Published:Updated:

குழலி

குழலி
பிரீமியம் ஸ்டோரி
குழலி

தெய்வ மனுஷிகள்!

குழலி

தெய்வ மனுஷிகள்!

Published:Updated:
குழலி
பிரீமியம் ஸ்டோரி
குழலி

ந்த ஊர்ல சுந்தரம்னு ஓர் அய்யர் இருந்தாரு. வேலிக்கணக்குல நெலபுலம் கெடக்கு. ஏகப்பட்ட ஆளுக இவரு பண்ணையில வேலை செய்றாக. எல்லாப் பேத்துக்கும் அறுவடை முடிஞ்ச உடனே ஞாயமா தானியம் கட்டி அனுப்பிருவாரு. அய்யரு வூட்டுல அம்பது, அறுபது மாடுங்க உண்டு. பக்கத்தூரைச் சேர்ந்த பெரியமாடன், அய்யருக்கிட்ட காவக்காரனா இருந்தான். ஆடு மாடு மேய்க்கிறதுல இருந்து ராத்திரி வயக்காட்டுக் காவல் வரைக்கும் எல்லாமே அவன்தான். விசுவாசமான ஆளு.

பெரியமாடன் பொண்டாட்டி பேரு குழலி. புருஷனை மாதிரியே தைரியமானவ. வாள் வித்தை கத்தவ. ஈட்டிக்கம்பும் வீசுவா. புருஷனும் பொண்டாட்டியும் அன்பா இருப்பாக. கலியாணம் முடிஞ்சு ஆறு வருஷங்களாச்சு. புள்ளைக இல்லை. ஆனாலும், அந்தக் குறை தெரியாம ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா இருப்பாக.

அந்த வருஷம் கொஞ்சம் பருவம் தப்பிப்போச்சு. வழக்கமா ‘தை’க்கு வரவேண்டிய அறுவடை, மாசி கடைசிக்குப் போயிருச்சு. நெல்லு, உளுந்து, பயிருன்னு எங்கே பாத்தாலும் பச்சைப் பூத்துக்கெடந்துச்சு. ஒருபக்கம் காட்டுப்பன்னி, கரடின்னு மிருகங்க புகுந்து, வெளைஞ்ச வயலை நாசம் பண்ணுனா, இன்னொருபக்கம் திருட்டுப்பயலுக வயக்காட்டுல இறங்கி, அறுத்துக்கட்டிக்கிட்டுப் போயிருறானுவ.

குழலி

‘சரியா ஏழாம் நாளு பவுர்ணமியன்னிக்கு மேலக்காட்டு வயல்ல இருந்து அறுக்கலாம்’னு முடிவு பண்ணியாச்சு. மாடனை அழைச்சாரு அய்யர். “மாடா... அறுவடை தீர்மானிச்சாச்சு. வயக்காட்டைப் பத்திரமாப் பாத்துக்கோ. திருட்டுப்பயலுக நடமாட்டம் அதிகமா கெடக்கு. விழிப்பா இருக்கணும். அறுவடைக்கு ஆளு சொல்லு. செங்கோடன் பட்டறையில சொல்லி கருக்கருவாளுக்கு இரும்பெடுத்துக் குடு...’ன்னாரு.

மாடனுக்கு ராத்திரியில்லை; பகலுமில்லை. எல்லா நேரமும் வயக்காட்டையே சுத்தி வந்தான். அன்னிக்கு எல்லா வேலையும் முடிச்சுட்டுச் சோர்ந்து போயி வீட்டுக்கு வந்தான். கோழிச்சாறு ஒரு கலயமும், கம்மங்கஞ்சி ஒரு கலயமும் ஊத்தியாந்து குடுத்தா குழலி. குடிச்சு முடிச்சுட்டுக் கயித்துக்கட்டில்ல படுத்தான் மாடன். அவனையறியாம கண்ணசந்துட்டான். ‘ராக்காவலுக்குப் போகாம மனுஷன் உறங்கிக்கிட்டிருக் காரே’னு குழலி வந்து எழுப்பினா. கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். கொவ்வாப்பழமாட்டம் செவந்துவேற கெடக்கு.  முழிக்க மாட்டாம கெடந்தான் மாடன். பயலுக்குக் கடுமையான காய்ச்சல். பனின்னு பாக்காம, மழைன்னு பாக்காம வயக் காட்டுலயே கெடந்தது ஒப்புக் கிடலே. பதறிப்போனா குழலி.

கொல்லைப்பக்கம் போயி கொஞ்சம் மூலிகைகளைப் பறிச்சாந்து கசாயம் போட்டுக் குடுத்தா. காய்ச்சல் குறையலே.எழுந்து உக்கார வாய்க்கலே. இருந்தாலும் செரமப்பட்டு எழுந்து வயக்காட்டுக்குக் கௌம்புனான் மாடன். ‘வயக்காட்டுக் காவலுக்குப் போயி பனியில திரிஞ்சா காய்ச்சல் அதிகமாகிப் போவும்; அய்யர்கிட்டச் சொல்லி இன்னிக்குக் காவலுக்கு மாத்தாளு போடச்சொல்லுவோம்’னு சொன்னா குழலி. மாடன் கேக்கலே. `‘அறுவடைக்கு மூணு நாளுதான் கெடக்கு. இந்த நேரத்துல நாம வீட்டுல படுத்துக்கிட்டா நல்லாயிருக்காது. நான் சமாளிச்சுக்கிறேன். நீ கவலைப்படாம இரு'’னு கிளம்புனான் மாடன்.

குழலி யோசிச்சுப் பாத்தா. ‘இவுரு சொல்றதும் சரிதான். அதுக்காக இவ்வளவு காய்ச்ச லோட இவரைக் காவலுக்கு அனுப்பவும் முடியாது’னு ஒரு முடிவுக்கு வந்தா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழலி

“இன்னிக்கு நானும் உங்ககூட வாரேன். பக்கத்துல உக்காந்து ஒத்தாசையா இருக்கேன்”னு சொன்னா. “அதெல்லாம் சரிப்படாது புள்ளே... பனியும் குளிரும் பயங்கரமாயிருக்கு. ராத்திரி மிருகங்க உலாவ ஆரம்பிச்சிருக்கு. நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ளாற படுத்திரு. நான் பாத்துக்கறேன்”னு சொன்னான். குழலி கேட்கலே. ஈட்டிக்கம்பை கையில எடுத்துக்கிட்டா. அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டு அதையும் தூக்கிக்கிட்டா. ஒரு பாத்திரத்துல கசாயத்தையும் ஊத்திக்கிட்டு புருஷன்கூட கிளம்பிட்டா.

வானம் வெளுத்துக் கெடக்குது. நட்சத்திரங்களும் நிறைஞ்சிருக்கு. நேரா மேலக்காட்டு வயலுக்கு வந்து சேர்ந்தாக ரெண்டு பேரும். கெழக்கு வரப்புல உசரமா மோட்டுக்கட்டி ரெண்டாளு படுக்கிற அளவுக்குப் பந்தல் போட்டிருந்தாக. அதுல ஏறிட்டாக. மாடனுக்குக் காய்ச்சல் குறையலே. பந்தல்ல ஏறுனவுடனே அசந்து படுத்துட்டான்.  மெள்ள நேரம் கடந்துச்சு.  ஊசு ஊசுன்னு காத்து வீசுது. தூரத்துல யாரோ காட்டுப்பன்னிக்கு வேட்டு வைக்கிற சத்தம் கேக்குது.

நடுச்சாமம் இருக்கும். மேலக்காட்டு வயலுக்குள்ள சலசலன்னு சத்தம் கேக்குது. ‘யாரோ வயக்காட்டுக்குள்ள இறங்கிட்டாக’னு தெரிஞ்சு போச்சு. புருஷனைப் பாத்தா குழலி. உடம்புக் கொதிக்குது. ஈட்டிக்கம்பைக் கையில எடுத்தா. தலைமுடியை அள்ளி முடிஞ்சா. முந்தானையை எடுத்துச் செருவுனா. விறு விறுன்னு பந்தல்ல இருந்து எறங்குனா. அப்படியே தணிஞ்சு எறையைப் புடிக்கப் போற புலி மாதிரி பதுங்கிப் பதுங்கிப்போனா.

வயலுக்குள்ள நாலைஞ்சு ஆளுக நிக்குறானுவ. விறுவிறுன்னு கருதோட மேப்பகுதியை மட்டும் அறுத்து சாக்குல திணிக்கிறானுவ. ஆளுகளைக் கூர்ந்து பாத்தா குழலி. அந்த ஊர் திருட்டுப்பசங்களான பலவேசமும் செல்லையனும்தான் ஆட்களைக் கூட்டியாந்து இந்த வேலையை செய்றானுவ. ‘சரி, அய்யரைக் கூட்டாயிருவோம்’னு யோசிச்சா குழலி.

குழலி

திடீர்னு ஓர் எண்ணம். ‘பலவேசம், தெரிஞ்ச பயதான். ஒரு சுத்துக்கு உறவுக்காரன் வேற. நாமளே பேசி விரட்டி விட்டுருவோம்’னு நினைச்சு நேரா வயலுக்குள்ள இறங்குனா குழலி. ஆளரவம் கேட்டதும் சுதாரிச்ச திருட்டுப்பயலுக கருதுக்குள்ள பதுங்குனானுக. “எலே... பலவேசம் சத்தம் காட்டாம வெட்டுன கருதை வெளிய அள்ளிப்போட்டுட்டு ஆளுகளைக் கூட்டிக்கிட்டு ஓடிப்போயிரு. இல்லே, நாளைக்கு பஞ்சாயத்துல நிறுத்திருவேன்”னா குழலி. பலவேசம் பக்கத்துல திரும்பி ஒருத்தன்கிட்ட கண்ணைக் காட்டுனான். அந்தப்பய கருதுக்குள்ளயே பதுங்கி பின்பக்கமாப் போயி கடப்பாரையால குழலி தலையில ஓங்கி ஓர் அடி அடிச்சான் பாருங்க... அப்படியே முன்பக்கமா ‘பொத்து’னு கீழே விழுந்தா குழலி. ரத்தம் பெருக்கெடுத்து ஓடுது. “இவளை இப்படியே விட்டுட்டுப் போனா, அய்யர்கிட்டச் சொல்லி அசிங்கப்படுத்தியிருவா”னு சொன்ன பலவேசம், செல்லையனுக்குக் கண்ணைக் காட்டுனான். செல்லையன் கையில இருந்த வாளால குழலி கழுத்தை அறுத்தான். அஞ்சு நிமிஷத்துல, தலை வேற முண்டம் வேறயா ஆகிப்போச்சு. பச்சைப் பயிரெல்லாம் செவப்பா மாறிப்போச்சு.

தலையை வயலுக்குள்ளயும் முண்டத்தை வரப்புலயும் போட்டுட்டு அறுத்த பயிரை அள்ளிக்கிட்டுக் கிளம்பிட்டானுவ. காய்ச்சல்ல கெடந்த மாடன் காலையிலதான் முழிச்சான். பொண்டாட்டியை காணுமேன்னு தேட ஆரம்பிச்சான். மேலக்காட்டு வரப்புல அவ உடலும் வயலுக்குள்ள அவ தலையும் கெடந்துச்சு. அழுது புலம்புன மாடன், இந்தப் படுபாதகத்தைச் செஞ்சது பலவேசமும் செல்லையனும்தான்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டான். அவனுவளைத் தேடிக்கண்டுபிடிச்சு கண்டந்துட்டமா வெட்டிப்போட்டான். குழலி இல்லாத உலகத்துல வாழப் பிடிக்காம அவனும் ஈட்டியைச் செருவிட்டு உயிரை விட்டுட்டான்.

ஊரே கூடி நின்னு குழலியின் வீரத்தையும், மாடனோட தியாகத்தையும் பேச்சாப் பேசுச்சு. ‘குழலியும் மாடனும் நம்மளைக் காக்கவந்த தெய்வம்’னு அய்யரும் ஊராரும் நினைச்சாக. ரெண்டு பேருக்கும் சிலையெடுத்து சாமியாக் கும்புட ஆரம்பிச்சாக.

தூத்துக்குடிக்குப் பக்கத்துல செய்துங்க நல்லூர்னு ஊரு இருக்கு. அங்கேதான் இருக்காக குழலியும் மாடனும். குழலி ரொம்பவே சாந்தமாகிட்டா. மாடனுக்குத்தான் கோபம் குறையலே. பரிவாரங்களோட பீடமா நின்னு, எல்லாப் பேரையும் முறைச்சுப் பாத்துக்கிட்டிருக்கான்!

- வெ.நீலகண்டன் 

படங்கள் : எல்.ராஜேந்திரன்  

ஓவியம் : ஸ்யாம்

குழலி

கைகள் வறண்டு போயிருப்பவர்கள், பெட்ரோலியம் ஜெல்லியை மிதமான சூட்டில் உருக்கி, அதனுடன் சிறிது கிளிசரின் கலந்து கையிலும் விரல்களிலும் தேய்த்துக்கொள்ள, சருமம் மிருதுவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism