
உழவாரப் பணி செய்வோம்! - இலம்பையங்கோட்டூர்

இதழ்ப் பணியில் மட்டுமின்றி இறைப்பணிகளிலும் உங்கள் சக்தி விகடன் முனைப்புடன் பணியாற்றி வருவதை அறிவீர்கள்.திருவிளக்கு பூஜை, சுவாஸினி பூஜை, வேல்மாறல் பாராயணம் வழிபாடு, ஆலயம் தேடுவோம், பிரசித்தி பெற்ற கோயில்கள் தீப மேடை சமர்ப்பணம்... எனத் தொடரும் சக்திவிகடனின் இறைப்பணியில், அடுத்த முன்னெடுப்பு- திருக்கோயில்களில் உழவாரத் திருப்பணி.
எப்போதும்போல் உங்களின் பேராதரவு மற்றும் ஒத்துழைப்போடு இந்தப் புண்ணிய திருப்பணியில் இடம்பெறவுள்ள முதல் திருத்தலம் - இலம்பையங்கோட்டூர் - அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் தொண்டை நாட்டுத் தலங்களுள் மேன்மையானது என்றும் மறைந்த காஞ்சி மகா பெரியவரின் மனம் கவர்ந்த கோயில் என்றும் போற்றப்படும் திருத்தலம் இது. நாடி வந்து வணங்குபவர்களுக்கு அழகும் இளமையும் ஈசன் அருளும் க்ஷேத்திரம் இது.
ஆம், தெய்வலோக மங்கையர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர், தாங்கள் பெற்ற சாபத்தை, இங்கு வந்து வழிபட்டு நிவர்த்தி செய்துகொண்டதாகவும் தங்களின் இளமையையும் பொலிவையும் மீண்டும் பெற்றதாகவும் சொல்கிறது தலவரலாறு. அதனால் அரம்பையங் கோட்டூர் என்றாகி, பின்னர் இலம்பையங்கோட்டூர் எனப் பெயர் மருவிய தாம் இந்தத் தலத்துக்கு. சந்திரன் வழிபட்டு பேறுபெற்றதால் இது சந்திரனுக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

திரிபுர சம்ஹாரத்தின்போது தேவர்களைக் காக்க ஈசன் புறப்பட்டபோது அவர் அணிந்திருந்த கொண்டாரை மாலை இந்த தலத்தில் கீழே விழுந்து சிவலிங்கமானது. தீண்டாதிருமேனியான அந்த லிங்கமே ‘ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர்’ என்ற திருப்பெயரில் வழிபாட்டுக்கு உரியதானது என்கின்றன ஞானநூல்கள்.
ஈசன் திருஞான சம்பந்தரை இங்கு வரவழைக்க குழந்தையாகவும், முதியவராகவும், காளை மாடாகவும் வந்து திருவிளையாடல் புரிந்து அருள்கோலம் காட்டினார். இதனால் நெகிழ்ந்து போன காழியூர் பிள்ளை ‘பாலனாம்.. விருத்தனாம்.. பசுபதிதானாம்...’ என்று உருகி உருகிப் பாடியுள்ளார் இத்தலத்து ஈசனை. யோகதட்சிணாமூர்த்தி வடிவில், ஈசன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய தலமும் இதுவே என்பதால், இது குரு பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. அம்பிகை கனககுசாம்பிகை. இவளது திருப்பாதத்தில் காஞ்சிப் பெரியவர் வழங்கிய ஸ்ரீசக்ரம் அருள்வழங்கித் திகழ்கிறது. `மல்லிகா புஷ்கரணி' என்ற திருக்குளமே இத்தலத்தின் தீர்த்தம்.

இங்ஙனம் புராணப் பெருமைகளும் ஆன்மிகச் சிறப்புகளும் நிறைந்த இந்தத் திருக்கோயில், பராமரிப்புப் பணிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது. எத்தனையோ ஞானியரும் ரிஷிகளும் வழிபட்ட இந்த புண்ணிய க்ஷேத்திரம், பொலிவுபெற வேண்டுமெனில் உழவாரப் பணி அவசியம் என்கிறார்கள், இக்கோயில் சார்ந்த பக்தர்கள். ஆலயம் தொழுவதும் உழவாரம் செய்வதும் சிவபுண்ணி யம் அருளும் செயல்கள். அப்பர் பெருமான் காட்டிய வழியில், இத்தகு அரும்பணியில் நாமும் ஒன்றிணைவோம். கோயில் சிறந்தால் ஊர் செழிக்கும்; உலகம் வளம் பெறும் என்பார்கள் பெரியோர்கள். அற்புதமான இந்தக் கோயிலும் மிகப் பொலிவுடன் திகழ, உழவாரப் பணி செய்வோம் வாருங்கள்.
எல்லாம்வல்ல சிவனருளால், வரும் 16-9-18 ஞாயிற்றுக்கிழமை அன்று இலம்பையங்கோட்டூர் அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயிலில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நிகழவுள்ளது உழவாரத் திருப்பணி. இந்தப் புண்ணிய சேவையில் அவசியம் நீங்களும் கலந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பெருமை கொண்ட ஆலய உழவாரத் திருப்பணியில் கலந்து கொண்டு கரம்கோத்தால், ஜென்மஜென்மாந்திரமாகத் தொடரும் நம் தீவினைகள் தொலையும்; வம்சம் செழித்துச் சிறந்தோங்கும்.
உழவாரப் பணியில் இணைவோம்; இறையருள் பெறுவோம்!
இடம் : இலம்பையங்கோட்டூர்
நாள் : 16-9-18 ஞாயிறு. (காலை 10 முதல் மாலை 5 மணி வரை)
வழி : ரயிலில் சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் கடம்பத்தூர் இறங்கி, அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று இலம்பையங்கோட்டூர் வரலாம்.
பூந்தமல்லியிலிருந்து 9 கி.மீ தொலைவிலுள்ளது மேவளூர் குப்பம். இந்த ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்தால், அங்கிருந்து 5 கி.மீ தொலைவில், நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.
உழவாரப் பணியில் இணைய விரும்பும் வாசகர்கள் கீழ்க்காணும் எண்ணுக்கு குறுந்தகவல் (வாட்ஸ் அப்) அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்புக்கு: 89390 30246