்து, `ஏக கம்ப வாணன்’ எனத் தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டான் வாலிபன்.

ஏககம்பவாணன் என்பதே நாளடை வில் மருவி, ஏகம்பவாணன் என ஆனது. ஏகம்பவாணனின் புகழைப் பழந்தமிழ் நூல்கள் பலவும் பலவாறாகக் கூறுகின் றன.

ஏகம்பவாணன், தமிழ் அறிஞர்கள் என்றால் தன்னையே மறந்துவிடுவார். தமிழ் அறிஞர்கள், எந்தக் காரணத்தை முன்னிட்டும் கஷ்டப்படக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தார் அவர்.

அதுமட்டுமல்ல, அவருக்குத் தெரிந்து யாரும் பசியால் வாடக் கூடாது. இவர் இப்படியென்றால், ஏகம்பவாணனுக்கு வாய்த்த மனைவியோ, தங்கத்தில் பதித்த வைரமாக இருந்தாள். தூய்மையான உள்ளம், கொடுத்து வாழ்வது, அன்பு, இரக்கம்... அனைத்துக்கும் மேலாகக் கல்வி, தைரியம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வளாக விளங்கினாள் அவள்.

இப்படிப்பட்ட ஏகம்பவாணரின் புகழ் எல்லா இடங் களிலும் பரவியது. ஏகம்பவாணரின் ஈகை குணம், அஞ்சாமை ஆகியவை கண்டு அரசர்களே, அவரிடம் மரியாதையாகத்தான் நடந்துகொண்டார்கள்.

ஒரு தருணத்தில் ஏகம்பவாணரைப் பார்க்க சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் அவரின் மாளிகைக்கு வந்தார்கள். அவர்கள்வந்த நேரம், ஏகம்பவாணர் வயலுக்குப் போயிருந்தார். வந்த மன்னர்களிடம், ஏகம்பவாணர் வயலுக்குப் போயிருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது.

என்ன இருந்தாலும் அவர்கள் அரசர்கள் அல்லவா? அகங்காரமும் இகழ்ச்சியும் வார்த்தைகளாக வெளிப்பட்டன, அவர்களிடமிருந்து.

அரசர்கள் மூவரும் சிரித்தபடியே மிக இகழ்ச்சியாக, “ஓ! நாத்து புடுங்கி நடப் போயிருக்கிறாராக்கும்” எனக் கேட்டார்கள்.

உள்ளிருந்தபடியே அதைக் கேட்ட ஏகம்பவாணரின்  மனைவி கொதித்துப்போனாள். கல்வி கேள்விகளில் சிறந்த அந்த மாதரசி, ஒரு பாடல் மூலமாகவே மூவேந்தர்களுக்குப் பதிலடி கொடுத்தாள்.

சேனை தழையாக்கச் செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த அருஞ்சேற்றின் - மான
பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டான் ஏகம்பன்
மூவேந்தர் தங்கள் முடி


என அந்தப் பெண்மணி எழுதிய ஓலை மூவேந்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பகைவர்களின் சேனைகளை எல்லாம் தழை உரமாகப் போட்டு, அவர்களின் ரத்தத்தையே நீராகப் பாய்ச்சி, யானைகள் மிதித்துச் சேறாக்கிய வயலில், மூவேந்தர்களின் மணி மகுடங்களைப் பறித்து நாற்றாக நடப் போயிருக்கிறார் ஏகம்பவாணர் - என்பதே அந்தப் பாடலின் கருத்து. 

இதைப் பார்த்து உணர்ந்ததும் மூவேந்தர்களும் மன்னிப்பு கேட்ட படி அங்கிருந்து விலகினார்கள். மன்னர்களாக இருந்தாலும் வழி தவறிய அவர்களுக்கு அறிவு புகட்டின - ஏகம்பவாணரின் மனைவி யின் கல்வியறிவும் நேர்மைத் துணிச்சலும்!

வாணனிடம் திரு, பணியாளரான ஏகன்சாம்பனிடம் அருள், கம்பரிடம் கல்வி எனும் செல்வம். இந்த மூன்றும் சேர்ந்து வளர்க்கப் பட்ட திருவருட்செல்வர் ‘ஏகம்பவாணன்’. தூய மனம், நன்றி மறவாமை, தியாகம் எனப் பலவிதங்களிலும் வழிகாட்டும் வரலாறு இது. உணர்வோம் உயர்வோம்!

- திருவருள் பெருகும்...

- பி.என்.பரசுராமன்

ஓவியங்கள்: ரமணன்

திருவருள் செல்வர்கள்! - 11

பத்ர பாத்திரம்!

பூஜையின்போது நாம் அருகில் வைத்துக் கொள்ளும் தண்ணீர்ப் பாத்திரத்தின் பெயர் பஞ்சபாத்திரம்.

`பஞ்சபத்ர பாத்திரம்' என்பதே சரி. நாளடைவில் பஞ்சபாத்திரம் என்றாகிவிட்டது. பூஜைக்குப் பயன் படுத்தும் பஞ்ச (ஐந்து) பத்ரங்களான (இலைகள்) துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம் ஆகிய ஐந்தும் சிறந்தவை. இவற்றைக் கொண்டு தீர்த்தம் விடும் பாத்திரத்துக்கு பஞ்சபத்ர பாத்திரம் என்றுபெயர். இதுவே பின்னாளில் சுருங்கி பஞ்ச பாத்திரமாகிவிட்டது!

- முருகேசன், தேனி