Published:Updated:

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
News
`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு, ஆடி அமாவாசையை முன்னிட்டு நானும் என் நண்பர்கள் ஐந்து பேரும் சேர்ந்து சதுரகிரி மலைக் குச் சென்றோம். கடுமையான மலைப் பாதையைக் கடந்து சுந்தர மகாலிங்க தரிசனம், சந்தன மகா லிங்க தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்த அடியார்கள் முகாமில் தங்கினோம்.

மறுநாள் காலையில் மலைக்கு மேலே இருந்த தவசிப் பாறைக்குச் செல்ல விரும்பினோம். ஆனால் அங்கிருந்த அடியார்கள் சிலர் தடுத்தனர்.

`‘ஆடி அமாவாசை தினத்தில் எல்லோருமே தவசிப் பாறைக்குச் சென்று அங்கிருக்கும் குகைக் குள் செல்வது, புகைப்படம் எடுத்துக்கொள்வது, வீடியோ எடுப்பது என்று குதூகலம் அடை கிறார்கள். ஆனால், மலையில் அருவமாக இருக் கும் சித்தர்கள் அதை விரும்புவதில்லை. எனவே அங்கே போகவேண்டாம்'’ என்றார்கள் அந்த அடியார்கள்.

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

ஆனால், எங்களுக்கோ தவசிப் பாறையைத் தரிசிக்கும் ஆவல் அதிகமிருந்ததால், அடியார்கள் சொன்னதைக் கேட்காமல் கிளம்பிவிட்டோம். வழியில் காவல் துறையினரும் வனத்துறையினரும் எங்களைத் தடுத்தார்கள்.

அதனால், மாற்றுப்பாதையில் செல்லலாம் என்ற திட்டத்துடன், நாங்கள் இருந்த இடத்தி லிருந்து சற்று இறக்கமாகச் செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கத் தொடங்கினோம். இப்படி, தடைகளை மீறி பயணம் செய்த எங்களுக்கு வாய்த்த அனுபவம் தக்க பாடமாகவே அமைந்தது. ஆனால், அதுவும் எங்களுக்கான கொடுப்பினை என்றே கருதுகிறேன்.

நாங்கள் சற்று கீழே இறங்கி, ஓரிடத்திலிருந்து மீண்டும் மலையேற்றத்தில் பயணிக்கத் தொடங் கினோம். மேலே செல்லச் செல்ல அந்தப் பாதை அடர்ந்த வனத்தின் வழியே எங்களை இட்டுச் சென்றது. குனிந்தும், நிமிர்ந்தும், தவழ்ந்துமாகச் சென்றுகொண்டிருந்தோம்.

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு பயணிக்க முடியாமல் மாட்டிக்கொண்டோம். மேலே செல்லவும் முடியாமல், கீழிறங்கும் வழியும் தெரியாமல் தவித்தோம். கடும் நிசப்தம் நிலவிய அந்த இடத்தில், சிறு சத்தமும் அதீத பயத்தை விளைவித்தது எங்களுக்கு!

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்ஒருவழியாக மலைமுகட்டில் காணப்பட்ட வெட்டவெளியில் வந்து நின்றோம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைத்தொடரின் அழகைக் கூட ரசிக்க முடியாதபடி, `எங்கே வனவிலங்குகள் வந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் உறைந்து நின்றோம். அந்தத் தருணத்தில் மகாலிங்கத்தைத் தவிர வேறு புகல் ஏது? எனவே, ‘மகா லிங்கத்துக்கு அரோகரா; சதுரகிரி வாசனுக்கு அரோகரா’ என்று தொடர்ந்து சத்தமாகக் கூறத் தொடங் கினேன்; நண்பர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டார்கள்.

சில நிமிடங்களில், எதிரிலிருந்த புதரில் சலசலப்பு ஏற்பட்டது. நாங்கள் அச்சத்தில் உறைந்துபோனோம். ஏதோ வனவிலங்குதான் எங்களை நெருங்கி விட்டது என்ற பயம் எங்களுக்கு. ஆனால்,  சில நொடிகளில் ஆறரை அடி உயரம் கொண்ட கட்டுமஸ்தான மனிதர் ஒருவர் வெளிப் பட்டார். ஜடாமுடியும், சிவந்த மேனியும், நீலநிறக் கண்களும் கொண்ட அதிசய புருஷராகக் காணப் பட்டார். ஒருவாறு அச்சத்திலிருந்து விடுபட்ட நாங்கள் அவரிடம், ‘இந்தப் பக்கமாகக் கீழே போக லாமா?’ என்று தயங்கியபடி கேட்டோம். ‘உம்...உம்...’ என்று சொல்லியபடி எதிரிலிருந்த மற்றொரு புதருக்குள் சென்று மறைந்துவிட்டார்.

`பாதை காட்டினான் பரமன்!' - சதுரகிரியில் சிலிர்க்கும் அனுபவம்

அவர் சொன்னது எங்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் மேற்கொண்டு எதையும் சிந்திக்கத் தோன்றாமல், அவர் சுட்டிக்காட்டிய பாதையின் வழியே கீழே வந்து சேர்ந்தோம். அதன்பிறகே மனதில் நிம்மதி பிறந்தது.

அத்துடன், எங்களுக்கு வழிகாட்டிய அந்த நபர் குறித்த நினைவும் வந்தது. ‘அடடா...  அந்த மனிதர் யார், எங்கிருந்து வந்தார் என்பதை விசாரிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று வருந்தினோம். கூடவே, முதல் நாள் சந்தனமகாலிங்க சுவாமி கோயி லின் நிர்வாகி கூறியது எங்கள் நினைவுக்கு வந்தது.

‘`இந்த மலையில் ஆயிரம் அதிசயங் கள் நடக்கும். அவற்றை அனுபவிக்கும் தருணத்தில் உங்களுக்கு விழிப்பு உணர்வு இருக்காது. விழிப்பு உணர்வு வரும்போதோ, அந்த அதிசயம் தெளி வாக நினைவில் இருக்காது’’ என்றார் அவர். அது உண்மைதான் என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்தோம். சாட்சாத் அந்த மகாலிங்கமே சித்தர் உருவில் வந்து வழிகாட்டி எங்களைக் காத்தருளியிருக்கிறார் என்றே கருதுகிறேன். நம்பி வரும் அடியார்களை அந்தச் சதுரகிரிநாதன் எப்போதும் கைவிடுவதில்லை.

- வி.பாபு, சென்னை-4