மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - பாகம் 2 - 17

சிவமகுடம் - பாகம் 2 - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - பாகம் 2 - 17

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

ரம் என்பது யாது? தேவைப்படுவது தேவைக்கேற்ப பொருந்தி நிற்பது வரம்! குலமகளுக்கு நற்குணங்கள் வரம். குழந்தைக்கு இளமையில் வறுமையின்மை வரம். வீரனுக்குப் பழுதில்லாத தேகம் வரம். சகல மனிதர்களுக்கும் முதுமையில் பிணியின்மை ஒரு வரம். உலகுக்கு உயிர்களே வரம்; உயிர்களுக்கோ அகமும் புறமும் ஒரு குறையும் இல்லாத எண்ணமும் செயலும் வரம். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் வரத்தின் வளம் குறித்து!

இந்தப் பாண்டியத் திருநாடும் இருபெரும் வரங்களைப் பெற்றிருக்கிறது. தேவையான தருணத்தில் கிடைத்த மிகத் தேவையான வரங்கள் அவை. அந்த வரங்களில் ஒன்று, தென்னவர் மாறவர்மன் அரிகேசரியாகிய கூன்பாண்டியர். மற்றொன்று சோழர்குலக் கொழுந்தாகத் திகழ்ந்து, பின்  பாண்டிமாதேவியாரான  மங்கையர்க்கரசியார். காலம் மிகப் பொருத்தமாகவே இவர்களைப் பாண்டிய தேசத்துக்குப் பரிசளித்திருக்கிறது. இவர்கள் மட்டும் இல்லையெனில், முத்துக் குளிக்கும் பாண்டியதேசத்தை ரத்தத்தில் குளிக்கச் செய்திருப் பார்கள், எதிரிகள். தேசம் நிறைந்திருக்கும் வளமைக்கும் உழைப் புக்கும் நிகராக தன் அகத்திலும் புறத்திலுமாக வஞ்சகம் நிறைந்த எதிரிகளையும் அல்லவா சுமந்து நிற்கிறது இந்தத் தென்னாடு. அப்பப்பா... எத்தனை சூழ்ச்சிகள், எவ்வளவு காய்நகர்த்தல்கள்?

அத்தனையையும் தம் மதியூகத்தால் வென்றுகொண்டிருக் கிறார் எனில், தென்னவர் கூன்பாண்டியர் இந்தத் தேசத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வரம் அல்லவா? காட்டுக்களிறுகளைப் பழக்கிவைத்து, சேரனின் சிறுபடையை முடக்கிப் பின்னோடச் செய்கிறார் எனில், அவரின் வல்லமையை என்னவென்பது?

சிவமகுடம் - பாகம் 2 - 17

பண்பிலும் செயலிலும் பழுதில்லைதான் என்றாலும், அவரி டம் உள்ள சிறுகுறை... சமணம் சார்ந்திருக்கிறார் பேரரசர்.

இது எப்படி குறையாகும்? சான்றோர் நிறைந்த சமணம், மன்னனைச் செம்மையாக்குமே தவிர, சீரழிக்குமா என்ன?!

எதிலும் எவ்விதத்திலும் நம்பிக்கை கொள்ளாது, `கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ எனும் நிலைப்பாட்டுடன், தம்மை ஒரு சுயம்புவாகவே கருதி ஏமாறும் - சுயபுத்தி இல்லாத சில அறிவீலிகளைப் போன்று அல்லாமல், ஏதோவொரு நம்பிக்கை யின் அடிப்படையில், ஒன்றைச் சார்ந்திருப்பது தவறாகுமா?

தவறில்லைதான்... அவர் சமண மதத்தைச் சார்ந்திருப்பது தவறில்லைதான். ஆனால், உன்னதமான அந்த மதத்தைப் போர்வையாக்கிக்கொண்டு சமண அடியார்களாக உலவிக் கொண்டிருக்கும் சில போலிகளையும் எதிரிகளின் கைக்கூலி களையும், அவர்களின் வேஷத்தையொட்டி எளிதில் நம்பிவிடு கிறார் பேரரசர். அதையொட்டிய அவர் எடுக்கும் சில முடிவுகள்... முழுநிலவைக் கிரகணம் பிடித்ததுபோன்று, பாண் டிய தேசத்துக்குப் பழுதிழைக்கலாம் அல்லவா? அதுவெ குறை!

அதற்கு வாய்ப்பு உண்டுதான் என்றாலும், பாண்டியர் எனும் அந்தப் பூரண நிலவுக்கு எந்தச் சூழலிலும், எந்தத் தருணத்திலும் எவ்வித களங்கமும் நேராமல் பார்த்துக்கொள்வார், எங்கள் மங்கையர்க்கரசியார். அவர், இந்தப் பாண்டிய தேசத்துக்கும் எங்கள் பாண்டியருக்கும் கிடைத்த பெரும் வரமாயிற்றே! விட்டு விடுவாரா என்ன?

- இப்படியான எண்ண அலைகளோடு, இதோ இப்போதும் தேவியாரின் ஆணையை நிறைவேற்ற புரவியில் விரைந்து கொண்டிருக்கிறார், பேரமைச்சர் குலச்சிறையார். அரபு தேசத்தின் பரிசாக வந்துசேர்ந்து, அவரின் அதீத அன்புக்குப் பாத்திரமாகிவிட்ட அந்த வெண்புரவி, ஒளிவேகத்தில்... இல்லையில்லை மனோவேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தது.

அவசியமின்றி இப்படியொரு வேகத்தில் பயணிக்கமாட்டார் குலச்சிறையார். அவரின் புரவி சீறிப்பாய்கிறது எனில், ஒன்று அது போருக்காக இருக்கவேண்டும் அல்லது எதிரிகளை வேட்டையாடுவதற்காக இருக்கும். எனில், இப்போதைய இந்தப் பாய்ச்சலுக்குக் காரணம்? பெரும்போர், சத்ருவேட்டை இரண்டும்தான். என்றாலும் அவற்றைவிடவும் அதிமுக்கியக் காரணம் ஒன்றுண்டு.

சிவமகுடம் - பாகம் 2 - 17

அது, பாண்டிமாதேவியாரின் கட்டளை!

எவ்வளவு விரைவில் சாத்தியமாகுமோ அவ்வளவில் தேவியாரின் ஆணையை நிறைவேற்றியாக வேண்டும். ஆம்! பாண்டியரின் சிறைக்கோட்டத்திலிருந்து நம்பிதேவனை சிறை மீட்க வேண்டும். அதற்கு முதலில் இளங்குமரனை மடக்கியாகவேண்டும்.

இளங்குமரன் சத்ரு அல்லவே! அவனை வேட்டையாடவேண்டிய அவசியம் என்ன?

அவன் அணுக்கன்தான். ஆனால் மாமன்னரின் பொருட்டு அவன் சென்றிருக்கும் காரியம் மிக ஆபத்தானது. அதன்பொருட்டு நிச்சயம் அவன் எதிரிகளிடம் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.   அப்படியொரு சம்பவம் நிகழ்வதற்குள் எதிரிகளை இனம் கண்டு, அவர்களது இடம் கண்டு, வேட்டை யாடிவிடவேண்டும்.

இந்தத் துடிப்புடனும் ஆவேசத்துடனும்தான் புரவியை விரட்டிக் கொண்டிருந்தார் பேரமைச்சர். அவரின் இந்த வேகத்தை, சட்டென்று அவருக்கு இடப்புறத்தில் வனப்பகுதியிலிருந்து கேட்ட பெரும் நகைப்பொலி ஒன்று தடுத்து அணைபோட்டது!

சூழ்கொண்ட கருமேகங்கள் உரசிக்கொள்ள, விண்ணில் மிகப்பெரிதாக இடிஇடிப்பது போன்று கர்ணக்கொடூரமாக ஒலித்த அந்த நகைப்புக்குச் சொந்தக்காரன், இன்னும் இரண்டொரு நொடிப் பொழுதுகள் வாய்ப்பு கிடைத்திருந்தால், இந்திரதேவனின் வஜ்ராயுதம் போன்ற தனது பெரும் வாளால் இளங்குமரனின் சிரத்தைத் துண்டாடியிருப்பான்.

ஆனால் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை மதியூகியான இளங்குமரன். பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிட்டபோதும், சடுதியில் சுதாரித்து எழுந்துகொண்டவன் அண்ணாந்து நோக்கினான். பள்ளத்தின் மேல்விளிம்புப் பகுதியில்... ஏதோ, விண்ணிலிருந்து அசுரசக்தி ஒன்று இறங்கிவந்தது போல், ஆஜானுபாகுவாய் முகக்கவசத்தோடும் பெரும் வாளுடனும் நின்றிருந்தான் அந்தச் சத்ரு.

இருட்டத் தொடங்கிவிட்ட அந்தப் பொழுதில், உதயச் சந்திரனின் கிரணங்கள் பட்டு பளபளத்தது பகைவனின் வாள். அதன்  கூர்முனையில் தோய்ந்து காய்ந்திருக்கும் குருதிப்படிமம், அவன் ஏற்கெனவே ஓரிருவரை ரத்தப்பலி வாங்கியிருக்கக்கூடும் என்பதைச் சொல்லாமல் சொன்னது. அதற்குமேலும் வாளாவிருக்க விரும்ப வில்லை இளங்குமரனின் மனம். அது அவனைச் சடுதியில் செயல்படத் தூண்டியது. 

உடனடியாக ஏதாவது செய்தாகவேண்டும். இல்லையெனில், பகைவனின் வாள் தன்னையும் பதம்பார்த்து, தன் குருதியிலும் தோய்ந்து அரிதாரம் பூசிக்கொள்ள வாய்ப்பு நிச்சயம் என்பதை அறிந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான்.

தன் கையிலிருக்கும் வாளை அசைக்கவும் வாய்ப்பில்லை என்பதால், அதன் உதவியை நாடாது, `தாய் மண்ணே தன்னைக் காக்கட்டும்' என்ற நினைப்போடு, சட்டென்று குனிந்து புழுதியை அள்ளி வீசினான், பள்ளத்தின் மேல் விளிம்பை நோக்கி. புழுதிமண் பகைவனின் கண்ணைப் பழுதாக்குகிறதோ, இல்லையோ... புழுதிப்படலம் அவன் கண்ணை மறைக்கும். அந்தச் சிறு அவகாசத்தில் தப்பிப் பிழைக்கலாம் என்பது இளங்குமரனின் திட்டம். ஆனால் அவனது அந்தத் திட்டத்தில்தான் மண் விழுந்தது!

இளங்குமரன், தன் கண்களை இறுக மூடிக் கொண்டு புழுதியை வாரியிறைத்ததும் சட்டென்று விலகிக்கொண்டான், அந்தச் சத்ரு சண்டாளன். இளங்குமரனுக்கு அது போதாத நேரம்தான் என்பது போல், அந்நேரம் பார்த்து பெருங்காற்று வீச, வாரியிறைக்கப்பட்ட புழுதிமண், காற்றோடு கலந்து சென்றது.  சுதாரித்துக்கொண்ட முரட்டுச் சத்ரு, இனியும் இவனை விட்டுவைத்தால் பெரும் ஆபத்து எனக் கருதி, ஆவேசத்துடன் ஹூங்காரம் செய்தபடி தனது வாளை விண்ணோக்கி உயர்த் தினான்; இளங்குமரனின் சிரத்தைத் துண்டாடும் நோக்குடன்.

ஆனால், அடுத்துவந்த கணப்பொழுது அந்தச் சத்ருவுக்குச் சாதகமாக அமையவில்லை. எங்கிருந்தோ மிகவேகமாகச் சுழன்று வந்த சுழற் படை ஒன்று, வாளோடு சேர்த்து சத்ருவின் பெருங் கரத்தையும் துண்டாடி, இளங்குமரன் இருந்த பள்ளத்தில் விழச்செய்தது. அலறியபடி தரையில் சாய்ந்தான் எதிரி!

மறுகணம் பள்ளத்தின் மேல்விளிம்பில் தோன்றியது கரும்புரவியின் திருமுகம் ஒன்று.

மெள்ளக் கனைத்தபடி கால்குளம்புகளால் விளிம்புச் சரல்களைப் பள்ளத்தில் சரித்தபடி சிறிது நகர்ந்த அந்தக் கரும்புரவி, தன் முதுகின் மீது ஆரோகணித்திருந்த நபரையும் அவனுக்குக் காட்டிக்கொடுத்தது. இளங்குமரன் அதிர்ந்தான்!

வந்திருப்பது கரும்புரவியெனில், அதன் மீது அமர்ந்திருப்பவர்..?

- மகுடம் சூடுவோம்...