
கற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கைப் பாடம்!
`கடவுளே... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ இப்படிச் சொல்லி வேதனைப்படாதவர்கள் நம்மில் வெகு குறைவு. ஆனால், இப்படிச் சலித்துக் கொள்வதல்ல வாழ்க்கை. எப்பேர்ப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு, கடந்து போவதுதான் நிறைவான வாழ்க்கை.
அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங். அவசரமாக உங்கள் பைக்கில் போய்க்கொண்டி ருக்கிறீர்கள். வழியில் பைக் பஞ்சராகிவிடுகிறது. அந்தக் கணம் எப்படியிருக்கும்? ஒரு வேலையில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வு. உங்கள் முறைக்காகக் காத்திருக்கிறீர்கள். உங்களைக் கூப்பிடுகிறார்கள். அப்போதுதான் கவனிக்கிறீர்கள்... உங்களுடைய முக்கியமான சான்றிதழ் வைத்திருக்கும் ஃபைல் உங்களிடம் இல்லை என்பதை! அந்தக் கணம் எப்படியிருக்கும்?
இப்படி ஓர் இக்கட்டான நிலை ஒரு தடகள வீரருக்கு ஏற்பட்டது. அவர் என்ன செய்தார் தெரியுமா? அவர் பெயர் ஜிம் தோர்ப் (Jim Thorpe). அமெரிக்கர்.

சிறு வயதிலிருந்தே ஓட்டத்தில் அப்படி ஒரு வேட்கை அந்த மனிதருக்கு. அவரின் இளமைக் காலம் அத்தனை இனிமையாக இல்லை. ஒன்பது வயதானபோது, சகோதரர் சார்லி நிமோனியா காய்ச்சலில் இறந்துபோனார். அந்த வேதனையிலேயே பள்ளிக்கூடம் பிடிக்காமல் அடிக்கடி அங்கிருந்து ஓடி வந்தார் தோர்ப். அப்பா, அவரை வேறொரு பள்ளியில் சேர்த்துவிட்டார்.
சில மாதங்களிலேயே அம்மா இறந்து போனார். மன அழுத்தம் அதிகமானது. அப்பாவோடு சண்டை போட்டுக்கொண்டு ஒரு குதிரை லாயத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிம்மதியில்லை. 16 வயதில் திரும்ப அப்பாவிடமே வந்து சேர்ந்தார். பென்சில்வேனியாவிலிருக்கும் ஒரு பள்ளியில் சேர்ந்தார். அங்குதான் ஓட்டத்தில் அவருக்கு இருந்த திறமை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மெள்ள மெள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் அளவுக்குத் திறமையை வளர்த்துக்கொண்டார் தோர்ப்.
1912-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் புதிதாக இரு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்று பென்டத்லான்; மற்றொன்று, டிகேத்லான். இரண்டிலும் அமெரிக்காவின் சார்பாகக் கலந்துகொண்டார். அந்தப் போட்டி அவருக்குக் கொஞ்சம் சவாலானது. ஒரு தடகள வீரருக்கு மிக மிக முக்கியமானவை ஷூக்கள். பொருத்தமான காலணி இல்லாமல் தோல்வியைத் தழுவியவர்களெல்லாம் இருக்கிறார்கள்.
போட்டி நடைபெறும் நாள் காலையில் அது நடந்தது. ஜிம் தோர்ப்பின் ஷூக்களைக் காணவில்லை. கொஞ்சம் நேரம் தேடிப் பார்த்தார்... கிடைக்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்து போய்விடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தார். கடைத்தெருவுக்குப் போய் புது ஷூ வாங்கிவரவெல்லாம் அவகாசமில்லை. நிதானமாகத் தேடியதில் குப்பைத் தொட்டியில் இரண்டு பழைய ஷூக்கள் அவருக்குக் கிடைத்தன. அதில் ஒன்று அவர் காலுக்குப் பொருத்தமில்லாமல் மிகப் பெரியதாக இருந்தது. அதை ஈடுகட்டு வதற்கு என்ன செய்வதென்று யோசித்தார். இரண்டு காலுறைகளை கூடுதலாக மாட்டிக்கொண்டார்.
பழைய ஷூக்களோடு விளையாட வந்த தோர்ப்பை எல்லோ ரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஜிம் தோர்ப் யாரையும் கண்டு கொள்ளவில்லை. அவர் பாட்டுக்கு விளையாடினார். அந்த ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்தார்!
- பாலு சத்யா
ஓவியம்: பிள்ளை
ஒரு துளி சிந்தனை
`மனப்பான்மை என்பது சிறிய விஷயம்தான்; ஆனால், ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தது.’
- வின்ஸ்டன் சர்ச்சில்.