Published:Updated:

நல்லருள் தரும் நவராத்திரி!

நல்லருள் தரும் நவராத்திரி!
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லருள் தரும் நவராத்திரி!

நல்லருள் தரும் நவராத்திரி!

நல்லருள் தரும் நவராத்திரி!

நவராத்திரி... சுபராத்திரி!

பி
ரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அன்னை ஆதிசக்தி தாய்மையாக விளங்குகிறாள். அவளே சக்தியாக, புத்தியாக, வித்யையாக... ஏன், நம் தேகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வோர் அணுவிலும் எல்லாம்வல்ல அன்னையே ஆட்சி செய்கிறாள் என்கிறது ‘தேவி மகாத்மியம்’.

அந்தத் தாயை  ஜகன்மாதாவை வழிபட உகந்த திருநாள்களே நவராத்திரி புண்ணிய தினங்கள். ஆம்! அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருள்கடாட்சிக்கும் அற்புதமான காலம்தான் நவராத்திரி.

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ‘ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாட்களே நவராத்திரி. குறிப்பாக ‘சாரதா நவராத்திரி’ எனப் போற்றப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நல்லருள் தரும் நவராத்திரி!

தேவி பாகவதத்தில் வசந்த காலமும், சரத் காலமும் எமனுடைய கோரப் பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த காலங்களில் மக்களுக்குத் தீமைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், எல்லாம்வல்ல பராசக்தியை வழிபட்டு, தீமைகளைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்பது அறவழிக் கோட்பாடு. அதன்படி இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துவிதமான ஆசைகளும் பூர்த்தி செய்யப்பட்டு, எல்லாம்வல்ல ஆதிசக்தியின் அருளினால், நாம் யார், நாம் எதற்காக இங்கு வந்துள்ளோம் என்ற உண்மையை, ஆத்ம தத்துவத்தை மிக எளிய வழியில் உணர்த்துவதாகவும், அதேநேரம் மிக உயர்ந்த பலனையும் அளிக்கக் கூடியதாகவும் திகழ்கிறது நவராத்திரி.

இந்தப் புண்ணிய காலத்தில், அம்பிகையின் மகிமைகளை, அவளின் புகழைப் போற்றும் திருக்கதைகளைப் படித்தும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடியும் வழிபடுவது விசேஷம். அவ்வகையில், நல்லருள் தரும் நவராத்திரி வழிபாட்டுக்கான திருக்கதையை முதலில் நாம் தெரிந்துகொள்வோம்.

திருவருள் தரும் தேவி மகாத்மியம்!

அன்னை பராசக்தி, ஒன்பது அசுரர்களை அழித்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவே, தேவிக்கு ஒன்பது நாள்கள் விழா எடுத்து போற்றி வழிபடுகிறோம் என்கின்றன ஞானநூல்கள். அசுரர் சம்ஹாரத்துக்காக ஆதிசக்தி நடத்திய போர் குறித்து, மிக அற்புதமாக விவரிக்கிறது தேவிமகாத்மியம். மார்க்கண்டேய புராணத்தில் அமைந்திருக்கிறது தேவிமகாத்மியம். 700 மந்திரங்களைக் கொண்டதால் ‘சப்த ஸதீ’ என்று போற்றப்படுகிறது.

சிதம்பர ரகசியம், காத்யாயனீ தந்திரம், மேரு தந்திரம் போன்ற ஞானநூல்களும் தேவிமகாத்மியத்தைப் பலவாறு போற்றுகின்றன. ‘திரிபுரா மூன்று வடிவம் கொண்டவள். தீமையின் வடிவமான அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள, காளி உருக்கொண்டாள். அவளே திருமகளாகவும் சரஸ்வதியாகவும் தோன்றினாள். மார்க்கண்டேய புராணத்தில் உள்ள அவளது மகிமையைப் படிப்பவர்கள் சகல சௌபாக்கியங்களும் அடைவர்’ என்று பரமேஸ்வரர் அருளியதாக விவரிக்கிறது, சிதம்பர ரகசியம். நாமும் தேவியின் மகிமைகளைப் படித்து பலன் பெறுவோம்.

வினைப்பயனே நம்முடைய இன்ப, துன்பங்களுக்குக் காரணமாகும். அப்படியான ஒரு முன்வினையின் காரணமாக அசுரர்களுக்கு அரிய வரங்கள் கிடைத்தன. தேவர்களுக்கோ, அசுரர்களால் பல கொடுமைகள் நேர்ந்தன. அதாவது, பிரம்ம தேவனிடம் வரம் பெற்ற அசுரர்கள். தேவர்களை வென்று, சொர்க்கத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அத்துடன் நிற்காமல்  தேவர்களையும் ரிஷிகளையும் வாட்டி வதைத்தார்கள். திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆகவே, ரிஷிகளும் தேவர்களும் ஆதிசக்தியைச் சரணடைந்தார்கள்.

நல்லருள் தரும் நவராத்திரி!

தேவர்களுக்கு அருளத் திருவுளம் கொண்டாள் சக்தி. சும்ப - நிசும்பர் முதலான அசுரக்கூட்டத்தை அழிக்க முடிவெடுத்தாள்.  உலகையும் உயிர்களையும் பாதுகாக்க காளிகா- கௌசிகீயாக வேறுபட்டாள். இன்னும்பல திருவடிவங்களை ஏற்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தாள். அவள் கட்டளையிட... காலம் செயல்பட்டது!

பூலோகத்தில் கங்கைக்கரையை வந்தடைந்தாள் கெளசிகீ. அவளைக் கண்ட சண்டன் முண்டன் எனும் அசுர சகோதரர்கள், அந்தப் பெண்ணின் அழகைக் குறித்து, தங்கள் தலைவர்களான சும்ப-நிசும்பரிடம் சென்று தகவல் தெரிவித்தார்கள். சண்ட-முண்டர்கள் விவரிக்க விவரிக்க, அசுரத் தலைவர்களுக்குள் ஆசை பற்றிக்கொண்டது. கங்கைக்கரைப் பெண்ணை உடனே காணும் ஆவலில், சுக்ரீவன் (ராமாயணத்தில் வரும் வாலியின் தம்பி சுக்ரீவன் வேறு) என்ற தூதனை கௌசிகீயிடம் தூதனுப்பினார்கள்.

அதன்படி, தன்னிடம் வந்து சேர்ந்த தூதனிடம், ‘‘போரில் என்னை வெல்பவர் எவரோ, அவரையே கரம் பிடிப்பேன் என்று சூளுரைத்திருக்கிறேன். எனவே, உன் தலைவர்களை போருக்கு வரச் சொல்’’ என்று கூறியனுப்பினாள், கெளசிகீயாகத் திகழ்ந்த சக்தி.

தூதன் வந்து சொன்ன தகவலைக்கேட்டு கோபம் கொண்ட சும்பனும் நிசும்பனும் தங்கள் தளபதியான தும்ரலோசனை அழைத்து, ‘அந்தப் பெண்ணைக் கட்டி இழுத்து வா!’ என்று கட்டளையிட்டு, பெரும்படையுடன் அனுப்பிவைத்தனர். ஆனால் விதி வலியது அல்லவா? தேவியின் பராக்ரமத்தால் எரிந்து சாம்பலானான் தூம்ரலோசன். இந்தத் தகவல் கிடைத்ததும், சும்பனும் நிசும்பனும் ஆவேசம் அடைந்தனர். அடுத்ததாக சண்ட-முண்டர்களையே களத்துக்கு அனுப்பிவைத்தனர்.

இதையேற்று, சதுரங்கப் படையணியுடன் சென்று தேவியை எதிர்கொண்டனர் சண்ட-முண்டர்கள். பொன்மயமான ஒரு மலையின் மீது சிங்க வாகனத்தில் வீற்றிருந்த அவளைக் கண்டதும், வாளை உருவிக்கொண்டு பாய்ந்தனர் அசுரர்கள். வெள்ளமென ஆர்ப்பரித்து வந்த அசுர சேனையைக் கண்டதும், ஆவேசம் கொண்டாள் அம்பிகை. அப்போது, அவளின் நெற்றியில் இருந்து தோன்றினாள் காளி. பாய்ந்து வந்த அசுரர்களை, வாளாலும் கட்வாங்கம் எனும் ஆயுதத்தாலும் வெட்டியெறிந்தாள், காளிதேவி. சிலரைக் காலால் மிதித்தே கொன்றாள். இப்படி அசுரப்படையைச் சிதறடித்தவள், கடைசியாக சண்ட- முண்டர்களையும் வதைத்தாள்; `சாமுண்டா’ என்று திருப்பெயரை ஏற்றாள். இந்த நிலையில் வேறு வழியின்றி அசுரத் தலைவர்களான சும்பனும் நிசும்பனுமே போர்க்களத்துக்குப் புறப்பட்டனர்.

அவர்களது கட்டளைப்படி... அசுரகுலத்தின் முக்கியத் தளபதிகளும், கோடி வீரர்கள் எனப்படும் அசுரர்களின் ஐம்பது குலத்தினரும், காலகர், தௌர்ஹ்ருதர், மௌரியர், காலகேயர் ஆகியோரது படைகளும் ஒன்றுசேர... பல கோடிப் பேர் நிறைந்த அந்தப் பெரும்படை ஆரவாரத்துடன் போர்க்களத்துக்கு வந்து, தேவிசக்தியையும் காளியையும் நாற்புறமும் சூழ்ந்தது.

அதேநேரம், அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது! அசுர குலத்தை அழிக்க... சிவனார், திருமால், பிரம்மதேவன், குமரன் மற்றும் இந்திரன் ஆகியோரிடம் இருந்து அவரவரின் சக்திகள் பெரும் ஆற்றலுடன் வெளித் தோன்றினர்.

அன்ன வாகனத்தில் அமர்ந்து, அட்ச மாலையும் கமண்டலமும் ஏந்தியவளாகத் தோன்றினாள் பிரம்ம சக்தியான பிராம்மி.

நல்லருள் தரும் நவராத்திரி!

திரிசூலம் ஏந்தி, நாகங்களைத் தோள் வளையாக அணிந்தபடி, சந்திர கலை அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தினளாகத் தோன்றினாள் மகேஸ்வரனின் சக்தியான மாகேஸ்வரி.

சக்தி எனும் ஆயுதத்துடன் மயில் வாகனத்தில் எழுந்தருளினாள் குமரனின் வடிவினளான கௌமாரி. விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி, சங்கு- சக்ரம், கதை மற்றும் சார்ங்கம் (வில்) ஆகிய ஆயுதங்களுடன் கருடன் மீது எழுந்தருளினாள். திருமாலின் வராஹ வடிவை ஏற்று வாராஹிதேவி தோன்றினாள். நரசிம்மத்தின் அம்சமாக நரசிம்மீயும் எழுந்தருளினாள். இந்திரனின் சக்தியம்சமான இந்திராணி வஜ்ராயுதத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளினாள்.

இந்த ஏழுபேரும் தேவிசக்தியாகிய சண்டிகாவை அடைந்தனர் (இதற்குப் பிறகும், தேவிசக்தியிடம் சிவதூதீ என்றும் ஒரு தேவி தோன்றியதாகப் புராணம் கூறுகிறது. ஆனாலும் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா ஆகியோரே சப்தமாதர் வரிசையில் இடம்பெறுகின்றனர்).

தேவியர் அனைவரும் ஒன்றிணைய, அசுரப்படை பெரும் அழிவைச் சந்தித்தது. இந்த நிலையில் ரக்தபீஜன் எனும் அசுரனை இந்திராணி வஜ்ராயுதத்தால் தாக்க, அவன் உடம்பில் இருந்து பீறிட்ட ரத்தத்துளிகளில் இருந்து ஆயிரமாயிரம் ரக்தபீஜர்கள் தோன்றினர். அசுரப் படை மீண்டும் பலம் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆதிசக்தியின் ஆணைப்படி, ரக்தபீஜனின் குருதியை ஒரு துளிகூட நிலத்தில் சிந்தாதபடி பருகினாள் சாமுண்டாதேவி. அதனால் ரக்தபீஜனும் அழிந்தான். அவனைத் தொடர்ந்து நிசும்பனும் கொல்லப்பட்டான்.

நிறைவில் எஞ்சியிருந்த சும்பன் கடும் கோபத்துடன் ஆதிசக்தியை இழித்துரைத்தான். ‘`கர்வம் பிடித்தவளே! மற்றவர்களின் பலத்தை துணையாகக் கொண்டு போர்புரிவது அழகா?’’ என்று சப்ததேவியரைச் சுட்டிக்காட்டி, கூறினான்.

இதைக்கேட்டு, அண்ட சராசரங்களும் நடுநடுங்க சிரித்த மகா சக்திதேவி, ‘`இவர்கள் அனைவரும் எனது அம்சமே!’’ என்றாள். மறுகணம் சப்த தேவியரும் ஆதிசக்தியுடன் ஐக்கியமாக, ஏக(ஒரே) தேவியாகக் காட்சி தந்தாள் ஆதிசக்தி. தேவர்கள் ஜயகோஷம் எழுப்ப... தேவியின் பொற்கரங்கள் திக்கெட்டும் ஆயுதங்களைச் சுழற்றிப் பகையறுத்தன; அம்பிகையின் வல்லமையால், சும்பனும் வதம் செய்யப்பட்டான். தேவர்கள், தேவிசக்தியின் மேல் பூமாரி பொழிந்தனர்!

சப்தமாதர்களின் திருவருள்...

மிக அற்புதமானது இந்த தேவிமகாத்மிய திருக்கதை. சிவவாக்குப் படி, இந்தத் திருக்கதையை ஒருமுகப்பட்ட மனதுடன் அஷ்டமி, சதுர்த்தசி மற்றும் நவமி நாட்களில் படிப்பதாலும், படிக்கச் சொல்லி கேட்பதாலும் சகல நன்மைகளும் கைகூடும். குறிப்பாக அம்பாளுக்குரிய நவராத்திரி புண்ணிய காலத்தில் இந்தக் கதையைப் படிப்பது, மிகவும் விசேஷம்.

தேவிமஹாத்மியம் விவரிக்கும் சப்த மாதர்கள் வரலாறும் சிறப்பானது. முறைப்படி இவர்களை வழிபட, அனைத்து நலன்களும் கிடைக் கும்; நினைத்த காரியங்கள் ஈடேறும் என்கின்றன ஞான நூல்கள்.

பிராம்மியை வழிபட ஞானம் பெருகும், சிந்தனைகள் சிறக்கும், சரும நோய்கள் குணமாகும்.

மகேஸ்வரி: இந்தத் தேவியை வழிபட சர்வமங்களம் உண்டாகும்.

கௌமாரி: ரத்தம் தொடர்பான நோய்கள் நீங்க அருள்வாள்.

வைஷ்ணவி: விஷ ஜந்துக்களால் தொல்லைகள் ஏற்படாது.

வாராஹி: எதிரிகள் குறித்த பயம் நீங்கும்; மனதில் தைரியம் பிறக்கும். விவசாயம் செழிக்கவும் இந்தத் தேவியை வழிபடுவர்.

இந்திராணி: தாம்பத்தியம் இனிக்கும்; இல்லறம் நல்லறமாகும்.

சாமுண்டி:  இந்தத் தேவியை வழிபடுவதால், சகல தீவினைகளும் அகலும்.

தொகுப்பு: நமசிவாயம்

நல்லருள் தரும் நவராத்திரி!

சகலமும் சக்தியே!

``நவராத்திரியில் துர்கையையும், மகாலட்சுமியையும், ஸரஸ்வதியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.’’

- மகா பெரியவா!