
மகா பெரியவா - 12
சுவாமிநாதன் பள்ளிப் பருவத்தில் இருந்த காலகட்டம். பாலகனின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் முறுக்கு முதலான பண்டங்கள் செய்து விற்று வந்தாள், ‘முறுக்குப் பாட்டி’ என்று அடைமொழியுடன் அழைக்கப்பட்ட முதியவள். பாட்டியின் முக்கியமான வாடிக்கையாளர் சுவாமிநாதன். தினமும் ஸ்கூல் விட்டதும், வகுப்பு நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு பாட்டியின் வீட்டுக்கு வருவது சுவாமிநாதனின் வாடிக்கை. பாட்டிக்கும் வியாபாரம் மந்தமில்லாமல் நடந்து வந்தது.
“ஏன் பாட்டி... என்னாலதானே என் சிநேகிதரெல்லாம் உன்கிட்ட முறுக்கு வாங்க ஆரம்பிச்சா..?” என்று ஒருநாள் சுவாமிநாதன் கேட்க, ‘எதுக்கு இந்தப் பிள்ளையாண்டான் திடீரென்று இப்படிக் கேட்கிறான்’ என்று புரியாமல் விழித்தாள் பாட்டி.
“ஆமாம்... உன்னாலதான் அவா எல்லாம் என்கிட்ட வர்றா. அதுக்கென்ன இப்போ? இந்தப் புண்ணியம் உன்னையே சேரட்டுமே. நான் என்ன தடுக்கவா போறேன்” என்று சொல்லிச் சிரித்தாள் பாட்டி. சுவாமிநாதன் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டான்.

“அப்போ என்னாலதானே உனக்கு விற்பனை சூடுபிடிச்சு, அதிக லாபமும் கிடைக்குது?”
“அப்படித்தான் வச்சுக்கோயேன்..”
“அப்படின்னா எனக்கு விலையைக் கொஞ்சம் குறைச்சு முறுக்கு தாயேன்...”
பாட்டி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
“உனக்கு ஒரு விலை... மத்தவாளுக்கு வேற விலைன்னு பாகுபாடு செஞ்சு என்னால விக்க முடியாது. எனக்கு எல்லோரும் ஒண்ணுதான்.”
எவ்வளவோ வாதாடிப் பார்த் தும் பாட்டி மசியவில்லை.
“நீ விலையைக் குறைக்கலேன்னா இனிமே நான் உன் வீட்டுப் பக்கம் வர மாட்டேன். உன்கிட்ட முறுக்கு வாங்கறதை நிறுத்திடுவேன். என்கூடப் படிக்கறவாளும் இந்தப் பக்கம் வரமாட்டா.”
பாட்டியிடம் கோபம் தலைதூக்கியது.
“நீ வாங்கலேன்னா நான் ஒண்ணும் பட்டினிக் கிடக்கமாட்டேன். நீ வராம போனா, உன்கிட்டக் கெஞ்சி மன்றாடி உனக்குப் பூரண கும்பம் கொடுத்து வரவேற்கக் காத்திருப்பேன்னு நினைச்சுண்டியா? என்கிட்டே அதெல்லாம் நடக்காது...” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பாட்டி.
“கடைசியா ஒரு தடவை சொல்றேன் பாட்டி. முறுக்கு வாங்க உன்கிட்ட வரமாட்டேன்னா வரமாட்டேன்தான்... இப்போ விலையைக் குறைக்க பிடிவாதம் பிடிச்சு, பின்னால அதுக்காக வருத்தப்படாதே...” சிறு பிராயத்துக்கே உள்ள வீராப்புடன் சுவாமிநாதன் சொல்ல, பாட்டி மனம் மாறுவதாக இல்லை.
“பாட்டி... நீ பூர்ணகும்பம் எடுத்துண்டுதான் வந்து என்னை அழைச்சுப் பாரேன். நான் ஒரு நாளும் உன் வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்க மாட்டேன்” என்று சவால்விட்டுப் போன சிறுவன் சுவாமிநாதன், அதன் பிறகு பாட்டியின் வீட்டுப் படியை மிதிக்கவேயில்லை!
வருடங்கள் உருண்டன...
இதோ, துறவுக் கோலம் ஏற்று, மடாதிபதியாக சுகமான பொறுப்பு சுமந்து, தனது தீர்த்த யாத்தி ரையின் தொடக்கமாக திண்டிவனம் மண்ணில் காலடி எடுத்துவைக்கிறார் மகா பெரியவா. ஊரில் விழாக்கோலம். ஒருவித பரவசத்துடன் ஊரில் ஆண்களும் பெண்களும் கையில் பூரண கும்ப கலசத்துடன் வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக முறுக்கு பாட்டி. முகத்தில் ஏக்கமும், எதிர்பார்ப்பும். பழைய நினைவுகள் பாட்டியின் மனதில் அலையடித்தன.
‘இப்போ சுவாமிகளாக உயர்ந்துவிட்டாலும், பழசையெல்லாம் அவராலும் மறந்திருக்க முடியாதே. அவர் ரோஷக்காரர் ஆயிற்றே. நாம் பூர்ணகும்பம் தந்தால் ஏற்றுக்கொள்வாரா அல்லது இன்னமும் தான் விட்ட சவாலை நினைவில் வைத்து பூர்ண கும்பத்தை ஏற்க மறுத்து விடுவாரா?’ என்று பாட்டிக்குக் குழப்பம். தயக்கம்.

இன்னொரு பக்கம், ‘என்னதான் இருந்தாலும் என் கையால முறுக்கு வாங்கித் தின்ன குழந்தை இன்னிக்கு ஜகத்குரு. அவரின் திருக்கரங்களால் பிரசாதம் வாங்கிண்டால்தானே புண்ணியம். எனக்கு அந்த நல்வாய்ப்புக் கிடைக்குமா’ என்ற தாபம். ‘என்னைத் திரும்பிப் பார்க்காவிட்டால் என்ன செய்யறது?’ என்கிற தவிப்பு. கண்கள் ஈரமாகின்றன.
அந்தத் தெருவுக்குள் சுவாமிகள் நுழைந்து விட்டார். ஒவ்வொரு வராகப் பார்த்து கனிவு பொங்கும் கண்களால் ஆசி வழங்குகிறார். முறுக்குப் பாட்டியும் அவர் பார்வையிலிருந்துத் தப்பவில்லை. பாட்டியின் கையிலிருந்த பூர்ண கும்பமும் சுவாமிகளின் கண்களில் படுகிறது. பக்கத்து கோயிலிலிருந்து மணி ஓசை.
“அந்தப் பாட்டி ஏன் தயங்கித் தயங்கி நிக்கறா? அவகிட்டே இருக்கும் பூரண கும்பத்தை வாங்குங்கள்...” என்று அன்புக்கட்டளை பிறக்கிறது சுவாமிகளிடமிருந்து.
“பார்த்தியா! கொடுப்பேனான்னு சொன்ன நீயும் கொடுத்துட்டே... வாங்கிப்பேனான்னு சொன்ன நானும் வாங்கிண்டுட்டேன்!” என்றார் பாட்டியிடம். முறுக்குப் பாட்டியின் பயம் நீங்கியது. ஐயம் தெளிந்தது.
சுவாமிகளின் புனிதப் பயணம் தொடர்ந்தது.
காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு, 1918-ம் வருடம் மார்ச் மாதம், மகா பெரியவா முறையான யாத்திரையைத் தொடங்கினார் என்பது சரித்திரம். 21 வருட நீண்ட நெடிய பயணம் அது. 1939-ல் அது நிறைவுற்றது. தமிழ்நாடு திரும்பினார் பெரியவா. காசியிலிருந்து எடுத்து வந்த கங்கா நீர் கொண்டு ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை அபிஷேகம் செய்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும் என்பது நம்பிக்கை. மகா பெரியவரும் அதன்படியே செயல்பட்டிருக்கிறார்.
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயைக் கடக்கவேண்டும். அந்த நாளில் பாம்பன் மேல் பேருந்துகள் செல்ல பாலம் கிடையாது. ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் பூஜை சாமான்களுடன் படகுகளில் எடுத்துச்செல்ல தோதில்லை.ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உயர் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். குப்புசாமி என்பவரை அழைத்தார் சுவாமிகள்.
“நீ திருச்சிக்குப் போய் ரயில்வே அதிகாரிகளைச் சந்திச்சு மடத்து சார்பில் ஒரு மனு கொடுத்துட்டு வா...” என்று உத்தரவிட்டு அனுப்பி னார். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி டிராலி தேவைப் படுவதாகவும், ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி கோரியும் அந்த மனுவில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாள்களில் பதில் வந்தது. ‘ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். சுவாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்திக்கொடுக்கப் படும்’ என்றும், ‘குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிட வேண்டும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி அக்கரை வந்து சேர்ந்த சுவாமிகளை, பழத் தட்டுகளுடன் வரவேற்ற தலைமைப் போக்குவரத்து அதிகாரி ஓர் ஆங்கிலேயர்!
- வளரும்...
- வீயெஸ்வி
ஓவியங்கள்: கேஷவ்
பக்தி மார்க்கம் ஒன்பது வகை
1. ச்ரவணம் - இறைவன் நாமத்தையும் பெருமை யையும் காதால் கேட்பது.
2. கீர்த்தனம் - இறைவனின் நாமத்தைப் புகழ்ந்து பாடுவது.
3. ஸ்மரணம் - இறைவனை தியானம் செய்வது.
4. பாதசேவனம் - திருவடித் தொண்டு ஏற்றுச் செய்தல்.

5. அர்ச்சனம் - அர்ச்சனை செய்தல்.
6. வந்தனம் - வணங்குதல்.
7. தாஸ்யம் - இறைவனுக்குத் தன்னையே கொடுத்து விடுதல்.
8. ஸாக்கியம் - ஒன்றுபடுதல் (ஒன்றிவிடல்).
9. ஆத்மநிவேதனம் - தன் ஆத்மாவை இறைவனிடம் அர்ப்பணித்துச் சரணாகதி ஆகுதல்.
- கே.ராஜலட்சுமி, சென்னை-44