
`கண்ணனைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா?’
‘`பகவான் கிருஷ்ணரை யாருக் குத்தான் பிடிக்காது? எல்லோருக் கும் பிரியமான கிருஷ்ணரிடம் எனக்கும் பிரியம் ஏற்பட்டதில் ஆச்சர்யமே இல்லை. கண்ணன் ரொம்ப ஃப்ரெண்ட்லி. அதனால தான் பாரதியார் கண்ணனைப் பாடும்போது, குருவாக, நண்ப னாக, சேவகனாக, காதலனாக, சீடனாக... என்று கண்ணனின் மகிமையை பல வகைகளில் அனுபவித்துப் பாடியிருக்கார்’’
- பகவான் கண்ணனைப் பற்றி உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார் கிரேஸிமோகன்.
இவருடைய வசனப் படைப்பு கள், நாடகங்கள்... குறிப்பாக `சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் குறித்தெல்லாம் எல்லோருக்குமே தெரியும். ஆனால், கிருஷ்ணனுக்கு 4000 வெண்பாக்கள் பாடியிருக் கிறார் கிரேஸிமோகன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
அதுபற்றி பேசலாம் என்று நேரில் சென்றால், அவருக்கே உரிய பாணியில் சிரிப்பாக சிலிர்ப்பாக பகிர்ந்து கொண்டார், கிருஷ்ணன் மீதான தனது பக்தியை, அதற்கான காரணங்களை. அவை அப்படியே இங்கே உங்களுக்காக...

`எளியவன் இனியவன்...'
‘‘கண்ணன் ரொம்ப எளிமையா னவர். நம் தோள் மேல கை போட் டுப் பேசக்கூடியவர். ‘எங்கே நீ இருந்தாலும், எப்படி நீ என்னைக் கூப்பிட்டாலும் உடனே அங்கே நான் வந்துவிடுவேன்’ னு சொல் றார். இந்த எளிமைதான் எனக்கு அவரிடம் ரொம்பப் பிடித்த விஷயம்.
மொதமொதல்ல டி.வி.யைக் கண்டுபிடிச்சது கண்ணன்தான்னு சொல்லணும். கோகுலத்துல சின்னக் குழந்தையா இருந்தப்போ, அடிக்கடி மண்ணை அள்ளித் திங்கிறார் கண்ணன். ஒருமுறை அவன் மண்ணை அள்ளித் திங்கறபோது யசோதை பார்த்துட்டு, கண்ணனை மிரட்டி, வாயைத் திறந்து காட்டச் சொல்றா.
கண்ணன் தன்னோட பிஞ்சு வாயைத் திறந்து, அதுக்குள்ள இந்தப் பிரபஞ்சத்தையும்... ஏன் யசோதையையுமே அவளுக்குக் காட்டுகிறார். ஆக, அதுதான் முதல் டெலிகாஸ்ட்னு சொல்லணும். மாடர்ன் ஆசாமிக்கு ரொம்பப் பக்கத்துல இருக்கறவர் கண்ணன்.’’
`ஆபத்பாந்தவன் கண்ணன்'
``அடுத்ததா, யாருக்கு என்ன தேவையோ அதைக் கொடுப்பவர் கண்ணன். குருக்ஷேத்திரத்துல சண்டை தொடங்கற நேரம். அர்ஜுனனுக்குத் தயக்கம் - கவலை! தோத்துடுவோம்னு கவலை இல்லை; எதிர் தரப்பிலுள்ள சொந்தங்களைக் கொல்றதால தனக்கு வீண்பழி ஏற்படுமே என்ற தயக்கம். அந்த நேரத்துல அவனுக்குக் கீதையை உபதேசித்தார் பகவான். தக்க நேரத்துல அவனோட தயக்கத்தைப் போக்கி ஊக்கம் கொடுத்து போரிடச் செய்தார் பரமாத்மா.
அதேபோல, ஒருமுறை துரியோதனன் ஒரு சதி செய்தான். விளைவு... ஒரு மதியப்பொழுது, துர்வாச முனிவர் தன் சீடர்களோட பாண்டவர்கள் இருந்த இடத்துக்கு வர்றார். அவருக்கு உபசாரம் பண்ண முடியாத நிலை பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்கும். ஏற்கெனவே, அட்சய பாத்திரத்திலிருந்து... அன்னைக்குத் தேவையான உணவை எடுத்துப் பரிமாறிட்டு, பாத்திரத்தைக் கழுவி வச்சிட்டாங்க. அடுத்து அதைப் பயன்படுத்த முடியாது. துர்வாசர் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள ஏதாவது செய்தாகணும்.
வேறு வழியில்லாம கண்ணனைப் பிரார்த்திச்சா திரெளபதி. அவர்தான் ஆபத்பாந்தவனாச்சே. உடனே வந்துட்டார். கழுவி வச்சிருந்த பாத்திரத்திலிருந்த ஒரு கீரைத் துணுக்கை எடுத்துச் சாப்பிடறார். உடனே உலகத்துல இருக்கற எல்லோருக்கும் பசி அடங்கிடுது. துர்வாசருக்கும் பசி அடங்கிப்போச்சு. அப்படியே திரும்பிப் போய்ட்டார். தன்னை நம்பினவங்களை என்றைக்கும் கைவிடாதவன் கண்ணன்.’’
`தர்மமே பெரியது'
‘`கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிச்சிக்கிட்டு நிற்கும் கோலத்தைப் பார்த்தீங்கன்னா, ஒரு கால் நல்லா அழுத்தமா தரையில பதிஞ் சிருக்கும். இன்னொரு காலில், விரல்கள் மட்டும்தான் தரையில பதிஞ்சிருக்கும். அழுத்தமா பதிஞ்சிருக்கற பாதம்தான் தர்மம். விரல்கள் மட்டும் பதிஞ்சிருக்கற பாதம் சத்தியம். இதோட அர்த்தம் என்னன்னா, தர்மம்தான் எல்லாத்தை விடவும் பெரிசு. அதுதான் என்னைக்கும் நிலைச்சிருக்கும். தர்மத்துக்காக சத்தியத்தைக்கூட விட்டுத் தரலாம். ஆனா, எதுக்காகவும் தர்மத்தை விட்டுத் தரக்கூடாது.
நாம் செய்யற தர்மம்தானே நம்மோடகூட வரப்போறது. இந்தத் தத்துவத்தை உணர்த்தற வேணுகோபாலனின் அருள்கோலம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’

`பெஸ்ட் ஸ்க்ரீன் ப்ளே...'
``மகாபாரதம் முழுவதுமே பார்த்தீங்கன்னா, விறுவிறுப்பான ஒரு சினிமாவோட பெஸ்ட் ஸ்க்ரீன் ப்ளே அதுல இருந்துட்டே இருக்கும். அர்ஜுனனும் துரியோதனனும் கண்ணன்கிட்ட உதவி கேட்டுப் போறாங்க. கண்ணன் தூங்கிட் டிருந்தார். அர்ஜுனன் பவ்யமா கால்மாட்டில் போய் அமர்ந்தான். துரியோதனனுக்கு அப்பவும் கர்வம்... பகவானின் தலைமாட்டில் போய் அமர்ந்துகொண்டான். ஆனால் அவர் விழித்ததும் அர்ஜுனனைத்தானே கவனிக்க முடியும். விஷயம் என்னன்னு விசாரித் தார். துரியோதனனுக்குப் பயம் ‘யாதவப்படை மொத்தமும் தனக்கே வேணும்னு அவன் நினைச்சிக்கிட் டிருக்கிற நேரத்துல, இந்த அர்ஜுனன் அவனுக்கு வேணும்னு கேட்டுடு வானோ’ன்னு பயம்.
ஆனால் அர்ஜுனன், பகவான் அல்லது படை இந்த இரண்டு சாய்ஸில், பகவானையே தேர்ந்தெடுத்தான். இதுல பார்த்தீங்கனா, நம்ம மனசுதான் நம்ம வாழ்க்கையைத் தேர்வு பண்ணு துங்கிற விஷயம் அருமையான திரைக் கதை மாதிரி சொல்லப் பட்டிருக்கும். குறிப்பா, கண்ணனின் யுக்திகள் அசத்தும். இப்படி அவரைப் பத்தி சொல்லிக்கிட்டே போக லாம்... ஒருநாள் போதாது’’
- மிக அற்புதமாகப் பகிர்ந்துகொண்டவரிடம், ஓவியர் கேஷவ் வரைந்த கிருஷ்ண ஓவியங்களுக் கேற்ப வெண்பாக்கள் எழுதியது குறித்தும் கேட் டோம். மெள்ளப் புன்னகைத்தவர், ``விளையாட்டா ஆரம்பிச்சோம். இப்ப நாலாயிரம் வெண்பாக்கள் பாடிவிட்டேன். தினம் ஒரு வெண்பா பாடுவது காலைக் கடன்... இல்லையில்லை... மாலைக் கடன் - திருமாலைக் கடன்’’ என்கிறார் பூரிப்போடு. அத்துடன், ‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகம் தொடர்பான ஒரு சம்பவத்தையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.
`ஆண்டாள் மாலை'
‘‘முதன்முதலா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்லதான் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தைப் போட்டோம். அப்ப ஆண்டாளுக்குப் போட் டிருந்த பெரிய மாலையை எடுத்து வந்து, ஆண்டா ளோட பிரசாதமா என் கழுத்துல போட்டாங்க. அந்த நிமிஷம், ஆண்டாள் மாலை வடிவத்துல கண்ணனின் அருளும் ஆண்டாளின் ஆசிகளும் சேர்ந்து கிடைச்சதா உணர்ந்தேன். அந்த சந்தோஷ மும் பரவசமும் இன்னும் என் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு’’ என்று நெகிழ்ந்தார் கிரேஸிமோகன்.
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் தொடரட்டும். நமக்கும் இன்னும் பல்லாயிரம் வெண்பாக்கள் கிடைக்கட்டும்!
- எஸ்.கதிரேசன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

வெண்பாக்களில் ஒன்று...
இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
மடிப்பால் நிலத்தில் மணக்க, கடைக்காலை,
கன்றென எண்ணிக் கறவை வருடிட,
நின்றி(டு)என் நெஞ்சில் நிலைத்து....!